அழைப்பு போகும்… ஆனா போகாது!

ழுகார் உள்ளே நுழைந்ததும்,  ‘‘அ.தி.மு.க பொதுக்குழுவுக்கான வேலைகள் தொடங்கிவிட்டதா?” என்ற கேள்வியைப் போட்டோம்.
‘‘அ.தி.மு.க பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். இந்த மண்டபத்தில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி, அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடி, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இப்போது அதே மண்டபத்தில் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவைக் கட்சியை விட்டே நீக்க இருக்கிறார்கள்.

பொதுக்குழுவில் சுமார்  3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் பற்றிய தகவல்கள், அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் அலுவலகச் செயலாளர் மகாலிங்கத்துக்கு அத்துப்படி. அவர், இப்போது எடப்பாடி அணியில்தான் இருக்கிறார். யார் யார் சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசிகள் என்ற கணக்கெடுப்பு இப்போது நடக்கிறது.”
‘‘பிரித்தெடுக்கிறார்களா?”
‘‘ஆமாம். யார் யாருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்பதைக் கணக்கெடுக்கும் வேலைகளை உடனே தொடங்கிவிட்டார்கள். ‘ரொம்ப சிக்கலை ஏற்படுத்துவார்கள்’ என்று நம்பப்படும் நபர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களுக்கு அழைப்பு அனுப்பியது மாதிரி கணக்கு மட்டும் காட்டுவார்களாம். ஆனால், அவர்களது கைக்கு அழைப்பு போகாதாம்!”
‘‘இதெல்லாம் அரசியலில் சகஜம்தானே?”
‘‘கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுக் குழுவுக்கே போகாமல் போயஸ் கார்டன் வீட்டில் இருந்த சசிகலாவைக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்து அந்தத் தீர்மானத்தை அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் வீட்டுக்குச் சென்று சசிகலாவிடம் கொடுத்தனர். ‘பொதுச்செயலாளர் நியமனத்தை சசிகலா ஏற்றுக்கொண்டார்’ என்று அப்போது ஓ.பன்னீர்செல்வம்தான் மகிழ்ச்சியோடு அறிவித்தார். ‘இந்தப் பிரச்னை இப்போது தேர்தல் ஆணையத்தில் இருக்கிறது. எனவே, இன்றைய நிலவரப்படி, கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாதான். அவரால் மட்டும்தான் கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்ட அறிவிப்பு வெளியிட முடியுமாம். அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் கூட்டத்தில் பொதுக்குழு அறிவிப்பு வெளியிட முடியாது. அது செல்லாது’ என்றுதான் தினகரன் சொல்லி வருகிறார். இன்னும் சில நாள்களில் பெங்களூரு சென்று சசிகலாவிடம் பொதுக்குழு பற்றி ஆலோசனை நடத்த இருக்கிறார் அவர்.’’

‘‘எடப்பாடி, பன்னீர் அணியினர் இணைந்து டெல்லி சென்றார்களே..?’’ 
‘‘ஆமாம். தேர்தல் ஆணையத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி அணி கொடுத்த பிரமாணப் பத்திரங்களையும், சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் அணியினர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களையும் வாபஸ் வாங்குவதற்கு டெல்லி சென்றனர். ‘இரண்டு அணிகளும் இணைந்து விட்டதால், இவற்றை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம். பொதுக்குழுவைக் கூட்டி முறைப்படி பொதுச்செயலாளர் தேர்வைச் செய்து கொள்கிறோம்’ என்று தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதும், அ.தி.மு.க-வின் பொதுக்குழுவை எந்த அடிப்படையில் கூட்டப்போகிறார்கள் என்ற விவரங்களைத் தெரிவிப்பதும் இவர்களின் திட்டம். ஆனால், தினகரன் தரப்பு இதை எதிர்க்கிறது. ‘எங்கள் கருத்தைக் கேட்காமல் அ.தி.மு.க விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’ என்று தினகரன் தரப்பில் இருக்கும் கர்நாடக அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி முறையிட்டுள்ளார். இதுபற்றி டெல்லியில் சில சீனியர் வழக்கறிஞர்களிடமும் ஆலோசனை நடத்தப்படுகிறது.”
‘‘ ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழையும், ‘ஜெயா டி.வி’-யையும் கைப்பற்ற வேண்டும் என்ற தீர்மானம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே?”

‘‘நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் நிறுவனர் ஜெயலலிதா. இதைக் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையாக அவரே அறிவித்துள்ளார். ஜெயா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளிவரும் இந்தப் பத்திரிகையின் வெளியீட்டாளராக பூங்குன்றன் இருக்கிறார். ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ், ஜெயா பிரின்டர்ஸ் என்ற நிறுவனத்தில் அச்சடிக்கப்படுகிறது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் ஜெயா பிரின்டர்ஸ் என்ற இரண்டு நிறுவனங்களின் உரிமையாளராக சசிகலா உள்ளார். இதைவைத்துத்தான் சசிகலா தரப்பு, ‘நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை எங்களுக்குச் சொந்தமானது’ என்று உரிமை கொண்டாடுகிறது. ஆனால், ‘கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிகையாக ஜெயலலிதா இதை அறிவித்துவிட்டதால், கட்சி யாருக்குச் செல்கிறதோ, அவர்களுக்குத்தான் பத்திரிகையின் பெயரும் சொந்தமாகும். ஆனால், அச்சக உரிமை சசிகலா வசமே இருக்கும்’ என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழைக் கைப்பற்றும் முடிவுக்கு வந்துள்ள எடப்பாடி தரப்பு, தினகரனால் நீக்கப்பட்ட அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் மருது அழகுராஜையே மீண்டும் அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவரும் திட்டத்தில் உள்ளது. ‘நமது எம்.ஜி.ஆர்’ பத்திரிகையின் இயக்குநராக இருந்த சசிகலாவின் உறவினர் சிவக்குமாரை பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா நீக்கம் செய்தார். இப்போது அதே சிவக்குமாரை ‘நமது எம்.ஜி.ஆர்’ இயக்குநராக சசிகலா தரப்பு நியமனம் செய்துள்ளது.”
‘‘இரட்டை இலை மாதிரி இதிலும் சிக்கலா?”
‘‘ஜெயா டி.வி எப்போதும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கப்போகிறது. ஜெயா தொலைக்காட்சியின் உரிமையாளராக சசிகலா உறவுகளே இருப்பதால் அந்தத் தொலைக்காட்சி தனியார் நிறுவனத்தின் சொத்தாகவே கருதப்படும்.”
‘‘உண்மைதான்!”
‘‘எடப்பாடியும் பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு சுறுசுறுப்பானவர் தினகரன்தான். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியைக் காலி செய்து விட்டார் தினகரன். அவருக்குப் பதிலாக எஸ்.கே.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஏற்கெனவே மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் இவர். ‘எடப்பாடிக்கு எதிராக சேலத்தில் நிலவும் ஒரு சமூகத்தின் எதிர்ப்பை, தனக்கு ஆதரவாகக் கொண்டுவரும் முயற்சி இது’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பலரை இழுக்கும் வேலைகள் ஜோராக நடந்து வருகின்றன.’’

‘‘ஓஹோ..!’’
‘‘அ.தி.மு.க-வில் இருக்கும் மூத்த எம்.எல்.ஏ மேட்டூர் செம்மலை. அவருக்கு இந்தத் தடவை அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் பார்த்துக்கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கோபத்தில் இருந்த செம்மலைக்கு மீண்டும் இடிவிழுந்தது போல இருந்தது எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது. எனவே, சசிகலா டீமைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்குப் போனார். சேலத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து தனது பலத்தைக் காட்டினார். இரு அணிகள் இணைப்பில் செம்மலைக்கு அமைச்சர் பதவி கேட்டார் பன்னீர். ஆனால், ‘முடியவே முடியாது’ என்று சொல்லிவிட்டார் எடப்பாடி. அதனால், துணை முதல்வராகப் பன்னீர் பதவியேற்ற  விழாவுக்குக்கூட செம்மலைப் போகவில்லை. இந்நிலையில், செம்மலையை இழுக்கும் முயற்சியில் தினகரன் டீம் இறங்கியுள்ளது. முக்குலத்தோர் ஆதரவைப் போல, ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்களை இழுக்கும் வேலை நடந்துவந்தன. அதற்கு அடுத்தபடியாக இப்போது வன்னியர் சமூகத்தின் முக்கிய அ.தி.மு.க நிர்வாகிகளை தினகரன் குறிவைத்துள்ளார். ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன.’’

‘‘ஓஹோ!”
‘‘இதற்கிடையில் தினகரனுக்கும் அவருடைய தளபதிகளில் ஒருவரான தளவாய் சுந்தரத்துக்கும் பிரச்னையாம். சசிகலாதான் தளவாய் சுந்தரத்துக்கு டெல்லி பிரதிநிதி என்ற பதவியைக் கொடுத்தார். தினகரனுக்கு நெருக்கமானவர் என்பதால்தான் அந்தப் பதவி அவருக்குக் கிடைத்தது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில், ‘டெல்லி பிரதிநிதி பதவியை ராஜினாமா செய்து எடப்பாடி அரசுக்கு ஷாக் கொடுங்கள்’ என்று தினகரன் சொல்லியிருக்கிறார். அதை ஏற்க மறுத்துவிட்டாராம் தளவாய் சுந்தரம். அதனால் இருவருக்கும் இடையில் சில நாள்களாகப் பேச்சுவார்த்தை இல்லையாம். இதை மோப்பம் பிடித்த எடப்பாடி பழனிசாமி, தளவாய் சுந்தரத்துக்கு வலைவிரித்தார். தளவாய் பிடிகொடுக்கவில்லையாம். ‘நீங்களாகவே வந்துவிடுங்கள். இல்லையென்றால் உங்களை டிஸ்மிஸ் செய்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுத்துவிடுவோம்’ என்று எடப்பாடி தரப்பு சொல்லியிருக்கிறது. இப்போது தினகரன் ஆதரவாளர்கள் யாருடைய போனையும் தளவாய் சுந்தரம் எடுப்பதில்லையாம்!”
‘‘ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன நினைக்கிறார்..?’’
‘‘இப்போதைய அரசியல் சூழலில் இந்த இழுபறியை நீண்ட நாள்களுக்குக் கொண்டுபோக ஆளுநர் விரும்பவில்லையாம்.  வெளிப்படையாகவே ‘எடப்பாடி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை’ என்று தெரியும்நிலையில் நீண்ட மவுனம் காப்பது, தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என மத்திய உளவுத்துறை கருத்துச் சொல்லியிருக்கிறதாம். ‘இந்தப் பிரச்னையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு தி.மு.க போவதற்குள் ஓர் அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டு விடுவார்’ என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் சொல்ல ஆரம்பித்துள்ளன. அடுத்தடுத்த நாள்களில் அதிரடிகள் தொடரும்” என்றபடி பறந்தார் கழுகார்.

%d bloggers like this: