கண்ணன் சொன்ன விரதம்! – புரட்டாசி வழிபாடுகள்

புரட்டாசி என்ற பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்குவருவது திருவேங்கடவனும் திருமலை திருப்பதியும்தான். மட்டுமின்றி, பிரம்மோற்ஸவம், கருடசேவை வைபவம் என பெருமாளுக்கான திருவிழாக்கள் என்று புண்ணிய புரட்டாசி களைகட்டும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு, அவரது திருக்கோயில்களுக்குச் சென்று  தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும் என்று பெரியோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

அம்பாளுக்கு உகந்த நவராத்திரி திருவிழாவும் சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரீஸ்வர விரதமும் வருவது புரட்டாசி மாதத்தில்தான். மேலும், முன்னோர் ஆசியைப் பெற்றுத் தரும் மஹாளயபட்சம் இடம்பெறுவதும் இந்த மாதத்தில்தான்.

இவை போக, புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண்டிய வேறு சில வழிபாடுகளும் உண்டு. விநாயகர், அம்பாள், சிவபெருமான், பெருமாள் ஆகியோருக்கான புரட்டாசி விரதங்கள் மற்றும் வழிபாடுகளை, வாசகர்கள் பயன்பெறும்விதமாக ஒரே தொகுப்பாக இங்கே தந்துள்ளோம். படித்துப் பயன்பெறுங்கள்.

ஸித்தி விநாயக விரதம்!

புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது. தேவகுரு பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல் – உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய ஸித்தி உண்டாகும்.

இன்று பிள்ளையாருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து, மோதகமும் சர்க்கரைப் பொங்கலும் நைவேத்தியம் செய்து கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள். இதனால், காரியத் தடங்கல்களும் வறுமையும் நீங்கும். புத்திர சம்பத்து உண்டாகும். கடன் பிரச்னைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

யத: புத்ரஸம்பத் யதோ வாஞ்சிதார்த்தோ
    யதோஸ்பக்தவிக்னா: ததாஸ்னேகரூபா:
யத: ஸோகமோஹெள யத: காம ஏவம்
    ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
(கணேச அஷ்டகத்தின் ஒரு பாடல்)

கருத்து: எவரிடமிருந்து புத்திர சம்பத்தும் கோரிய பொருளும் கிடைக்குமோ, பக்தியற்றவர்களுக்கு தீயவர்களுக்கு எவரிடமிருந்து இடையூறுகள் ஏற்படுமோ, எவரிடமிருந்து மோகமும் இந்த உலகுக்கு வேண்டிய போகமும் உண்டாகுமோ அந்தக் கணபதியை வணங்குகிறோம்.

தூர்வாஷ்டமி விரதம்!

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக்கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

வேண்டியதை நிறைவேற்றும் புரட்டாசி பெளர்ணமி!

ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பெளர்ணமி தினத்தில் (அக்டோபர்-5 வியாழக்கிழமை), வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங் களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி.அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான்.  அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான், திரிபுரங்களுக்கும் அதிபதி யான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.

அவர்களை ரட்சிக்கத் திருவுளம்கொண்ட பிள்ளையார் அசுரன்மீது போர்தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவ கணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அப்படி அவன் வீடுபேறடைந்த திருநாள், புரட்டாசி மாத பெளர்ணமி தினமாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.
புரட்டாசி பெளர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே
நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.

புரட்டாசியில் ஞான கெளரியை வழிபடுவோம்!

கெளரி என்ற திருநாமம் அம்பாளைக் குறிப்பது. கிரிகுலங் களின் அரசியான தேவியை கெளரி என்று சிறப்பிக்கின்றன ஞான நூல்கள்.  ஸ்ரீகெளரி தேவியை வழிபடுவது, உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். வீட்டில் ஸ்ரீகெளரி தேவியை வழிபடுவதால் இல்லறம் செழிக்கும். வீட்டில் செல்வம், தானியம், மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எப்போதும் நிறைந்திருக்கும். கன்னிப் பெண்கள் கெளரி தேவியை வழிபடுவதால், அவர்களுக்கு மனம் நிறைந்த கணவன் வாய்ப்பான்.

கெளரி தேவியை சோடச கெளரி தேவியர் என்று பதினாறு வடிவங்களில் வழிபடுவார்கள்.

ஞான கெளரி, அமிர்த கெளரி, சுமித்ர கெளரி, சம்பத் கெளரி, யோக கெளரி, வஜ்ர ச்ருங்கல கெளரி, த்ரைலோக்ய மோஹன கெளரி, சுயம்வர கெளரி, கஜ கெளரி, கீர்த்தி கெளரி, சத்யவீர கெளரி, வரதான கெளரி, ஐஸ்வர்ய மகா கெளரி, சாம்ராஜ்ய மகா கெளரி, அசோக கெளரி, விஸ்வபுஜா மகா கெளரி ஆகிய பதினாறு தேவியர் குறித்த வழிபாடுகளை ஞான நூல்கள் விவரிக்கின்றன. இந்த தேவியரில் ஸ்ரீஞான கெளரியை புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திருநாளில் வழிபட்டால், தடைகள் நீங்கி, நினைத்த காரியம் நினைத்தபடி வெற்றிபெறும். அன்னை பராசக்தி தேவியானவள் ஞான சக்தியாக கோலம்கொண்ட சரிதத்தை சிவபராக்கிரமம் விவரிக்கிறது.

ஒருமுறை தன்னுடைய சிறப்பைக் குறித்து சிவபெருமானிடத்தில் மிகைபட விவரித்தாள் தேவி. இறைவன் உயிர்களைப் படைத்து அந்த உயிர்களுக்கு உடல், அறிவு ஆகியவற்றை அளித்தாலும், தானே அவற்றுக்கு சக்தியைத் தருவதாகவும் ஆகவே, தனது செயலே உயர்ந்தது என்றும் பேசினாள். பரமன் ஒருகணம் உலக உயிர்கள் அனைத்தின் அறிவையும் நீக்கினார். அறிவு நீங்கியதால் உலகில் குழப்பமும் சச்சரவும் ஏற்பட்டன. அதைக் கண்டு தேவி திகைத்தாள். தன்னால் வழங்கப்பட்ட சக்தி அனைத்தும் வீணாவதை உணர்ந் தாள். தனது தவறான எண்ணம் குறித்து வருந்தினாள். இறைவன், உயிர்களுக்கு மீண்டும் ஞானம் வழங்கினார். தேவிக்கும் அருள் புரிந்தார். இங்ஙனம் தேவிக்கு அறிவின் திறத்தை உணர்த்திய சிவ மூர்த்தியை கெளரி லீலா சமன்வித மூர்த்தி என்று சிவபராக்கிரமம் போற்றுகிறது. இதைத் தொடர்ந்து அம்பிகை வன்னி மரத்தடியில் அமர்ந்து சிவனருள் வேண்டி தவமிருந்தாள். அதனால் மகிழ்ந்த சிவனார், தன்னுடலில் பாதி பாகத்தை அவளுக்கு அளித்ததுடன், அவளை அறிவின் அரசியாக்கினார். இதையொட்டி தேவி, ஞான கெளரியாகச் சிறப்பிக்கப்படுகிறாள். இந்த தேவியை பிரம்ம தேவன் கார்த்திகை மாதம் வளர்பிறை பஞ்சமியில் வழிபட்டு அருள்பெற்றாராம். அந்த நாளை ஞான பஞ்சமி, கெளரி பஞ்சமி என்று போற்றுவார்கள். வீரர்கள் தங்களது வெற்றிக்காக இந்த தேவியை புரட்டாசி வளர்பிறை பிரதமையில் வழிபடுவார்கள். நாமும் வரும் புண்ணிய புரட்டாசியில் இந்த அம்பிகையை வழிபட்டு, அளவில்லா ஞானமும் செல்வமும் பெற்று மகிழ்வோம்.

நவகிரக நாயகியாகத் திகழும் ஆதி பராசக்தி, சூரிய மண்டலத்தில் தீப்தா என்ற திருப்பெயருடன் திகழ்கிறாளாம். அதேபோல், சந்திர மண்டலத்தில் அமிர்த கெளரியாகவும், செவ்வாய் மண்டலத்தில் தாம்ர கெளரியாகவும், புத மண்டலத்தில் ஸ்வர்ண கெளரியாகவும், சுக்கிர மண்டலத்தில் சுவேத கெளரி யாகவும், சனி மண்டலத்தில் சாம்ராஜ்ய கெளரியாகவும், ராகு மற்றும் கேது மண்டலங்களில் முறையே கேதார, கேதீசுவர கெளரியாகவும் திகழ்கிறாளாம்.

அவ்வகையில் குரு மண்டலத்தில் அன்னை ஞான கெளரியாக அருள்பாலிக்கிறாள். ஆகவே, இந்தத் தேவியை அனுதினமும் வழிபட்டு வந்தால், ஞானத்தையும், திருமணப் பேற்றையும், நல்வாழ்வையும் தருவாள்.

மங்கலங்கள் அருளும் மகாலட்சுமி விரதம்!

புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, திருமகள் துதிப்பாடல்களைப் படித்துத் திருமகளை வழிபட்டுவந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்டபயங்கரீ
ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்திபுத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸ்தாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த்ரஹிதே தேவி ஆத்யஸக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மகா லக்ஷ்மி நமோஸ்துதே

கருத்து: மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரனுக்கு பயத்தை அளித்தவளும் சர்வ பாவங்களையும் போக்குபவளான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.எல்லோருக்கும் வரங்களை அளிப்பவளும், துஷ்டர்களுக்குப் பயத்தை அளிப்பவளும், சர்வ துக்கங்களைப் போக்குபவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

ஸித்தி-புத்தியை அளிப்பவளும், போகம், மோட்சம் ஆகியவற்றைக் கொடுப்பவளும், மந்திர மூர்த்தியும், எப்போதும் பிரகாசிப்பவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம். ஆதியந்தம் இல்லாதவளும், தேவியும், முதல் சக்தியும், மகேஸ்வரியும், யோகத்தினால் உண்டானவளும், யோகத்துக்குப் பலமுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

கண்ணன் சொன்ன அனந்த விரதம்!

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசியன்று அனந்த பத்மநாதனைத் தியானித்துக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம், அனந்த விரதம்.

விரத நாளன்று காலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு, தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனைத் தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

பூஜையின்போது, ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்ய வேண்டும். இவற்றில் 14 அதிரசங்களை வேதியர்களுக்குத் தந்து, தாம்பூலம் மற்றும் தட்சிணையும் வழங்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.

அதேபோன்று, பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் 14 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால் தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வர்யங்கள் வந்து சேரும். 14 வருடங்கள் இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து வழிபடும் அன்பர்களுக்கு நல்லன யாவும் வசமாகும். அவருக்குத் தோல்வி என்பதே இல்லை என்கின்றன ஞான நூல்கள்.

மிக அற்புதமான இந்த விரதத்தைக் கண்ண பரமாத்மா, பாண்டவர்களுக்கு உபதேசித்தார்.

பாண்டவர்கள் வனவாசம் இருந்த காலத்தில் அடுக்கடுக்காகத் துயரங்கள் வந்துகொண்டிருந்தன. எதற்கும் சலிக்காத தர்மபுத்திரரின் மனதிலும் சஞ்சலம் தலை நீட்டியது. ‘தெய்வமே! ஏன் இப்படி?’ என்று அவர் மிகவும் கவலையில் ஆழ்ந்திருந்தபோது, கிருஷ்ண பகவான் அவர்களைச் சந்திக்க வந்தார்.

அவரை வணங்கி வரவேற்ற தர்மபுத்திரர், தங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இன்னல்களை அவரிடம் விளக்கி, அவற்றிலிருந்து மீண்டு வர வழிகாட்டுமாறு பிரார்த்தித்தார். கிருஷ்ணரும் அவர்களுக்கு மிக அற்புதமான ஒரு வழியைச் சொன்னார்.

“தர்மா! அனைவரது பாவங்களையும் நீக்கி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் ‘அனந்த விரத’த்தைப் புரட்டாசி மாத வளர்பிறைச் சதுர்த்தசியன்று செய்ய வேண்டும். இது புகழ், நலன்கள், நற்குழந்தைகள் ஆகியவற்றை அளிக்கும். பாவங்கள் அனைத்தையும் போக்கும்!” என்றார் கண்ணன்.

தர்மரின் மனதில் மகிழ்ச்சி துளிர்விட்டது. அத்துடன் சேர்ந்து ஓர் ஐயமும் எழுந்தது. `அனந்தர் என்ற தெய்வம் யார்?’ என்பதுதான் அது. தனது சந்தேகத்தை கண்ணனிடமே கேட்டார். ‘‘யது குலோத்தமா! அந்த அனந்தன் என்பவர் யார்? ஆதிசேஷனா, தட்சகனா, பிரம்ம தேவனா அல்லது பரப்பிரம்ம வடிவமா?”

கண்ணன் புன்னகையோடு பதில் சொன்னார்: ‘‘குந்தி அமைந்தா! அனந்தன் என்பவன் நானே; வேறு எவருமில்லை! பகல், இரவு, மாதம், வருஷம், யுகம் என்னும் காலங்கள் எல்லாம் என் வடிவமே. அனந்தன் என்னும் பெயரால் பூமியின் பாரத்தைக் குறைக்கவும் தீயவர்களை அழிக்கவும் வசுதேவருடைய வீட்டில் பிறந்தேன். அனைத்தும் என் வடிவமே என்பதை அறிந்து கொள். இந்திரன், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், துவாதச ஆதித்தியர்கள், சப்தரிஷிகள், மலைகள், நதிகள், மரங்கள் முதலியன என வடிவங்களே!” என்றவர், அந்த விரதத்தின் மகிமை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

அனந்த விரதத்தைப் பற்றி அனந்தனே சொன்ன அதியற்புத  திருக்கதை இதுதான்.

கிருத யுகத்தில், வேத சாஸ்திரங் களில் கரை கண்டவரும் வசிஷ்ட கோத்திரத்தில் பிறந்தவருமான சுமந்தன், தன் மனைவி தீட்சா தேவியுடன் மனமொத்து நல்வாழ்வு நடத்தி வந்தார். அவர்களுக்கு சீலை என்ற மகள் இருந்தாள். சீலை பிறந்த கொஞ்ச நாள்களில் தீட்சா தேவி மரணமடைந்தாள்.

‘மனைவி இல்லாவிடில் நாம் செய்யும் தர்ம – கர்ம அனுஷ்டானங்களுக்குக் குறை வருமே!’ என்று எண்ணிய சுமந்தன், கர்க்கசை என்பவளை மறுமணம் செய்தார். கர்க்கசை கடினமான மனம் கொண்டவள். மூத்தாள் மகளான சீலையிடம், மறந்து போய்க்கூட அன்பு செலுத்தாதவள். ஆனால், சீலையோ பெயருக்குத் தகுந்தாற்போல, மிகுந்த சீலத்துடன் விளங்கினாள்.

சீலைக்குத் திருமணப் பருவம் வந்ததும் கௌண்டின்யர் என்பவருக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார் சுமந்தன். கல்யாணம் முடிந்ததும் சுமந்தன், ‘மாப்பிள்ளைக்கு ஏதாவது கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் கர்க்கசையிடம், ‘‘மாப்பிள்ளைக்கு என்ன கொடுக்கலாம்?” என்று கேட்டார். அவளோ திடீரென்று எழுந்து அறைக்குள் நுழைந்து கொண்டு, ‘‘இங்கு ஒன்றும் இல்லை. போங்கள்” என்று கத்தியவாறு கதவைச் சாத்திக் கொண்டாள்.

வேறு வழியற்ற நிலையில் சுமந்தன் கொஞ்சம் கோதுமை மாவை மாப்பிள்ளையிடம் தந்து, “இது வழியில் உபயோகப்படும். வைத்துக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி மணமக்களை வழியனுப்பி வைத்தார்.
கௌண்டியன்யர் சீலையுடன் தனது ஆசிரமத்துக்குக் கிளம்பினார். சூரிய உதய காலம். வழிப்பயணத்தைச் சற்று நிறுத்திய கௌண்டின்யர் அங்கிருந்த ஒரு குளத்தில், சந்தியாவந்தனம் முதலான அனுஷ்டானங்களைச் செய்வதற்காகப் போனார்.

அன்று அனந்த விரத தினமானதால் பெண்கள் பலர், சிவப்பு நிற ஆடை அணிந்து, பய பக்தியுடன் தனித்தனியாக அனந்த பத்மநாப ஸ்வாமியை பூஜை செய்து கொண்டிருந்தனர். மெள்ள அவர்களை நெருங்கிய சீலை, “நீங்கள் என்ன விரதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றாள்.

அந்தப் பெண்களும் அனந்த விரதம் குறித்த நியதிகளை வழிமுறைகளை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

உடனே சீலை அங்கேயே நீராடி, தகப்பனார் தந்த கோதுமை மாவைப் பயன்படுத்தி, அங்கிருந்த பெண்களின் உதவியுடன் விரதம் தொடங்கி நோன்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டு முறைப்படி விரதத்தை முடித்தான். அதன்பின் மனத்திருப்தியுடன் கணவருடன் அவரது ஆசிரமத்தை அடைந்தாள்.

அனந்த விரதம் அளவற்ற ஐஸ்வர்யங்களைச் சீலைக்கு அளித்தது. நவரத்தினங்களும் தங்கமும் அவள் உடலை அலங்கரித்தன. வருடம் தவறாமல் சீலை, அனந்த விரதம் அனுஷ்டித்தாள். அனந்தமான பலன்களுடன் ஆனந்தமான வாழ்வை அனுபவித்தாள்.

செல்வ மயமான வாழ்வு கௌண்டியன்யரின் சிந்தனையை மாற்றியது போலும். ஒருநாள் சீலையின் கையில் கட்டப்பட்டு இருந்த நோன்புக் கயிற்றைக் கண்ட கௌண்டியன்யர், அந்த நோன்புக் கயிற்றையும் அவளையும் அவமானப்படுத்தினார்.

சீலை பதறினாள். ‘‘ஸ்வாமி! இது கயிறு அல்ல. அனந்த பத்மநாப ஸ்வாமியையே நான் தரித்து இருக்கிறேன். அந்த ஸ்வாமியின் அனுக்கிரகத்தால் அல்லவா, இவ்வளவு செல்வங்களும் நமக்கு வாய்த்தன” என்றாள். ஆனால், அவள் சொன்னவற்றை கௌண்டின்யர் செவிமடுக்கவில்லை. மிகுந்த கோபத்துடன், மனைவியின் கையிலிருந்த கயிற்றை இழுத்து அறுத்து, எரியும் தீயில் போட்டார்.

சீலை துடித்தாள். “அந்த சரடு (கயிறு) அனந்தனின் வடிவம் அல்லவா? அது எரிந்தால் நமது குலமும் வீடும் எரியுமே” என்று கூவியபடி தீயில் இருந்த சரடை எடுத்து அது எரிவதற்குள் பாலில் போட்டாள்.
நாள்கள் கடந்தன. கௌண்டின்யரின் செல்வம் குறையத் தொடங்கியது. அவரிடம் இருந்த பசுக்களை யாரோ திருடிச் சென்றனர். அவரது வீடு தீப்பிடித்துச் சாம்பலானது. உறவினர்களுடன் சண்டை ஏற்பட்டது. மற்ற எவரும் கௌண்டின்யரிடம் பேசாத ஒரு நிலை உண்டானது.

கௌண்டின்யர் துயரக் கடலில் மூழ்கினார். மனைவியை அலட்சியப்படுத்தி மாதவனை அவமதித்தால் வந்த வினை இது! என்பதை உணர்ந்ததால், ‘`அனந்தா.. அனந்தா… எங்கே போனாய்? என்னை கைவிட்டு விடாதே” என்று கத்தியபடி காட்டுக்குள் ஓடினார். கண்ணில் கண்டவர்களிடம் எல்லாம், “அனந்தனைப் பார்த்தீர்களா?” எனக் கேட்டார்.

அவர் போகும் வழியில், பழங்கள் நிறைந்த மாமரம் ஒன்று இருந்தது. “மாமரமே! அனந்தனைப் பார்த்தாயா?” என்று கேட்டார். “இல்லை!” என்று பதில் வந்தது. கொஞ்ச தூரம் போனதும், ஒரு பசு மாட்டைப் பார்த்தார். ஏராளமாகப் புல் இருந்தும் அதை மேயாமல் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்தது அந்த பசு. அதனிடமும், “அனந்தனைப் பார்த்தாயா?” என கௌண்டின்யர் கேட்க, “இல்லை!” என்ற பதிலே வந்தது. இதேபோல் தான் பார்த்த காளை, யானை ஆகியவற்றிடமும் இதே கேள்வி கேட்டு இதே பதில் பெற்றார் அவர்.

கௌண்டின்யரின் மனம் சோர்வுற்றது. உடல் தளர்ந்தது. நாக்கு உலர்ந்தது. “அனந்தா! அனந்தா!” என்று கதறினார். அப்போது அவர் முன்னால் தரிசனம் தந்த ஸ்வாமி ஐஸ்வர்யம், தர்ம புத்தி, வைகுண்ட பிராப்தி ஆகிய மூன்று வரங்கள் தந்தார்.

ஸ்வாமியைத் துதித்து வணங்கிய கௌண்டின்யர், தான் வழியில் கண்ட மாமரம் மற்றும் விலங்குகள் குறித்துக் கேட்டார்.

“நீ பார்த்த மாமரம், போன பிறவியில் சிறந்த ஒரு பிராமண வித்வான். மாணவர்கள் பலர் வேண்டிக்கேட்டும் கர்வம்பிடித்த அவர், தான் கற்ற கல்வியை எவருக்கும் சொல்லிக் கொடுக்க வில்லை. அதனால் மரம் ஆனார். அடுத்தது பசு, போன பிறவியில் அது நற்குலத்தில் உதித்த பணக்காரன். யாருக்கும் ஒரு பிடி அன்னம்கூட தானம் செய்யாததால், அவனே பசு மாடாகப் பிறந்துள்ளான். இந்தப் பிறப்பில் புல் இருந்தாலும் மேய முடியாமல் அலைகிறான். அடுத்தது காளை. அது போன பிறவியில் கர்வமுள்ள ஒரு அரசனாக இருந்தது. விளையாத (களர்) பூமியை தானம் செய்த பாவத்தால், அவன் இப்போது காளையாகத் திரிகிறான். அடுத்தது யானை. அந்தணனாக இருந்த ஒருவன், தான் செய்த தர்மத்தை விலை பேசி விற்றுப் பணம் பெற்றதால் இப்படி யானையாகப் பிறந்திருக்கிறான்!” என்று விவரித்த ஸ்வாமி அங்கிருந்து மறைந்தார்.
மனம் மாறிய கௌண்டின்யர் வீடு திரும்பினார். தன் மனைவி சீலையுடன் சேர்ந்து, அனந்த விரதம் செய்து, இழந்த செல்வங்களைப் பெற்று மங்கல வாழ்வு வாழ்ந்தார்.

கண்ணன் சொன்ன விரதம் இது. இதன்படி விரதம் இருந்து, சகல பாக்கியங்களையும் பாண்டவர்கள் பெற்றார்கள். இதை அனந்த சதுர்த்தசி விரதம் என்றும் சொல்வார்கள்.

இன்னும் சில விரதங்கள்!

அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதம் சந்ததி செழிக்க அருள்செய்யும். பிள்ளை – பேரன் எனப் பரம்பரை தழைக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

சஷ்டி – லலிதா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வ மங்கலங்களையும் அருளும்.

கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம்கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.

முன்னோர்கள்அருளும் மஹாளயம்

புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இதைத் தொடர்ந்துவரும் அமாவாசை, மாஹாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்குத் தாம்பூலமும் தட்சணையும் கண்டிப்பாகத் தருதல் வேண்டும். முடிந்தால் கயா, தனுஷ்கோடி தலங்களில் அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

%d bloggers like this: