உற்சாகத்துக்கும் ஊட்டத்துக்கும் உலர் பழங்கள்

ழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு  முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

உலர்ந்த பழங்கள், அத்தியாவசியக் கனிமங்கள், வைட்டமின்கள், ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients)  மற்றும் நமக்கு ஒவ்வொருநாளும் தேவைப்படும் நார்ச்சத்தையும் வழங்குகின்றன. இவற்றை நீண்ட நாள்கள் பாதுகாத்து வைத்திருக்கலாம். மேலும் அவற்றைப்  பயணத்தின் போது, மிக எளிதாக பேக் செய்து எடுத்துச்செல்லவும் முடியும்.

உலர்ந்த பழத்தில் ஊட்டச்சத்து அடர்த்தியாக இருக்கும். அதேநேரம் இவற்றில் கலோரிகள் மிகவும் அதிகம். எனவே இவற்றை அளவுடன் பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உண்பதே போதுமானது. இயற்கையான சர்க்கரையைக் கொண்டிருக்கும் உலர்ந்த பழங்கள், ரத்தச் சர்க்கரையைப் பாதிப்பதில்லை. சிலவகை உலர்ந்த பழங்களில் பதப்படுத்துவதற்காக, அதிகச் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வகை பழங்கள் ஏற்றவையல்ல.
உலர்ந்த பழங்கள் ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் களின்  மிகச் சிறந்த ஆதாரமாகும். பினொலிக் அமிலங்கள் (Phenolic Acids), ஃபிளேவனாய்டுகள் (Flavanoids), ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்ஸ் (Phytoestrogenes) மற்றும் கரோட்டினாய்டுகள் (Carotenoids) போன்றவை சிறந்த ஆன்டிஆக்ஸிடண்ட்ஸாக உதவுகின்றன.
பாரம்பர்ய உலர்ந்த பழங்களான திராட்சை, பிளம்ஸ், பேரீச்சை மற்றும் அத்தி போன்றவை ஃபிரெஷ் பழங்களைப்போன்ற ஊட்டச்சத்து களையும் அதே நன்மைகளையும் வழங்கு கின்றன.  உலர்ந்த பழங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதால் பெருங்குடல் ஆரோக்கியத்திலும் பெரும் பங்களிக்கின்றன. தினசரி உணவில் உலர் பழங்களைச் சேர்த்துக் கொள்ளும்  வழக்கமுள்ளோர், அவற்றை உட்கொள்ளா தவர்களைவிடக்  குறைந்த உடல் எடை மற்றும்  குறைந்த இடுப்புச் சுற்றளவைக் கொண்டவர்களாக இருப்பதாக  ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
உலர்ந்த திராட்சை
உலர் திராட்சைகள் நார்ச்சத்து நிறைந்தவை. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தவை. கலோரி நிறைந்த இவற்றை உணவுக்குமுன் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. அதனால் கலோரி நுகர்வு குறைகிறது. விளையாட்டு வீரர்கள் போட்டிகளின்போது தங்கள் செயல்திறனை அதிகரிக்கத் திராட்சையை உண்ணலாம்.
உலர்ந்த பிளம்ஸ்
நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியவை நிறைந்தது.    மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு எலும்பு பலவீனத்தைத் தடுக்கக்கூடியது.
உலர்ந்த நெல்லி
சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சேர்க்காத உலர்ந்த நெல்லிக்கனி நன்மை தரும்.
உலர்ந்த பேரீச்சை
இந்தியப் பெண்களிடையே ரத்தச்சோகை அதிகமாகக் காணப்படுகிறது. உலர்ந்த பேரீச்சை இரும்பைப்போன்ற சக்திவாய்ந்தது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.


உலர்ந்த பழங்கள் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன. உணவின் ருசியை அதிகரிக்கக்கூடியவை. சாலட் மற்றும் இனிப்பு வகைகளில் உலர்ந்த மாம்பழங்கள் சேர்ப்பதை மக்கள் விரும்புகின்றனர்.
உலர்ந்த பழங்களை உண்பதற்குமுன் ஒருவரது உடல்நிலை, வாழ்க்கைமுறை மற்றும் நாள்பட்ட நோய்கள் ஏதும் இருக்கின்றனவா என்பனவற்றைக் கவனிக்க வேண்டும். மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின் பேரில் உலர் பழங்களைச் சாப்பிடலாம்.

%d bloggers like this: