மைனாரிட்டியா… பினாமியா? அ.தி.மு.க அவ்வளவுதானா?

டந்த தி.மு.க. ஆட்சியை, ‘மைனாரிட்டி தி.மு.க. அரசு’ என்றுதான் ஜெயலலிதா அழைப்பார். அவரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க ஆட்சியும், ‘மைனாரிட்டி அ.தி.மு.க. அரசாக’த்தான் மாறிக்கொண்டிருக்கிறது. இது மைனாரிட்டி அரசாக மட்டுமல்ல, பா.ஜ.க-வின் பினாமி அரசாகவும் ஆகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வமோ சொந்தப் புத்தியோடு செயல்படுபவர்கள் அல்ல. டெல்லி புத்தியோடு செயல்படுபவர்கள். அதனால்தான் அவர்கள் இருவரையும் கைப்பிடித்து சமாதானம் செய்து வைக்கிறார் ஆளுநர்.

கிண்டி ராஜ்பவன், ஆளுநர் அலுவலகமா? அவ்வை சண்முகம் சாலை அ.தி.மு.க. அலுவலகமா? சண்டை போட்டுக்கொண்ட இரண்டு சம்பந்திகளையும் கைப்பிடிக்க வைத்தது பா.ஜ.க-வுக்கு வேண்டுமானால் பாசம் காட்டும் காட்சியாக இருக்கலாம். ஆனால், ஓர் ஆளுநர் அந்தக் காரியத்தைச் செய்தது அசிங்கம். இது, முதல் அசிங்கமாக இருந்தால்தானே நாட்டு மக்கள் வெட்கப்பட வேண்டும்.

ஜெயலலிதா இறந்தபிறகு, (டிசம்பர் 5-2016) அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் முதலமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டில் இல்லை. ஓ.பன்னீர் செல்வம் அப்போது முதலமைச்சராக இருந்தார். அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்களே, அவரைப் பதவியில் இருந்து தூக்க முயற்சித்தார்கள். ‘முதலமைச்சராக சின்னம்மா வர வேண்டும். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் விட்டுத்தர வேண்டும்’ என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி கொடுத்தார். இதை அமைச்சர் செல்லூர் ராஜு வழிமொழிந்தார். இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தினார்கள். யாரால் பன்னீர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அவர்களே அவருக்கு எதிராக மாறினார்கள். அவருக்குப் பதிலாக சசிகலாவை முதல்வராகக் கொண்டுவரத் திட்டமிட்டார்கள். ‘எனக்கு இனி எதுவும் வேண்டாம்’ என்று இருந்த (!) சசிகலாவுக்கு முதலமைச்சர் ஆசையைத் தூண்டினார்கள். பதவிப் பிரமாணத்துக்கு சசிகலா நாள் குறித்ததும், பன்னீர் வெளியேறியதும், சசி சிறையேறியதும், கூவத்தூரில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டதும், எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும் அடுத்தடுத்து நடந்த அசிங்கங்கள்.
134 உறுப்பினர் கொண்ட அ.தி.மு.க. உறுப்பினர்களில் 12 பேர் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சென்றதால், 122 உறுப்பினர் ஆதரவுடன்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக முடிந்தது. இது, முதல் சறுக்கல்.
சசிகலா குடும்பத்தை அதுவரை தெண்டனிட்டுக்கிடந்த எடப்பாடி பழனிசாமியை, டெல்லி பா.ஜ.க. தலைமை தனது ‘ஸ்லீப்பர் செல்லாக’ பயன்படுத்தத் தொடங்கியதன் விளைவாக அதன்பிறகு, அவர் தினகரனுக்கு எதிராகக் கத்தியைத் தூக்கினார். ‘தினகரனைக் கட்சியைவிட்டு நீக்கிவிட்டோம்’ என்று சொல்லாமல், ‘சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இந்தக் கட்சியோ ஆட்சியோ இல்லை’ என்று எடப்பாடி வகையறாக்கள் சொல்லிவந்த நிலையில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரனை அ.தி.மு.க. உறுப்பினர்களில் 34 பேர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சென்று சந்தித்தனர். 122-ல் 34-ஐ கழித்துக்கொள்ளவும். இது இரண்டாவது சறுக்கல்.

இதே சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டங்களிலும் பங்கெடுத்தார்கள். ‘சிறையில் இருந்துவந்த தினகரனைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்கச் சென்றோமே தவிர, அவரை ஆதரிக்கவில்லை’ என்று இவர்களில் சிலர் விளக்கமளித்தார்கள். இந்த நிலையில், தினகரன் அதிகாரப்பூர்வமாக அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தினார். தினகரனது அரசியல் பிரவேசத்தின் தொடக்கப்புள்ளியாக அந்தக் கூட்டம் ஆகஸ்ட் 6-ல் நடந்தது. அதில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதன்படி பார்த்தால் எடப்பாடி அரசாங்கத்தின் பலம் 102 ஆகக் குறைந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 117 வேண்டும். இது மூன்றாவது சறுக்கல்.
மந்தையில் சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு ஆடுகள் ஒன்று சேர்ந்தன. ‘எது பிரச்னையோ அதற்கான பரிகாரம் செய்யப்பட்டு விட்டது’ என்று பொன்னையன் சொன்னார். அவர் பெரிய மனிதர். பொய் சொல்ல மாட்டார். பரிகாரம் செய்யப்பட்ட நிலையில், தினகரன் வெகுண்டெழுந்தார். அவரை ஆதரிக்கும் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்தித்து தனித்தனியாகக் கடிதம் கொடுத்தார்கள். ‘எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என்பது அந்தக் கடிதத்தின் சாராம்சம்.
இதுவரைப் பிரச்னை செய்தவர்கள், தினகரனை ஆதரித்துச் செயல்பட்டவர்கள். அதனால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், இப்போது பிரச்னை செய்பவர்கள் தினகரன் ஆதரவாளர்களாக மட்டுமல்ல; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பவர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள். 122 பேரில் 19 பேரின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி இழந்தார்.

கூவத்தூரில் கூண்டு செய்து அ.தி.மு.க. ஆட்சியை அப்போது காப்பாற்றிய தினகரன், புதுச்சேரியில் புதுக்கூண்டு செய்து அ.தி.மு.க. ஆட்சியை இப்போது கவிழ்க்கப் பார்க்கிறார். முதலில் 19 பேர் வந்தார்கள். அடுத்து இரண்டு பேர் சேர்ந்து… இன்று எடப்பாடியை எதிர்க்கும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 21ஆகியிருக்கிறது. இன்றைய தேதியில் (ஆகஸ்ட் 28 நிலவரப்படி) 101 உறுப்பினர் ஆதரவுதான் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. இது நான்காவது சறுக்கல். இதுதான் முடிவான சறுக்கலாகவும் இருக்கப்போகிறது.
ஆனால், முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 12 உறுப்பினர் ஆதரவு உள்ள ஓ.பன்னீர் செல்வம் ஆட்சி அமைத்து விடுவார் என்ற நப்பாசையில் 122 உறுப்பினர் ஆதரவு உள்ள எடப்பாடி பழனிசாமியை அழைக்காமல் மும்பையில் போய் பதுங்கிக்கொண்டவர் வித்யாசாகர் ராவ். அவரை இங்கே வரவைக்கவே துன்பப்பட, துயரப்பட வேண்டியிருந்தது. பல பெரிய மனிதர்களின் தயவு வேண்டியிருந்தது. அப்போது பன்னீர் மட்டும்தான் பா.ஜ.க-வின் ஆள். பதவிப் பிரமாணம் செய்து வைத்தபிறகு, எடப்பாடியும் பா.ஜ.க-வின் ஆளாக மாறினார். ரெண்டு பேரைப் பிரித்து ரெண்டு பேரையும் தனது ஆளாக மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் இருவருமே டெல்லிக்கு ஒரே நேரத்தில் காவடி தூக்க, இருவரையும் சேர்த்துவைக்கும் காரியத்தைத் தமிழக பா.ஜ.க. தலைமையும் அகில இந்தியத் தலைமையுமே பார்த்தது. எடப்பாடியும் – பன்னீரும் சேர்ந்துவிட்டால் எதுவும் சிக்கல் வராது என்று பா.ஜ.க. தலைமை நினைத்தது. ஆனால், அதில் மண் விழுந்து, தினகரனை 21 பேர் ஆதரிக்கும் நிலைவரும் என அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. மத்திய உளவுத்துறையும் தினகரனின் செல்வாக்கைக் குறைத்தே மதிப்பிட்டுவிட்டது.
இந்த இடத்தில் ஜனநாயகப்படி ஆளுநர் நடந்துகொள்பவராக இருந்தால், ஆகஸ்ட் 22-ம் தேதி கடிதம் கொடுத்த 19 உறுப்பினர்களையும் தனித்தனியே அழைத்துக் கருத்து கேட்டிருக்க வேண்டும். ஏதோ மும்பையே பற்றி எரிவது போல அடுத்த விமானத்தில் பறந்துபோனார். ‘எங்கள் கடிதம்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசுத் தலைவரைச் சந்திப்போம்’ என்று தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் சொன்னதும் தான் சென்னை வந்து இறங்கினார் ஆளுநர். அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது இன்னும் தெரியவில்லை.

ஓரிருவர் அல்ல. 21 உறுப்பினர்கள் முதலமைச்சரை நிராகரிக்கும்போது, இந்த முதலமைச்சர் பெரும்பான்மையை இழந்து ‘மைனாரிட்டி’ முதலமைச்சராக ஆனபிறகும் அதைப்பற்றியே கவலைப்படாமல் ஓர் ஆளுநர் எப்படி இருக்க முடியும்?
கடந்த பிப்ரவரி மாதம் செல்வாக்குடன் இருந்த எடப்பாடியை ஆட்சி அமைக்க அழைக்க மறுத்ததற்கும், இன்று பெரும்பான்மையை இழந்த பிறகு ஆட்சியை நீடிக்க வைத்திருப்பதற்கும் காரணம் எடப்பாடியின் பா.ஜ.க. ஆதரவும் மறுப்புமே.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் ஆளுநர் இருக்க வேண்டும் என்று சொல்லும் அரசியலமைப்புச் சட்டம், அந்த ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி இயங்க வேண்டும் என்று சொல்கிறது. அ.தி.மு.க. அமைப்பு சட்டப்படி இயங்குபவரை, எப்படி அரசியலமைப்புச் சட்டப்படி இயங்குபவராகச் சொல்ல முடியும்?

மத்தியில் ஆளும் கட்சிக்குக் கங்காணி வேலை பார்க்கும் ஆட்களாகத்தான் ஆளுநர்கள் இருந்துள்ளார்கள். அது காங்கிரஸாக இருந்தாலும், பா.ஜ.க-வாக இருந்தாலும் வேறுபாடு இல்லை. கவர்னர் ஜெனரல்கள் ஆண்ட பிரிட்டிஷ் காலத்தில், தங்களது உத்தரவுகளைச் செயல்படுத்த மாகாணங்களில் கவர்னர்களை வைத்திருந்தார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திர இந்தியாவில் அமைத்த பிறகும் ஆளுநர்கள் எதற்கு? எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதே காரியத்தைத் தொடர்ந்து செய்வதற்கு இருக்கட்டும் என்று நேரு நினைத்தார். அதை அம்பேத்கரும் ஏற்றுக்கொண்டதுதான் காலக்கொடுமை.
“மாநில அரசுகள், மத்திய அரசுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்” என்று நினைத்த அம்பேத்கர், ஆளுநர்களின் வேலை கண்காணிப்பதுதான் என்றும் வரையறுத்தார். இந்தியாவின் ஒற்றுமைக்குப் பலமான மத்திய அரசு இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் அன்று நினைத்தார். ஆனால், பலவீனமான மாநில அரசை ஆளுநர்கள் காப்பாற்ற வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லவில்லை. ஆளுநர் அந்த அசிங்கத்தைத்தான் பார்த்து வருகிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளரும்வரை, இந்த ஆட்சியைக் காப்பாற்றி வைத்திருக்கலாம் என்று மோடியும் அமித்ஷாவும் நினைத்து… அதை வித்யாசாகர் ராவ் மூலமாக அமல்படுத்துவதாகத் தெரிகிறது. அத்தைக்கு எப்போது மீசை முளைப்பது? மீசை முளைத்தாலும் அசிங்கமாகத்தான் இருக்கும். அதற்குள் அழுகிப் போகாதா தமிழ்நாடு?

%d bloggers like this: