எதையும் தாங்கும் இதயம் பெறுவோம்!

ய்வில்லாது இயங்கக்கூடிய உறுப்பு இதயம்.  மனித உடலின் மகத்தான எந்திரமான  இதயத்தைப் பாதுகாத்து, தடைபடாது இயங்கச் செய்வது இன்றைய வாழ்க்கை முறையில் மிகவும் சவாலான ஒன்றாக மாறியிருக்கிறது.

இதயத்தின் செயல்பாடு, இதய நோய் வருவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சைகள், இதய ஆரோக்கியம் காக்கும் முறைகள் என எல்லாத் தகவல்களையும் பார்ப்போம்.

கைக்குள் அடங்கும் இதயம்!

இதயம்,  நம்  மூடிய கையின் அளவுதான் இருக்கும். மார்பின் இடது புறத்தில் இருக்கும். நாம் பிறக்கும்முன்பே கருவிலேயே துடிக்க ஆரம்பிக்கும். நான்கு அறைகள் மற்றும் நான்கு வால்வுகளைக் கொண்டது.  Myocardium என்னும் தசைகளால் ஆனது. உடலில் உள்ள அனைத்து அசுத்த ரத்தமும் இதயத்தின் வலது மேல் அறைக்கு வரும். மூச்சுக்குழாய் வழியாக வெளியிடப்படும் காற்றின்மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேறும். அதேபோல் உள் இழுக்கும் மூச்சுக்காற்றின்மூலம் ரத்தம் சுத்தம் செய்யப்படும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ரத்தமானது ஒவ்வொரு முறை இதயம் சுருங்கி விரியும்போதும் உடல் முழுவதும் பரவும். உடலுக்குத் தேவையான சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெரும்பணியை இதயத்தின் பெருந்தமனி செய்கிறது.

இடைவிடாது துடிக்கும் இதயம்!

இதயம் துடிப்பது நின்று போனால் அசுத்த ரத்தம் சுத்தமாகாது. உடலில் உள்ள திசுக்களுக்கு எனர்ஜி தரும் குளுக்கோஸ் மற்றும் தாது உப்புகள் போன்றவை சரியாகக் கிடைக்காது. தேவையான எனர்ஜி கிடைக்காததால் திசுக்கள் பாதிக்கப்படும்.  திசுக்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். இறுதியில், உடல் செயலிழந்துபோகும்; இறப்பு நேரிடும்.

எதனால் இதய நோய்கள் ஏற்படுகின்றன?

இதய ரத்தக் குழாய்கள் மூலம் ஆக்சிஜன் கலந்த ரத்தம் இதயத்துக்குச் செலுத்தப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தாலும் ஆக்சிஜன் இல்லாமல் போனாலும் மாரடைப்பு ஏற்படும். இதற்கு முக்கியக் காரணம் ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு.

மிகவும் உணர்ச்சிவசப்படும்போது,  மனஅழுத்த நிலையில் இருக்கும்போது, இதய ரத்தக் குழாய்கள் சில நொடிகள் முழுமையாகச் சுருங்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும்.

மன அழுத்தம், புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துபவர்களுக்குக்  கல்லீரலில் எல்.டி.எல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக உருவாகும். இது ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக மாரடைப்பு ஏற்படும்.
கட்டுப்படுத்தக்கூடிய காரணங்கள்:

உடல் சோர்வு, உடல் உழைப்பு இல்லாதது, கொழுப்புள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பி டுவது, உடல் பருமன் அதிகரித்தல், மனஅழுத்தம், புகைபிடித்தல், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல் போன்றவை மிக முக்கியமான காரணங்கள். 
கட்டுப்படுத்த முடியாத காரணங்கள்

மன உளைச்சல், பணிச்சுமை, கவலை, பதற்றம், ஆவேசம், வீட்டுச்சூழல், வெளிப்புறச்சூழல் போன்றவை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இப்படியான எதிர்மறையான எண்ணங்களால் கார்டிசால், அட்ரீனல் ஹார்மோன்கள் ரத்தத்தில் கலந்து உடலின் எந்தப் பகுதியிலும் ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும்.

 

ரத்தக் குழாய் அடைப்புக்கான காரணங்கள்

* தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுதல்

* தினசரி உடற்பயிற்சி செய்யாது இருத்தல்

* கார்போஹைட்ரேட் உணவுகளை அதிக அளவில் உண்பது.

அலெர்ட் அறிகுறிகள்

உணவு உண்டபின்பும், வேகமாக நடக்கும்போதும், உணர்ச்சி வசப்படும்போதும் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்படும். இந்த வலியானது தோள்பட்டை, கழுத்து அல்லது வயிற்றுப் பகுதிக்குப் பரவுவது, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு.
யாருக்கு இதயநோய்கள்

வரும் வாய்ப்புகள் அதிகம்?

* மன அழுத்தம், மன உளைச்சல் கொண்டவர்கள், போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்னும் மனப்பான்மை உடையவர்கள், சுற்றியுள்ளவர் களுடன் தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாக்கப்படுபவர்கள் போன்றவர்களுக்கு.

* புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு.

* உயர் ரத்த அழுத்தம் (140/90 mm Hgக்கு அதிகமாக) இருப்பவர்களுக்கு .

* ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது.

* உடல் பருமன் உள்ளவர்களுக்கு.

* ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு.

பெண்களிடம் அதிகரிக்கும் இதயநோய்கள்

பெண்களுக்கு இயற்கையாகவே உள்ள ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இதய நோய் வராது தடுக்கும். எதிர்மறையான எண்ணங்களால் இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு இதய நோய்கள் வருகின்றன.

பரிசோதனைகள்

30 வயதைக் கடந்த அனைவரும் ரத்தச் சர்க்கரையின் அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு,  ரத்த அழுத்தம்  போன்ற  பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது.

இதயத் துடிப்புப் பரிசோதனை, ஈசிஜி, மார்பு எக்ஸ்ரே பரிசோதனைகள். 

ரத்தத்தில்,  சி.பி.கே – எம்.பி (CPK-MB) என்றழைக்கப் படும் ‘கிரியாட்டின் ஃபாஸ்போகைனேஸ்’ என்ற என்ஸைம் அளவைப் பரிசோதித்துப் பார்க்கலாம். தவிர, எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனை, ஆஞ்சியோகிராம் மற்றும் நியூக்ளியர் ஸ்கேன் போன்ற பிரத்யேகப் பரிசோதனைகள்.

உணவுகள் உதவுமா?

வெங்காயம், பூண்டு, கீரை வகைகள், தக்காளி, வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ, பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், காளிஃபிளவர், முருங்கைக்காய், புடலங்காய், கேரட், முள்ளங்கி போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆடை நீக்கிய பால், தயிர், சத்து பானங்களை அளவான இனிப்புடன் குடிப்பது நல்லது. இனிப்புச் சுவைக்காக நாட்டுச் சர்க்கரையைக் குறைந்த அளவு பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக் கரு, மீன், மட்டன் சூப் அல்லது நாட்டுக்கோழி சூப் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், செக்கு எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி, தேங்காய் எண்ணெய், உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, ஐஸ்க்ரீம், சாக்லேட், ஊறுகாய், காபி, முட்டையின் மஞ்சள் கரு, கோழியின் இறைச்சி போன்றவை. சர்க்கரை நோய் உள்ளவர்கள், மாம்பழம் மற்றும் பலாப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

 

உடற்பயிற்சி

* சுறுசுறுப்பான நடைப்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளைச் செய்யலாம்.

* யோகா பயிற்சிகள், தியானம் மற்றும் பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள்  செய்யலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்துக்கு உதவும்.

* கார்டியோ பயிற்சிகள்போன்ற இதயநோயாளி களுக்கான பிரத்யேகப் பயிற்சிகளை மருத்துவர் களின் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.

  வாழ்க்கை முறையில் மாற்றங்கள் தேவை

* எப்போதும்  மகிழ்ச்சியாக மற்றும் மனநிறைவுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும்.

* தொடர்ந்து பல மணி நேரம் பணிபுரிபவர்கள் இடையிடையே சிறிதுநேரம் இடைவெளி எடுத்துக்கொள்ளலாம்.

* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை நிரந்தரமாக விட்டுவிட வேண்டும்.

* நேர்மறை எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இப்படியான வாழ்க்கை முறை மாற்றம், மாரடைப்பை முதல் நிலையிலேயே சரிசெய்யும். மறுமுறை மாரடைப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.

முதலுதவி

வீட்டிலோ பொது இடங்களிலோ மாரடைப்பால் யாரேனும் திடீரென மயங்கி விழுந்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள்:

மயங்கியவரின் உடைகளைத் தளர்த்தி, காற்றோட்டமான சூழ்நிலையில் உட்கார அல்லது படுக்க வைக்க வேண்டும். முகத்தில் தண்ணீர் தெளிக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவரின் இடது புறமாக நின்று, கைகளை இடது புற மார்புப்பகுதியில் வைத்துத் தொடர்ந்து அழுத்த வேண்டும். மிக அழுத்தமாக அழுத்தக் கூடாது. அது மார்புப் பகுதியில் உள்ள எலும்பை உடைத்துவிடும்.  பாதிக்கப்பட்டவரின் மூக்கைப் பிடித்துக்கொண்டு, வாயோடு வாய் வைத்து வேகமாக ஊத வேண்டும். பின்னர் மீண்டும் இடது மார்புப்பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

உடனடியாக மருத்துவர் உதவியைப்பெற வேண்டும். நெஞ்சுவலி ஏற்படுபவர்களுக்கு, முதலுதவியாக 350 மி.லி ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம். அதிகப்பட்சம் 4 மணி நேரத்துக்குள் மருத்துவ உதவி  பெற்றுவிட்டால்  மாரடைப்பிலிருந்து காப்பாற்றலாம்.

சிகிச்சைகள்

ஆஞ்ஜியோ பிளாஸ்டி: ரத்தத்தில் உள்ள கொழுப்பானது ரத்தக் குழாயில் ஒட்டிக்கொள்வதால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுகிறது. இதனை ஆஞ்ஜியோ பிளாஸ்டி என்னும் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். ரேடியல் ஆர்ட்டரி மூலம் ஒயரைச் சுற்றி இரண்டு செ.மீ அளவில் சுருங்கி விரியும் தன்மையுடைய பலூன் பொருத்தப்பட்டு ரத்தக்குழாயின் உள்ளே செலுத்தப்படும். அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் இந்த பலூனைக் கொண்டு சென்று, விரிவடையவைத்துக் குழாய் விரிவாக்கப்படும். இதனால், ரத்தம் இதயத்திற்குள் சீராகச் செல்லும். இதுபோல, முழுநீளக் குழாயில் ஏற்பட்டுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப்புகளைச் சரிசெய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி: இதயத்தில் ஓட்டை, இதய வால்வு பழுது, வால்வு சுருக்கம், இதய ரத்தக் குழாய் வீக்கம் போன்றவற்றால் ஏற்படும் ரத்த ஓட்டத்தைச் சீராக்க ‘கரோனரி பைபாஸ் சர்ஜரி’ செய்யலாம். இது ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய நோய்கள் வராது தடுக்கும். மேலும், இது  தற்காலிக நிவாரணமே.

பேஸ்மேக்கர்:
செயற்கை இதயத் துடிப்புக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும்.

ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ்:
இதயமானது அசுத்த ரத்தத்தைச் சுத்திகரித்துச் சுத்தமான ரத்தத்தை உடல் உறுப்புகளுக்குப் பரவச்செய்யும். இப்படியான சுழற்சி மற்றும் பாயும் தன்மையை இதயம் இழக்கும்போது இந்த   ஹார்ட் அசிஸ்ட் டிவைஸ் பொருத்தப்படுகிறது. இந்த டிவைசின் உள்புறம் சுழலும் சக்கரம் ஒன்று பொருத்தப் பட்டிருக்கும். அந்தச் சக்கரமானது இதயத்திலிருந்து ரத்தம் உடல் உள் உறுப்புகளுக்குப் பரவ உதவும்.

செயற்கை இயந்திரம் என்னும் எக்மோ:
‘எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்ப்ரேன் ஆக்சிஜனேஷன்’ (Extra Corporeal Membrane Oxygenation (ECMO) என்பதன் சுருக்கமே ‘எக்மோ’. உடலுக்கு வெளியே இருந்துகொண்டே இதயம் மற்றும் நுரையீரலின் பணியைச் செய்யும். ரத்த அழுத்தக் குறைவு, மாரடைப்பு போன்றவற்றால் இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும் போது இந்த எக்மோ கருவியைப் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்றலாம். இதை மாற்று இதயம் கிடைக்கும் வரை பயன்படுத்தலாம்.

சைலன்ட் அட்டாக் என்றால் என்ன?

70 – 80 வயதைத் தாண்டியவர்களுக்கு, மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு  சைலன்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காலை 5 மணி முதல் 8 மணி வரைதான் பெரும்பாலும் சைலன்ட் அட்டாக் ஏற்படுகிறது. இரவு அதிக நேரம் விழித்திருப்பது, காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய மனஅழுத்தம் போன்ற பல காரணங்களால் சைலன்ட் அட்டாக் ஏற்படும்.


 

தய நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு இந்தியாதான் தலைநகரம். காரணம், இந்தியாவில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் 24 லட்சம் பேர் இதய நோய்களால் உயிர் இழக்கிறார்கள். கடந்த சில வருடங்களின் கணக்கெடுப்பை ஒப்பிட்டுப் பார்க்கையில், தற்போது இதயநோய் 20 வயதிலேயே வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், 30 முதல் 45 வயதினரை அதிகம் பாதிக்கிறது; அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமையானதாக இருக்கின்றன.

%d bloggers like this: