Advertisements

கலப்படம் அறிவோம்

ட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட விஷயங்கள்கூட நம் நாட்டில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, சாலை விதிகளை மீறுவது, பொருள்களை அதிகவிலை வைத்து விற்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே சட்டப்படி தண்டனைக் குரிய குற்றங்கள்தான். இந்த வரிசையில் நம்மை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று கலப்படம். பால் முதல் மருந்துப் பொருள்கள் வரை இந்தக் கலப்படங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டப்படி குற்றம் என்பதையும் தாண்டி, கலப்படம், நுகர்வோரின் உடல்நலனுக்கே தீங்கு விளைவிக்கக்கூடியது என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.

இப்படி உணவுப்பொருள்களில் நடக்கும் கலப்படங்களைக் கண்டறிய, உணவியல் நிபுணர்களும் வேதியியல் நிபுணர்களும்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப்பொருள்களில் இருக்கும் கலப்படங்களை நாமே சோதித்துத் தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம் நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் தரமானவையா என்பதைக் கண்டறியவும் தரமற்ற உணவுப்பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்கவும் முடியும்.

கலப்படங்களைக் கண்டறிவது எப்படி?

பால் vs தண்ணீர்

நீண்டகாலமாக நடந்துவரும் கலப்படங்களில் ஒன்று இது. பாலில் ஒரு துளியை எடுத்து வழவழப்பான பரப்பில் விடுங்கள். நீர் கலக்காத பால் என்றால், சாய்வுப் பகுதியை நோக்கி மெதுவாக ஓடும். அத்துடன் ஓடும் வழித்தடத்தில் பாலின் தடமும் இருக்கும். அதுவே நீர் கலந்த பால் என்றால், எந்தத் தடத்தையும் விட்டுவைக்காமல் விரைவாக ஓடிச்செல்லும்.

பால் vs சோப்புத்தூள்

பாலில் சோப்புத்தூள் கலந்துள்ளதா எனக் கண்டறியும் சோதனை இது.

சிறிதளவு பால் மற்றும் அதே அளவு தண்ணீரை ஒரு டம்ளரில் கலக்கவும். பின்னர் டம்ளரை நன்கு குலுக்கவும். சோப்புத்தூள் கலக்காத பால் என்றால், சிறிய அளவு நுரை மட்டுமே பாலின் மேற்பரப்பில் இருக்கும். சோப்புத்தூள் கலந்த பால் என்றால், அதிக அளவிலான நுரை, பாலின் மேற்பரப்பில் தேங்கியிருக்கும்.

 

தேங்காய் எண்ணெய் vs மற்ற எண்ணெய்

சிறிதளவு தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி டம்ளரில் எடுத்துச் சில நொடிகள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து அதனை வெளியே எடுக்கவும். சுத்தமான எண்ணெய் என்றால் டம்ளரில் இருக்கும் எண்ணெய் முழுவதும் உறைந்திருக்கும். கலப்படம் எனில், அதில் இருக்கும் தேங்காய் எண்ணெய் தவிர மீதி எண்ணெய் உறையாமல் இருக்கும்.

தேன் vs சர்க்கரைப்பாகு

சுத்தமான தேனுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் அதில் சர்க்கரைப்பாகு போன்றவற்றைச் சேர்க்கும் போது, தன் தூயதன்மையைத் தேன் இழந்துவிடுகிறது. இந்தக் கலப்படத்தைக் கீழ்க்கண்ட சோதனையின்மூலம் கண்டறியலாம்.

ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடவும். சுத்தமான தேன் என்றால் கரையாமல், அப்படியே நீருக்கடியில் சென்று தங்கும். கலப்படம் எனில் நீரில் கரைந்துவிடும்.

 

உணவு தானியங்கள் vs தானியக் கழிவுகள்

பருப்பு வகைகள், கோதுமை, அரிசி போன்றவற்றில் தானியக் கழிவுகள், பாதிப்புக்குள்ளான தானியங்கள் போன்றவை கலப்படம் செய்யப்படும். இவற்றை மிக எளிதாகக் கண்டறிந்துவிடலாம்.

வெள்ளை நிறம் கொண்ட பாத்திரம் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் சிறிதளவு தானியங்களை எடுத்துக்கொண்டு அவற்றைக் கண்ணால் பார்த்தாலே போதும். தூய்மையற்ற தானியங்கள் கண்ணில் படும்.

உணவு தானியங்கள் vs செயற்கை நிறமிகள்

தானியங்களின் தரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக உணவு தானியங்களில் செயற்கை நிறமிகள் கலப்படம் செய்யப்படுகின்றன.

சோதனை செய்ய வேண்டிய தானியங்களை, ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு போடுங்கள். சுத்தமான தானியங்கள் எனில், எந்த நிறமும் மேலே மிதக்காது. நிறமிகள் பயன்படுத்தப்பட்டவை எனில், தண்ணீரில் கரைந்துவிடும். எனவே தண்ணீரின் நிறம் மாறும். இதை வைத்து நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துவிடலாம்.

துவரம் பருப்பு vs கேசரிப் பருப்பு

சிறிதளவு துவரம்பருப்பைக் கையில் எடுத்துப் பார்த்தாலே, கேசரிப் பருப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

உடைக்கப்பட்ட துவரம்பருப்பு எவ்வித மாசுகளும் இன்றித் தெளிவாக இருக்கும்.

ஆனால் கேசரிப் பருப்பு வட்டமாக இல்லாமல், லேசாகச் சதுர வடிவத்தில் காணப்படும். இதைவைத்து கேசரிப் பருப்பை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம்.

மிளகு vs பப்பாளி விதை

மருத்துவகுணம் வாய்ந்த உணவுப்பொருள்களில் ஒன்று மிளகு. விலை அதிகம் என்பதால், பப்பாளி விதைகளை இதில் கலப்படம் செய்வர்.

சில மிளகுகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். சுத்தமான மிளகு, தண்ணீரில் மூழ்கி, அடியில் தங்கிவிடும். பப்பாளி விதைகள் எனில், நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும்.

கடுகு vs ஆர்ஜிமோன் விதைகள்

சிறிதளவு கடுகைக் கையில் எடுத்துப் பார்த்தாலே கலப்படத்தைக் கண்டுபிடித்துவிடலாம். ஆர்ஜிமோன் விதைகள் வெளிப்புறத்தில் சொரசொரப்பாகவும் அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.

கலப்படமற்ற  கடுகை உடைத்தால் உள்ளே மஞ்சள் நிறமாகவும் ஆர்ஜிமோன் விதைகள் உள்ளே வெள்ளையாகவும் இருக்கும்.

ராகி சேமியா vs செயற்கை நிறமிகள்

நிறமிகளைக் கண்டறிய உதவும் மற்றொரு சோதனை இது.

சிறிதளவு ராகி சேமியாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பஞ்சு உருண்டையை நீரில் நனைத்து, கிண்ணத்தில் இருக்கும் சேமியாவின் மீது லேசாகத் தேய்க்கவும். ராகியில் நிறமிகள் இருந்தால், பஞ்சில் அவை ஒட்டிக்கொள்ளும்.

பெருங்காயம் vs பிசின்

ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தை எடுத்து, அதனை நெருப்பில் காட்டவும்.

உடனே அது கற்பூரம்போலத் தீப்பிடித்து எரிந்தால் அது சுத்தமான பெருங்காயம். அதுவே பிசின் கலந்த பெருங்காயம் எனில், கற்பூரம் எரியும் அளவிற்கு ஜுவாலை இருக்காது.

 

பெருங்காயத்தூள் vs மண் துகள்கள்

பெருங்காயத்தூளில் கலந்திருக்கும் மண் துகள்கள் மற்றும்  கசடுகளை ஒரு டம்ளர் தண்ணீர் மூலமாகவே கண்டறியலாம்.

ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி, அதில் சிறிதளவு பெருங்காயத் தூளைப்போட்டுக் கலக்க வேண்டும். பெருங்காயத் தூள் தூய்மையானது என்றால், முழுவதுமாக நீரில் கரைந்துவிடும். மண் போன்ற மாசுகள் இருந்தால், அவை நீருக்கடியில் படிந்துவிடும்.

 

மிளகாய்த் தூள் vs செயற்கை நிறமிகள்

தானியங்களில் மட்டுமல்ல; மிளகாய்த் தூளில்கூட செயற்கை நிறமிகள் கலக்கப்படுகின்றன. அவற்றை எளிமையாகக் கண்டறிய முடியும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் மிளகாய்த் தூளைப் போடவும். செயற்கை நிறமிகள் கலந்திருந்தால் நீரில் கரைந்து, அடியில் படலம்போலத் தெரியும்.

சுத்தமான மிளகாய்த் தூள் அப்படிப் பரவாமல், நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும்.

மிளகாய்த் தூள் vs செங்கல் தூள்

சிறிதளவு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூளைப் போட வேண்டும். கலப்படம் இருப்பின் துகள்கள் நீருக்கடியில் படியும். அவற்றை உற்றுக் கவனியுங்கள்.

சொரசொரப்பாக, ஒழுங்கற்ற துகள்கள் அதில் இருப்பின் செங்கல் தூள்கள் கலந்திருக்கின்றன எனலாம்.

மரத்தூள் vs மசாலா தூள்

ஒரு டம்ளர் நீரில் மசாலா தூளைப்போட்டு லேசாகக் கலக்கவும். தூய்மையான மசாலா என்றால் நீரில் அப்படியே கரைந்துவிடும்.

மரத்தூள் கலந்தது என்றால் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.

மஞ்சள் தூள் vs செயற்கை நிறமிகள்

மிளகாய்த் தூளுக்குச் செய்த அதே சோதனை மஞ்சள் தூளுக்கும் பொருந்தும். ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் தூளைப் போட்டு, நிறமிகளைக் கண்டறிந்துவிட முடியும்.

பச்சைப்பட்டாணி vs செயற்கை நிறமிகள்

பச்சைப்பட்டாணிகளில் நிறமிகள் பயன் படுத்தப்படுகின்றன என்ற விஷயமே பலருக்கும் தெரியாது. ஆனால் பெரும்பாலான கடைகளில்  விற்கப்படும்  பச்சைப் பட்டாணிகளில் இந்தச் சிக்கல் உண்டு.

சிறிதளவு பச்சைப்பட்டாணிகளை எடுத்து ஒரு டம்ளரில் போடவும். பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிவிட்டுச் சிறிது நேரம் காத்திருக்கவும். செயற்கையான நிறமிகள் இருந்தால், அவை தண்ணீரில் கரையும்.

பச்சைக் காய்கறிகள் vs நிறமிகள்

பச்சை மிளகாய், குடை மிளகாய், பீன்ஸ் போன்றவற்றில் அழகுக்காக நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.

பஞ்சைத் தண்ணீரில் நனைத்து, இவற்றின் மேற்பரப்பில் தேய்ப்பதன்மூலம் நிறமிகளை இனம் கண்டுவிடலாம். நிறமிகள் இருந்தால், பஞ்சு பச்சை நிறமாக மாறும்.

மஞ்சள் கிழங்கு vs நிறமிகள்

கவர்ச்சிக்காக மஞ்சள் கிழங்கில் மஞ்சள் நிறமிகள் சேர்க்கப்படும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி, அதில் மஞ்சள் கிழங்கைப் போட வேண்டும். செயற்கை நிறமிகள் கலக்காத மஞ்சள் எனில், நீரின் அடியில் தங்கிவிடும். செயற்கை நிறமிகள் இருந்தால், நீரில் பரவும்.

ஆப்பிள் vs மெழுகு

ஆப்பிள் பளபளப்பாக இருப்பதற்காக அதன் மேற்பரப்பில் மெழுகு பூசப்படுகிறது.

ஆப்பிளின் தோலை, கூர்மையான கத்தி வைத்துச் சுரண்டவும். மேற்பரப்பில் மெழுகு பூசப்பட்டு இருந்தால், கத்தியோடு உரிந்து வந்துவிடும்.

சுத்தமான உப்பு

உப்பில் அயோடின் சேர்க்கப்படுவதோடு, அவை கட்டியாகாமல் இருப்பதற்காக ஆன்டி கேக்கிங் ஏஜென்ட்டுகளும் சேர்க்கப்படும். இவற்றால் சிக்கல்கள் இல்லை. ஆனால் தரமற்ற உப்பில் தூசுகள், வெள்ளை பவுடர் போன்றவையும் கலந்திருக்கும். இவற்றையும் தண்ணீரை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை ஊற்றிவிட்டு, அதில் கால் டீஸ்பூன் உப்பைப் போட வேண்டும். பின்னர் அது கரையும் வரை கலக்க வேண்டும். தூய்மையான உப்பு என்றால், தண்ணீர் தெளிவாகவோ மிகவும் லேசான, மங்கலான தன்மையுடனோ இருக்கும். ஆனால் கலப்படம் இருந்தால் தண்ணீர் மிகவும் மங்கலாக இருக்கும். அடர்த்தியான துகள்களும் மிதக்கலாம்.

அயோடின் உப்பு vs சாதாரண உப்பு

சாதாரண உப்பா அல்லது அயோடின் கலந்த உப்பா என்பதையும் எளிய சோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஓர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதன் மேற்பகுதியில் உப்பைத் தடவவும். பிறகு ஒரு நிமிடம் கழித்து அதில் சிறிதளவு எலுமிச்சைச்  சாற்றை விடவும்.

சுத்தமான அயோடின் உப்பு என்றால், உருளைக்கிழங்கு நீல நிறமாக மாறும். இல்லையெனில் அது அயோடின் கலக்காத உப்பு என அர்த்தம்.

காபித்தூள் vs சிக்கரி

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறிதளவு காபித்தூளைப் போடவும். சிறிதுநேரம் காத்திருக்கவும்.

நல்ல காபித்தூள் என்றால், நீருக்கடியில் மூழ்காமல் மேல்பகுதியில் மிதக்கும். சிக்கரித் தூள் நீருக்கடியில் மூழ்கத் துவங்கும்.

கோதுமை மாவின் தூய்மை

கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றிவிட்டு அதில் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவைப் போடவும்.

தூய்மையான மாவு என்றால், அடிப்பரப்பிற்குச் சென்று தங்கிவிடும். குப்பைகள் இருந்தால் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.

மைதா vs இரும்புத்துகள்கள்

தூய்மையற்ற முறையில் தயாராகும் மைதா, கோதுமை மாவு மற்றும் ரவைகளில் இரும்புத்துகள்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருள்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு.

சிறிய அளவு மைதா, கோதுமை, ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதன் அருகில் காந்தத்தைக்கொண்டு செல்லுங்கள்.

இரும்புத்துகள்கள் ஏதேனும் இருப்பின் காந்தத்தின்மீது ஒட்டிக்கொள்ளும்.

செயற்கை நிறமிகள் vs சுப்பாரி பான் மசாலா

தரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக சுப்பாரி பான் மசாலாவில் நிறமிகள் கலக்கப்படும்.

இவற்றை ஒரு டம்ளர் தண்ணீரைக்கொண்டுகண்டுபிடித்துவிடலாம். சிறிதளவு சுப்பாரி பான் மசாலாவை ஒரு கண்ணாடி டம்ளரில் உள்ள நீரில் போடவேண்டும். செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருந்தால் நிறங்கள் நீரில் கரையும்.

இவையனைத்தும் கலப்படங்களைக் கண்டறியும் வழிமுறைகள். சரி… கலப்படம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்? எங்கே புகார் செய்ய வேண்டும்? வழிகாட்டுகிறார் தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த, சென்னை நியமன அலுவலர் ஆர்.கதிரவன்.

கலப்படங்கள் குறித்து எப்படிப் புகார் செய்வது?

“கலப்படங்கள் குறித்துப் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம். இதற்காகத் தனி எண், உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரால் ஏற்படுத்தப்பட்டுத் தற்போது செயல்பட்டு வருகிறது. நீங்கள் வாங்கும் பொருள்களில் கலப்படம் இருக்கிறது என உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் தகுந்த ஆதாரங்களுடனோ செய்தியையோ வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம். உடனே அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் நேரில் புகார் அளிக்கலாம்.

வாட்ஸ்அப் எண்: 9444042322

இதேபோல இன்னும் அதிகம்பேருக்குத் தெரியாத விஷயம், செய்தித்தாள்களில் வைத்து உணவுப்பொருள்களை உண்ணக்கூடாது என்பது. சூடான பலகாரங்களைச் செய்தித்தாள்கள் அல்லது அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் வைத்து உண்டால், அவற்றில் இருக்கும் வேதிப்பொருள்களான கார்பன், காரீயம் போன்றவை உடலுக்குள் செல்லும். இவை உடலுக்குத்  தீங்குவிளைவிக்கக்கூடியவை. உணவுப்பொருள்களை உண்பது மட்டுமல்ல; அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் கைகளைத் துடைப்பதுகூட ஆபத்தானதுதான்.

மேலும் கடைக்காரர்கள் செய்தித்தாள்களில் வைத்துச் சூடான உணவுப்பொருள்களை விநியோகிப்பதைக் கண்காணித்து அதனை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் தடுத்து வருகிறோம். ஏதேனும் ஒரு கடைக்காரர் அப்படிச் செய்தால், உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் ‘மேம்பாட்டுத் தாக்கீது அறிக்கை’ கொடுக்கப்படும். அதற்கு அந்தக் கடைக்காரர் விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இந்தச் செயலில் ஈடுபட்டால் அவர்மீது வழக்குப் பதியவும் முடியும். எனவே செய்தித்தாள்களைக் கொண்டு உணவுப் பண்டங்கள் உண்பதைத் தவிர்ப்பது குறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும்”.

கலப்படம் மட்டுமல்ல… இதற்கும் புகார் செய்யலாம்!

உணவுப்பொருள்களில் கலப்படம் இருந்தால், தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்திருக்கும் வாட்ஸ்அப் எண் இருப்பதுபோல, பாக்கெட்டுகளில் வாங்கும் உணவுப் பொருள்களின் மீதான குறைகளையும் மொபைல் ஆப் மூலமாகப் பதிவு செய்யலாம். இதற்காகத் தமிழக அரசின் தொழிலாளர் துறையின்கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவுப் பிரிவு TN-LMCTS என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது.

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருள்களைப் பொறுத்தவரை சட்டப்படி, பாக்கெட்டின் மீது யார் அதை பேக் செய்தார், யார் அதைத் தயாரித்தார், எப்போது பேக் செய்யப்பட்டது, எடை எவ்வளவு, பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது, அதிகபட்ச சில்லறை விலை போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நுகர்வோர் இதுகுறித்துப் புகார் அளிக்கலாம். இந்த ஆப்பில் எழுத்து வடிவத்தில் அல்லது போட்டோ, வீடியோ, ஆடியோ வடிவில் புகார் அளிக்கலாம். இதில் புகார் அளித்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கைகள் குறித்துப் புகார் செய்தவருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.

பாக்கெட் பொருள்கள் மட்டுமின்றி, மோட்டல்களில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருள்கள், அதிக விலை வைத்து விற்கப்படும் வாட்டர் பாட்டில்கள் போன்றவை குறித்தும் இதில் புகார் செய்ய முடியும். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்துக்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: