பேச்சலர்ஸ் ப்ராப்ளம்

இளைய தலைமுறை எதிர்கொள்ளும் உடலியல் உளவியல் சிக்கல்கள்!
சமூகம் அதிகம் கண்டுகொள்ளாத, இதுவரை முழுமையாக சொல்லப்படாத கதை இது… ஆமாம்… இளைய தலைமுறையினரின் உடல்நலம் குறித்தோ, அவர்களிடம் அதிகரித்துவரும் உளவியல் சிக்கல்கள் குறித்தோ இதுவரை பரவலாக விவாதிக்கப்பட்டதில்லை. இளைஞர்களின் வாழ்க்கை நிச்சயமாக சிக்கலுக்குரிய ஒன்றாகவே இருக்கிறது.

படிப்பை முடித்துவிட்டு வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிற இளைஞர்கள் பல்வேறு சிக்கல்களையும், சவால்களையும் தொடர்ந்து சந்திக்கிறார்கள்; வழி தெரியாமல் தவிக்கிறார்கள். எதிர்பால் கவர்ச்சி, குடும்பப் பொறுப்புகள், வேலை, உறவுச்சிக்கல்கள், திருமணம் என்று கடுமையான சவால்களுக்கிடையில் உடல்நலன் குறித்தோ, உளவியல் நலன் குறித்தோ அவர்கள் கவனிப்பதில்லை. மற்றவர்களும்  பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.இளைய தலைமுறையினரின் உடலியல் மற்றும் உளவியல் சிக்கல்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் நிபுணர்கள் பேசுகிறார்கள்.
‘‘கல்விக்காகவோ, வேலைக்காகவோ பெருநகரங்களின் விடுதிகளிலும், வாடகை வீடுகளிலும் தங்கியிருக்கும் இளைஞர்கள் உடல்நலம் சார்ந்தும், மனநலம் சார்ந்தும் பெரிய பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்’’ என்கிறார் பொது நல மருத்துவர் சேகர். ‘‘சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீட்டிலோ அல்லது விடுதியிலோ தங்கியிருக்கும் இளைஞர்களுக்கு சுத்தமான குடிநீர், ஆரோக்கியமற்ற சூழல், மற்றும் சுத்தமான, ஊட்டச்சத்துமிக்க உணவு போன்றவை கிடைப்பதில்லை.
அவர்கள் அனைவரும் தங்களின் உணவுக்காக பெரும்பாலும் ஒட்டல்களை நம்பியே இருக்கிறார்கள். இதுபோன்று வெளியிடங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களால் வயிற்றுப்போக்கு, தீவிர வயிறு சம்பந்தமான நோய்கள், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
இதைத் தாண்டி அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சக நண்பர்களால் பல்வேறு போதை வஸ்து பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழலும் உள்ளது. இன்றைக்கு மதுப்பழக்கம் இல்லாத இளைஞர்களையோ, புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத இளைஞர்களையோ பார்ப்பது மிகவும் அரிதான நிலையாகிவிட்டது.
இது தற்போது குடும்பமும், ஒட்டுமொத்த சமூகமும் கவனிக்க வேண்டிய முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த போதைப் பழக்கங்களால் இன்றைய இளம்வயதினரின் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பிட்ட வயதில் திருமணமாகாமல் இருப்பதும் அவர்களுக்கு உளவியலாக பல்வேறு பிரச்னைகளை கொண்டுவருகிறது.
வீட்டிலுள்ள பெற்றோரும் பெண் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவதுபோல ஆண் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்துவதில்லை. ஆண் பிள்ளை எப்படியும் பிழைத்துக் கொள்வான் என நினைக்கின்றனர். இதுவும் கவலைக்குரிய ஒரு நிலவரம்.இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட, இளைஞர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வது அவசியம்.
பெற்றோர் இளைஞர்களுடைய உடல் நலம் சார்ந்த விஷயங்களில் அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். உணவு பழக்க வழக்கங்களை சுகாதாரமான முறையில் பின்பற்ற வேண்டும். முடிந்த அளவு வீட்டில் சமைத்து சாப்பிட முயற்சிக்க வேண்டும். 8 மணி நேரம் தூங்குவது அவசியம்; முக்கியம். இன்றைக்குப் பெரும்பாலான இளைஞர்கள் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுவது அதிகமாகி வருகிறது. இணையதளம், வலைதளங்களில் நேரங்களை கழிப்பதை விட உறவினர்களிடமும், சக நண்பர்களிடம் பேசி பழகுவது நல்லது.
வெளியிடங்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தோடு இணக்கமான சூழலில், தொடர்பில் இருக்க வேண்டும். தக்க வயதில் திருணம் செய்துகொள்ள வேண்டும். தங்களுடைய லட்சியங்களுக்காக ஓடிஓடி உழைப்பது மட்டுமே வாழ்க்கையில்லை. ஆரோக்கியமாக வாழ்வது… அவ்வாறு வாழ்வதற்கு பிரியப்படுவதும்கூட வாழ்க்கைதான் என்பதை உணர வேண்டும்.
முக்கியமாக தங்களுடைய லட்சியத்துக்காகவும், குடும்பத்துக்காகவும் உழைக்கும் இளைஞர்கள் போதைப் பழக்கங்களிலிருந்து முதலில் விடுபட வேண்டும். ஆரோக்கியமான குடிநீர், உணவு போன்றவற்றில் உறுதியாக இருக்க வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தங்களுடைய உடல் மற்றும் மனநலனில் அக்கறை செலுத்தினால்தான் பேச்சலர்கள் தங்கள் வாழ்க்கையை இனிமையாக வாழ முடியும்’’ என்கிறார்.
இளைய தலைமுறையினர் சந்திக்கும் உளவியல் ரீதியிலான நெருக்கடிகள் குறித்துப் பேசுகிறார் மனநல மருத்துவர் ராமன்.‘‘நகரத்தை நோக்கி வரும் இளைஞர்கள் முதலில் சந்திக்கும் பிரச்னை வாடகை வீடு. சில இடங்களில் ‘No Bachelors’ என்றே போர்டே வைத்திருக்கிறார்கள். பேச்சலர் என்றாலே பிரச்னைக்குரியவர், மது மற்றும் இன்னபிற பழக்கங்கள் உடைய வர் என்ற ரீதியில் பலருக்கும் அவர்கள் குற்றவாளியாகவே தெரிகிறார்கள். அப்படியே வீடு கிடைத்தாலும், ஏகப்பட்ட நிபந்தனைகள் வேறு.
பொருளாதார நெருக்கடியால் நான்கு பேர் ஒரே சின்ன அறையைப் பகிர்ந்துகொண்டு தங்கும்போது, பலவித குணநலன்களோடு இருக்கும் அறை
நண்பர்களுடன் ஒத்துப்போக முடிவதில்லை. சிலரால் தன்னுடைய இயல்புக்கு மாறான நபர்களை சகித்துக் கொள்ள முடியாமல் அடிக்கடி சண்டைகளிலும் முடிவதுண்டு. நிரந்தர வேலையின்மை, தன்னுடைய செலவுகளையும் கவனித்துக்கொண்டு குடும்பத்துக்கும் பணம் அனுப்ப வேண்டிய நெருக்கடியான நிலையில் இருக்கும் இவர்கள் உணர்வு சார்ந்த பல்வேறு பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
பகல், இரவு என ஷிஃப்ட் முறையில் வேலை பார்ப்பவர்கள் சேர்ந்திருப்பதாலும் தூக்கம், உணவு என்று பல விஷயங்களிலும் அறை நண்பர்கள் முரண்படுகிறார்கள். இரவு வேலைக்குச் சென்றுவிட்டு வந்து அப்போதுதான் ஒருவர் தூங்க ஆரம்பி–்த்திருப்பார், அந்த நேரத்தில் பகல் நேர வேலைக்குச் செல்பவர் எழும்பி தயாராக வேண்டும் என்பது போன்ற சிக்கல்கள் சாதாரணமாக இருக்கிறது. மற்றவர்களுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் நிலையில் ஒருவர் தன்னுடைய சொந்த விஷயங்களை குடும்பத்தினருடன் தொலைபேசியில் விவாதிக்கக் கூட முடியாத ப்ரைவசி பிரச்னைக்கும் ஆளாகிறார்கள்.
இதேபோல், வேலைகளை பிரித்து செய்வதாக முடிவெடுத்திருப்பார்கள். ஆனால், ஒருவர் ஒழுங்காக கொடுத்த வேலையை செய்யாதபோது அது வாக்குவாதத்தில் கொண்டு வந்துவிடும். சிலருக்கு சுத்தமாக இருப்பது பிடிக்கும். ஆனால் உடன் இருப்பவர்கள் சுத்தத்தைப்பற்றி கவலைப்படாதவர்களாக இருப்பார்கள்.
இதுபோன்ற அறையில் முரணான பழக்கங்களை சகித்துக் கொள்ள முடியாத சிலர் மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள். இதனால், மொபைல், சமூகவலைத்தளம் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதும் நடக்கிறது. தனிமை உணர்வு ஏற்படுகிறவர்கள் ஏதாவது பழக்கங்களுக்கு அடிமையாவதைவிட உணவு, தங்கும் வசதியோடு உள்ள ஹாஸ்டல்களைத் தேர்ந்தெடுக்கலாம். இது குடும்பத்தோடு தங்கியிருக்கும் உணர்வை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.’’
இருபதில் அறுபது…
இளைஞர்கள் தோற்றத்தில் இளமையாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்தில் 60 வயதினரை ஒத்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறது. அமெரிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவினர் 20 வயதில் இருக்கும் பல்வேறு வயது குழுவினரின் அன்றாட நடவடிக்கைகளை ஆராய்ந்ததில், முன்னெப்போதையும் விட இளைஞர்களின் உடல் ஆரோக்கியம் 60 வயது முதியவரின் இயக்கத்தை ஒத்திருப்பதாக
ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர். 
20 வயதுக்குபிறகு உழைக்க ஆரம்பி–்த்தாலும் ஆரோக்கியமற்ற தன்மையால் 35 வயதிலேயே ஓய்ந்து விடுகின்றனர். உடல் பருமன் ஏற்படாமல், உடற்பயிற்சிகளை செய்தால் மட்டுமே தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை தலைமை ஆராய்ச்சியாளரான ஸிபுனிகோவ் வலியுறுத்தியிருக்கிறார்.

%d bloggers like this: