பெட் தெரபி… செல்லங்களே தரும் சிகிச்சை!

ன அழுத்தம் அதிகமான சமயங்களில் பலருக்கும் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் ஆறுதல் அளிக்கும். நாய்க்குட்டியோடு விளையாடுவது அல்லது மீன்களுக்கு உணவளித்துவிட்டு மீன் தொட்டியையே நீண்டநேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது எனச் செல்லப்பிராணிகளோடு நாம் செலவிடும் சில மணி நேரம்கூட நம்மைப் புத்துணர்வு பெறச்செய்யும். இதை மருத்துவ உலகமும் ஆமோதிக்கிறது. ஆம்! ஆட்டிசம், கேன்சர், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘அனிமல் அசிஸ்ட்டெட் தெரபி’ (Animal Assisted Therapy – AAT) அல்லது ‘பெட் தெரபி’ (Pet Therapy) என அழைக்கப்படும் சிகிச்சை முறை செல்லப்பிராணிகளைக் கொண்டே வழங்கப்படுகிறது.

விலங்கிற்கும் மனிதனுக்குமான தொடர்பு
மனிதமனம் என்பது இயற்கையுடன் நெருங்கிப் பழகும் தன்மையுடையது. அதனால்தான் விலங்குகளையும் மனிதர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடிகிறது. விலங்குகளால் நமது ஹார்மோன்களை உணரமுடியும். மேலும் நாய், பூனை போன்ற விலங்குகளோடு அன்புடன் பழகும்போதும் விளையாடும்போதும் நம் மனம் மகிழ்ச்சியாக உணரும். இதனால் நம் உடலிலும் நல்ல ஹார்மோன்கள் சுரக்கும். மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் குறையும். இதுதான் பெட் தெரபிக்குப் பின்னால் இருக்கும் லாஜிக். விலங்குகள் மனிதர்களிடம் வேறுபாடு பார்க்காமல், எவ்வித எதிர்பார்ப்புமின்றிப் பழகக்கூடியவை. அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக அன்பு செலுத்தும் பண்பு கொண்டவை.
உலக அளவில் நாய், பூனை, முயல், குதிரை, மீன்கள் எனப் பல உயிரினங்கள் பெட் தெரபிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் அதிகம் நாய்களைத்தான் பயன்படுத்துகிறோம். அவற்றைப் பயிற்றுவிப்பது  எளிது. மேலும் மனிதர்களிடமும் எளிதாகப் பழகக்கூடியவை என்பதே காரணம். அவற்றின் உணர்ச்சிகளை வெளிப்படையாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். பெட் தெரபியில் பூனைகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் பூனைகளுடன் பழகுவது என்பது நிறைய பேருக்குச் சிக்கலாகவே இருக்கிறது. இந்தச் சிகிச்சையின் அடிப்படையே விலங்கிற்கும் மனிதனுக்கும் இடையேயான உறவுதான். அதிலேயே சிக்கல் என்றால் இந்தச் சிகிச்சை வெற்றிபெறாது. இப்படிப்பட்ட சிக்கல்களைத் தவிர்க்கத்தான் நாய்களைப் பயன்படுத்துகிறோம்.

ஆட்டிசம் முதல் கேன்சர் வரை!
ஆட்டிசம், தசைச்சிதைவு, முதுமையால் பாதிக்கப் பட்டோர், மன அழுத்தம் உடையவர்கள், கேன்சர் நோயாளிகள், கற்றல் குறைபாடு உள்ளோர், மாற்றுத் திறனாளிகள், நீண்ட நாள்களாக நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கியிருப்பவர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் இந்த அனிமல் அசிஸ்ட்டெட் தெரபியை அளிக்கலாம்.
இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தி மேற்கண்ட நோய்களையோ குறைபாடுகளையோ குணப்படுத்த முடியாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கேன்சர் நோயாளிக்குச் சிகிச்சை அளித்தால் கேன்சர் குணமாகிவிடும் என இங்கே புரிந்துகொள்ளக் கூடாது. ஆனால், இந்த பெட் தெரபி அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும். அதாவது ஒரு கேன்சர் நோயாளி தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையினால் மன அழுத்தம், உடற்சோர்வு போன்றவற்றால் நிறைய பாதிக்கப்பட்டிருப்பார். அதிலிருந்து அவரை மீட்டு, சிகிச்சையை இன்னும் சிறப்பாக எடுத்துக்கொள்ள இந்த பெட் தெரபி உதவும். மனரீதியான ஊக்கம் கிடைக்கும். இதனால் நோயாளி விரைவில் நோயிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஹைப்பர் ஆக்டிவிட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவன் என்றால், பெட் தெரபிக்குப் பிறகு ஹைப்பர்ஆக்டிவிட்டி குறையும். கவனம் கூடும். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். மன அழுத்தம் குறையும். சமூகத்துடன் இணக்கமாகப் பழகுவதற்கு வழி செய்யும். எனவே இந்த பெட் தெரபியின் மூலமாகப் பல்வேறு உணர்வுரீதியான மற்றும் உடல்ரீதியானக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முதியோர்களுக்குச்  சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். நினைவாற்றல் மேம்படும். உடல்ரீதியான குறைபாடுள்ளவர் களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது அவர்களின் மனோதிடம் மேம்படும். நம்பிக்கை அதிகரிக்கும். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளுக்குக்கூட நாங்கள் இந்தச் சிகிச்சையளிக்கிறோம். நீண்ட நேரப் பயணத்தால் உடல் மற்றும் மனம் இரண்டும் சோர்வடைந் திருக்கும். பெட் தெரபிமூலம் அது உடனடியாகக் குறையும். 26/11 மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர், அதனால் பாதிப்படைந்திருந்த ரயில்வே காவலர்களுக்கு நாங்கள் பெட் தெரபி மூலம் சிகிச்சையளித்தோம். அந்தத் தாக்குதல் ஏற்படுத்தியிருந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீளவும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் இந்தச் சிகிச்சை உதவியாக இருந்தது. இப்படி எந்த நோய்க்குச் சிகிச்சையளிக் கிறோம் என்பதைப் பொறுத்து, இதன் பலன்கள் அமையும்.

பெட் தெரபி என்பது தனிச் சிகிச்சையா?
கிடையாது. மற்ற சிகிச்சை முறைகளுடன் இணைந்துதான் இந்த அனிமல் அசிஸ்ட்டெட் தெரபி வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு சிறுவனுக்கு ஃபிஸியோதெரபி சிகிச்சை தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அந்தச் சிறுவனுக்குத் தினசரி அளிக்கும் சாதாரண பயிற்சியின்மூலம், குறைபாடு குணமாக நீண்ட நாள்கள் ஆகும். ஆனால் பெட் தெரபியில் நாயுடன் இணைந்து, ஃபிஸியோதெரபியைச் செய்யும்போது மகிழ்ச்சியாக உணர்வதால் அதிக ஈடுபாட்டுடனும் அதிகக் கவனத்து டனும் செயல்பட முடிகிறது. மேலும், மனம் மகிழ்ச்சியாக உணரும்; ரத்த அழுத்தம் குறையும். எனவே சிகிச்சைக்கான பலனும் விரைவில் கிடைக்கும்.
எப்படிச் சிகிச்சை அளிக்கப்படுகிறது?
தெரபிக்கான நிபுணர்களின் பயிற்சிகள், தெரபி சிகிச்சையளிக்கும் விலங்குகளுக்கான விதிகள் என இந்தச் சிகிச்சை முறைக்கும் உலக அளவில் பொதுவான விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படிதான் சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. உலக அளவில் பல்வேறு ஆய்வுகளும் இந்தச் சிகிச்சை குறித்துத் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

பயிற்சிகள் எப்படியிருக்கும்?
பூனாவில் ஒரு சிறுமி சில மாதங்களுக்குமுன் எங்களிடம் சிகிச்சைக்காக வந்தாள். அவளிடம் இருந்த பிரச்னை அதீதக் கோபம் மற்றும் அதனால் உண்டாகும் மன அழுத்தம். யாரிடமும் சரியாகப் பேச முடியாதது,  முடிகளைப் பிய்த்துக்கொள்வது உள்பட உடல்ரீதியாகத் தன்னைத் தானே துன்புறுத்திக்கொள்வது, தனிமையை விரும்புவது போன்ற அனைத்துப் பிரச்னைகளும் அவளுக்கு இருந்தன. அந்தச் சிறுமிக்கு பெட் தெரபி அளிக்க முடிவு செய்தோம். சிகிச்சையில் நாயுடன் இணைந்து விளையாடுவதுதான் அந்தச் சிறுமியின் பணி. முதலில் நாயுடன் பழகுவது, இரண்டாவது நாயைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டளைகளைக் கற்றுக்கொள்ளுதல். உதாரணமாக நாயை அழைப்பது, அமரச்சொல்வது போன்றவை. கேட்க எளிதாகத் தெரிந்தாலும் இவை சுலபமான விஷயங்கள் இல்லை. நீங்கள் அழைத்ததும் தெரபி நாய் எழுந்து வந்துவிடாது. நீங்கள் அழைத்ததும் உங்களின் உடல்மொழியைக் கவனிக்கும். நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா எனப் பார்க்கும். கோபமாக இருந்தால், நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு நாய் உங்களிடம் வராது. மாறாகச் சத்தமாக, நம்பிக்கையாக அழைத்தால் நாய் உடனே ஓடிவரும். எனவே எப்படி நாயுடன் பழகுவது என்பது குறித்துப் பயிற்சியாளர் முதலில் பயிற்சி அளிப்பார்.
அந்தச் சிறுமிக்குப் பயிற்சி அளித்த நாயின் பெயர் ஸ்காட்டி. அந்தச் சிறுமி சத்தமாக, நம்பிக்கையுடன் ‘ஸ்காட்டி இங்கே வா’ என ஆங்கிலத்தில் அழைத்தால் ஸ்காட்டி உடனே வரும். சில நிமிடங்களில் ஸ்காட்டியும் அந்தச் சிறுமியுடன் நன்கு பழகிவிட்டது. இப்படி அந்தச் சிறுமியின் கட்டளைக்கு ஸ்காட்டி கீழ்ப்படியத் துவங்கியதுமே அந்தச் சிறுமிக்கு மகிழ்ச்சி அதிகரித்துவிட்டது. தொடர்ந்து ஸ்காட்டியுடன் பழகப்பழக மகிழ்ச்சி அதிகரித்தது. அந்தப் பெண்ணின் கோபமும் மன அழுத்தமும் வெகுவாகக் குறைந்தது.

தெரபி நாய்களின் சிறப்பு
தெரபிக்காகப் பயன்படுத்தும் நாய்களுக்கு மனநிலைச் சோதனை மற்றும் பெர்சனாலிட்டி டெஸ்ட் இரண்டையும் நடத்துவோம். அந்த நாயால், அனைவருடனும் சாதாரணமாகப் பழக முடிகிறதா, வீட்டிற்குள்ளே, வெளியே என எந்தச் சூழ்நிலையிலும் ஒரே மனநிலையுடன் இருக்கிறதா, 50 அல்லது 100 மனிதர்களுக்கு இடையே இருந்தாலும்கூட அச்சமின்றி நம்பிக்கையுடன் இருக்கிறதா, உரிமையாளர் மட்டுமில்லாமல் மற்றவர்களுடனும் ஒரே மாதிரிப் பழகுகிறதா போன்ற விஷயங்கள் அனைத்தையும் மேற்கண்ட சோதனைகளில் சோதிப்போம். இவற்றை எல்லாம் கடந்த பின்னர் அந்த நாய்க்கு தெரபி நாயாக மாறுவதற்கான பயிற்சிகளை நிபுணர்களுடன் சேர்ந்து அளிப்போம். வாய்ஸ் கமாண்ட்களைப் புரிந்துகொள்ள மட்டும் அவற்றிற்குப் பயிற்சியளிக் கப்படாது. மாறாக மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவிசெய்யும்படியான பயிற்சிகள் இருக்கும். ஒரு குழந்தை, நாயை இறுக்கமாகக் கட்டிப் பிடித்திருந்தால்கூட, ஓடவோ துள்ளவோ செய்யாது. காரணம், அந்தக் குழந்தை அன்புடன்தான் தன்னைக் கட்டிப்பிடித்திருக்கிறது என்பதை அந்த நாயால் புரிந்துகொள்ள முடியும்.
தெரபிக்காகப் பயன்படுத்தப்படும் நாய்கள் எந்தச் சூழ்நிலையிலும் கோபப்படாமல் நிதானமாகவும் அமைதியாகவும் செயல்படும். எனவே பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என எங்கு வேண்டுமானாலும் இவற்றை அழைத்துச் செல்ல முடியும். மற்ற நாய்களுக்கும் சிகிச்சையில் ஈடுபடுத்தப்படும் நாய்களுக்கும் இடையேயான வித்தியாசம் இதுதான்.
பல நோயாளிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டே எழ முடியாத நிலையில் இருப்பார்கள். அதுமாதிரியான சமயங்களில் நோயாளிகள் அமைதியாக இருந்தாலும்கூட, இந்தத் தெரபி நாய்களே சென்று அவர்களிடம் உரையாடலைத் துவங்கும். இதனால் நோயாளிகளும் நாயுடன் எளிதில் பேசத்துவங்குவார்கள். மேலும் பயிற்சியளிப்பதற்கான நிபுணர்களும் நாயுடன் இருப்பார்கள். எனவே நோயாளிகள் எளிதில் நாயுடன் பழக முடியும்.

சிகிச்சைக்கான கால அளவு

சிகிச்சையளிப்பதற்காக இத்தனை நாள்கள், இத்தனை முறைகள் என்பதெல்லாம் கிடையாது. அந்தந்த நோயாளிகளின் குணத்தைப் பொறுத்து இந்தக் கால அளவு மாறுபடும். எனவே எத்தனை நாள்கள் ஆகும் என்பதை, உங்களின் சிகிச்சையாளர்தான் முடிவுசெய்வார்.

%d bloggers like this: