அக்டோபரில் பொதுக்குழு!’ – எடப்பாடி பழனிசாமிக்கு சிறையிலிருந்து ‘ரெட் அலெர்ட்’

அ.தி.மு.க அம்மா அணி சார்பில், அக்டோபரில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளார் சசிகலா. அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘செக்’ வைக்க சசிகலா ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, கடந்த 12-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தினர். அதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 8–வது தீர்மானத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும் அவரால் நியமிக்கப்பட்ட, நீக்கப்பட்டவர்களின் பதவிகள் செல்லாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆனால், சசிகலா எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. தினகரன் மட்டும் அது பொதுக்குழுக் கூட்டமே இல்லை, வெறும் கூட்டம் என்று குறிப்பிட்டிருந்தார். 

தொடர்ந்து, தன்னுடைய ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய பொதுக்குழு தீர்மானத்தைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பதற்கு முன்பு, தினகரன் ஆதரவு எம்.பி-க்கள் விஜிலா, வசந்தி உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்த அவர்கள், தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கி மனு கொடுத்தனர். மேலும், தற்காலிகப் பொதுச்செயலாளர் சசிகலாவின் அனுமதியில்லாமல், பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அதோடு, நீதிமன்ற வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குச் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தொடர்ந்து, தினகரன், சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ‘அ.தி.மு.க அம்மா அணியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா இதுவரை இருக்கிறார். அவரது நியமன விவகாரத்தில், தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதற்குள் அவசரப்பட்டு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவின் நியமனம் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இது, அ.தி.மு.க சட்ட விதிக்கு எதிரானது. எனவே, அ.தி.மு.க அம்மா அணி சார்பில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தி, தீர்மானத்தைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்போம்’ என்று விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘திருச்சியில் 19-ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்தி, நம்முடைய செல்வாக்கை நிரூபிப்போம்’ என்று தினகரன் சொல்லியிருக்கிறார். இதனால், பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்த தினகரன் தரப்பிலிருந்து ஆதரவாளர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘தமிழகம் முழுவதிலுமிருந்து பதவியிலிருப்பவர்கள், குறைந்தபட்சம் தலா 100 பேரைக் கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டும்’ என்று உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தினகரன் ஆதரவாளர்கள் செய்துவருகின்றனர். திருச்சி பொதுக்கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் தினகரன்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தினகரன் வெளியிடுவார் என்று சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். பொதுக்குழுக் கூட்டத்தில், தினகரனால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான் தினகரன், ‘ஒரு வாரத்தில் ஆட்சியை அகற்றுவோம்’ என்று சூளுரைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.

இதுகுறித்து தினகரனின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது, “அ.தி.மு.க அம்மா அணியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா தொடர்கிறார். அவரது நியமனத்தை ரத்துசெய்யும் அதிகாரம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குக் கிடையாது. சசிகலா நியமனம் குறித்த முடிவை தேர்தல் ஆணையம்கூட அறிவிக்காத சூழ்நிலையில், அ.தி.மு.க சட்ட விதிகளை மீறி, சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சசிகலாவின் நீக்கத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். அதை, சட்டரீதியாக எதிர்கொள்ளவும் ஆலோசனை நடந்துவருகிறது. எங்கள் தரப்பில் உள்ள 22 எம்.எல்.ஏ-க்களில் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முயல்கின்றனர்.

அது, அவர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும். 22 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்தால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தலில் நிச்சயம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவோர் வெற்றிபெற முடியாது. தி.மு.க-வுக்கு சாதகமான சூழ்நிலையே உருவாகும். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை தி.மு.க பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம். முதலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தோம். இப்போது, ஆட்சியைக் கவிழ்க்கவும் தயாராகிவிட்டோம். அதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். சசிகலா, தினகரன் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம். திருச்சி பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, அக்டோபரில் பொதுக்குழு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சசிகலாவின் ஒப்புதலோடு துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வெளியிடுவார்” என்றனர்.  

ஒரு மறுமொழி

  1. இப்படி காரணம் காட்டியே மீதி காலத்தையும் ஓட்டிவிடுவார்கள்.. அதற்குள் சொச் பாரத் லே மிச்ச பாரத் காணாமல் போய்விடும்

%d bloggers like this: