எடப்பாடி அரசு கலையக் கூடாது என்பது டெல்லியின் விருப்பம்.. தினகரனிடம் கறாராக சொன்ன ஆளுநர்

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கலையக் கூடாது என்பதில் டெல்லி உறுதியாக இருப்பதாக தம்மை சந்தித்த தினகரனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும்; எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று தினகரன் சந்தித்து வலியுறுத்தினார். 3 எம்.எல்.ஏக்கள், 7 எம்.பி.க்களுடன் ஆளுநரை தினகரன் சந்தித்தார்.

டெல்லி விருப்பம்

இச்சந்திப்பின் போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கே 109 பேர் வந்துள்ளனர். ஆகையால் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள் என கேட்டுக் கொண்டார் தினகரன். அப்போது, முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கலையக் கூடாது என்பதுதான் டெல்லியின் விருப்பம்.. ஆனால் நீங்கள் இப்படி பிரச்சனை செய்தால் எப்படி? என கேட்டிருக்கிறார் ஆளுநர்.

முதல்வரை மாற்றுங்க

அதற்கு, நாங்கள் ஆட்சியை கலைக்க சொல்லவில்லை… முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரைத்தானே மாற்ற வேண்டும் என்கிறோம். இந்த இருவரும் இல்லாமல் யார் ஆட்சி அமைத்தாலும் நாங்கள் எங்கள் வேலையை பார்க்கப் போகிறோம் என பதில் தந்துள்ளார் தினகரன். இருப்பினும் இது உங்க கட்சி பிரச்சனை நான் என்ன செய்ய முடியும்? என்கிட்டே இது பற்றி பேசினா என்ன செய்வது? என பதில் கொடுத்திருக்கிறார் ஆளுநர்.

முடிவு சொல்றேன்…

மொத்தம் 21 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக எழுதியே கொடுத்திருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால் போதும் என மீண்டும் அழுத்தம் கொடுத்திருக்கிறார் தினகரன். இதனால் சரி நான் பார்த்து முடிவெடுக்கிறேன் என்று மட்டும் ஆளுநர் வித்யாசாகர் ராவி கூறியிருக்கிறார். இச்சந்திப்பின் போது எம்.பி.க்கள் சிலரும் குறுக்கிட்டு தினகரன் வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

வெளியே வரும் ஸ்லீப்பர் செல்கள்

மேலும் சில எம்.எல்.ஏக்களை வளைத்து எப்படியாவது எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க வைக்க வேண்டும் என வியூகம் வகுத்து வருகிறாராம் தினகரன். இதனால் விரைவில் எடப்பாடி அணியில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் வெளியே வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

%d bloggers like this: