துளிர்க்கப்போகும் இரட்டை இலை” – தினகரனுக்கு அடுத்த ஷாக்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானம், நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் என்ற அடுத்தடுத்த அதிரடிகளால் முடங்கிக் கிடந்த இரட்டை இலைச் சின்னம், மீண்டும் துளிர்க்கப்போகிறது.

எம்.ஜி.ஆர். காலம்தொட்டு, அ.தி.மு.க-வின் வெற்றிக்கு அடிநாதமாக விளங்கியதே இரட்டை இலைச் சின்னம்தான். ஆனால், அ.தி.மு.க -வில் பிளவு ஏற்பட்ட இரண்டு முறையுமே, பலிகடா ஆக்கப்பட்டதும் அதே இரட்டை இலைச் சின்னம்தான். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், ஜெ – ஜா என்று அக்கட்சி இரண்டாக உடைந்தபோது, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். அதையடுத்து, 1989-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இரண்டு அணிகளுக்கும் தனித்தனி சின்னம் கொடுக்கப்பட்டது. இரண்டு அணிகளுமே அந்தத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் தோல்வியைச் சந்தித்தன. தோல்விக்கான காரணங்களில் அ.தி.மு.க என்ற கட்சியைவிடவும், அதன் இரட்டை இலைச் சின்னமே மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. சின்னத்தை இழந்ததே, அந்தத் தேர்தலில் இரு அணிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியதாகச் சொல்லபட்டது. அந்தத் தோல்விக்குப் பிறகு இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து, தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு, இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் பெற்றது அ.தி.மு.க.

எடப்பாடி - பன்னீர்

அந்தச் சம்பவம் அரங்கேறி முப்பது ஆண்டுகளுக்குப் பின் அ.தி.மு.க அடுத்த சோதனையை சந்தித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். அ.தி.மு.க இரண்டாக உடைந்தது,  அக்கட்சியில் உருவான பஞ்சாயத்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இரண்டு அணிகளின் மனுவையும் பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், முதலில் செய்த காரியம் சின்னத்தை முடக்கியதுதான். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதும், கட்சியின் பெயரை இரண்டு அணிகளும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. “பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது” என பன்னீர் அணி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. அதற்குப் போட்டியாக “அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் தினகரன்தான். அ.தி.மு.க-வின் பெரும்பாலான நிர்வாகிகள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள். சின்னத்தை எங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும்” என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு. இதனால், இருதரப்புக்கும் சின்னத்தை ஒதுக்காமல் அமைதி காத்தது தேர்தல் ஆணையம். அதே நேரம், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டே வந்தது. சின்னத்தைப் பெறாமல் தேர்தலைச் சந்திக்க முடியாத நிலையில் ஆளும் தரப்பு தடுமாறிக் கொண்டிருக்கிறது. 

மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி. தரப்போ அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளுக்கும் இடையில் பஞ்சாயத்து செய்யும் வேலையை ஆரம்பித்தது. பி.ஜே.பி-யின் மறைமுகத் திட்டப்படி, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்கும் வேலையில் தீவிரம் காட்டியது எடப்பாடி தரப்பு. ‘சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது’ என்று முதலில் அறிவித்தார்கள். அதன் தொடர்ச்சியாக பன்னீர்செல்வம் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு அணிகளும் இணைந்தன. தினகரன் தரப்போ, கட்சிப் பதவிகளில் கதகளி ஆடிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி – ஓ.பி.எஸ். என இரண்டு அணிகளும் இணைந்தாலும், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்காமல் இருப்பது, கட்சிப் பதவியிலிருந்து தினகரனால் நீக்கப்பட்டவர்கள் நிலை, முடக்கப்பட்ட சின்னம் மற்றும் கட்சிப் பெயரை மீட்பது போன்ற சவால்கள் எடப்பாடி – பன்னீர்தரப்பின் முன் இருந்தது.

மேலும்,கட்சியின் சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து மீட்க வேண்டும் என்றால் இரண்டு அணிகள் சார்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரங்களைத் திரும்பப் பெறவேண்டிய நெருக்கடியும் இருந்தது. இந்தச் சவால்கள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரவே, அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் கூட்டப்பட்டது. அதில், முதலாவது தீர்மானமே, இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியை நீக்கினால் சட்டச் சிக்கலாகி விடும் என்று அறிந்து, பொதுச்செயலாளர் பதவிக்குச் சசிகலாவை முன்மொழிந்த தீர்மானத்தையே ரத்துசெய்தனர். இதன்மூலம் சசிகலாவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யபட்ட பிராமணப் பத்திரமே செயல் இழந்ததாகி விடுகிறது. அதேபோல் இரண்டு அணிகளும் இணைந்துவிட்டதற்கான பொதுக்குழு தீர்மானத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர். 

அ.தி.மு.க பொதுக்குழு

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையும் ‘அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலைச் சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் உரிய முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. ‘உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், பதினைந்து நாள்களில் சின்னத்தை மீண்டும் வழங்கியது. ஆனால், அ.தி.மு.க விவகாரத்தில் இத்தனை மாதங்கள் ஆகியும் தேர்தல் ஆணையம் ஏன் முடிவெடுக்காமல் உள்ளது?’ என்ற குற்றச்சாட்டும் எழுந்ததால், இரட்டை இலைச் சின்னம் குறித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைவில் ஒருமுடிவுக்கு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி தரப்பினருக்கு டி.டி.வி. தினகரன் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துவருவதால், அவருக்கு ‘செக்’ வைக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி தரப்புக்குக் கொடுத்துவிட முடிவு செய்திருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “பெரும்பான்மையான நிர்வாகிகள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள். எங்களுக்குத்தான் சின்னம் வேண்டும்” என சசிகலாவைத் தற்காலிகப் பொதுச்செயலாளராகக் கொண்டு, ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் சொல்லிய அதே காரணத்தையே இப்போதும் எடப்பாடி அணியினர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனராம். அதன்படி, “தொண்ணூறு சதவிகித நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எங்கள் அணியில் இருப்பதால் சின்னத்தை எங்களுக்குத் தர வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்கள். மேலும், பொதுக்குழுக் கூட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டதால், பொதுக்குழுவின் முடிவுகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் நிலையில் உள்ளது. இதனால், அடுத்த வாரம் இரட்டை இலைச் சின்னத்தை எடப்பாடி – பன்னீர் இணைந்துள்ள அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரியவந்துள்ளது. 

இந்தத் தகவலால், தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. ஆனால், வெற்றிவேல் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில். ‘பொதுக்குழு முடிவுகள், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவை’ என்ற நீதிமன்றத்தின் உத்தரவை வைத்து தேர்தல் ஆணையத்திடம் வாதத்தை எடுத்துவைக்க தயாராகிவருகிறது தினகரன் அணி. 

ஆனால், பொதுக்குழு முடிவு வேறு; தேர்தல் ஆணையத்தின் முடிவு வேறு. சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட முடிவு என்ற கோணத்தில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் சொல்கிறார்கள். 

தமிழகத்தில் ஆறு மாதங்களுக்குப் பிறகு இரட்டை இலை மீ்ண்டும் துளிர்க்கப் போகிறது.

%d bloggers like this: