Advertisements

மன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்!

ன அழுத்தம்… இதை மன உளைச்சல் என்றும் சொல்வார்கள். பொதுவாக மன அழுத்தத்தை இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள். ஒன்று, புறநிலைக் காரணிகளால் வரக்கூடியது. அதாவது, இயற்கைப் பேரழிவுகள், பிரியமானவர்களின் மரணம், பிறரின் ஏச்சுப் பேச்சுகளால் ஏற்படும் மனவருத்தம் போன்றவற்றைச் சொல்லலாம். இது அனைவருக்கும் வரக்கூடியதே. இன்னொன்று, அகநிலைக்காரணிகளால் வரக்கூடியது. ஆனால், இது மனநிலைக்கு ஏற்ப மாறக்கூடியது.

உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால், தேர்வு எழுதும்போது சிலருக்கு மன உளைச்சல் ஏற்படலாம்; வேறுசிலரோ அதே தேர்வை உற்சாகத்துடன் எதிர்கொள்வார்கள். இங்கே, அகநிலைக் காரணிகள் ஒவ்வொருவரின் மனப்போக்கைப் பொறுத்து மாறுபடுகின்றன.
மன அழுத்தத்துக்கான காரணங்கள் வயதுக்கேற்ப மாறக்கூடியவை. குழந்தைகளை அவர்தம் பெற்றோர் திட்டுவதாலும் சமவயதுள்ளவர்கள் திட்டுவதாலும், பதின்ம வயதினருக்குக் கல்விச் சுமையினாலும், ஆண்-பெண் உறவுநிலைச் சிக்கல்களாலும் வயதுக்கேற்ப மன அழுத்தம் ஏற்படலாம். வேலைக்குச் செல்பவர்களுக்குப் பணியிடங்களில் நெருக்கடிகள், பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல், வயது முதிர்ந்தவர்களுக்குப் பிள்ளைகள் செய்யும் அவமதிப்பு, உடல் கோளாறுகள், தனிமை போன்றவை மன அழுத்தத்துக்குக் காரணமாக அமைகின்றன.

நான்கு வகை அறிகுறிகள்
* உடல் சார்ந்தது – வயிற்றுப்போக்கு, வயற்றுவலி, இதயத் துடிப்பு அதிகரிப்பது, தலைவலி.
* அறிவுத்திறன் சார்ந்தது – ஞாபக மறதி, கவனக் குறைவு, முடிவு எடுத்தலில் சிக்கல் போன்றவை. 
* உணர்வுநிலை சார்ந்தது – அதிகக் கவலை, தேவையற்ற கோபம், தேற்ற முடியாத அழுகை, எரிச்சல் ஆகியவை.
* பழக்க வழக்கம் சார்ந்தது – வேலையைத் தள்ளிப்போடுவது, நகம் கடித்தல், புகைப்பழக்கம் ஆகியவை.
இத்தகைய அறிகுறிகள் எல்லாம் இயல்பானவை என்றோ, வெறும் மன அழுத்தம் என்றோ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.இதனால் ஏற்படும் விளைவுகளும் நோய்களும் ஏராளம். வாழ்வுமுறை சார்ந்த நோய்களான சர்க்கரை நோய், வயிற்றுப் புண், ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் இந்த மன உளைச்சல் முக்கியக் காரணமாகும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து, மற்ற நோய்கள் நம் உடலில் நுழைவதற்கான வாயிலாகவும் அமைந்துவிடும். இது மன அழுத்தத்தின் உச்சக்கட்டமாகும்.
மேலும் நம்மைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்லும். போதை மருந்து அல்லது குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதோடு, உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் தீவிரமடையும் போது நம் அறிவையும் உடலையும் மீறி, உணர்வுகள் நம் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் வண்ணம் கட்டுக்கடங்காமல் போகும். அப்போது உளவியல் நிபுணரையோ, மனநல மருத்துவரையோ அணுகுவது மிகவும் அவசியம். சிறுசிறு மன அழுத்தங்களை நாமே தவிர்ப்பது  என்பது கடினமான விஷயம்தான் என்றாலும் நிச்சயம் அதைத் தணிக்க முடியும் .

தன்னாய்வு செய்தல்

மனம்  எதனால் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து, தொடர்ச்சியாகக் கண்காணித்து ஒரு கையேட்டில் குறித்துக்கொண்டு வந்து, அதன் பின் அந்தக் காரணங்களை மூளைக்குக் கொண்டு செல்வதை முடிந்தஅளவு குறைத்துக்கொள்ளலாம்.
நல்ல வாழ்வியல் முறை
நல்ல தூக்கம், அதிகாலையில் எழுவது, சரியான நேரத்தில் நல்ல உணவு உண்பது, துரித உணவுகளைத் தவிர்ப்பது, கெட்ட பழக்கங்களை அடியோடு விட்டொழிப்பது போன்றவை மன அழுத்தம் தவிர்க்க உதவும்.

வேறு வேலைகளில் கவனத்தைத் திருப்புங்கள்

எந்த விஷயத்துக்காக நம் மனம் உளைச்சலுக்கு ஆளாகிறதோ அதை மறந்து, அதிலிருந்து கவனத்தைத் திருப்புமாறு ஏதாவது கைவினைத்திறன் வேலைகளைச் செய்வது, தேநீர் அருந்துவது, வெளியில் சிறிதுதூரம் நடந்துவிட்டு வருவதுபோன்ற செயல்களின்மூலம் புத்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்
மனதின் மீது ஆட்சி செலுத்துங்கள்
நம் தீவிர விருப்பம் பற்றிச் சிந்தித்து, அதை நோக்கிய நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்களை யாரிடமிருந்தும் உள்வாங்கிக் கொள்ளாமல், நமது குறிக்கோளை நோக்கி மனதைச் செலுத்தினால், மன அழுத்தம் ஏற்படுவதை முடிந்தவரை தவிர்க்கலாம்.
வாழக் கற்றுக்கொள்ளுங்கள் 
எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள மனதைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும், எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், நடந்ததை நினைத்து வருத்தப்படாமல், நம் வாழ்க்கையின் இந்த நாளில்… இந்த நொடியில்… நம்மைச் சுற்றிக் காணப்படும் அழகானவற்றை ரசித்து, அனைவரிடமும் முடிந்தவரை அன்பு பாராட்டி, இன்சொல் பேசி வாழ்ந்தாலே போதும் மன அழுத்தத்துக்கு முற்றிலும் `குட்பை’ சொல்லிவிடலாம்.


மனப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி
ன அழுத்தம் ஏற்படும்போது மனதை ஒருங்கிணைத்து ஆழ்நிலைத் தியானத்தில் ஈடுபடலாம் அல்லது மூச்சை மெதுவாக இழுத்து விடும் மூச்சுப்பயிற்சியைச் செய்யலாம். இதன்மூலமும் மன அழுத்தம் குறையும். நாம் பெரிய அளவில் துக்கத்துக்கோ கோபத்துக்கோ ஆளாகும்போது, அவை அனைத்தும் உடலின்மீது சுமையாக அழுத்தும்போது, இந்தப் பயிற்சிகளால் அனைத்தும் கரைந்து மனம் தெளிவு பெறும்.

Advertisements
%d bloggers like this: