சபரிமலையில் டி.டி.வி.தினகரன்!’ – முக்கிய பிரமுகரைச் சந்தித்து ஆலோசனை

சபரிமலைக்குச் சென்ற டி.டி.வி.தினகரன், முக்கிய நிர்வாகி ஒருவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவர், பா.ஜ.க-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எதிராக சசிகலா அணியினர் செயல்பட்டுவருகின்றனர். சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ளவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி அதிரடி காட்டிவருகிறார். ஒரு கட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் கட்சியிலிருந்து நீக்கி ‘ஷாக்’ கொடுத்தார். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கலக்கத்தைக் கொடுத்தது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தினர். தினகரனின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க முடிவுசெய்தனர். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்குவது, அ.தி.மு.க-வுக்குச் சொந்தமான ஊடகங்களைக் கைப்பற்றுவது, கட்சியில் தினகரனால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, விரைவில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டுவது ஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை தினகரன் தரப்பினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். சசிகலா, தினகரனுக்கு எதிராக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதும் தினகரன் ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். அப்போது, சட்டரீதியாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளலாம் என்று தினகரன் சொல்லி அமைதிப்படுத்தியுள்ளார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் டி.வி. மூலம் பார்த்துத் தெரிந்துகொண்டனர். உடனடியாக ரிசார்ட்டில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடையாறில் உள்ள இல்லத்தில் தினகரன், வழக்கறிஞர்களுடன் அடுத்தகட்ட ஆலோசனைகுறித்து விரிவாக விவாதித்துள்ளார். அதில், ‘கட்சி விதிப்படி பொதுக்குழுவில்தான் இறுதி முடிவு எடுக்கமுடியும். அதில், நமக்கு எதிராக எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடுக்க வேண்டும்’ என்று தினகரன் சொல்லியிருக்கிறார். இதற்காக, தங்கள் அணியில் உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

சட்டரீதியாக தினகரன் நடவடிக்கை எடுக்கத் தயாரானாலும், சபரிமலையில் முக்கிய நிர்வாகி ஒருவரைச் சந்தித்துப் பேசியுள்ளதாக அவரின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார். அவர் நம்மிடம், “சபரிமலைக்கு தினகரன் மற்றும் சில மூத்த நிர்வாகிகள் மட்டும் சென்றனர். அங்கு, பா.ஜ.க-வுக்கு நெருக்கமான ஒருவரும் வந்திருந்தார். அவருடன் தினகரன் நீண்ட நேரம் பேசினார்.  அ.தி.மு.க-வில் நடந்துவரும் உள்கட்சி மோதல்குறித்து இருவரும் விவாதித்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமல்ல. முதல்வரை மாற்ற வேண்டும், கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டு துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றுதான் எங்களது எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறோம். தினகரனின் பேச்சை அமைதியாகக் கேட்ட அந்த டெல்லி பிரமுகர், ‘விரைவில் நல்ல செய்தி வரும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.அதன்பிறகு சென்னைக்குக் கிளம்பிவந்தார்.

இந்தத் தகவலை எங்களிடம் தெரிவித்த தினகரன், ‘டெல்லி மூலமே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பதிலடிகொடுப்போம்’ என்றும் கூறினார். அ.தி.மு.க பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அதிர்ச்சியாக இருக்கும்” என்றார். 

இதற்கிடையில் தினகரன் ஆதரவாளர்கள், முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: