சசியை நீக்கு… ஓ.பி.எஸ்ஸுக்கு ஆப்பு!” – எடப்பாடி எழுதும் புதிய ‘ராமாயணம்’

வானகரத்திலிருந்து வாட்ஸ்அப் அழைப்பில் உம்மோடு பேசுவேன்’ என்று கழுகாரிடமிருந்து மெசேஜ் வந்து விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அழைப்பு. பின்னணியில் அ.தி.மு.க பொதுக்குழுவில் தீர்மானங்கள் வாசிக்கப்படும் ஒலி கேட்க, கழுகாரிடம் கேள்விகளைப் போட்டோம்.

“அ.தி.மு.க பொதுக்குழு எப்படித் தொடங்கியது?”
“ஜெயலலிதா இருந்த வரையில், அந்தப் பொதுக் குழுவின் கெத்தே வேறு. இப்போது பொதுக்குழு முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. கடந்த முறை, சசிகலாவைப் பொதுச் செயலாளராக நியமிக்க நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவின் படம் மேடைக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்தது. இந்தமுறை மேடையின் வலது ஓரம் எம்.ஜி.ஆரின் படமும், ஜெயலலிதா படமும் வைக்கப்பட்டிருந்தன. ஜெயலலிதா இருந்தபோது நடந்த பொதுக்குழுக்களில் சாப்பாடு மிகப் பிரசித்தம். ஆனால், இப்போது நடைபெற்ற பொதுக்குழுவில் காலை சாப்பாடே கிடையாது.”
“எத்தனை உறுப்பினர்கள் வந்திருந்தார்கள்?”
“2,140 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டது. மற்ற 630 பேர் தினகரன் ஆதரவாளர்கள் எனக் கட்டம் கட்டி ஒதுக்கிவிட்டார்களாம். அந்த அழைப்புக் கடிதமே இந்தமுறை குளறுபடியாக இருந்தது. கடிதத்தில் வழக்கமாக, ‘பொதுச் செயலாளர் உத்தரவின்படி பொதுக்குழு கூட்டப்படுகிறது’ எனக் குறிப்பிட்டு, அதில் ஜெயலலிதாவின் கையெழுத்தும் இருக்கும். ஆனால், இப்போது அனுப்பப்பட்ட கடிதத்தில், ‘யாருடைய உத்தரவின்படி பொதுக்குழு கூட்டப்படுகிறது’ என்ற விவரம் இல்லை. யாருடைய கையெழுத்தும் கடிதத்தில் இல்லை. வெறுமனே ‘நிர்வாகி’ எனப் போட்டு மொட்டைக் கடிதம் போல் இருந்தது. ஆனால், பெரும்பாலான உறுப்பினர்கள் வந்துவிட்டனர். ஸ்ரீபெரும்புதூர் எம்.பி ராமச்சந்திரன் தனது பொறியியல் கல்லூரியிலிருந்து மாணவர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள்தான் பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்டவாரியாக கணக்கெடுத்தனர்.”
“பொதுக்குழு எத்தனை மணிக்குத் தொடங்கியது?”
“காலை 9 மணி முதல் 10.30 வரை எமகண்டம் என்பதால், அந்த நேரத்தில் எதுவும் நடக்கவில்லை. 10.45-க்கு செயற்குழு தொடங்கியது. அது ஒரு சம்பிரதாயத்துக்காக வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே நடந்தது. அதன்பிறகு பொதுக்குழு அரங்கத்துக்கு நிர்வாகிகள் சென்றனர். மேடையில் 57 நாற்காலிகள் போடப்பட்டு அனைத்து அமைச்சர்களும் மேடை ஏற்றப்பட்டனர். இதையெல்லாம்விட, மிக ரகசியமாக மற்றொரு வேலையும் நடந்தது.”

“என்ன ரகசியம்?”
“எப்போதும் பொதுக்குழுவில் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்து வாங்குவார்கள். ஆனால், இந்த முறை வருகைப் பதிவேட்டிலும், ஏதோ எழுதி மடிக்கப்பட்ட இன்னொரு காகிதத்திலும் கையெழுத்து வாங்கப்பட்டது. அதில் கையெழுத்துப் போட மறுத்தவர்களை, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் விரட்டி விரட்டிக் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தனர்.”
“அந்த ரகசியக் காகிதத்தில் என்ன எழுதி இருந்ததாம்?”
“அந்தக் ரகசியக் காகிதம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்துக்கு தனித்தனியாக எழுதிய கடிதம் போன்ற வடிவத்தில் இருந்ததாம். அதாவது, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழகத்துக்குக் கடிதம் எழுதி பொதுக்குழுவைச் கூட்டச் சொன்னதாக ஆதாரம் ரெடி பண்ணும் வேலைதான் அந்தக் கடிதம். நாளைக்கு நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ ‘பொதுக் குழுவை யாருடைய உத்தரவில் கூட்டினீர்கள், என்ன காரணத்துக்காகக் கூட்டினீர்கள்’ என்று கேட்டால், அப்போது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பிக்கலாம். இதன்மூலம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் விருப்பத்தின்படி தான் பொதுக்குழு கூட்டப்பட்டதாக அறிவித்து விடலாம் என்பதுதான் திட்டம்.”
“ஓஹோ!”
“பொதுக்குழு தொடங்கியதும் நடுநாயகமாக எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார். அவருக்கு இடதுபுறம் அவருடன் சமீபகாலமாக கடுமையாக முரண்பட்ட மதுசூதனனும், வலதுபுறம் வைத்திலிங்கமும் அமர்ந்திருந்தனர். மதுசூதனனுக்கு இன்னொரு பக்கத்தில் ஓ.பி.எஸ் அமர்ந்திருந்தார். பொதுக்குழு தொடங்கியதும் தீர்மானங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசிக்கத் தொடங்கினார். முதல் தீர்மானமாக, ‘இரட்டை இலையை மீட்க வேண்டும்’ என்பதுதான்.  அதை வாசித்தபோது, பொதுக்குழு உறுப்பினர்கள் உணர்ச்சிவசப்பட்டு கோஷம் எழுப்பினர். அதன்பிறகு வர்தா புயல் நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி, ஜெயலலிதா நினைவிடத்துக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் இருந்தன. அதன்பிறகுதான் முக்கியமான விஷயத்துக்கு வந்தார்கள்…”
“சசிகலா, தினகரன் விஷயம்தானே?”
“ஆமாம். ‘தினகரன் நியமித்த புதிய பொறுப்புகள் செல்லாது. ஏற்கெனவே ஜெயலலிதா நியமித்திருந்த பொறுப்புகளில் அவரவர் அப்படியே நீடிப்பார்கள்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகுதான் 8-வது தீர்மானமாக, ‘கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கென நியமிக்கப்பட்ட தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும் , அவர் அறிவித்த நியமனங்களும் ரத்து’ எனத் தீர்மானம் வாசித்து சசிகலாவை ஓரம் கட்டினார்கள்.  அதோடு அ.தி.மு.க கட்சி விதி 19-ல் திருத்தம் செய்யப்பட்டு, ‘இனிமேல் கட்சியில் பொதுச் செயலாளர் பதவியே கிடையாது. பொதுச் செயலாளரின் அதிகாரம் இனிமேல் வழிகாட்டும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி வசம் இருக்கும்’ என்ற தீர்மானமும் வாசிக்கப்பட்டது. ‘ராமரும் லட்சுமணரும் போல எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என உருகினார் அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார்.”
‘‘இதில் யார் ராமர்… யார் லட்சுமணர்?’’
‘‘அது ஊரறிந்த ரகசியம். ஆனால், இந்தப் புதிய ராமாயணத்தில் கதையே வேறுவிதமாக இருக்கிறது. எடப்பாடி – பன்னீர் அணிகளை இணைத்தபோது, ‘ஆட்சிக்கு எடப்பாடி, கட்சிக்கு பன்னீர்’ என்றுதான் டீல் பேசப்பட்டது. முதல்வராக எடப்பாடி இருக்க, பன்னீர் துணை முதல்வர் ஆனார். ‘பொதுச் செயலாளர் அந்தஸ்து பன்னீருக்கு வழங்கப்படும்’ என்று உறுதி தரப்பட்டது. ஆனால், ‘அ.தி.மு.க-வுக்கு இனி பொதுச் செயலாளரே கிடையாது’ என்று விநோதமான தீர்மானம் இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரின் அதிகாரம், வழிகாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீருக்கு இருந்தாலும், ‘இணை ஒருங்கிணைப்பாளர்’ என அந்த அதிகாரத்துக்குச் சற்றும் குறைவில்லாத அதிகாரத்தை எடப்பாடியும் வைத்துக்கொண்டுள்ளார். இப்படி சசிகலாவை நீக்கியும், பன்னீருக்கு ஆப்பு வைத்தும் எடப்பாடி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார். இதன்மூலம் புதிய ராமாயணத்தை அவர் எழுதியிருக்கிறார்.’’
‘‘இந்தத் தீர்மானங்கள் நடைமுறைக்கு சாத்தியமாகுமா?’’

‘‘இவற்றைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், நீதிமன்றத்தில் தினகரன் தரப்பால் கேள்வி கேட்க முடியாது என்பதே யதார்த்தம். ஆனால், ‘ஒரு கட்சிக்கு முழு அதிகாரம் பொருந்திய தலைவரும் இல்லாமல், பொதுச்செயலாளரும் இல்லாமல் எப்படி செயல்பட முடியும்’ என்ற கேள்வியைத் தேர்தல் ஆணையம் எழுப்பும்போது பதில் சொல்ல முடியாமல் இந்த ராமரும் லட்சுமணரும் திணறிப் போவார்கள்’’ என்ற கழுகாரை வேறு விஷயங்களுக்குத் திருப்பினோம்.  

‘‘கவர்னர் வித்யாசாகர் ராவை தினகரன் சந்தித்த உடனேயே, மு.க.ஸ்டாலின் கவர்னரைப் போய்ச் சந்தித்தாரே?”
‘‘திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்திலேயே, கவர்னர் சந்திப்பு பற்றி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதில், ‘நான்காவது முறையாக எதிர்க்கட்சிகள் கவர்னரைச் சந்திக்க இருக்கிறோம். இதுவே கவர்னரை நாங்கள் சந்திக்கும் இறுதிச் சந்திப்பாக இருக்கும். அதன்பிறகும், சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு கவர்னர் உத்தரவிடவில்லை என்றால், மக்களுடன் இணைந்து போராட்டத்தைத் தொடங்குவோம்’ எனக் காட்டமாகப் பேசினார். அதனால், செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்ற ஸ்டாலின்-கவர்னர் சந்திப்பு மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது.”
“ம்ம்ம்…”
“கவர்னர் சந்திப்புக்கான நேரத்தை ராஜ்பவன் ஒதுக்கியதும், கவர்னரைச் சந்திக்கப்போகும் எம்.எல்.ஏ-க்கள் பட்டியலை அறிவாலயம் அனுப்பி வைத்தது. தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. அதை ராஜ்பவன் ஓகே செய்தது. அதையடுத்து சந்திப்பு நடைபெற்றது.”
“ரெஸ்பான்ஸ் எப்படி இருந்ததாம்?”
“கவர்னருடனான முந்தைய சந்திப்புக்களில் வரவேற்பும் கவனிப்பும் சம்பிரதாயமாகவே இருந்தன. அதனால், ‘இந்த முறையும் அப்படித்தான் நடக்கும்’ என்ற நினைப்பில்தான் எம்.எல்.ஏ-க்கள் சென்றுள்ளனர். ஆனால், கவர்னரின் அறைக்குள் நுழைந்ததுமே நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை எம்.எல்.ஏ-க்கள் உணர்ந்துகொண்டனர்.”
“என்ன மாற்றம் காணப்பட்டதாம்?”
“ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுந்து நின்று வரவேற்றுள்ளார். இதற்கு முந்தைய சந்திப்புகளில் சும்மா பெயருக்கு எதிர்க்கட்சியினருடன் பேசி, அவர்கள் கொடுக்கும் ஃபைலை வாங்கிக்கொண்டு அனுப்பிவிடுவார். இந்த முறை அப்படி இல்லையாம்! ஸ்டாலினிடம் ஆங்கிலத்தில் பேசிய கவர்னர், ‘என்ன விஷயம்?’ என எல்லாவற்றையும் கேட்டுள்ளார். அதற்குப் பதில் சொன்ன ஸ்டாலின், ‘தமிழக அரசாங்கம் பெரும்பான்மையை இழந்துவிட்டது. அது உங்களுக்கும் தெரியும். எனவே, சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கு விட அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே நாங்கள் மூன்று முறை உங்களிடம் முறையிட்டுள்ளோம். இப்போதும் அதற்காகத்தான் உங்களைச் சந்திக்கிறோம்’ என அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கேட்டுச் சிரித்தாராம் ஆளுநர்.”
“சிரிப்புக்கு என்ன அர்த்தமாக இருக்கும்?”
“உமக்குத் தெரியாததா? ‘என் கையில் என்ன இருக்கிறது’ என்பதுதான் அவருடைய சிரிப்புக்கு அர்த்தம்.”
“அதன்பிறகு என்ன நடந்ததாம்?”
“ஸ்டாலின் சொல்லி முடித்ததும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கரைப் பார்த்து, ‘நீங்கள் இந்தியில் எடுத்துச் சொல்லுங்கள்’ என்று சொன்னாராம். அதையடுத்து ஸ்டாலின் சொன்னதை, அபுபக்கர் இந்தியில் கவர்னரிடம் எடுத்துச் சொன்னார். அதோடு, ‘பெரும்பான்மையை இழந்துவிட்ட அரசு வேண்டாம் என மக்களும் விரும்புகிறார்கள். நீங்கள் தொடர்ந்து காலதாமதம் செய்வது வருத்தமாக உள்ளது’ என்பதையும் வலியுறுத்திச் சொல்லியுள்ளார். அதைக் கேட்டதும், ‘சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்கிறேன்’ என கவர்னரும் இந்தியிலேயே பதில் சொல்லியுள்ளார். இதைக் கேட்டதும் ஸ்டாலின், ‘இந்த விவகாரத்தில் இதுதான் உங்களைச் சந்திப்பது கடைசி’ எனத் தமிழில் சொல்ல, அதை அபுபக்கர் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். அந்த நேரத்தில் ஸ்டாலினின் முகம் இறுக்கமாகவும், வார்த்தைகள் கடுமையாகவும் இருந்ததைக் கவனித்த கவர்னர், ‘நான் சுயமாகத்தான் முடிவெடுப்பேன். நீங்கள் நினைப்பதுபோல, யார் பேச்சையும் கேட்டு நான் முடிவு எடுப்பதில்லை. இந்த விவகாரத்தில் நான் விரைவில் ஒரு முடிவை எடுக்கவுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறுதியான வார்த்தைகள் மூலம், ‘நான் யாருக்கும் கட்டுப்பட்டவன் இல்லை’ என்பதை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மனதில் கவர்னர் பதிய வைத்துள்ளார்.”
“கவர்னர் இதில் என்ன முடிவை எடுக்கப் போகிறாராம்?”
“ ‘விரைவில் இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுத்துவிடுவேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். கவர்னரின் அந்த நம்பிக்கை வார்த்தைகள் ஸ்டாலினுக்கு உற்சாகத்தை தரவில்லை. அதனால்தான் நீதிமன்ற படியேறியிருக்கிறார். எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார் ஸ்டாலின். அ.தி.மு.க. பொதுக்குழு முடிந்த நிலையில் இந்த வழக்கு போடப்பட்டிருப்பதில் ஏதோ அர்த்தம் பொதிந்திருக்கிறது.’’
“மைசூரில் உள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் நிலை என்ன?”
“பாண்டிச்சேரியில் 16 நாள்கள் முகாமிட்டிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், தற்போது மைசூர் சென்றுள்ளனர். இதற்கு முக்கியக் காரணம், ஜக்கையனின் அதிரடி இடப்பெயர்ச்சிதான். இதையடுத்து தினகரனைச் சந்தித்த, கர்நாடகா மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘புதுச்சேரியைவிட கர்நாடகம்தான் பாதுகாப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்துதான் தினகரனும் அந்த ஐடியாவை ஓகே செய்தார். அதன்பிறகுதான் எம்.எல்.ஏ-க்கள் இரவோடு இரவாக மைசூர் புறப்பட்டனர். மைசூர் அருகே உள்ள மடிக்கேரியில் உள்ள ஐந்து நட்சத்திர சொகுசு விடுதியை புக் செய்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் நள்ளிரவில் விடுதிக்குள் அழைத்துச்செல்லப்பட்டதால், விடுதியின் பெயரைக்கூட எம்.எல்.ஏ-க்கள் யாரும் கவனிக்கவில்லையாம். இரண்டு மாடிகளில் முப்பது அறைகளைக் கொண்ட சொகுசு விடுதியாக அது அமைந்துள்ளது. அவற்றில் இருபது அறைகள் தினகரன் ஆட்களால் நிரப்பப்பட்டுள்ளன.”

“ம்ம்ம்.. தினகரன் தரப்பில் வேறு என்ன செய்தியாம்?”
“உச்சக்கட்ட கோப மனநிலைக்கு வந்துவிட்டார் தினகரன். ‘எடப்பாடி முகாமில் என்னுடைய ஸ்லீப்பர் செல் ஆட்கள் இருக்கிறார்கள்’ என்றெல்லாம் சொன்ன தினகரன், தன்னுடன் இருப்பவர்களிலேயே புல்லுருவிகள் இருப்பதைத் தற்போது உணர்ந்துள்ளார். நிறைய பேரை அப்படி லிஸ்ட் எடுத்து வைத்துள்ளார். அதில் முதல் பலி தளவாய் சுந்தரம். செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தளவாய் சுந்தரத்தின் மகள் திருமணத்தில் தினகரனும் கலந்துகொள்ளவில்லை.”
“ஏன்?”
“தளவாய் சுந்தரத்தின் மேல் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஏகக் கடுப்பில் இருந்ததுதான் காரணம். அவர் ஒவ்வொரு முறையும் தினகரனுக்குத்  தவறான ஐடியாக்களைக் கொடுப்பதாக அவர்களுக்கு நெருடல் இருந்தது. தங்கள் பக்கம் நடக்கும் மூவ்மென்ட்களை டெல்லிக்கும், எடப்பாடி பக்கமும் கசிய விடுவதாக ஒரு சந்தேகம் எழுந்தது. உச்சகட்டமாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கவர்னரைச் சந்திக்கப் போனபோது, ‘கவர்னரிடம் நீங்கள் யாரும் எந்தக் கடிதமும் கொடுக்காதீர்கள்’ எனத் தனித்தனியாக ஒவ்வொரு எம்.எல்.ஏ-விடமும் தளவாய் சுந்தரம் பேசியுள்ளார். அதை எம்.எல்.ஏ-க்கள் உடனடியாக தினகரன் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதில் கடுப்பாகிப் போன தினகரன், ‘உடனே இங்கிருந்து வெளியே போய்விடுங்கள். இனி இந்தப் பக்கமே வரக்கூடாது. உங்கள் பதவியையும் உடனே ராஜினாமா செய்யுங்கள்’ எனக் கத்திவிட்டாராம்” என்ற கழுகார் பறந்தார்.

%d bloggers like this: