அடுத்து தினகரன்தான்!’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி

பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசித்துவருகிறது. டெல்லி கிரீன் சிக்னலுக்குக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைந்தது. அதன்பிறகு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தீர்மானங்களை நிறைவேற்றினர். சசிகலாவின் பதவி பறிப்பால் பிரச்னைகள் ஏற்படும் என்று எதிர்பார்த்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தனர் பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள். சசிகலாவின் பதவியைப் பறிக்கும் தீர்மானத்தை அமைச்சர் உதயகுமார் வாசித்ததும், கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். இதனால், பொதுக்குழுவை சிறப்பாக முடித்த மகிழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளனர்.

தினகரனின் ஆதரவாளர்களாக இருக்கும் எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பக்கம் வந்துவிட்டால், ஆட்சிக்கு சிக்கல் இல்லை என்று கருதுகின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பு. இதற்காக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் கொங்கு மண்டல அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக, கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் முழுவிவரம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சொல்லப்பட்டுள்ளது. அதில், சில எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஆர்வமாக இருப்பதாக வந்த தகவல் முதல்வருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு விரித்த வலையில் அவர் சிக்கவில்லை என்பதால், போலீஸார் வருத்தத்தில் உள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், பொதுக்குழு முடிந்த பிறகு தினகரன் தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில், சட்டரீதியாக தினகரன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தினகரன் தொடர்பான வழக்குகுறித்த விவரங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் விவரங்கள் உடனடியாக முதல்வர் டேபிளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, நம்முடைய இலக்கு தினகரன்தான் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர். அதற்கான வேலைகளை ரகசியமாக உளவுத்துறையினர் செய்துவருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய உளவுத்துறை அதிகாரிகள், “கடந்த சில வாரங்களுக்கு முன்பு, முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. அதில், தினகரன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் விவரங்கள் உடனடியாகத் தேவை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த விவரங்களை உடனடியாக அனுப்பிவைத்துள்ளோம். அந்த பைல் தற்போது முதல்வரின் டேபிளில் இருக்கிறது. பைல் தொடர்பாக விரைவில் முதல்வர் எடுக்கும் முடிவு, தினகரனுக்கு அதிர்ச்சியாக இருக்கும்” என்றனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் கேட்டபோது, “பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. அதில், தற்காலிக பொதுச் செயலாளர் பதவி சசிகலாவிடமிருந்து பறிக்கப்படுவதுடன், அவரால் நீக்கப்பட்டவர்கள் பதவியும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் நியமிக்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் ஆணையத்திடம் பொதுக்குழுவின் தீர்மானங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவி செல்லாது என்ற அறிவிப்பு வெளிவரும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கிடையில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். இரட்டை இலைச் சின்னம் எங்கள் கைக்கு வந்தவுடன், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள். சசிகலா குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க-வுக்கும் இனி எந்தவித தொடர்பும் இருக்காது. ஜெயலலிதா விரும்பிய ஆட்சியை ஒற்றுமையாக நாங்கள் நடத்துவோம்” என்றனர்.

%d bloggers like this: