சட்டசபை முடக்கம்! – பி.ஜே.பி நெக்ஸ்ட் மூவ்

மும்பை பெருமழையைவிட கவர்னர் வித்யாசாகர் ராவ் பெரிய நெருக்கடியாக நினைப்பது, தமிழக அரசியல் சூறாவளியைத்தான்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். ஜன்னலுக்கு வெளியே நிதானமான மழை, சென்னையை நனைத்துக்கொண்டிருந்தது.
‘‘ஆமாம். அவர் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்றுதானே எல்லா அரசியல் கட்சிகளும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றன’’ என்றோம்.
‘‘ஆனால், அவர்தான் ‘இது உள்கட்சி விவகாரம்’ என்று

சொல்லிவிட்டாரே. தன்னைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்களிடம் சொன்னது போலவே, தன்னுடைய நண்பர் ஒருவரிடமும் இதே விஷயத்தைச் சொன்னாராம். வித்யாசாகர் ராவ் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர். ‘எனக்கும் சட்டம் தெரியும். அது மட்டுமில்லை. சட்ட நிபுணர்களிடம் பேசி விட்டேன். இதுபோன்ற ஒரு சூழலில் கவர்னர் தலையிட்டதாக எந்த முன்னுதாரணமும் இல்லை’ என்று அந்த நண்பரிடம் கவர்னர் சொன்னாராம்.’’
‘‘அப்படியானால் இந்த நிச்சயமற்ற நிலையே தொடருமா?’’
‘‘எத்தனை நாள்களுக்கு இப்படியே இழுத்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு தருணத்துக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள்.’’
‘‘என்ன அது?’’
‘‘இப்போதைய தமிழக அரசியல் சூழலை வைத்து தி.மு.க-வோ, டி.டி.வி.தினகரன் தரப்போ செல்வாக்குப் பெறுவதை பி.ஜே.பி-யின் டெல்லி தலைவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் எடப்பாடி அரசுக்கு முடிந்தவரை முட்டுக் கொடுக்கப் பார்க்கிறார்கள். இப்போது எடப்பாடி பழனிசாமி, மாவட்டவாரியாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களைக் கூப்பிட்டுப் பார்க்கிறார் அல்லவா? அது, டெல்லியிலிருந்து வந்த ஐடியாவாம். எடப்பாடி பக்கமும் சாயாமல், தினகரன் முகாமுக்கும் போகாமல் மதில் மேல் பூனைகளாக சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். இந்த ஆட்சி நிலைக்குமா, கவிழுமா என்பது அவர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் உறுதியாக எடப்பாடி பக்கம் வந்தால், தினகரனிடம் இப்போது இருக்கும் 22 எம்.எல்.ஏ-க்களில் சிலர் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று எடப்பாடி நம்புகிறார். அப்படி நடக்காவிட்டால், இந்த ஆட்சி நீடிக்காது. அப்படிப்பட்ட மதில் மேல் பூனைகளின் லிஸ்ட் எடுத்து, அவர்களுக்குச் சில உறுதிமொழிகள் தரப்படுகின்றன. அதற்காகவே இந்த மாவட்டவாரியான சந்திப்பு நடக்கிறது.’’

‘‘இதனால் தினகரன் முகாமில் மனமாற்றம் நடக்குமா?’’
‘‘அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகஸ்ட் 31-ம் தேதி வியாழக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பேசியதை கவனித்தீரா? ‘தினகரன் பக்கம் இருப்பவர்களில் அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் படிப்படியாக வாய்ப்பு வழங்கப்படும்’ என்று உதயகுமார் சொன்னார். எடப்பாடி தரப்பு ரகசியமாகப் போடும் தூண்டிலை உதயகுமார் வெளிப்படை யாகச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் வித்தியாசம். இதையெல்லாம் செய்துகொண்டே சட்ட நிபுணர்களிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். தினகரன் தரப்பும் அரசியல் சட்டப் புத்தகத்தில் இருக்கும் எல்லா ஓட்டைகளையும் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு பார்க்கிறது. தி.மு.க-வும் இதையே செய்கிறது. தினகரன் பக்கம் சென்ற
எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி அவர்கள் பதில் தந்திருந்தனர். ஆனால், ‘இது இடைக்கால பதிலாகவே கருதப்படும். முழுமையான விளக்கத்தை செப்டம்பர் 5-ம் தேதிக்குள் தர வேண்டும்’ என அவர்களுக்குச் சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதேபோல குட்கா விவகார உரிமை மீறலில் சிக்கிய 21 தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸ் போன்ற எல்லா விவகாரங்களையும் நினைத்துக்கொண்டு எடப்பாடி தரப்பு தெம்பாக இருக்கிறது.’’
‘‘இதையெல்லாம் தாண்டி நீதிமன்றத்துக்கு இந்த விஷயம் போனால் என்ன ஆகும்?’’
‘‘அதற்கான சாத்தியங்களும் இருக்கவே செய்கின்றன. அதை முந்திக்கொள்ள எடப்பாடி தரப்பு நினைக்கிறது. தினகரன் பக்கம்போன 19 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டும், குட்கா விவகாரத்தில் தி.மு.க தரப்பில்
21 எம்.எல்.ஏ-க்களை சஸ்பெண்ட் செய்துவிட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முடிவில் அவர்கள் இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு முதலிலா, பொதுக்குழு முதலிலா என்ற விவாதம் இப்போது நடக்கிறது. இந்த இரண்டு விஷயங் களிலும் தினகரன் தரப்பினர் சட்டரீதியாக முட்டுக்கட்டை போடலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. இதைத் தாண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்பட்சத்தில் என்னென்ன களேபரங்களைச் சட்டமன்றம் சந்திக்குமோ என்ற கவலையும் சட்டமன்ற அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.’’
‘‘ஓஹோ!’’
‘‘இன்னொரு விஷயம் சொல்கிறேன்… கேளும்! ‘அடுத்தடுத்து இங்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாமே மத்தியில் ஆளும் பி.ஜே.பி மீதுதான் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்துகிறது’ என்று மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம். இவர்கள் இங்கே நிகழ்த்தும் கூத்துகளை ஆட்டுவிப்பவர்கள் என்ற கெட்ட பெயரோடு நீண்ட நாள்களைக் கடத்த டெல்லி மேலிடம் விரும்பவில்லை. அதனால் அவர்கள் சில திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.’’
‘‘என்ன அவை?’’
‘‘அ.தி.மு.க-விலும் சட்டமன்றத்திலும் நடக்கும் கூத்துகளைத் தொடர்ந்து, சட்டமன்றத்தை முடக்கிவைக்க கவர்னர் பரிந்துரை செய்வார். அருணாசலப்பிரதேசத்தில் நடந்தது போன்ற சூழல் இங்கும் நடக்கும். அதன்பிறகு பி.ஜே.பி-யின் அதிரடி ஆரம்பமாகும். கவர்னரின் ஆலோசகர்களாகச் சில அதிரடி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். ஊழல்களைக் களையெடுப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று பி.ஜே.பி-யில் சேர்ந்தார் அல்லவா? அதுபோல இன்னும் 40 பேரைக் குறி வைத்திருக்கிறது பி.ஜே.பி. கட்சி ரீதியாக இருக்கும் செல்வாக்கைத் தாண்டி, தங்கள் சொந்த செல்வாக்கையும் பெற்றிருக்கும் இந்தப் பிரமுகர்கள் அடுத்தடுத்து பி.ஜே.பி-யில் இணைவார்கள். மத்திய அமைச்சர்கள் பலர் அடிக்கடி தமிழகம் வருவார்கள். அரசு இயந்திரம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செயல்பட்டு பல நல்ல விஷயங்கள் நடக்கும். ‘பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் தொடரும்’ என்பது போன்ற பிரசாரத்தை ஆரம்பிப்பார்கள். இதற்காக இரண்டு மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டு தமிழகப் பொறுப்பை ஏற்கப்போவதாகவும் சொல்கிறார்கள்.’’
‘‘அப்படியானால் அ.தி.மு.க?’’
‘‘எப்படியும் அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்றே பி.ஜே.பி நம்புகிறது. இரண்டு பிரிவுகளாக இருக்கும் அ.தி.மு.க-வில் எடப்பாடி தரப்பு, பி.ஜே.பி-யின் கூட்டணியில் இணைய வேண்டியிருக்கும். இதெல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்கும் கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலோடு தமிழகத்துக்கும் தேர்தல் நடக்கலாம்.’’
‘‘இது எடப்பாடி தரப்புக்குத் தெரியுமா?’’

‘‘அவர்களுக்குத் தெரியுமா என்பது குழப்பமாகவே இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்கள் யாரும் இருக்கக் கூடாது என பி.ஜே.பி நினைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அ.தி.மு.க ஓட்டு வங்கியைத் தங்கள் பக்கம் வளைக்க முடியும் என்பது அவர்களின் திட்டம். அதனால்தான் பன்னீர்செல்வத்தை கட்டாயப்படுத்தி எடப்பாடியுடன் சேர வைத்தார்கள். அந்த இணைப்புப் பேச்சு வார்த்தைகள் க்ளைமாக்ஸில் இருந்த நேரத்தில், பன்னீருக்கு ஆதரவாக இருந்த டெல்லி பிரமுகர் ஒருவர், ‘இன்னும் இரண்டு மாதங்களில் ஆட்சியே இல்லாமல் போய்விடுமே… பிறகு எதற்கு உங்களை இணைப்புக்குக் கட்டாயப்படுத்துகிறார்கள்’ என வெகுளியாகக் கேட்டாராம். அ.தி.மு.க-வில் ஓரளவுக்குச் செல்வாக்கு பெற்றவராக இருந்த பன்னீர், இப்போது கணிசமாக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார். அந்த டெல்லி பிரமுகர் சொன்னதை இப்போதும் அவர் நினைத்துக்கொள்கிறார்.’’
‘‘பாவம். சரி, அமைச்சர்கள் சிலரும் அ.தி.மு.க நிர்வாகிகளும் டெல்லி சென்றது எதற்காகவாம்?’’
‘‘சென்னையில் கிளம்பும்போது, ‘தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கும் மனுக்களைத் திரும்பப் பெறப்போகிறோம்’ என்று சொன்ன  மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி வந்தனர். வழக்கம் போலவே இந்த முறையும் மனோஜ் பாண்டியன் டெல்லியிலுள்ள மைத்ரேயன் வீட்டில் தங்கினார். சில டெல்லி வழக்கறிஞர்களுடன் மைத்ரேயனும் மனோஜ் பாண்டியனும் ஆலோசனை நடத்தினர். ‘சசிகலாவுக்கு எதிராகப் புகார் மனுவைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கும்போது, பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெற்றால் அது அவருக்குத்தானே சாதகமாகும். எனவே திரும்பப்பெறுவது உங்களுக்கு எதிராகப் போய்விடும்’ என்று யோசனை சொன்னார் களாம். அதனால், தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் கைவிடப்பட்டு நேராக தம்பிதுரை வீட்டுக்குச் சென்றனர். அவருடன் இணைந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவருடைய உத்யோக் பவனில் உள்ள அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். அரைமணி நேரம் ஆலோசனை நடந்தது. ‘நிர்மலா சீதாராமனைச் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை’ என்று ஜெயக்குமார் நிருபர்களிடம் சொன்னார். அதன் பின்னர் அனைவரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும், பின்னர் மறுநாள் காலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தனர்.’’
‘‘அருண் ஜெட்லியிடம் என்ன பேசினார்களாம்?’’
‘‘இணைப்புக்குப் பிறகு தமிழகத்தில் இருப்பவர்களுக்குப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைத்துவிட்டன. டெல்லி லாபியைப் பார்ப்பவர்கள் சும்மா இருக்க முடியுமா? அதனால் மத்திய அரசில் பங்கு கேட்கத்தான் சந்தித்தார்கள். இரண்டு அணிகளாக அ.தி.மு.க பிரிந்து கிடந்தபோதே, ‘கூட்டணியில் எங்களை இணைத்துக்கொள்ளுங்கள்’ என்று பிரதமரிடம் இரு தரப்புமே வலியுறுத்தி வந்தன. பிரதமரோ, ‘முதலில் அணிகள் இணைப்புக்கு வழி பாருங்கள்’ என்று சொல்லிவிட்டார். இப்போது அணிகள் இணைந்துவிட்டதால், நம்பிக்கை யோடு சென்றனர். ஆனால், நம்பிக்கை பொய்த்துப்போனதால் வருத்தத்துடன் இருக்கிறார்கள்.’’
‘‘என்ன ஆனதாம்?’’
‘‘முதலில் பிரதமரைச் சந்திக்க முயற்சி செய்துள்ளார்கள். ஆனால், ‘அருண் ஜெட்லியைச் சந்தியுங்கள்’ என பிரதமர் அலுவலகத்தில் சொல்லிவிட்டார்களாம். அங்கு போய், ‘பிரதமர் சொன்னது போல அணிகளை இணைத்துவிட்டோம். இனி எங்களைக் கூட்டணியில் எப்போது இணைக்கப் போகிறீர்கள்?’ என்று இவர்கள் கேட்டதும், ஜெட்லியின் முகம் மாறிவிட்டதாம். தம்பிதுரை தான் ஜெட்லியிடம் பேசியுள்ளார். ‘கூட்டணியில் எங்களை இணைத்துக்கொள்ளுங்கள். நான்கு அமைச்சர் பதவிகளை எங்கள் தரப்பிலிருந்து எதிர்பார்க்கிறோம்’ என்று பட்டியலைச் சொல்லியுள்ளார். தம்பிதுரைக்கும் மைத்ரேயனுக்கும் கேபினட் பொறுப்பும், ஜெயக்குமார் மகன் ஜெயவர்தனுக்கு தனிப் பொறுப்புடன் இணை அமைச்சரும், திருவள்ளூர் வேணுகோபாலுக்கு இணை அமைச்சர் பொறுப்பும் கேட்டுள்ளார்.’’
‘‘ஜெட்லி என்ன சொன்னாராம்?’’
‘‘அவர் தீர்மானமாகப் பேசினாராம். ‘ஜெயலலிதா மேடம் இருந்தபோது என்ன உறவு அ.தி.மு.க-வுடன் எங்களுக்கு இருந்ததோ, அதே உறவுதான் இனியும் தொடரும். கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கு இப்போது வாய்ப்பில்லை. பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை நட்பான கட்சியாக மட்டுமே, அ.தி.மு.க-வைப் பார்க்கிறோம்’ என்று தெளிவாகச் சொன்னாராம். ஆனாலும், விடாப்பிடியாகத் தொடர்ந்து அ.தி.மு.க-வினர் பேசியபோது, ‘நீங்கள் இது சம்பந்தமாக பிரதமரிடம் பேசிக் கொள்ளுங்கள்’ என்றாராம். ‘பிரதமரிடம் நேரம் வாங்கிக் கொடுங்கள்’ என்று அ.தி.மு.க தரப்பு கேட்டதும், ‘அவரைச் சந்திக்க முடியாமல்தானே என்னை வந்து சந்தித்தீர்கள்?’ என்று ஜெட்லி கேட்டாராம். அதில் அப்செட் ஆகிவிட்டது அ.தி.மு.க குழு.’’
‘‘அப்படியா?’’
‘‘அ.தி.மு.க குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தை பற்றி, பிரதமரிடமும் உடனடியாகத் தெரிவித்து விட்டாராம் ஜெட்லி. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பிறகு  அ.தி.மு.க குழுவினர், சசிகலா விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ரவிசங்கர் பிரசாத் மற்றும் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார்கள். அவர்களும் ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்களாம். ஆனால், அமித் ஷா தமிழக விவகாரம் பற்றி விரைவில் முடிவெடுக்க வேண்டும் எனத் தீர்மானமாக இருக்கிறார்’’ என்ற கழுகார், பறந்தார்.


%d bloggers like this: