நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோப்பா….!’ – தினகரனிடம் உருகிய சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் இருந்தே உறைந்து போய் கிடக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ‘ கட்சி நிர்வாகம் தொடர்பாக தினகரன் எடுக்கும் முடிவுகளுக்கு அவர் முழுமையான ஒப்புதல் அளித்துவிட்டார். சிறைக் கட்டுப்பாடுகளால், மனதளவில் உடைந்து போய் இருக்கிறார்” என்கின்றனர் சிறைத்துறை வட்டாரத்தில்.

அண்ணா தி.மு.கவின் பொதுக்குழுவை வரும் செப்டம்பர் 12-ம் தேதி கூட்ட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்துக்கு நீதிமன்றம் வழியாக தடை பெறுவது குறித்து தினகரன் தரப்பில் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். ‘பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது. இவர்கள் கூட்டும் பொதுக்கூட்டம் செல்லாது’ என தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முதல்வர் கூட்டிய கூட்டத்தில் 109 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர். ‘ ஆட்சியைத் தொடர்வதற்கான பெரும்பான்மை அவரிடம் இல்லை’ என வரிந்து கட்டிக் கொண்டு பேட்டியளித்தனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள். இது ஒருபுறம் இருந்தாலும், கட்சி மற்றும் ஆட்சி பற்றிய சிந்தனை எதுவும் இல்லாமல் சிறைக்குள் வலம் வருகிறார் சசிகலா. சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபாவின் அதிரடியால், சசிகலாவுக்குக் கிடைத்து வந்த சில சலுகைகள் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டன. ” இதனால், முன்பைவிட மிகுந்த வேதனையில் இருக்கிறார்” என்கின்றனர் சிறைத்துறை வட்டாரத்தில். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா உறவினர் ஒருவர், ” சிறைக்குள் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில், தனக்கான சமையலை அவரே தயாரித்துக் கொள்கிறார். வெளியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உணவுகளுக்குத் தடை போட்டுவிட்டனர். சிறைத்துறை விதிகளுக்குட்பட்டே பார்வையாளர்களைச் சந்திக்கிறார். டி.ஐ.ஜி ரூபா வெளியிட்ட ஆதாரங்களால் கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். ‘ பா.ஜ.கவின் தூண்டுதலில்தான் இப்படியெல்லாம் அவமானப்படுத்தியுள்ளனர்’ என உறவினரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறை விதிமீறல் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுதொடர்பாக, சசிகலாவிடமும் ஸ்டேட்மென்ட் வாங்கிவிட்டனர்.

கடந்த சில நாள்களாக சென்னையைச் சேர்ந்த குடும்ப ஆடிட்டர் ஒருவர், பேப்பர் கட்டுகளுடன் சசிகலாவைச் சிறையில் சந்தித்துப் பேசி வருகிறார். இதில், சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா தொடர்பான சொத்துகளை சசிகலா குடும்பத்தினர்தான் நிர்வகித்து வருகின்றனர். இதில், யாருக்கு என்ன பொறுப்பை ஒப்படைப்பது என்பது குறித்தும் விவாதம் நடந்திருக்கிறது. தன்னுடைய சொத்துக்களுக்கு வருமான வரித் தாக்கல் செய்வது குறித்தும் பேசியிருக்கிறார். சில நாள்களுக்கு முன்பு தினகரன் மனைவி அனுராதா, சசிகலாவைச் சந்திக்க வந்தார். அப்போதும் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கப்பட்டன எனவும் சொல்கின்றனர். சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக, உறவினர்களுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் மறைந்துவிட்டன” என விவரித்தவர், 

” உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் அமித்வராய் முன்பு நடந்த வாதத்தில், சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில், முற்றிலும் மனமுடைந்துவிட்டார் சசிகலா. இனி மூன்றரை ஆண்டுகளும் சிறையிலேயேதான் இருக்க வேண்டும் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ கியூரேட்டிவ் மனு போடலாம். நமக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது’ என வழக்கறிஞர்கள் கூறுவதை, அவரால் நம்ப முடியவில்லை. ‘ ஆட்சி முடியும் வரையில் சிறையிலேயே இருக்க வைத்து, கட்சியை சீர்குலைத்துவிடுவார்கள்’ என்ற அச்சத்தில் தினகரனுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். ‘ கட்சியைக் காப்பாற்ற என்ன நடவடிக்கைகளை வேண்டுமானாலும் எடு. அதற்கு என்னுடைய முழு ஒப்புதலும் உள்ளது. கட்சியைக் காப்பாற்றுவதுதான் நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இத்தனை நாள்கள் நாம் பட்ட கஷ்டத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். நீயே எல்லாத்தையும் பார்த்துக்கப்பா…’ என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

இதையடுத்தே, மாவட்ட செயலாளர்களின் பதவியைப் பறிப்பதில் கூடுதல் வேகம் காட்டினார் தினகரன். இதற்கான அறிவிப்பு உத்தரவில்கூட, ‘ தியாகத் தலைவி சின்னம்மாவின் ஒப்புதலோடு’ என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொண்டார். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறும்போதெல்லாம் கவலைப்படாத அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனதும் தினகரனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள். அ.தி.மு.கவில் மாவட்டச் செயலாளர் பதவிதான் மிகப் பெரியது. எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சரண்டர் ஆகும் வரையில், கடைசிக்கட்ட ஆயுதமாக சில திட்டங்களையும் வைத்திருக்கிறார் தினகரன். செப்டம்பர் 12 பொதுக்குழுவுக்குள் அந்த அதிரடிகள் அரங்கேறும்” என்றார் நிதானமாக.

%d bloggers like this: