Advertisements

ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும், உளவியல் சிக்கலைப் போக்கும்… ஆரோக்கியம் காக்கும் முத்தம்!

முத்தம்’ என்ற சொல், ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு வகையான உணர்வுகளை நமக்குள் உண்டாக்குவது இயல்பு. அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம். அனைத்து வகையான முத்தங்களும், மருத்துவ ரீதியில் மற்றும் உணர்வு ரீதியில் உடலுக்கும் மனதுக்கும்

உற்சாகத்தை அள்ளிக் கொடுப்பவைதான். மருத்துவப் பலன்கள் நிறைந்த முத்தங்கள் இன்று பரிமாறப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. முத்தம் என்றவுடனே அதை காமத்தின் குறியீடாக பார்ப்பதே பெரும்பாலோரின் வழக்கம். ஆனால் காமத்தைத் தாண்டி, பல உண்மைகளை முத்தங்கள் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கின்றன! ஒவ்வொன்றாய் அவிழ்ப்போம்! 

மருத்துவ முத்தம்:

’பிக்-பாஸ்’ நிகழ்ச்சியில் ’மருத்துவ முத்தம்’ என்ற புதிய சொல்லை கமல் அவர்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தினாலும், காதல் தொடங்கிய ஆதிகாலத்திலிருந்தே முத்தங்கள் அனைத்துக்கும் மனஅழுத்தத்தைப் போக்கும் மருத்துவ குணம் உண்டு. அவ்வகையில் முத்தங்கள் எப்போதுமே மருத்துவ முத்தங்கள்தான். குழந்தை பிறந்தவுடன் தாயால் தன் குழந்தைக்கு கொடுக்கப்படும் முதல் முத்தம், தாய்-சேய் பாசப்பிணைப்பை உறுதி செய்யும். பிள்ளைகள் தந்தைக்கு வழங்கும் முத்தம், தந்தையின் சாட்சியை சொல்லும். காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தம்… மனைவி கணவனுக்கு வழங்கும் முத்தம்… அனைத்துமே காதல் ஹார்மோனை சுரக்கச் செய்து உறவுகளை பலப்படுத்தக்கூடியவை. உதடுகள் நடுங்க வயதான பாட்டி, ஆசைத் தாத்தாவுக்கு பரிமாறும் ’நடுக்கமுத்தம்,’ முதிர்ந்த வயதில் உருவாகும் நடுக்கங்களையும் போக்கும் மருத்துவ குணம் மிக்கது. 

குழந்தைகளின் முத்தப் பருவங்கள் வீணாய்க் கழிந்துகொண்டிருக்கின்றன. தந்தையும் தாயும் அலுவலக வாழ்க்கைக்கு இரையாகி விட்டதால், குழந்தையால் அதிகளவில் முத்தங்களை உதிர்க்க முடியாமல் போய்விடுகிறது. தாத்தாக்களும் பாட்டிகளும் நவீன முதியோர் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதால், முத்தப் பாசத்தின் உச்சம் குழந்தைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. முத்தப் பருவத்தில், குழந்தைகளின் முத்தங்கள் யாருக்கு அதிகம் கிடைக்கின்றன தெரியுமா?… டிவி-யில் காட்டப்படும் கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும், மடியில் தவழும் உயிரற்ற பொம்மைகளுக்கும்தான்.

உயிர்ப்பில்லா முத்தம்:

குழந்தைகள் ஆசையாக முத்தம் கொடுக்க வந்தால் கூட, ‘அங்க இருக்கு பாரு பொம்மை, போய் அதுக்கு உம்மா கொடுடா செல்லம்’ என்று கூறிவிட்டு, ஆபீஸ் வேலைகளை வீட்டுக்குள் வரவழைத்து ’ஓவர் டைம்’ வேலை பார்க்கும் குடும்பத் தலைவர்கள் இன்று அதிகம். தந்தையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அந்த குழந்தை, நிச்சயமாக அந்த பொம்மைக்கு முத்தம் கொடுக்கும். ஆனால் அந்த முத்தத்தில் ஈரம் இருக்காது. உயிரற்ற தன் பொம்மை தோழனுக்கு, ஈரமற்ற வறண்ட முத்தங்களை மட்டுமே உதிர்க்கும். அந்த குழந்தையின் உதடுகளில் கண்டிப்பாக உயிர்ப்பிருக்காது. செல்போன் தவழ கன்னங்களில் இடமளிக்கும் மனிதர்கள், குழந்தைகளின் உதடுகள், கன்னங்களில் தவழ இடமளிப்பதில்லை.  

வேண்டாம் ’முத்தப்பருவம்’:

குறிப்பிட்ட பருவத்தில் தானாக முன்வந்து ‘உம்மா’ என்ற மழலை மொழியுடன் அடிக்கடி முத்தம் கொடுக்கும் வழக்கம் குழந்தைகளுக்கு அதிகம். ஆனால் பிரச்னை என்னவென்றால், அவர்களின் முத்தங்களைப் பொறுமையாக வாங்கிக்கொள்ளக் கூட இன்றளவில் யாருக்கும் நேரமிருப்பதில்லை. முத்தப் பருவத்தில் கொடுக்கப்படும் முத்தங்களை பெற்றுக்கொள்ள, குழந்தைகள் எதிர்பார்க்கும் உறவு இல்லாததால், முத்தம் கொடுக்கும்போது உடலில் சுரக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்கள் வறண்டுவிடுகின்றன. மகிழ்ச்சி குறைந்து வெறுமை குடிகொள்ளத் தொடங்கிவிடுகிறது. முத்தத்தின் அவசியத்தை விளக்கவே ‘முத்தப் பருவம்’ என்றொரு தனிப் பருவத்தை குழந்தை இலக்கியத்தில் படைத்தார்கள் முன்னோர்கள். இன்றிருக்கும் நிலைமையைப் பார்த்துவிட்டு, ‘முத்தப்பருவம் என்றோரு பருவமே எங்களுக்கு வேண்டாம்’ என்று குழந்தைகள் போர்க்கொடி தூக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Kissing-tom பொம்மைகள்:

பேச்சுத் துணைக்கு ’டாக்கிங்-டாம்’ (Talking-tom) பொம்மைகளை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு, வேறு வேலைகளை கவனிக்க பெற்றோர்கள் சென்றுவிடுகின்றனர். இந்நிலையில் முத்தங்களை வாரி வழங்க’ முத்தம் கொடுக்கும் இயந்திர பொம்மைகள்’ (Kissing-tom), எதிர்கால பொம்மைச் சந்தையில் உலா வரலாம். இது கற்பனைதான் எனினும், கற்பனையும் நிஜமாகலாம். காலை எழுந்ததும் பெட்-காபிக்குப் பதிலாக நெற்றி முத்தம் கிடைத்தால் மனம் மகிழும். வேலைப் பளு காரணமாக குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு கணவனும் மனைவியும் அவ்வளவாக சந்தித்துக்கொள்ள முடியாத நிலையில் தான் மணவாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. 

முத்தங்களுக்கு விழாக்களையும் போட்டிகளையும் வைத்து கொண்டாடும் வெளிநாட்டினர், அதன் பெருமையை பறைசாற்றுகின்றனர் என்று வைத்துகொள்ளலாம்! காதல் முத்தங்களை பொதுவெளியில் வெளிப்படுத்தும் விழாக்கள் நமது கலாசாரத்துக்குத் தகுந்ததாக இருக்காது. ஆனால், அகத்தினை இலக்கணமாக பெருமை பேசும் நமது காதல் கலாசாரத்தில் வெளிப்படுத்தப்படும் மறைமுக முத்தங்கள், உறவுகளை உறுதியாக்கி நீண்ட நாள்கள் வாழவைக்கும் என்பது மருத்துவ உண்மை.   

வயோதிக முத்தம்:

குழந்தைப் பருவத்தில், உச்சி முகர்ந்து அன்னை தலையில் கொடுத்த முத்தத்தை, வளர்ந்த பிறகு அன்னையின் உச்சி முகர்ந்து, அவளது நரைத்த தலையில் முத்தமாக திருப்பிக் கொடுப்பதற்கு இன்றைய இளைஞர்களுக்குத் அவ்வளவு தயக்கம். முதிர்ந்த வயதில் மகனிடமோ அல்லது மகளிடமோ கிடைக்கும் உச்சி முத்தத்துக்கு தானே வயோதிகம் ஏங்கிக் கிடக்கிறது. வயதான காலத்தில் உண்டாகும் பல்வேறு நோய்களுக்கு மாத்திரைகளோ, ஊசிகளோ தேவையில்லை. உறவுகளின் முத்தங்கள் மட்டுமே போதும். ஆனால் வயதான காலத்தில் பலருக்கு அந்த முத்தமருந்து கிடைக்காமலே போய்விடுகின்றது. சுருங்கிய தோலில் பதிக்கப்படும் முத்தங்கள், முத்தங்களிலே உயர்ந்தது!

மருத்துவ முத்தம்

மருத்துவ உண்மைகள்:

’காதல் ஹார்மோன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோனுடைய சுரப்பினை தூண்டி அன்புணர்வை முத்தங்கள் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், தலைவலி, உடல் அசதி, சில வகையான இதய நோய்கள், மனஅழுத்தம் போன்ற நோய்களை குறைக்கும் தன்மையும் முத்தங்களுக்கு உண்டு. முகப்பொலிவினை உண்டாகுவதற்கும் முத்தங்கள் உதவும். நோய் எதிர்ப்புத் சக்தியை அதிகரிக்கும் வல்லமை முத்தங்களுக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உண்மை என்னவென்றால் மேற்சொன்ன மருத்துவப் பலன்களைப் பெற, காமம் பொதிந்த முத்தங்கள் தான் அவசியம் என்றில்லை. நெற்றியில் தவழும் ஆசை முத்தம்… தலைமுடிகளை வருடும் அன்பு முத்தம்… கன்னங்களில் அழுந்தும் குழந்தை முத்தம்… இவை எதுவாக இருந்தாலும் சரி, முத்தங்கள் நோய்த் தீர்க்கும். மீண்டும் அதே கேள்வி… முத்தங்கள் போதுமான அளவுக்கு பகிர்ந்துகொள்ளப்படுகிறதா!… உறவுகளின் நோய்களைப் போக்க உதடுகளை குவிப்போம்!

Advertisements
%d bloggers like this: