மலிவு விலையில் பொருட்கள் வாங்குவது சரியா?

ஆடி மாத ஷாப்பிங் களை கட்டுகிறது. எங்கு பார்த்தாலும் தள்ளுபடி விற்பனை அறிவிப்பு விளம்பரங்கள் காணப்படுகின்றன. மக்களும் கடைகளில் பொருட்கள் வாங்க வெள்ளம்போல் குவிகின்றனர். ரகங்களும் குவிந்து கிடக்கின்றன. விலையும் குறைவு என்பதால் மக்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர். நிறைய பேர் ஷாப்பிங் முடித்து விட்டு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருவார்கள். எல்லாம் சரிதான். ஆனால், பசியோடு ஷாப்பிங் செய்யாதீர்கள் என அனுபவம் வாய்ந்தவர்கள் அட்வைஸ் செய்கின்றனர். நீங்கள் சோர்வாக இருக்கும்போது ஷாப்பிங் செல்லாதீர்கள்.

இதுபோன்ற நேரத்தில் ஷாப்பிங் சென்றால் சரியான பொருட்களை தேர்வு செய்ய முடியாமல் சிரமம் அடைவீர்கள். அதேபோல் நீங்கள் சரியான மூடில் இல்லாதபோதும், அப்செட்டாக இருக்கும்போதும் ஷாப்பிங் சென்றால் சரியாக பொருட்களை தேர்வு செய்யமுடியாது. ஷாப்பிங் சென்றால் கண்களில் பட்டதையெல்லாம் வாங்கி குவிக்காமல் ஒவ்வொரு பொருளையும் தேர்வுசெய்யும்போதும் இது நமக்கு தேவையானது தானா, மிகவும் அவசியமானதா என்ற கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.  அப்போது அந்த பொருள் தேவையா என்பதை முடிவு செய்து விடலாம். இதன் மூலம் நேரம் வீணாவது தவிர்க்கப்படுவதோடு, பணமும் மிச்சமாகும்.
ஷாப்பிங் செல்லும்போது தனியாக செல்லுங்கள். சிலர் நண்பர்களுடன் ஷாப்பிங் சென்றால் அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்வார்கள். சில நேரங்களில் நமக்கு பிடிக்காவிட்டாலும், விலை அதிகமாக இருந்தாலும் நண்பர்கள் நன்றாக இருக்கிறது என்று கட்டாயப்படுத்துவார்கள். இதனால் நமக்கு பிடிக்காவிட்டாலும் நண்பர்களின் கட்டாயத்திற்காக வாங்க நேரிடும். மேலும் வாங்கும் பொருட்களை நாம் தான் பயன்படுத்தப்போகிறோம். அவர்கள் அல்ல அதனால் நமக்கு பிடித்தவற்றை, நமக்கு பிடித்த விலையில் தேர்வு செய்யவேண்டும் என்றால் தனியாக ஷாப்பிங் செல்லுங்கள்.  துணைக்கு யாரையாவது அழைத்து செல்ல வேண்டும் என்று தோன்றினால் வீட்டில் இருக்கும் பெரியவர்களை அழைத்து செல்லுங்கள். அவர்கள் உடன் வந்தால் சில தேவையற்ற பொருட்களை நாம் வாங்கும்போது வேண்டாம் என்று கண்டிப்பார்கள். இதனால் நமக்கு பணம் மிச்சமாகும்.
கடைக்கு சென்றவுடன் இதை வாங்கிக்கொள்ளலாம், அதை வாங்கிக்கொள்ளலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் பட்டியலிட்டு வந்த பொருட்களை மட்டும் வாங்குங்கள். உங்கள் பட்டியலில் உள்ள பொருள் எங்கு கிடைக்குமோ அந்த கடைக்கு மட்டும் செல்லுங்கள். ஆடி என்றாலே மலிவு விலை பொருட்களுக்கு பஞ்சமில்லை. அதற்காக மலிவாக கிடைப்பதெல்லாம் தரமற்றது என்ற பொருள் அல்ல. ஆடி மாதத்தில் விற்பனையை பெருக்க வியாபாரிகள் செய்யும் உத்தி இது. அதோடு, ஜிஎஸ்டிக்கு முன்பு இருந்த சரக்குகள் தள்ளுபடியில் விற்று தீர்ந்திருக்கும். தற்போது இருப்பது எல்லாமே புதுசாகவும் இருக்கலாம். மலிவு விலையில் தரமானதாக பார்த்து அள்ளிக்கொண்டு வாருங்கள்.

%d bloggers like this: