அதிமுகவுக்கும் தினகரனுக்கும் என்ன தொடர்பு? சைதை துரைசாமி பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து சைதை துரைசாமி நீக்கப்பட்டதாகவும், அந்த பொறுப்புக்கு பரிதி இளம்வழுதி நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் சைதை துரைசாமி கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, டிசம்பர் 15 ஆம் தேதியிலிருந்து கட்சியின் எந்தவிதமான செயல்பாடுகளிலோ, கூட்டங்களிலோ கலந்துகொள்ளாமல் கல்வி பணியை மட்டுமே கவனித்து வருகிறேன்.

மேலும், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு  அமைப்பு செயலாளர் பதவியை சசிகலா எனக்கு வழங்கியபோதே அதனை வேண்டாம் என தெரிவித்ததுடன் கழக மூத்த நிர்வாகிகளிடமும் கடிதம் மூலம் தெரிவித்ததுடன் கட்சி பணிகளில் இதுநாள் வரை ஒதுங்கியே இருந்து வருகிறேன்.

இந்நிலையில், தினகரன் என்னை அமைப்பு செயலாளர் பதவியிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தினகரனின் நடவடிக்கைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என்று தெரிவித்தார்.

மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் காலம் முதல் கட்சியில் இருந்து வரும் பன்னீர்செல்வம் – பழனிசாமி அணிகள் இணைந்தது வரவேற்கத்தக்கது. என்னை நீக்குவதாக அறிவித்த தினகரன், கடந்த பத்து ஆண்டுகளாக எங்கே போயிருந்தார். தினகரனின் நடவடிக்கைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. வேடிக்கையாக உள்ளது என்று சைதை துரைசாமி தெரிவித்தார்.

சசிகலாவை ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து விரட்டியதுடன், கட்சியிலிருந்தும் நீக்கினார். அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து சில காலங்களுக்கு பிறகு ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் போயஸ் தோட்டம் வந்து இணைந்தவர் சசிகலா என்று தெரிவித்த சைதை துரைசாமி, சசிகலா எழுதிய கடிதத்தை படித்து காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: