தொப்பை முதல் தசைப்பிடிப்பு வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்

கள் என்பவை செய்வதற்குச் சிரமத்தைத் தரக் கூடாது. செய்கிறவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தக் கூடாது.பயிற்சிகளை ஆரம்பித்த சிலநாள்களிலேயே பலன்களையும் காட்ட வேண்டும். அப்போதுதான் அவற்றைத் தொடர்ந்து செய்கிற ஆர்வம் வரும். அப்படியொரு பயிற்சிதான் ஸ்கிப்பிங்.

உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு.

ரெகுலர் (Regular)
நின்ற இடத்திலேயே ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். குதிக்கும்போது முழுப் பாதத்தையும் தரையில் பதிக்காமல், முன்பாதத்தைக்கொண்டு குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: இதயம் மற்றும் நுரையீரலுக்கு நல்ல பயிற்சி. தசைகளின் விரிவடையும் தன்மை அதிகரிக்கும்.


சைடு டூ சைடு (Side to Side)
ஸ்கிப்பிங் செய்யும்போது இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் பக்கவாட்டில் இடது மற்றும் வலது புறம் கொண்டு செல்ல வேண்டும். இந்தவகையில் முழுப் பாதத்தையும் தரையில் பதிக்கும்படி குதிக்கலாம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள்: இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்; கால் பகுதிகளில் உள்ள தசை இறுகும்.


ஹை நீ (High Knee)
சாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்யும்போது கால்களின் முட்டி இடுப்புக்கு நேராக வரும் அளவுக்கு உயர்த்திக் குதிக்க வேண்டும். ஓடுவது போன்று கால்களை மாற்றி மாற்றிச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: இடுப்புத் தசைகள் வலுப்பெறும். மூட்டுவலி, கால் வலியைக் குறைக்கும். மூட்டு எலும்புகள் வலுப்பெறும்.


ஹீல் டு டோ (Heal to Toe)

சாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும்போதே முன்பாதங்களை மட்டும் தரையில் பதிக்க வேண்டும். அடுத்து குதிக்கும்போது குதிகால் பகுதி மட்டும் தரையில்படும்படி குதிக்க வேண்டும். முன்பாதம் தரையில் பதியும்போது குதிகால் தரையில்படக் கூடாது. அதேபோல், குதிகால் தரையில் பதியும்போது முன்பாதம் தரையில்படக் கூடாது. இப்படித் தொடர்ந்து முன்பாதம் மற்றும் குதிகால்களைத் தரையில் பதித்துக் குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: உடலின் சமநிலைத் தன்மையைச் சீராக்கும்; கால்களில் ஏற்படும் நடுக்கத்தைக் குறைக்கும்; குதிகால் மற்றும் கணுக்கால் வலுப்பெறும்.


சிசர்ஸ் (Scissors)
சாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும் போதே முன்பாதங்களைக் கொண்டு முன்னும் பின்னுமாகக் கால்களைக் கொண்டுசென்றபடி குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: முன்பாதத் தசைகள் வலுவடையும்; உடலின் உள்ளுறுப்புகள் சீராகச் செயல்பட உதவும்; தொடைப்பகுதித் தசைகள் இறுகும்; உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


பட் கிக் (Butt Kick)
சாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்யும்போது குதிகாலானது இடுப்பின் பின்புறத்தைத் தொடுமளவு கால்களை நன்றாக மடக்கிக் குதிக்க வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: முழங்கால் தசைகள் நன்கு விரிவடைந்து வலுவடையும். இதனால், மூட்டுத் தேய்மானம் தடுக்கப்படும்.


ஒன் ஃபுட் ஹாப்ஸ் (One Foot Hops)
சாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும் போதே ஒரு காலை மட்டும் சற்று உயரே தூக்கியபடி குதிக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை காலை மாற்றிக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: உடலின் சமநிலைத்தன்மையை அதிகரிக்கும். முழங்கால் தசை வலுப்பெறும். கால் பகுதியில் உள்ள தசைப்பிடிப்புகளை நீக்கும்.


ரன்னிங் ஆன் தி ஸ்பாட் (Running on The Spot)
சாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வதுபோல் முதலில் ஆரம்பிக்க வேண்டும். பின்னர், ஸ்கிப்பிங் செய்துகொண்டிருக்கும் போதே நின்ற இடத்தில் இருந்துகொண்டே ஓட வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: நுரையீரல் மற்றும் இதயம் வலுப்பெறும். கைகால் பகுதிகளில் உள்ள தசைகள் வலுப்பெறும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.


ஸ்கிப்பிங் பயிற்சிகளின் நன்மைகள்
* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பைப் பிரச்னையும் படிப்படியாகக் குறையும்.
* உடலின்  உள் உறுப்புகளுக்கும் நரம்பு களுக்கும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
* மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும். இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும்.
* தினமும் ஸ்கிப்பிங் செய்வதால், உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும்.
*  இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும்.
* கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி. ஒரு மணி நேர ஸ்கிப்பிங் 1,300 கலோரிகளைக் குறைக்க உதவும்.
* பெண்களை அதிகமாகத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்கிற எலும்புகள் மென்மையாகிற  நோய்த் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவடையும்.
* ஸ்கிப்பிங் பயிற்சி செலவில்லாதது. எங்கும் எப்போதும் செய்யலாம்.
* ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும்.
* உடலின் சமநிலைத் தன்மை மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.


ஸ்கிப்பிங் பயிற்சியில் கவனிக்க வேண்டியவை
* ஸ்கிப்பிங் எந்த அளவுக்கு உடலுக்கு முக்கியமோ, அதே அளவு ஸ்கிப்பிங் கயிற்றின் நீளம் மிக முக்கியம். கயிற்றை உங்களின் உயரத்துக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கயிற்றில் சரியான நீளத்தைத் தேர்வுசெய்ய, நீங்கள் கயிற்றின் மத்தியில் கால்களை வைத்து உயர்த்திப்பிடிக்க வேண்டும். அது உங்களின் வயிற்றுப் பகுதிக்கு மேல் இருந்தால் அது சரியான அளவு.
* ஸ்கிப்பிங் கயிற்றின் முனையில் அதிகக் கயிறு கையைவிட்டு வெளியே வராத அளவு நடுவில் பிடிக்க வேண்டும்.
* ஸ்கிப்பிங் கயிற்றைக் கைகளில் பிடிக்கும்போது கயிற்றின் நுனியிலும் கையின் நுனியிலும் பிடிக்கக் கூடாது. அதேபோன்று அதிகக் கயிறு கைகளைவிட்டு வெளியில் வரும்படியும் பிடிக்கக் கூடாது.
* தரம் குறைவான ஸ்கிப்பிங் கயிற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அது உங்களின் பயிற்சியைக் கடினமானதாக மாற்றும். நல்ல தரமான ஸ்கிப்பிங் கயிறைப் பயன்படுத்தவும். இது உங்கள் பயிற்சிக்கும் உங்களுக்கும் ஊக்கத்தைக் கொடுக்கும்.


யார் செய்யக் கூடாது?
* அதிக உயரம் கொண்டவர்கள் கயிறு தாண்டும் பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
* இதய நோயாளிகள் ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கவும்.
* கணுக்கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள் முடிந்த வரை ஸ்கிப்பிங் பயிற்சியைத் தவிர்க்கலாம். பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப்பெற்றுச் செய்வது நல்லது.
* எலும்பு முறிவுடையவர்கள் மற்றும் சுளுக்கு ஏற்பட்டவர்கள் இந்தப் பயிற்சிகளைத் தவிர்க்கவும்.

%d bloggers like this: