அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு திடீரென உயர்வது குறித்து விசாரிக்காதது ஏன்? – மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்

அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திடீரெனப் பலமடங்கு உயர்வது குறித்து விசாரணை நடத்தாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

தேர்தலின்போது பணபலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் லால் பிரஹார் எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தேர்தலின்போது அரசியல்வாதிகள் தாக்கல் செய்யும் சொத்துமதிப்பும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கிலும் பெரிய அளவிலான முரண்பாடுகள் இருக்கின்றன. அரசியல்வாதிகளின் சொத்து

மதிப்பு திடீரென உயர்வது குறித்து முறையாகக் கண்காணித்து விசாரணை நடத்த வேண்டும். வேட்பாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளின் வருமானத்துக்கான ஆதாரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அரசியல்வாதிகள் தேர்தலின்போது தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பும், வருமான வரித் தாக்கலின்போது குறிப்பிடும் சொத்து மதிப்பு ஆகியவை இடையில் இருக்கும் முரண்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டிருக்கிறதா?. அதற்கென எதுவும் நடைமுறைகளை வருமான வரித்துறை பின்பற்றுகிறதா? தேர்தல் சீர்திருத்தம் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அதுதொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். 

இதுபோன்ற விவகாரங்களில் அரசு தெளிவற்ற அறிக்கைகள் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், இது முக்கியமான வழக்கு என்றும் கருத்துத் தெரிவித்தனர். மத்திய அரசு தரப்பில் ஆஜராகக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்ஹா, இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். ஆனால், அந்தப் பதிலில் திருப்தியடையாத நீதிபதிகள்,  இதுதொடர்பாக வருமான வரித்துறையின் விரிவான பதில் அறிக்கையை செப்டம்பர் 12-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கே வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.  

%d bloggers like this: