டெல்லியிலிருந்து கிடைத்த சிக்னல்; திடீர் உற்சாகத்தில் தினகரன்

டெல்லியிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்னல் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் சசிகலா அணியினர் உள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அ.தி.மு.க-வில் நிலவும் உள்கட்சிப் பூசல், அதிகாரப் போட்டி ஆகியவற்றால் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து  மீள முடியாமல் அ.தி.மு.க-வினர் திணறுகின்றனர். சசிகலா அணியினருக்கு நெருக்கடி கொடுத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமரசமானதும், ஆட்சிக்கும் கட்சிக்கும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் தினகரன்.

கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுபோல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள அதிருப்தி காரணமாக தினகரனுக்கு ஆதரவு எம்.எல்.எ-க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து எம்.பி-க்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது. அப்போதுதான் டெல்லியிலிருந்து நமக்கு அழைப்பு வரும் என்று தினகரன் எதிர்பார்த்து காயை நகர்த்த தொடங்கியுள்ளது. அவர்கள் எதிர்பார்த்தபடி, டெல்லியிலிருந்து தினகரனுக்கு சாதகமான சிக்னல் கிடைத்துள்ளது. இதனால், தினகரன் தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், “கட்சிக்குத் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ,தி.மு.க-வுக்குச் சிக்கலை ஏற்படுத்திவிட்டார். ஏனெனில், சிறைக்குச் செல்லும் முன் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி அவரின் கையில் ஆட்சியை ஒப்படைத்தார். அதுபோல துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்து கட்சியை ஒப்படைத்தார்.

ஜெயலலிதா ஏற்படுத்திய ஆட்சியைக் கவிழ்க்க ஓ.பன்னீர்செல்வம் செய்த துரோகத்தை அ.தி.மு.க தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். வெறும் 12 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்ற ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் இந்த ஆட்சிக்கு எதிராக தி.மு.க-வுடன் சேர்ந்து வாக்களித்தார். அப்போது, நாங்கள்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்தோம். அதனால், இந்த ஆட்சி தொடர்ந்தது.

சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிலரது தூண்டுதலின்பேரில் மாறிவிட்டார். ஆனால், அனைத்தும் அவரது மனசாட்சிக்குத் தெரியும். சசிகலா இல்லையெனில் எடப்பாடி பழனிசாமி முதல்வரே கிடையாது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா குடும்பத்தினரின் மூலம் எம்.எல்.ஏ-க்கள் சீட் மற்றும் கட்சிப் பதவிகளைப் பெற்றவர்கள் இன்று அவருக்கு எதிராகப் பேசுவது நியாயமில்லை. 

அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தவர்கள் அந்தப் பதவியிலிருந்து அவரை நீக்கத் துடிக்கின்றனர். இதற்குப் பின்னால் சிலரது தூண்டுதல் உள்ளது. கட்சிக்குத் துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் துரோகம் செய்ய மாட்டாரா. அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் அடகு வைக்க முயற்சி செய்யும் சிலரது எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. அவர்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் மன்னிக்காது.

ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்துவிட்டால் சின்னம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் டெல்லி சென்றவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. சின்னத்தையும் கட்சியையும் அழிக்கவே டெல்லி விரும்புகிறது. ஆனால், தங்களுடைய சுயலாபத்துக்காக அதையும் செய்ய சிலர் தயாராகிவிட்டனர். அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் அ.தி.மு.க-வை அழிக்கப்பார்க்கின்றனர். அதை தினகரன் தடுத்துவருகிறார்.

குறிப்பாக, மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்த்த எம்.பி-க்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடம், ‘உங்களுடைய ஆட்சியே நீடிக்காத நிலையில் இருக்கிறது. தினகரனுக்கு தினந்தோறும் ஆதரவு அதிகரித்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆதரவு குறைந்துள்ளது என்ற மத்திய உளவுத்துறை மூலம் எங்களுக்கு ரிப்போர்ட் வந்துள்ளது. இதனால் தினகரனிடம் சமரசம் செய்து ஆட்சியைக் காப்பாற்றுங்கள். தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது, தி.மு.க-வுக்குத்தான் சாதகமாக அமையும், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் தி.மு.க வெற்றி பெற வாய்ப்புள்ளது. தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டியைப் பெற்றுவிட்டால் என்ன செய்யப்போகிறீர்கள். முதலில் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் குறையுங்கள். இல்லை அவரிடம் சமரசம் செய்து ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றுங்கள்’ என்று டெல்லி மேலிடம் சொல்லி அனுப்பியுள்ளது.

இந்தத் தகவலைக் கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனடியாக ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆட்சியைக் காப்பாற்றவும் பெருபான்மையை நிரூபிக்கவும் எம்.எல்.ஏ-க்களிடம் ஆலோசனை நடத்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.அதோடு, தினகரன் தரப்பில் உள்ள கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருடன் சமரச பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுவருகிறது. அதில் பாசிட்டீவ்வான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தினகரன் தரப்பு அமைச்சரவையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதுதொடர்பாகப் பேசி முடிவெடுக்கிறோம் என்று முதல்வர் தரப்பு சொல்லியிருக்கிறது” என்றனர்.

%d bloggers like this: