ஓ.பி.எஸ்ஸை வேவு பார்க்கும் இ.பி.எஸ்!

னிதா மரணம், நீட் தேர்வுக்கான எதிர்ப்பு எனத் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல கல்லூரிகளில் மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள். இந்த நேரத்திலும் உள்கட்சி மோதலை விடாமல் தொடர்கிறது அ.தி.மு.க” என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். உட்கார்ந்தபிறகு, அதையே பேசினார். ‘‘நாடு என்ன ஆனால் அவர்களுக்கு என்ன? ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவர்களின் பஞ்சாயத்துக் களைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் இருக்கிறது. ஒரு பக்கம் தினகரனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்; இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்ஸோடு உரசிக் கொண்டிருக்கிறார்.”

‘‘தினகரனோடு மல்லுக்கட்டுவது சரி… ஓ.பி.எஸ்ஸோடு என்ன பிரச்னை?”
‘‘மந்தையில் இருந்து பிரிந்து சென்ற ஆடுகளை, டெல்லி வலுக்கட்டாயமாகப் பிடித்து, சேர்த்து வைத்தது. அங்கே தலையாட்டிவிட்டு வந்தவர்களின் கையைப் பிடித்து சேர்த்து வைத்தார் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ். அதெல்லாம் சரி. ஆனால், தமிழகத்தின் முன்னாள் முதல்வரையும் இந்நாள் முதல்வரையும் ஈகோ விட்டு விடுமா? இருவரும் தலைமைச் செயலகத்தில் சந்தித்துக்கொள்வதில்லை. நேருக்கு நேர் பார்த்தாலும் பேசிக்கொள்வதில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஒப்புக்கு ஒன்றாகச் சேர்ந்து உட்காரும் இருவரும், மற்ற நேரங்களில் மனதில் கசப்பை வைத்துக் கொண்டு எதிர் எதிர் துருவங்களாகத்தான் இருக்கின்றனராம்!”
‘‘பொதுப்பணித் துறையைத் தராத கோபமா பன்னீருக்கு?”
‘‘இருக்கலாம்! பொதுப்பணித் துறையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் பன்னீர். ஆனால், அதை விட்டுத்தந்து விடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்து ஜெயித்துவிட்டார் எடப்பாடி. இந்தக் கோபம்தான் பன்னீருக்கு. மேலும், தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக தினமும் காய்களை நகர்த்தி வருகிறார் எடப்பாடி. ஒவ்வொரு நாளும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களையாவது ரகசியமாக சந்தித்து விடுகிறார். அதையும் தலைமைக் கழகத்தில் வைத்தோ, தலைமைச் செயலகத்தில் வைத்தோ நடத்துவதில்லை. தனியாக, தன் வீட்டுக்கு வரவழைத்துச் சந்திக்கிறார். காரணம், இப்போது அவர் தினகரனுக்கும், திவாகரனுக்கும் பயப்படுவதைவிட, ஓ.பி.எஸ்ஸை நினைத்து அதிகம் பயப்படுகிறார். ஏற்கெனவே முதல்வர் பதவியை வகித்த பன்னீர்செல்வம், எந்த நேரத்திலும் அந்த நாற்காலியைக் கைப்பற்றுவதற்குக் காய்களை நகர்த்தலாம் என நினைக்கிறார் எடப்பாடி. அதனால்தான் இதற்கு முன்பு டெல்லிக்கும், தனக்கும் இணைப்புப் பாலமாக இருந்தவர்களைக் கூட மாற்றிவிட்டார்.”
‘‘அப்படியா… அது என்ன விவகாரம்?”

‘‘எடப்பாடி பழனிசாமி, தன் சமூகத்தைச் சேர்ந்த அண்டை வி.வி.ஐ.பி. ஒருவர் மூலம்தான், ஆரம்பத்தில் டெல்லியில் நெருங்கினார். அந்த வி.வி.ஐ.பி.யின் மகன் மூலமாகத்தான் பல விஷயங்களை டெல்லிக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அப்படி எடப்பாடி அனுப்பிய ரகசியங்கள் ஓ.பி.எஸ் பக்கமும் கசிந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், எதற்கு வம்பு என அந்த வழியை மூடிவிட்டார். அதற்குப் பதிலாக வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார்.” 
‘‘அந்த புது ரூட் எது?”
‘‘கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பி.ஜே.பி பிரமுகர் ஒருவரைச் சொல்கிறார்கள். இவர்தான் இப்போது டெல்லி தலைமையைச் சந்திப்பதற்குத் தேதி வாங்கிக் கொடுப்பதில் இருந்து அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். தமிழ்நாட்டிலிருந்து எடப்பாடி அணி சார்பாகச் செல்லும் அமைச்சர்களுக்கு டெல்லி மேல்மட்ட தலைவர்களைச் சந்திக்க தேதி வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட அனைத்தும் இப்போது இவர் மூலம்தான் நடக்கிறது.”
‘‘ஓஹோ!”
‘‘ஒடிசாவில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு இரும்புத்தாது வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்துவரும் மைன்ஸ் பிரதர்ஸும் இந்த மீடியேட்டர் அணியில் உள்ளனர். இவர்கள் முதல்வரின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவருக்கு டெல்லி டிஃபன்ஸ் காலனியில் வீடு உள்ளது. அங்குதான் டெல்லி பி.ஜே.பி மேல்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இதுதொடர்பான பயணங்களுக்கு, மைன்ஸ் பிரதர்ஸ் காரையே பயன்படுத்துகின்றனர். செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி போயிருந்தபோது, சில மேல்மட்டத் தலைவர்களை இங்கே வைத்துதான் சந்தித்தார் என்கிறார்கள். எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் ஈகோ மோதல் இருந்தாலும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இருவரும் நெருங்கியுள்ளனர். இப்படி நெருக்கத்தை உண்டாக்கியதில் மைன்ஸ் பிரதர்ஸுக்கும், கோபிசெட்டிப்பாளையம் பிரமுகருக்கும் கணிசமான பங்கு உண்டு. இவர்களோடு, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி என ஒட்டுமொத்த கொங்கு அமைச்சர்களும் டெல்லியில் லாபி செய்து வருகின்றனர்.”
‘‘கொங்கு லாபிதான் எடப்பாடிக்கு ஸ்ட்ராங்க் ஆச்சே?”
‘‘இவை அனைத்தும் பன்னீருக்குத் தெரியாதது அல்ல. ‘நீங்கள் முதலில் துணை முதல்வராக உள்ளே நுழையுங்கள். அப்புறம் மனமாற்றங்கள் செய்து முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றி விடலாம்’ என்று சொல்லித்தான் பன்னீரைச் சிலர் உள்ளே அனுப்பியுள்ளார்கள். உள்ளே வந்து பார்த்தபிறகுதான் ‘அது சாதாரணமான விஷயம் அல்ல’ என்று பன்னீருக்குப் புரிய ஆரம்பித்துள்ளது. தனது பழைய நண்பர்களை வசப்படுத்தி, அவர்கள் மூலமாக தனக்கான நட்பு வட்டாரத்தைப் புதுப்பித்துக்கொள்ள பன்னீர் சில காரியங்களைச் செய்து வருகிறார். இது உளவுத்துறை மூலமாக எடப்பாடி கவனத்துக்கும் போயுள்ளது. ‘பன்னீர் செயல்பாடுகளைக் கண்காணிக்க உளவுத்துறைக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது’ என்றும் சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் இப்போது கூலாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்துள்ளார் தினகரன்.”
‘‘எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு ஒரு பக்கம் இருக்க, மேலும் இரண்டு எம்.பி-க்கள் தினகரனை ஆதரித்துள்ளார்களே?”
‘‘ஆம். வேலூர் எம்.பி செங்குட்டுவன், திண்டுக்கல் எம்.பி உதயகுமார் ஆகியோர் தினகரன் பக்கம் வந்துவிட்டனர். செங்குட்டுவன், ஓ.பி.எஸ் அணியில் இருந்தவர். இவர்களையும் சேர்த்து தினகரன் பக்கம் இப்போது எட்டு எம்.பி-க்கள் இருக்கிறார்கள். இவர்களை வைத்து, மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தினகரன் எடுக்கலாம்.”
‘‘என்ன செய்யப்போகிறாராம்?”
‘‘அ.தி.மு.க-வை உடைத்து, இரட்டை இலையை முடக்கி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நிறுத்தி, தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்தபோதும், மத்திய அரசுக்கு எதிராக தினகரன் வெளிப்படையாகப் பேசவில்லை. இனிமேலும் அப்படி இருக்க வேண்டியதில்லை எனக் கருதுகிறார் தினகரன். தனது ஆதரவு எம்.பி-க்களை வைத்து, டெல்லியில் ஒரு முக்கியமான இடத்தில் போராட்டம் நடத்தச் சொல்லப்போகிறார். அதுதான் தினகரன் மத்திய பி.ஜே.பி-க்கு எதிராக எடுக்கும் அதிரடி நடவடிக்கையாக இருக்குமாம். அதன் வெளிப்பாடாகத்தான் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தினகரன்.”
‘‘ம்…’’
‘‘மீண்டும் ஒருமுறை எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறாரே எடப்பாடி?’’
‘‘5-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள் 109 பேர் கூடி, ‘எடப்பாடி மீது நம்பிக்கை இருப்பதாக’ தீர்மானம் நிறைவேற்றினர். திருப்தியாக இந்தக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘அ.தி.மு.க-வுக்குத் திரும்பாதவர்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது’ என்று சொல்லி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கடிதத்தில், மெஜாரிட்டிக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்தைப் பெற்று ஒரு துருப்புச் சீட்டாக வைத்துக்கொள்ள முடியும் என்று எடப்பாடி நம்புகிறார். ஆனால், தினகரன் அணி இதைக் கடுமையாக விமர்சிக்கிறது. ‘எடப்பாடி பதவியில் தொடர 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற சூழலில், இந்தக் கூட்டத்தில் 105 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதையே ஆதாரமாகக் கொண்டு, உடனடியாக முதல்வர் பழனிசாமியைப் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும். இப்போதும் ‘இது உட்கட்சி விவகாரம்’ என்று கவர்னர் சொன்னால், அவர் எடப்பாடி அணியின் அவைத்தலைவர் போல் செயல்படுவதாகக் கருதுவோம்’ என்று தினகரன் அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கொந்தளித்தார்.’’

‘‘மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தமிழகத்துக்கு ஏமாற்றம் என்கிறார்களே?’’
‘‘ஆமாம். கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், இப்போது கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். தரைவழிப் போக்குவரத்து துறையை அவரிடமிருந்து பறித்துவிட்டார்கள். தரைவழிப் போக்குவரத்துத் துறையில் பொன்னார் பொறுப்பு வகிப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தத் துறையில்   பி.ஜே.பி நிர்வாகிகள் சிலர் காரியம் சாதித்துள்ளனர் எனப் பிரதமர் மோடி அலுவலகத்துக்குப் புகார் சென்றதாம். குறிப்பாக டோல்கேட் டெண்டர் விஷயங்களில் பொன்னார் பெயரைச் சிலர் பயன்படுத்தியிருக் கிறார்கள் எனப் புகார் போனதாம். தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் எடுத்த பெரிய கம்பெனி ஒன்றும் பொன்னாருக்கு எதிராக டெல்லியில் புகார் வாசித்ததாம். இதெல்லாம்தான் தரைவழிப் போக்குவரத்துத் துறை பறிப்புக்குக் காரணமாம்.’’
‘‘மதுரையைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ஆகியிருக்கிறாரே?”
‘‘தனிப்பொறுப்புடன் வர்த்தக அமைச்சராக இருந்தவர், இப்போது பாதுகாப்பு அமைச்சராகிவிட்டார்.  பாதுகாப்புத் துறை தொடர்பான பல பணிகள் இப்போது வட இந்தியாவில் புகழ்பெற்ற மூன்று தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எல்லாமே இந்திய ராணுவத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய் திட்டங்கள். மனோகர் பரிக்கர் ராஜினாமா செய்துவிட்டு கோவா முதல்வராகப் போனபிறகு, பாதுகாப்புத் துறையானது நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் கூடுதல் பொறுப்பாக இருந்தது. ‘வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இங்கு வருவது நல்லது’ என அந்த நிறுவனங்கள் நினைத்ததாக சொல்கிறார்கள். இந்தப் புதிய பதவி மூலம் மோடி, அமித் ஷா, அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் மட்டும் பங்குவகிக்கும் பி.ஜே.பி அரசின் உயர்மட்ட அதிகார வட்டத்துக்குள் நிர்மலா சீதாராமனும் சேர்ந்துள்ளார்.”
‘‘அமித் ஷா தமிழகம் வருவதற்கு ஏற்பாடுகள் மீண்டும் நடக்கிறதாமே..?’’
‘‘ஆமாம். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, 95 நாள் பயணமாக நாடு முழுவதும் சுற்றி வருகிறார் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா. ஏற்கெனவே இரண்டு முறை அமித் ஷா வருகை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் அவர் வருகைக்கான ஏற்பாடுகளை மீண்டும் தமிழக பி.ஜே.பி தொடங்கி இருக்கிறது’’ என்றபடி கழுகார் பறந்தார்.

%d bloggers like this: