ஜனாதிபதி சந்திப்புக்குப் பிறகு பாருங்கள்!” – தினகரன் அணியின் திடீர் வியூகம்!

ஆட்சியைக் கலைப்பதுதான் இனி அடுத்தகட்ட நடவடிக்கை” என்று தாம் எடுத்துள்ள முடிவைச் செயல்படுத்தத் தயாராகிவருகிறார் டி.டி.வி.தினகரன். தமிழக ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், ஜனாதிபதியைச் சந்திக்கப் புறப்படுகிறது தினகரன் அணியின் எம்.எல்.ஏ-க்கள் படை.

அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா குடும்பத்தை அந்தக் கட்சியில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பவுள்ளனர். இதனால் இனி சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் தொடரமுடியாது. மேலும், அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் தினகரன் பதவியும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

முப்பது ஆண்டுகள் தங்கள் கைக்குள் இருந்த அ.தி.முக. என்ற இயக்கம் இப்போது தங்கள் கையைவிட்டு முழுமையாகப் போவதைக்கண்டு சசிகலா குடும்பத்தினர் மனக்கசப்பில் உள்ளார்கள். தினகரன் தரப்போ, கட்சியை எப்படியும் கைப்பற்றிவிடலாம் என்று எண்ணிவந்த நிலையில்,  அ.தி.மு.க-வின் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் தினகரன் தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ‘தன்னை மட்டுமே நீக்குவார்கள்… பொதுச்செயலாளரான சசிகலாவை அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்’ என்றுதான்  தினகரன் நினைத்தார். ஆனால், சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமித்த பொதுக்குழுவின் தீர்மானத்தையே ரத்து செய்ததை தினகரன் தரப்பு எதிர்பார்க்கவில்லை.

எடப்பாடி தரப்பு, எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த தினகரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ‘ஆட்சிக்கு நாங்கள் எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தமாட்டோம்… முதல்வரை மட்டுமே மாற்றச் சொல்கிறோம்’ என்று சொல்லியும் பார்த்தார் தினகரன். ஆனால், பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்தபிறகு, “இனியும் ஆட்சியை நீடிக்கவிட மாட்டேன்” என்று எச்சரித்துள்ளார் தினகரன். மேலும், எடப்பாடி ஆட்சிக்கு எந்த வகையில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனையிலும் தினகரன் தீவிரமாக இறங்கியுள்ளார். தினகரன் ஆதரவாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, “பொதுக்குழுவில் தங்களுக்கு எதிரான முடிவுகளை எடுப்பார்கள் என்று தினகரனுக்கு முன்பே தெரியும். ஆனாலும் பொதுக்குழுவின் தீர்மானங்களை அங்கீகரிப்பது தேர்தல் ஆணையம்தான் என்பதால், அதனிடம் நாம் முறையிட்டுக் கொள்ளலாம் என்ற முடிவில்தான் ஆரம்பத்தில் இருந்தே தினகரன் இருக்கிறார். ஒருவேளை, தேர்தல் ஆணையத்தின் முடிவும் நமக்கு எதிராக வந்தால், அப்போது நீதிமன்றத்தை நாடலாம் என்று சொல்லியிருக்கிறார் தினகரன்” என்றனர்.

தினகரன்

தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க-வின் சட்ட விதிகளை மாற்றியது தொடர்பாகவும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது தொடர்பாகவும் கடிதம் ஒன்றைக் கொடுக்க உள்ளார்கள். இந்தப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் சட்டவிதிகளுக்கு முரணானது என்ற வாதத்தைத் தேர்தல் ஆணையத்திடம் வைக்க உள்ளார்கள். மேலும், ‘இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம்’ என்று முதல் தீர்மானமே போட்டனர். ஆனால், எப்படி இரட்டை இலைச் சின்னத்தை மீட்பார்கள்… பார்க்கலாம் என்று தினகரன் அணியினர் தில்லாகச் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் நாங்கள் தாவா செய்தால், எப்படி இவர்கள் சின்னத்தை வாங்க முடியும் என்ற கணக்குச் சொல்கிறார்கள் தினகரன் அணியினர்.

ஆட்சியில் இருப்பதால்தானே எடப்பாடி தரப்பு அனைத்து அதிகாரங்களையும் பிரயோகித்து வருகிறது. ஆட்சி இல்லாமல் போனால், எல்லாரும் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்த தினகரன், இனியும் ஆட்சி நீடிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துள்ளார். தன்னிடம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களை வைத்து ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முடிவில் உள்ளார். தமிழக ஆளுநரிடம் ஏற்கெனவே முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று மனுக் கொடுத்தும் அது கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இப்போது மைசூரு அருகே சொகுசுவிடுதியில் உள்ளார்கள். அவர்களைத் தமிழகத்துக்கு அழைத்து வருவதைவிட, டெல்லிக்கு அழைத்துச் செல்லும் முடிவில் தினகரன் உள்ளார். 

டெல்லியில் ஜனாதிபதியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தினகரன். அப்போது, தன் அணியில் உள்ள எம்.எல்.ஏ-க்களை ஜனாதிபதி முன் நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். ‘எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று  அவர்கள் ஜனாதிபதியிடம் அப்போது வலியுறுத்த உள்ளார்கள். மேலும், நீதிமன்றத்தையும் நாடுவதற்குத் தயாராகியுள்ளனர் தினகரன் அணியினர். “ஜனாதிபதி சந்திப்புக்குப் பிறகு பாருங்கள். எங்களின் அடுத்த வியூகம் என்னவென்று தெரியும்” என்கிறார் தினகரன் அணியின் எம்.எல்.ஏ ஒருவர்.

”தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள சசிகலாவின் உறவுகள் இறுதிகட்ட ஓட்டத்துக்குத் தயாராகிவிட்டதன் முதல் கட்டமே ஜனாதிபதி சந்திப்பு” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

%d bloggers like this: