மிகை எதார்த்தம் எதிர்பார்ப்புகள் கூட்டும் எதிர்கால மருத்துவம்

பிரபல இயற்பியலாளரும் ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்றழைக்கப்படுபவருமான எட்வர்ட் டெல்லர், “இன்றைய அறிவியல் தான்… நாளைய தொழில்நுட்பம்” எனச் சொல்லியிருப்பார். இன்று நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன், பல ஆண்டுகளாக அறிவியல் உலகத்தில் நடந்த ஆராய்ச்சிகளின் பலனாகத்தான் நமக்குக் கிடைத்தது.இது போல, ஆக்மென்ட்டட் ரியாலிட்டி மற்றும் வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள்தான் இன்றைய ஆராய்ச்சிகளின் ஆணிவேர். இவைதாம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பது அறிவியலாளர்களின் கணிப்பு.

போகிமான் கோ விளையாட்டைப்பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில், ஆக்மென்ட்டட் ரியாலிட்டி எனப்படும் இணைப்பு நிஜமாக்கலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட உருவத்தை, நிஜ உலகோடு இணைத்திருப்பார்கள். இதேபோல், சிறப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டால், செயற்கையாக ஓர் உலகம் கண்முன்னே தோன்றுவதைத்தான், வெர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் எதார்த்தம் என்கிறோம். இவை இரண்டையும் தொழில்நுட்பத்துறையில் மட்டுமின்றி, மருத்துவத்துறையிலும் தற்போது பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆக்மென்ட்டட் ரியாலிட்டி
அறிவியலைப் பொறுத்தவரை ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தைவிட, அதன் பயனால் வேறு காரணத்துக்காக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம்தான். அந்தவகையில் தான் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி என்ற இரண்டு தொழில்நுட்பங்களும், மருத்துவத் துறையில் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றின்மீது பயமிருக்கும்; அந்த பயத்தின் அளவு, கூடவோ குறையவோ இருக்கலாம். அந்த பயமே அளவுக்கு அதிகமானால் அதுதான் ‘ஃபோபியா’. இதைச் சரிசெய்யும் பலவகையான தெரபிகளில் ஒன்று தான் ‘எக்ஸ்போஷர் தெரபி’. எந்த விஷயத்துக்காக அதீதமாகப் பயப்படுகிறார்களோ, தீங்கு ஏற்படாதவகையில் அதோடு பழகச்செய்து பயத்தைப் போக்குவதுதான் இந்த தெரபியின் அடிப்படை. தற்போது இந்த தெரபியில் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கரப்பான் பூச்சி என்றாலே அலறுபவர்களுக்கு காட்சரிடாஃபோபியா (Katsaridaphobia) இருக்கலாம். இந்த ஃபோபியா இருப்பவர்களின் உடல்மேல் சில கரப்பான் பூச்சிகளை ஓடவிட்டு, பயப்படும் அளவுக்கு இவை தீங்குதராது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தி பயத்தைப் போக்குவார்கள். இதையே தொழில்நுட்பத்தின் உதவியோடு தற்போது செய்யத் தொடங்கி யிருக்கிறார்கள் அமெரிக்க உளவியலாளர்கள். நிஜ கரப்பான் பூச்சிகளுக்குப் பதிலாக, ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். சிகிச்சை பெறும் நபர் விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்துகொண்டால், அவர் உடம்பில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கரப்பான் பூச்சி ஊர்வது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும். எதிர்பார்த்ததைவிடவும் இதன் ரிசல்ட் பாசிட்டிவ் ஆக வந்ததையடுத்து, எதிர்காலத்தில் எக்ஸ்போஷர் தெரபிக்கு இந்த முறையை அதிகம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் போரிலும் பாதுகாப்பிலும் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் இருப்பது தெரியவந்தது. தாக்குதல்களையும், கண்முன்னே ஏற்படும் உயிரிழப்புகளையும் பல வருடங்களாக நேரில் பார்த்ததன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்திருக்கிறது. தங்களுடைய நண்பர்களின் மரணத்தில் தொடங்கி, தீவிரவாதி களின் மரணம் வரை அனைத்து விஷயங்களும் அவர்களைப் பாதித்திருந்தது. அவற்றை அவர்களால் மறக்கவோ, மீளவோ முடியவில்லை. அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க, விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் போர்க்காட்சி களையும் தாக்குதல்களையும் வீடியோ கேம் போல உருவாக்கி, அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப் பட்டது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்ததால், மற்ற ராணுவ வீரர்களுக்கும் இதேமுறையில் சிகிச்சை வழங்க மருத்துவக்குழு பரிந்துரைத்திருக்கிறது. எதிர்காலத்தில் இத்துறையில் விர்ச்சுவல் ரியாலிட்டியின் பங்கு அதிகமாகவே இருக்கக்கூடும்.
சில உடல் பிரச்னைகளைச் சரிசெய்ய நரம்பு வழியாக மருந்து செலுத்தவேண்டியிருக்கும். சிகிச்சை பெறுபவரின் உடலில் நரம்புகள் எங்கு இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கவே சிலநேரத்தில் சிரமமாக இருக்கும். இந்தப் பிரச்னையை சரிசெய்ய புதிதாக Accuvein என்ற கருவியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஃப்ரா ரெட் கதிர்களின் பிரதிபலிப்பு, விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்தக் கருவியை உடலின் எந்தப்பகுதியில் காண்பித்தாலும், ரியல் டைமில் நரம்புகளை மிகத்துல்லியமாகக் காண்பித்துவிடும். மனித உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் அக்குவேர் ஆணிவேராக விர்ச்சுவல் ரியாலிட்டியில் படம்பிடித்து, சில கருவிகள் மூலம் அறுவை சிகிச்சைப் பயிற்சிக்காக எதிர்காலத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டியைப் பயன்படுத்தப்படலாம். இந்த முறையில், உயிர்ச் சேதமின்றி மாணவர்கள் அறுவை சிகிச்சை செய்ய விரைவில் தகுதி பெறமுடியும் என டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
விர்ச்சுவல் ரியாலிட்டி தற்போது வீடியோ கேம்களில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் இந்தத் தொழில்நுட்பம் தற்போது கத்துக்குட்டி நிலையில் தான் இருக்கிறது என்றாலும், எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் இதன் பயன்கள் அதிகமாக இருக்கும் என டெக் வல்லுநர்கள் ‘காட் பிராமிஸ்’ செய்கிறார்கள்.

%d bloggers like this: