அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை: சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக வெற்றிவேல் எம்எல்ஏ தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து செயற்குழு பொதுக்குழு செப்டம்பர் 12 ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனவும், எடப்பாடி தரப்பினர் கூட்டவுள்ளது போலிப் பொதுக்குழு எனவும், கூட்டத்திற்கு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார் தினகரன்.

வெற்றிவேல் எம்எல்ஏ வழக்கு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி கடந்த 8 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் பொதுக்குழுவைக் கூட்ட கட்சி விதிப்படி பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே அதிமுகவின் ஒன்றிணைந்த அணிகள் கூட்டும் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தனி நீதிபதி விசாரணை

இந்த வழக்கு இன்று, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி கார்த்திகேயன், பொதுக்குழுவைத் தடை செய்யக் கோரி வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவதை விட, தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதே சிறந்தது.

வெற்றிவேல் எம்எல்ஏவுக்கு அபராதம்

பொதுகுழுவில் கலந்துகொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

வெற்றிவேல் அப்பீல்

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எம்எல்ஏ வெற்றிவேல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும், தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரியும் தலைமை நீதிபதி அமர்வில் வெற்றிவேல் எம்எல்ஏ அப்பீல் செய்தார்.

நீதிபதிகள் விசாரணை

வெற்றிவேல் எம்எல்ஏ தாக்கல் செய்த அப்பீல் மனு விசாரணை மாலையில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சக்தர், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலுக்காக வழக்கப்பட்ட பெயர்களை வைத்து பொதுக்குழு கூடுவதாகவும், தற்போது நடைபெற்ற இணைப்பு முறையானது அல்ல எனவும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

காரசார வாதங்கள்

கட்சி சின்னம் அனைத்து அதிகாரமும் எனக்கே உள்ளது. பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் துணை பொதுச்செயலாளர் பங்கேற்கலாம். பொதுக்குழுவில் பங்கேற்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு அனுப்படவில்லை என்றும் வாதிட்டார்.

கட்சியே இல்லை

அதிமுக அணிகள் இணைப்பு என்பது தேர்தல் ஆணையத்தால் மட்டுமே முடியும் தேர்தலுக்காக வழங்கப்பட்ட பெயர்களை வைத்து பொதுக்குழு கூட்டப்படுகிறது. அதிமுக அம்மா, அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் கட்சியே இல்லை என்றும் வாதிடப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி

கட்சியின் பெயர் விவகாரத்தை முடிவு செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் என வாதிட்டார் ராமானுஜம். எங்கள் தரப்பு வாதத்தை தனி நீதிபதி கேட்கவில்லை என்றும் வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டர். அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை மனுதாரர் ஏன் அணுகவில்லை என்று கேட்டனர்.

பொதுக்குழு உறுப்பினரே இல்லை

டிடிவி தினகரன் பொதுக்குழு உறுப்பினரே இல்லை என ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். தனி நீதிபதி சரியான உத்தரவு பிறப்பித்துள்ளர் எனவும் தெரிவித்தார். நாங்கள் இருவரும் இணையக்கூடாது என கூற யாருக்கும் உரிமையில்லை என்று கூறினார்.

தினகரன் தரப்பு வாதம்

பொதுக்குழு உறுப்பினர் இல்லை என்றாலும் துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் பங்கேற்க அழைப்பு அனுப்ப வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது.

தள்ளுபடி செய்ய கோரிக்கை

தேர்தல் ஆணைய உத்தரவை மீறியிருந்தால் மனுதாரர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கவேண்டும் எனவும், பொதுக்குழுவை கூட்ட தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

பொதுக்குழு கூட்ட தடையில்லை

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பினை இரவு 7.15 மணிக்கு வழங்குவதாக கூறி ஒத்திவைத்தனர். ஆனால் தீர்ப்பு இரவு 9.30 மணியளவில் வெளியானது. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை நடத்த எந்த தடையுமில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேநேரம், பொதுக்குழு, செயற்குழு முடிவுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூல வழக்கு அக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெங்களூர் உரிமையியல் நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவிற்கு இடைக்கால தடை விதித்தது தங்களை கட்டுப்படுத்தாது என்று என்று முதல்வர் தரப்பில் ஹைகோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் திவாகர் தெரிவித்தார்.

%d bloggers like this: