ஸ்லீப்பர் செல்களாக 10 அமைச்சர்கள்

ன்னார்குடி முதல் தலைமைச் செயலகம் வரை ஒரு சுற்று வந்தபிறகு லேண்ட் ஆனார் கழுகார். ‘‘எல்லா குழப்பங்களும் சென்னையில் நடந்து கொண்டிருக்க… மன்னார்குடியில் உமக்கு என்ன வேலை?” எனக் கழுகாரைச் சீண்டினோம்.

‘‘மன்னார்குடிதான் அனைத்துக்கும் அடித்தளம். அடிபட்ட பாம்பாகத் துடிக்கிறார் திவாகரன். தினகரனை விட ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்பது திவாகரன்தான். அவர்தான் ஆரம்பத்திலிருந்தே, அணிகளின் இணைப்புக்காக இரண்டு பக்கமும் பேசிக் கொண்டிருந்தவர். அவரோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருந்தார்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால்,

அப்போதெல்லாம் இணைப்பு நடக்கவில்லை. திவாகரனிடம் அவர்கள் இருவருமே அன்போடு பேசினார்கள். திவாகரன் வலியுறுத்திய இணைப்பு இப்போது நடந்திருக்கிறது. ஆனால், சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டு நடந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதாகக் கொதிக்கிறார் திவாகரன். ‘தினகரனுடன்கூட அந்த இருவரும் பேசவில்லை. ஆனால், என்னோடு பேசி வந்தார்கள். நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள்’ என்று சொல்லி வருகிறாராம் திவாகரன்.”
‘‘இது எடப்பாடிக்கும், பன்னீருக்கும் தெரியாமலா இருக்கும்?”
‘‘நன்றாகவே தெரிந்துள்ளது. டெல்லி கொடுக்கும் தைரியத்தில் இருவரும் இணைந்தாலும், திவாகரனும் தினகரனும் கொடுக்கக் காத்திருக்கும் குடைச்சலை எப்படி எதிர்கொள்வது என்பதில் எடப்பாடி, பன்னீர் ஆட்களுக்குப் பயம் தொற்றிக் கொண்டுள்ளது. ‘எங்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று டெல்லிக்குத் தகவல் அனுப்பி உள்ளார்களாம்.”
‘‘டெல்லியிடம் அடுத்து என்ன எதிர் பார்க்கிறார்கள்?”
‘‘அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கைது படலம்தான். ‘விரைவில் தினகரன் மீண்டும் ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்யப்படுவார். அவரைச் சிறையில் வைத்துவிட்டால், அவருடைய எம்.எல்.ஏ-க்களை வழிக்குக் கொண்டுவருவது எளிது’ என்று எடப்பாடி நினைக்கிறார். அதுபோல, திவாகரனை ஒடுக்குவதற்கான வழிகளும் ஆராயப்பட்டு வருகிறது. ‘விரைவில் அவரையும் ஏதாவது ஒருவகையில் டெல்லி ஆஃப் செய்துவிடும்’ எனப் பேச்சு அடிபடுகிறது. ‘ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை கமிஷன் அமைக்கப்படும்’ எனச் சொன்னதே சசிகலா குடும்பத்தை மிரட்டுவதற்காகத்தான். ‘சசிகலா குடும்பத்தினர் அரசியல்ரீதியாக இந்த ஆட்சிக்குக் குடைச்சல் கொடுத்தால் அவர்கள் குடும்பத்தினரை ஒவ்வொரு வராக விசாரணைக்கு அழைத்து டார்ச்சர் செய்யவும் திட்டம் இருக்கிறது’ என்கிறார்கள்.”

‘‘சசிகலா குடும்பம் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?”
‘‘ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் கூட்டணி, டெல்லியோடு சேர்ந்து போடும் திட்டங்கள் அனைத்தையும் சசிகலா குடும்பம் உணர்ந்தே இருக்கிறது. ‘இனி திருப்பி அடிப்பதைத்தவிர வேறு வழியே இல்லை’ என்று தினகரன் சொன்னாராம்.”
‘‘தினகரன் கைது செய்யப்பட்டால் என்ன ஆகும்?”
‘‘அப்படி தினகரன் கைது செய்யப்பட்டால், திவாகரன் முன்னுக்கு வந்து சில முழக்கங்களைச் செய்வார். அரசியல் நடவடிக்கைகளில் வெளிப்படையாக இறங்குவாராம். ‘தினகரன் சிறைக்குப் போனாலும், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடைசிவரை உறுதியாக இருப்பார்கள். இவர்கள் அனைவரும் சசிகலா குடும்பத்துக்கு விசுவாசிகள். ஆட்சி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஆட்சிக்கு எதிரான செயல்பாடுகள், நிர்வாகத்தை அம்பலப் படுத்துவது என்று எடப்பாடி ஆட்சிக்குக் அடுத்தடுத்து குடைச்சல்கள் கொடுத்துக் கொண்டேதான் இருப்பார்கள். அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளார் திவாகரன். அதில் ஒன்றுதான் ‘சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும்’ என முன்மொழிந்தது!”
‘‘இதனை எடப்பாடி தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாமே?”
‘‘ஆமாம்… தனபாலை முன்னிலைப்படுத்துவதன் மூலமாக தினகரன் அணிக்குத் தலித் சமூக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் கூடுதலாகக் கிடைக்கலாம். இப்போதே அவர்பக்கம் இருப்பவர்களில் தலித் எம்.எல்.ஏ-க்களே அதிகம். சில மாதங்களுக்கு முன் தலித் எம்.எல்.ஏ-க்கள் தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எடப்பாடிக்கு எதிராக அவர்களில் பலரும் இருப்பது அடையாளம் காணப்பட்டது. எனவே தனபாலை முன்மொழிந்தது, நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளது! இதனால்தான் என்னவோ அரியலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தனபாலை மேடையில் அமர வைத்து முக்கியத்துவம் கொடுத்தது எடப்பாடி தரப்பு.”
‘‘தனபாலுக்கு இது சம்மதமோ?”
‘‘அது தெரியவில்லை. ஆனால், ஒரு தகவல் பரவுகிறது. சில வாரங்களுக்கு முன் தனபாலின் குடும்பத்தில் இருந்து சிலர், திவாகரனைத் தொடர்பு கொண்டார்களாம். ‘கடந்த 6 மாத காலமாக இந்த ஆட்சியைக் காப்பாற்றியதில் சபாநாயகரின் பங்களிப்பு எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது, அவருக்கு அமைச்சர் பொறுப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இனியும் இந்த சபாநாயகர் பொறுப்பில் இருக்க அவரும் விரும்பவில்லை. அவர் குடும்பத்தைச் சேர்ந்த நாங்களும் விரும்பவில்லை’ என்றார்களாம். ‘நாங்கள் அவரை முதலமைச்சராக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அவருக்கு அமைச்சர் பதவியைக் கேட்கிறீர்களே?’ என்று திவாகரன் சொல்ல, அவர்கள் ஷாக் ஆனார்களாம். ‘இந்த ஆட்சியைக் காப்பாற்ற சபாநாயகர் முக்கியம்’ என்பதால் அமைச்சர்களைத் தாண்டி, சபாநாயகருக்கு இப்போது முக்கியத்துவம் தருகிறார்கள். இடையில் ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் அப்போலோவில் தனபால் அட்மிட் ஆனபோது, அவரை நேரில் போய்ப் பார்த்தார் எடப்பாடி. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடைகளில், தன் அருகிலேயே சபாநாயகரை உட்கார வைத்துக்கொள்கிறார். இந்தக் கூட்டணியை முறிக்க, இனிமேல் நகர்த்த வேண்டிய காய்களை தனபாலை வைத்துத்தான் நகர்த்த வேண்டும் என திவாகரன் முன்பே முடிவு செய்திருந்தாராம்”
‘‘சரியான போட்டிதான்!”
‘‘தலித் சமூகத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபாலை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் சசிகலா குடும்பத்தை ஆதரிக்கும் நிலை வரும். எதிர்க்கட்சிகளும் அதை எதிர்க்கத் துணியாது. அதைக் கணக்கிட்டுத்தான் திவாகரன் இப்படி அறிவித்துள்ளார். இந்த பிளானை புரிந்துகொண்டு ‘தனபாலையும் துணை முதல்வர் ஆக்கிவிடலாமா?’ எனக் கணக்குப் போடுகிறது எடப்பாடி தரப்பு.”
‘‘இவர்கள் என்ன திட்டமிட்டாலும், கவர்னர்தானே அனைத்துக்கும் சூத்திரதாரி… அவர் சம்மதம் இல்லாமல் எதுவும் நடக்காதே?”
‘‘தினகரனுக்கு வியாழக்கிழமை காலை வரை 20 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு வெளிப்படையாக இருக்கிறது. இதில் 19 பேர், ‘எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை’ என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்துவிட்டார்கள். இவர்களைத் தாண்டி இன்னும் 12-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தினகரனோடு தொடர்பில் இருக்கிறார்களாம். ‘நீங்கள் அவசரப்பட்டு இந்தப் பக்கம் வரவேண்டாம். அங்கேயே இருங்கள்’ என்று தினகரன் சொல்லி இருக்கிறாராம்!”
‘‘ஓ… இவர்கள்தான் ஸ்லீப்பர் செல்களா?”
‘‘ஆமாம். இப்படிப் பலரும் மறைமுகமாக எடப்பாடி அணியில் இருக்கிறார்கள். இதில் சில அமைச்சர்களும் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார்கள். 19 பேர் கொடுத்த கடிதத்துக்கு கவர்னர் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால், மற்றவர்களும் மெதுவாக வெளியில் வந்து, ‘எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை’ எனக் கடிதம் கொடுப்பார்களாம். 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இப்படி கடிதம் கொடுக்கும் போது கவர்னருக்கு நெருக்கடிகள் ஏற்படும். அதன்பிறகு நீண்ட நாள்கள் தாமதிக்க முடியாது. சட்டசபையைக் கூட்டிப் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் உத்தரவிட வேண்டும். டெல்லி தாமதப்படுத்தச் சொன்னால், நீதிமன்றம் செல்லவும் தினகரன் தயாராக இருக்கிறாராம்.”
‘‘அமைச்சர்களில் யாரெல்லாம் சசிகலா குடும்பத்தின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்?”
‘‘அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, பாலகிருஷ்ணா ரெட்டி, துரைக்கண்ணு உள்ளிட்ட பத்து அமைச்சர்கள் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஆதரிப்பார்களாம். ‘சின்னம்மாவால் தான் எடப்பாடி முதலமைச்சர் ஆனார்’ என்று வெளிப்படையாகச் சொன்னவர் செல்லூர் ராஜு. ‘சசிகலாவை நீக்கும் தீர்மானத்தைப் பொதுக்குழுவில் கொண்டுவர எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்படி முடிவு எடுக்கப்பட்டதாக வைத்திலிங்கம் சொல்வது அவரது சொந்தக் கருத்து’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொல்லியிருக்கிறார். ‘பன்னீரையும் சேர்க்கட்டும், வெந்நீரையும் சேர்க்கட்டும். ஆனா சின்னம்மாவை நீக்கக்கூடாது’ என்றாராம் இன்னொரு அமைச்சர். இவர்களில் பலரும் இப்படி மாறி மாறி பேசுவது எடப்பாடிக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.”
‘‘இணைப்பு நடந்தாலும் அதிருப்தி அதிகமாகி வருகிறதே?”
‘‘ஆம்! பசையுள்ள பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற முக்கியமான துறைகளை எடப்பாடியும் அவரது கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். குறிப்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களிடம்தான் வளம் கொழிக்கும் முக்கியமான துறைகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 30 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய முக்கியத்துவம் இதுவரை கொடுக்கப்படவில்லை. இப்படி பெரும்பான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள், ‘பணம் எங்களுக்குப் பெரிதல்ல. முக்கியத்துவம் இல்லாத இரண்டே துறைகளில் அமைச்சர்கள் இருப்பது போதுமா?’ என்று புலம்புகின்றனர். அதுபோல கொங்கு மண்டலத்தில் இருக்கும் கவுண்டர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி அணியை ஆதரித்து வருகிறார்கள். அவர்களுக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை. உள்ளூர் அரசியலில் செங்கோட்டையனின் செல்வாக்கு எப்போதுமே எடப்பாடிக்கு ஆகாது. தற்போது அரசியல் சூழல் மாறி அதிகாரம் தன் கைக்கு வந்த நிலையில், அந்தக் கோபத்தைக் காட்டிவிட்டார் எடப்பாடி. தொடர்ந்து, தான் இப்படி ஓரம் கட்டப்படுவதால், செங்கோட்டையனும் அவரை ஆதரிக்கும் சில எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால்தான், ‘அரசியல் கருத்து எதையும் நான் சொல்வதில்லை’ எனப் பேட்டிகளில் விரக்தியோடு செங்கோட்டையன் சொல்லிவருகிறார்.”
‘‘இப்படியாக எல்லாப் பக்கமும் ஆடிக்கொண்டு இருக்கிறதா ஆட்சி?”
‘‘அதற்கு முட்டுக்கொடுக்கத்தான் எச்.ராஜா கோட்டைக்குச் சென்று முதல்வரைச் சந்தித்தார். அவர், ‘ஆட்சிக்கு ஆபத்தில்லை’ எனச் சொல்லியிருப்பதே பி.ஜே.பி-யின் தயவு மறைமுகமாக இருப்பதை உணர்த்துகிறது’’ எனச் சொல்லி வைகோ மேட்டருக்குத் தாவினார்.

‘‘கருணாநிதியை வைகோ விரைவில் சந்திப்பார் என்று முன்னமே நான் உமக்குச் சொல்லியிருந்தேன். 22-ம் தேதி இந்தச் சந்திப்பு நடந்துவிட்டது. கருணாநிதியைச் சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வைகோ தெரிவித்தார். லண்டனிலிருந்து தான் வந்ததும் 22-ம் தேதி இரவு சந்திக்கலாம் என்று வைகோவுக்குச் சொல்லி அனுப்பினார் ஸ்டாலின். அன்றே கோபாலபுரம் நோக்கி வந்தார் வைகோ. தன்னோடு ம.தி.மு.க அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியை அழைத்துவந்தார். ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோர் இவர்களை வரவேற்று மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். சால்வையை விரித்துக் கையில் வைத்திருந்த வைகோவுக்குக் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் கருணாநிதியின் அருகில் இவர் செல்ல, அவரையும் நன்கு அடையாளம் தெரிந்துள்ளது. ‘கோபால்சாமி வந்திருக்கார்… வைகோ வந்திருக்கார்’ என்று துரைமுருகன் சொல்ல…. வைகோ கையைக் கருணாநிதி பிடித்துக் கொண்டார். விடவே இல்லையாம்!”
‘‘நெகிழ்ச்சியான நிமிடங்களா?”
‘‘ஆம்! இருவரும் கைகளைப் பற்றியபடியே சில நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது கருணாநிதி கண்ணில் இருந்து நீர் வடிந்தபடி இருந்தது. ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஸ்டாலினும் வைகோ அருகில் உட்கார்ந்து கருணாநிதியின் உடல்நிலையைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். ‘முரசொலி விழா செப்டம்பர் 5-ம் தேதி நடக்கிறது. நீங்கள் வர வேண்டும்’ என்று ஸ்டாலின் சொன்னதும்… ‘வருகிறேன்’ என்றார் வைகோ. ‘உங்களது சம்மதத்துக்காகத்தான் நாங்கள் அழைப்பிதழ் அடிக்காமல் இருக்கிறோம்’ என்றாராம் ஸ்டாலின். ‘நிச்சயம் வருகிறேன்’ என்று வைகோ சொல்ல, ‘நீங்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், முன்பு மழைபெய்து கூட்டம் நடத்த முடியாமல் போனது’ என்று ஒருவர் சொல்ல, அந்த இடம் கலகலப்பு ஆனது. இப்படியாக தி.மு.க அணிக்குள் ஐக்கியமாகி விட்டார் வைகோ” என்றபடி பறந்தார் கழுகார்.

%d bloggers like this: