உங்கள் நெஞ்சுவலிக்குக் காரணம் மாரடைப்பா அல்லது அசிடிட்டியா என எப்படிக் கண்டறிவது?

உங்கள் அலுவலகத்திற்கு படியில் ஏறிச் சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், திடீரென்று மார்பில் இறுக்கமாக இருக்கிறது. உங்களுடன் பணிபுரியும் அலுவலக நண்பர்களிடம் இதைப் பற்றிக் கூறுகிறீர்கள். அது அசிடிட்டியால் ஏற்பட்ட வலியாக இருக்கலாம், ஆன்டாசிட் மாத்திரை

போட்டுக்கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இப்போது இனொரு சூழ்நிலையைப் பார்க்கலாம். நல்ல காரசாரமான விருந்து சாப்பிட்டு முடிக்கிறீர்கள், உடனே நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்திற்கு நீங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதால், இது இதயம் தொடர்பான பிரச்சனையாக இருக்குமோ என்று உங்களுக்குக் கவலை வரலாம். நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வலியை பெரும்பாலான சமயங்களில் பலர் மாரடைப்பு என்றும், மாரடைப்பு வழியை செரிமானப் பிரச்சனை என்றும் தவறாக நினைத்துக்கொள்வதுண்டு.

இந்தியாவில் முப்பது வயதுக்குப் பிறகு பெரும்பாலான மக்களுக்கு இதய நோய்கள் ஏற்படுகின்றன. இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைவது (ஆஞ்சினா) அல்லது இதயத் தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் செல்லாமல் தடைபடுவது (மாரடைப்பு) போன்ற நிகழ்வுகளைக் குறிக்கும் தெளிவான அறிகுறிகள் பற்றித் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

வலி எப்படி இருக்கிறது என்று நீங்கள் கூறும் அறிகுறிகளையும், உடலைப் பார்த்து செய்யும் பரிசோதனையையும் மட்டுமே வைத்து, அது இதயம் சம்பந்தமான வலியா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்ட சாதாரண வலியா என்று பிரித்தறிவது மருத்துவர்களுக்கும் சிரமமான காரியமே. நெஞ்சுவலி என்று நீங்கள் மருத்துவரைச் சந்திக்கும்போது, அவர் சில பரிசோதனைகளைச் செய்துகொண்டு வருமாறு பரிந்துரைக்க இதுவே காரணம்.

மாரடைப்பு (Heart Attack)

மாரடைப்பு என்று தெரிந்துகொள்ளும்படி, மிகக் கடுமையான நெஞ்சுவலி, சுவாசிக்க முடியாமல் சிரமப்படுதல் போன்ற வெளிப்படையான அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை. இவை பெரும்பாலும் அதிக உடலுழைப்பு அல்லது மன அழுத்தம் போன்ற காரணங்களால் மட்டுமே வெளிப்படும்.  பெரும்பாலும் நெஞ்சுவலி உருவாகி, மெதுமெதுவாக அதிகரித்து, கடைசியில் மிகக் கடுமையாகும். அதுமட்டுமின்றி மாரடைப்புக்கான அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்.

மாரடைப்பின் பொதுவான சில அம்சங்கள்:

 • நெஞ்சு இறுக்கமாக, அழுத்தமாக, நெஞ்சைப் பிசைவது போன்ற உணர்வு அல்லது மார்பில் வலி இருக்கும்
 • வலி, கழுத்து, தாடை, தோள் பட்டை, கை, முதுகு போன்ற பகுதிகளுக்குப் பரவலாம்
 • சுவாசிக்க சிரமமாகும் அல்லது மூச்சிரைக்கும்
 • உடல் குளிர்ந்து வியர்க்கும்
 • தலைச்சுற்றல், பலவீனமான உணர்வு கிறுகிறுப்பு ஏற்படலாம்
 • குமட்டல் (வாந்தி வருவது போன்ற உணர்வு) இருக்கலாம், வாந்தியும் ஏற்படலாம்
 • களைப்பு (சோர்வு)

அசிடிட்டி, நெஞ்செரிச்சல் (Acidity and reflux disease)

இரைப்பை அழற்சி (வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் காரணமாக வயிற்றில் ஏற்படும் அழற்சி) மற்றும் நெஞ்செரிச்சல் (வயிற்றிலிருந்து அமிலம் கலந்த உணவுக் கூழ்மம் மேலெழும்புதல்) போன்ற காரணங்களாலும் நெஞ்சுவலி ஏற்படலாம். உணவுக் குழாயின் முடிவில் இருக்கும் வால்வு சரியாக செயல்படாததால், செரிமானத்திற்காக சுரக்கும் அமிலம் உணவுக் குழலுக்கு வரும்போது ஏற்படும் அசௌகரியம் அல்லது வலியை நெஞ்செரிச்சல் என்று கூறுகிறோம். உணவு மீண்டும் உணவுக் குழாய்க்கு வருகிறது, செரிமானத் திரவம் உணவுக் குழாயின் உட்புறச் சுவரில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்த எரிச்சலால் அசௌகரியம் அல்லது வலி ஏற்படுகிறது, இது மார்புப் பகுதியில் உணரப்படும்.

நெஞ்செரிச்சலின் அம்சங்கள் (The features of heartburn include):

 • வயிற்றின் மேல் பகுதியில் எரிச்சல் தொடங்கி, மார்புப் பகுதியில் மேல் நோக்கி நகரும்
 • இந்த வலி/அசௌகரியமானது சாப்பிடுவதால் அல்லது உடலின் நிலையை மாற்றுவதால் (குனியும்போது அல்லது படுக்கும்போது அதிகமாக இருக்கும்) மாறும்.
 • வாயில் புளிப்பு சுவை தோன்றலாம் (இதை வாட்டர் ப்ராஷ் என்பர், அதாவது திடீரென்று உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்)
 • சிறிதளவு உணவு வயிற்றில் இருந்து தொண்டைக்கு மேலேறி வரலாம் (எதுக்களித்தல்)
 • பொதுவாக ஆன்டாசிட் மருந்துகளை எடுத்துக்கொண்டதும் இந்த வலி குறையும்
 • தூக்கம் கலைந்து எழும் அளவுக்கு வலி அதிகமாக இருக்கலாம், குறிப்பாக படுக்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட்டிருந்தால் இப்படி ஆகலாம்.

சில சமயம், பித்தப்பையில் இருக்கும் பிரச்சனைகளாலும் மார்பில் பரவக்கூடிய வலி ஏற்படலாம். பித்தப்பை நோய் இருப்பவருக்கு ஏற்கனவே வயிற்றின் மேற்பகுதி அல்லது நடுப்பகுதியில் அல்லது வலது பக்கத்தில் வலி இருக்கும். பொதுவாக இந்த வலி அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும், குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவை உண்ட பிறகு இப்படி ஏற்படலாம். வலி உங்கள் தோள்பட்டை, கழுத்து, கைகள், முதுகுக்கும் பரவலாம்.

இதயம் சம்பந்தமான வலி எது, நெஞ்செரிச்சல் சம்பந்தமான வலி எது என்று எப்படிப் பிரித்தறிவது? (How to differentiate cardiac pain and heartburn?)

கடுமையான நெஞ்செரிச்சலையும் மாரடைப்பையும் வேறுபடுத்தி அறிவது சிரமமான காரியமாக இருக்கலாம். எனவே ஒரு நெஞ்சுவலியை எப்போதும் அலட்சியமாக விடக்கூடாது, உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
மாரடைப்பையும் செரிமானப் பிரச்சனையால் வந்த வலியையும் வேறுபடுத்தி அறிவதற்கு சில குறிப்பிட்ட அம்சங்கள் உதவும், அவற்றில் சில:

1. வலியின் தன்மை (Nature of the pain)

இதயம் சம்பந்தப்பட்ட வலி

 • வழக்கமாக வலியானது ஏதோ இறுக்கமாக இருப்பது போல் அல்லது பிசைவது போல் அல்லது அடைப்பது போல், உயிரே போவதுபோல் இருக்கிறது என்று சொல்லும்படி இருக்கும்.
 • சிலருக்கு, அது ஒரு மந்தமான வலியாக இருக்கலாம் அல்லது மார்புப் பகுதியில் எதோ லேசான அசௌகரியம் போலத் தோன்றலாம், இதனாலேயே இதயம் சம்பந்தப்பட்ட நெஞ்சுவலி இப்படித்தான் இருக்கும் என்று வரையறுத்துக்கூறுவது கடினமாக இருக்கிறது.

அசிடிட்டி, நெஞ்செரிச்சல் சம்பந்தப்பட்ட வலி

 • நெஞ்செரிச்சலால் உருவாகும் வலியானது சுருக்கென்று குத்துவது போல் இருக்கும், எரிச்சலாக இருக்கும் அல்லது நெஞ்செலும்புக்குக் கீழ்ப் பகுதியில் கில்லுவதுபோல் அல்லது அழுத்துவது போல் இருக்கும்.

2. வலி ஏற்படும் இடம் மற்றும் வலி பரவுதல் (Location of Pain and spread)

இதயம் சம்பந்தப்பட்ட வலி

 • பொதுவாக, வலி மார்பின் நடுப்பகுதியில் ஏற்படும், அங்கிருந்து வெளிநோக்கிப் பரவும்
 • வலியானது தோள்பட்டை, கைகள், கழுத்து மற்றும் தாடை வரை பரவும் (பொதுவாக இடது புறத்தில் பரவும், சில நேரங்களில் இரண்டு பக்கமும் பரவலாம்)
 • சிலருக்கு, வலி மேல் வயிற்றுக்கும் பரவக்கூடும்

அசிடிட்டி, நெஞ்செரிச்சல் சம்பந்தப்பட்ட வலி

 • பொதுவாக வலி பரவாது, மார்பின் மையப் பகுதியில் மட்டுமே வலி இருக்கும்
 • வலி மார்பின் நடுப்பகுதியில் இருக்கலாம்
 • அமிலம் உணவுக் குழாய்க்கு மேலெழும்பி, வயிற்றில் அழற்சி ஏற்படுவதாலும் நெஞ்சு வலி ஏற்படலாம், அதோடு வயிற்றின் மேல் பகுதியிலும் இதனால் வலி ஏற்படலாம். இதை வைத்து, வலி பரவுகிறது என்று நாம் தவறாக நினைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது

3. வலியைத் தூண்டுபவை (Precipitating Factors)

இதயம் சம்பந்தப்பட்ட வலி

 • பொதுவாக கடுமையான உடல் உழைப்பு (உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி) அல்லது உணர்ச்சிவசப்படுவதால் வலி தூண்டப்படுகிறது
 • சில நேரங்களில், அதிகமாக சாப்பிடுவதால் அல்லது மிகக் குறைவான அல்லது அதிகமான வெப்பநிலையாலும் வலி ஏற்படலாம் அல்லது அதிகரிக்கலாம், குறிப்பாக அதிக குளிரான தட்பவெப்பநிலையால் வலி தூண்டப்படும்.
 • சிலருக்கு “நிலையற்ற மார்பு நெறிப்பு” எனப்படும் பிரச்சனை இருக்கலாம், இவர்களுக்கு உடல் செயல்பாடு எதுவும் இன்றி, ஓய்வில் இருக்கும்போதே கூட வலி இருக்கலாம்.

அசிடிட்டி, நெஞ்செரிச்சல் சம்பந்தப்பட்ட வலி

 • வலி திடீரென்று தானாக உருவாகலாம், உடல் உழைப்புடன் தொடர்பற்றதாக இருக்கலாம்
 • குனியும்போது அல்லது படுக்கும்போது, அதாவது உடலின் திசைநிலை மாறும்போது வலி அதிகரிக்கலாம்
 • சிலருக்கு, சில வகை உணவுகளால் நெஞ்செரிச்சல் ஏற்படும், உதாரணமாக, காரசாரமான உணவு வகைகள், வெங்காயம், தக்காளி அல்லது கெச்சப், சிட்ரஸ் தயாரிப்புகள், பொறித்த அல்லது கொழுப்பு நிறைந்த உணவுப்பொருள்கள், சாக்லேட், பெப்பர்மின்ட், ஆல்கஹால், காபி, வாயு நிறைத்த பானங்கள் (கோலா போன்றவை) மற்றும் அதிக அளவிலான அல்லது கொழுப்பு நிறைந்த உணவு ஆகியவற்றை உண்பதாலும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.

4. வலியில் இருந்து நிவாரணம் பெற (Relieving Factors)

இதயம் சம்பந்தப்பட்ட வலி

 • ஓய்வெடுத்தால் வலி நீங்கலாம்
 • நைட்ரேட் வகை மருந்துகளை எடுத்துக்கொள்வதால், அறிகுறிகளில் இருந்து விரைவில் விடுபடலாம்

அசிடிட்டி, நெஞ்செரிச்சல் சம்பந்தப்பட்ட வலி

 • வழக்கமாக, ஓய்வெடுப்பதால் வலி போகாது
 • வழக்கமாக, நைட்ரேட் மருந்துகள் பலனளிக்காது
 • ஆன்டாசிட் மருந்துகள் எடுத்துக்கொண்டால் வலி நீங்கலாம்

5. சம்பந்தப்பட்ட பிற அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் (Other associated symptoms and signs)

இதயம் சம்பந்தப்பட்ட வலி

 • மூச்சு வாங்குதல்
 • தலைச்சுற்றல், கிறுகிறுப்பு
 • குமட்டல், வாந்தி இருக்கலாம்

அசிடிட்டி, நெஞ்செரிச்சல் சம்பந்தப்பட்ட வலி

 • குமட்டல், வாந்தி, ஏப்பம், வயிறு உப்புசம், எதுக்களித்தல் (உணவு மேலெழும்பி வருதல்) போன்ற பிற அறிகுறிகள் இருக்கலாம்

எப்போதும் பாதுகாப்பான வழிமுறையே நல்லது, சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும் (Always err on the side of safety – Visit a doctor when in doubt)

சில அறிகுறிகள் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை வைத்து மட்டுமே, நெஞ்சு வலி நெஞ்செரிச்சலால் வந்ததா அல்லது மாரடைப்பு காரணமாக ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய முடியாது. பரிசோதனையும், மேற்படி ஆய்வுகளும் செய்ய வேண்டியது அவசியம். இது சம்பந்தப்பட்ட சோதனைகள் மற்றும் ஆய்வுகளைச் செய்தே ஒரு மருத்துவ நிபுணர் இதைத் தீர்மானிக்க முடியும்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், அதிகம் புகைபிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவுநோய் உள்ளவர்கள், அதிக கொழுப்பு உள்ளவர்கள் போன்றோருக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை வரும் ஆபத்து அதிகம்.

உங்களுக்கு நெஞ்சு வலி இருந்து, அது எந்த காரணத்தால் வந்துள்ளது என்று நிச்சயமாகத் தெரியவில்லை என்றால், மருத்துவரிடம் செல்வதே நல்லது. நீண்ட நேரம் வலி இருந்தால் தான் அது ஆபத்து என்று கருத வேண்டியதில்லை.

காரணம் இல்லாமல் எப்போதாவது உங்களுக்கு நெஞ்சுவலி வந்து, சில மணி நேரங்களில் அது சரியாகியிருக்கலாம், இருந்தாலும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று மேற்படி பரிசோதனைகள் செய்துகொள்வது மிக நல்லது.

%d bloggers like this: