உட்கட்சி விவகாரம் என்று நான் சொல்லவே இல்லை!

ரண்டு நாள்கள் இரவு பகலாக தினகரனின் பெசன்ட் நகர் வீட்டை வட்டமடித்த கழுகார், தூக்கமில்லாமல் சிவந்த கண்களுடன் அலுவலகம் வந்தார். திடீரென போனில் அழைப்பு வர, ‘‘ஒரு மணி நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கழுகார், சொன்னதுபோலவே வந்தார். ‘‘ஒன்றுமில்லை… கவர்னரை தினகரன் சந்தித்த நேரத்தில் கிண்டி கவர்னர் மாளிகையை வட்டமடித்துவிட்டு வந்தேன்’’ என்றார்.
‘‘தினகரனின் ஆட்டம் வேகம் பிடித்துள்ளதே?”

‘‘கடந்த வாரம் முழுவதும் தினகரன் தீவிர ஆலோசனையில் இருந்தார். தனக்கு நெருக்கமானவர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்து பல விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அடியையும் மிக நிதானமாக வைப்பது என முடிவெடுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.”
‘‘என்ன சொன்னார்களாம் தினகரனின் ஆலோசகர்கள்?”
‘‘நடைமுறை சாத்தியங்களை வரிசையாக விளக்கி உள்ளார்கள் ஆலோசகர்கள். ‘எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் முரண்பாடுகள், உள்குத்துக்கள், மனக்கசப்புகள் இருப்பது உண்மைதான். அவற்றை எல்லாம் தாண்டி, அதிகாரத்தை அவர்கள் பகிர்ந்து வைத்துள்ளனர். ஆனால், உங்களை எதிர்ப்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். உள்குத்துக்களை ஒதுக்கிவிட்டு இருவரும் ஒன்றாக நிற்பார்கள். இப்படியே, இன்னும் மூன்றரை வருடங்களுக்கு அவர்களை விட்டுவைத்தால், உங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக எழ விடாமல் அமுக்கி விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். அதற்குள் நீங்கள் முந்திக்கொள்ள வேண்டும்’ என எச்சரித்துள்ளனர்.”
‘‘ம்!”
‘‘மேலும், தினகரனை ஆதரிப்பவர்களுக்கு வரும் நெருக்கடிகளையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ‘எடப்பாடி பழனிசாமி, போலீஸை உங்களுக்கு எதிராகப் பிரயோகிக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார். பல மாவட்டங்களில் உங்களுக்கு ஆதரவாகப் பேட்டி கொடுப்பவர்கள் மீது, ஏதேதோ காரணங்களைச் சொல்லி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்குப் போகும் துணிச்சலை இப்போதே எடப்பாடி பெற்றுவிட்டார். ஆரம்பமே இப்படி என்றால், இன்னும் முழுதாக மூன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. போகப்போக நிலைமை இன்னும் மோசமாகிவிடும். நம்மிடம் இப்போது 22 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக தெம்பாக இருக்கிறோம். ஆனால், இதுவும் கடைசிவரை நீடிக்குமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், எடப்பாடி எப்போது வேண்டுமானாலும் இவர்களுக்குத் தகுந்த விலையை வைப்பார். இவர்களில் சிலரும், அமைச்சர் பதவி கிடைத்தால் உடனே எடப்பாடி பக்கம் சாய்ந்துவிடுவார்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.”

‘‘தினகரனின் ரியாக்‌ஷன் என்னவாம்?”
‘‘இந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, மிகுந்த குழப்பத்தில் இருந்தார் தினகரன். நான்கு நாள்களுக்கு முன்பு மிக ரகசியமாகப் போய் சசிகலாவைச் சந்தித்துள்ளார் தினகரன். அவரிடம் எல்லா விஷயங்களையும் தெளிவுபடுத்தி உள்ளார். அதைக் கேட்டு கடும் விரக்தி அடைந்த சசிகலா, ‘வெளியில் உள்ள சூழ்நிலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக என்னிடம் சொல்கிறார்கள். கட்சி நம் கையை விட்டுப் போய்விடக்கூடாது. எனவே, சூழ்நிலைக்கு ஏற்ப எல்லா முடிவுகளையும் நீயே எடுத்துக் கொள்’ என க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம்!’’
‘‘ஓஹோ!”
‘‘அதன்பிறகுதான் சட்ட ஆலோசகர்களை வரவழைத்து, ‘எடப்பாடியைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பான சிக்கல்களைச் சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது’ என தினகரன் கலந்து பேசினார். அதில்தான், ‘தினகரன் நேரடியாக கவர்னரைச் சந்தித்து வலியுறுத்துவது’ எனப் பேசப்பட்டது. ‘கவர்னர் இதை உட்கட்சி விவகாரம் என்ற ரீதியில் புரிந்துவைத்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. அதை அவரிடம் சரியாகத் தெளிவுபடுத்த வேண்டும். அதன்பிறகும் அவர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுத்து, நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு உத்தரவிடவில்லை என்றால், நீதிமன்றத்தை நாட வேண்டும்’ என அறிவுரை வழங்கியுள்ளனர். அதன்பிறகு ஒரு முடிவுக்கு வந்த தினகரன், ‘இந்த முறை கவர்னரிடம் கொடுக்கும் கடிதத்தை வேறு மாதிரியாக எழுதவேண்டும்’ எனச் சொல்லியுள்ளனர்.”
‘‘தினகரன் நேரில் போய்க் கொடுத்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்ததாம்?’’
‘‘கடந்த முறை 19 எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்; எனவே, அவருக்குக் கொடுத்திருந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அவரை மாற்ற வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்த முறை தினகரன் நேரடியாகக் கொண்டு சென்று கொடுத்த கடிதத்தில், ‘ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்’ எனத் தொனி மாற்றப்பட்டதாம். மிக விரிவாக எழுதப்பட்டு இருந்த கடிதத்தில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவார் என்ற நம்பித்தான் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியை ஒப்படைத்தோம். ஆனால், அவர் இந்த அரசாங்கத்தை வேறு வழியில் கொண்டு செல்கிறார். நீட், ஜி.எஸ்.டி போன்ற ஜெயலலிதா எதிர்த்த அனைத்தையும் இவர் ஏற்றுக்கொண்டார். இந்த அரசு எங்களுக்குக் கொடுத்த நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்படுகிறது. இதன் காரணமாக, இந்த அரசாங்கத்தின் மீது 22 எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான என்னுடன் அவர்கள் உள்ளனர். இந்தச் சூழ்நிலையால் கலக்கம் அடைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், பண பலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தியும் குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே, உடனடியாக எடப்பாடியைச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு உத்தரவிடுவதுதான் சரியான ஜனநாயக நடவடிக்கை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். தன் பலம் கூடியுள்ளதை உணர்த்த, தன் பக்கம் புதிதாகச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களையும், கூட்டணி எம்.எல்.ஏ-வான கருணாஸையும், புதிதாக அடைக்கலமான இரண்டு எம்.பி-க்களையும் இதற்காகத்தான் அவர் அழைத்து சென்றார்.”
‘‘கவர்னர் என்ன சொன்னாராம்?”
‘‘கடிதத்தைக் கவனமாகப் படித்த கவர்னர், ‘நான் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்’ என தினகரனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தினகரன், ‘இது அ.தி.மு.க-வின் உட்கட்சி விவகாரம் அல்ல. அப்படி நீங்கள் எந்த அடிப்படையில் சொன்னீர்கள்?’ என்று நேரடியாகவே கேட்டுள்ளார். ‘நான் அப்படி எங்கேயும் சொல்லவே இல்லையே’ எனச் சட்டென பதில் சொல்லி தினகரன் வாயை அடைத்துவிட்டாராம் கவர்னர். அவர் இப்படிச் சொன்னதாக திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் வெளியில் சொல்லி வரும் நிலையில், ‘நான் அப்படிச் சொல்லவே இல்லை’ என்று கவர்னர் பல்டி அடித்தது தினகரனுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியையும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது!”
‘‘தினகரனுக்கு இதுவே உற்சாகம் கொடுத்திருக்குமே?”
‘‘கவர்னர் மாளிகை முன்பு குவிந்திருந்த தினகரன் ஆதரவாளர்கள், ‘கட்சியைக் காப்போம்! ஆட்சியை மீட்போம்!’ எனக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். எல்லோரின் சட்டைப் பைகளிலும் தினகரனின் புகைப்படம் இருந்தது. கவர்னர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு, குறிப்பிட்ட கால அவகாசம் இருக்கிறது. அதனால், அதுவரை காத்திருப்பார்கள். அதன்பிறகும் கவர்னரிடம் இருந்து உரிய பதில் வரவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடுவார்களாம். இதற்கிடையில் பன்னீர், எடப்பாடி ஆட்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் சில காரியங்களையும் தினகரன் செய்ய இருக்கிறாராம்!”

‘‘அது என்ன?”
‘‘ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள்மீது கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகள் இருக்கின்றன. அவற்றைக் கிளறுவது ஒரு திட்டம். அதுபோல, ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் மாவட்டங்களில் என்ன சொத்துக்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் தோண்டி எடுக்கச் சொல்லி இருக்கிறாராம் தினகரன். எடப்பாடியின் அதிரடிகளைச் சமாளிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கைகளாம். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனைத் தொடர்பு கொண்ட எடப்பாடி தரப்பு, ‘பார்த்து கவனமாக இருந்துகொள்ளுங்கள். உங்கள் மீது கொலை வழக்குப் போடுவதற்கே வாய்ப்பு எல்லாம் இருக்கிறது’ என்றெல்லாம் சொன்னதாம். அதற்கு பழனியப்பன், ‘யாரோ ஒருவர் என் பெயரை எழுதி வைத்துவிட்டுச் செத்தால், நான் கொலை செய்ததாகிவிடுமா?’ எனச் சூடாகக் கேட்டாராம். நாமக்கல் கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை விவகாரம்தான் அது. இந்த உரையாடலுக்குப் பிறகு, சுப்பிரமணியன் தற்கொலை வழக்கு விசாரணைக்கு வரச் சொல்லி சி.பி.சி.ஐ.டி போலீஸ், பழனியப்பனுக்குத் தொடர்ந்து பிரஷர் கொடுக்கிறதாம். இதை அவர் தினகரனிடம் தெரிவித்துள்ளார்.’’
‘‘ஓஹோ!’’
‘‘சென்னையில் தினகரன் வீட்டு வாசலில் பேட்டி கொடுக்கும்போது, திருச்சி எம்.பி குமாரை விமர்சனம் செய்தார் நடிகர் செந்தில். ‘தினகரன் தூண்டிவிட்டுத்தான் செந்தில் இப்படிப் பேசினார்’ என திருச்சி போலீஸில் புகார் செய்துள்ளார் குமார். இதைத் தொடர்ந்து தினகரன், செந்தில் இருவர் மீதும் அவதூறு வழக்கு போட்டுள்ளது போலீஸ். ஆனால், வழக்கு விஷயம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து வழக்குகள் போட்டு, மொத்தமாக எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு ஒரு அதிரடி நிகழ்த்தவும் தயாராக உள்ளனராம் எடப்பாடி தரப்பினர்.’’
‘‘அடுத்த சில நாள்களுக்கு அதிரடி தகவல்கள் கொட்டும் போலிருக்கிறதே?”
‘‘ஆம். இன்னொரு அதிரடித் திட்டமும் தயாராக உள்ளது. அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய அஸ்திரம், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்’ என்பதுதான். தினகரனை எல்லா அஸ்திரங்களையும் பயன்படுத்த வைத்துவிட்டு, கடைசியாக ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் மரணத்தில் சசிகலா குடும்பத்துக்குப் பங்கிருக்கிறது’ என்று மீண்டும் பழைய செய்திகளைக் கிளப்பி விடுவதன் மூலம் சசிகலா மற்றும் தினகரன் இமேஜை டேமேஜ் செய்வதும், அது தொடர்பான விசாரணைகளுக்கு வரச் சொல்லி தினகரனைச் சுற்றில் விடுவதும்தான் அவர்களின் திட்டம்.”
‘‘கடைசி நேரத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஜக்கையன் எடப்பாடி பக்கம் தாவிவிட்டாரே?”
‘‘ஜக்கையன் மட்டுமல்ல. இன்னும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் கூட அணி மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், அவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் மாறவேமாட்டார்கள் என்கிறது விபரம் அறிந்த வட்டாரம். ‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் மிகப்பெரிய கவனிப்பு நடந்துள்ளது. ஆனால், எவ்வளவோ முயன்றும் கடைசியில் ஒரு சிலருக்கு அவரால் அதிக ‘கவனிப்பு’ செய்ய முடியவில்லை. அவர்கள்தான் தேவையில்லாமல் அரசை எதற்காக பகைத்துக்கொள்ள வேண்டும் என்று கம்பியை நீட்டுகிறார்கள்’ என்கிறார்கள். எனவே, மற்றவர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தீவிரமாகியுள்ளார்கள்.’’
‘‘தி.மு.க தரப்பு என்ன சொல்கிறது?”
‘‘ஏற்கெனவே தி.மு.க தரப்பில் கொடுத்ததைவிட இன்னும் கடுமையான கடிதத்தை கவர்னரிடம் தர இருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க தரப்பில் பல விஷயங்களைத் தீவிரமாக யோசிக்கிறார்கள். ‘எடப்பாடி ஆட்சிக்கு மெஜரிட்டி இல்லை என்றாலும், மத்திய அரசின் முழுமையான ஆதரவு இருக்கிறது. எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என நாம் கேட்பதே, தினகரன் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி பக்கம் தாவச் செய்துவிடாதா?

அ.தி.மு.க-வில் எந்த அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதில் இஷ்டமில்லை’ எனப் பலரும் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள். தினகரன் தரப்பிலிருந்தும் தி.மு.க பக்கம் தூது வந்திருக்கிறது. ‘மொத்தமாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யுங்கள். அதன்பின் நாங்களும் முடிவெடுப்போம்’ என அவர்களுக்குப் பதில் கிடைத்ததாம்.”
‘‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வார்களா?’’
‘‘இருக்கும் பதவியையும் இழந்துவிட்டு தெருவில் நிற்க அவர்கள் தயாராக இல்லை” என்றபடி பறந்தார் கழுகார்.

%d bloggers like this: