எடப்பாடி பயப்படுவது ஏன்? – கொலை Vs கொள்ளை

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் பதவி பறிப்புக்கு மாமியார் வீடு பேச்சுதான் காரணம்’’ என்றபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார்.
“எடப்பாடி பழனிசாமியை டெல்லியிலிருந்து சிலர் மிரட்டியதாகவும், அதனால்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்ததாகவும் சொல்கிறார்களே… உண்மையா?” என்றோம்.

“இருக்கலாம்” என்றபடி சொல்லத் தொடங்கிய கழுகார், “அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி,  மாமியார் வீட்டுக்கு ‘தினகரன் போகப்போகிறார்’ எனக் காட்டமாகச் சொன்னார். இதுவரை இப்படியான ஆக்ரோஷத்தை அவர் காட்டியது கிடையாது. உடனே அதற்குப் பதில் சொன்ன தினகரன், ‘நான் நிறைய தடவை மாமியார் வீட்டுக்குப் போயிட்டேன். எடப்பாடிதான் இனி போவார்’ என்றவர், ‘எடப்பாடியின் உறவினர்கள் ஊழல் வழக்கில் சிக்கியிருக்கிறார்கள். அவர் மகனின் சகலையின் அப்பா ராமலிங்கம், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சேகர் ரெட்டியுடன் கூட்டணி போட்டு கல்லாபெட்டி சிங்காரம் போல் வசூல் செய்தவர்தான் எடப்பாடி. தன் மீது வழக்குப் பாய்ந்து எங்கே சிறையில் அடைத்துவிடுவார்களோ எனப் பயத்தில்தான் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்’ எனச் சொன்னார். எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் வரையில் போவதற்கும் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கும் எடப்பாடி எடுக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும், அவர் பயப்படுவது ராமலிங்கம் மற்றும் சேகர்ரெட்டி வழக்குகளுக்குத்தான்.’’
‘‘எடப்பாடி பயப்படும் அளவுக்கு அது என்ன வழக்கு?’’
‘‘பன்னீர்செல்வத்திடமிருந்து எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பதவி சென்ற போதே, மத்திய உளவுத்துறை உஷார் ஆனது. எடப்பாடி பற்றிய விஷயங்களைத் துருவ ஆரம்பித்தார்கள். எடப்பாடி பழனிசாமிக்குக் கவசகுண்டலமாக இருந்தவர்கள் மூவர். ஒருவர் கான்ட்ராக்டர் ஈரோடு ராமலிங்கம், இன்னொருவர் சேலம் இளங்கோவன், மற்றொருவர் பெருந்துறை சுப்பிரமணியம். சமீபத்தில், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ‘திருச்செங்கோடு வங்கியிலிருந்து 264 கோடி ரூபாய் ஒரே நாளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஓர் அமைச்சர் இருக்கிறார்’ எனச் சொல்லியிருந்தார். அந்த அறிக்கையே ராமலிங்கத்தை மையமாக வைத்து விடப்பட்டதுதானாம். ராமலிங்கமும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே வீட்டில் சம்பந்தம் செய்தவர்கள். ராமலிங்கத்தின் மகன் பெயர் சந்திரகாந்த். இவர், பெங்களூரில் கான்ட்ராக்ட் பிசினஸ் செய்கிறார். அந்த வகையில், கொங்குமண்டலத்தில் வங்கிகளிலிருந்து பல கோடி ரூபாய் அளவுக்குப் பணப்பரிவர்த்தனைகள் பெங்களூருக்கு நடைபெற்றுள்ளன. இதையும் வருமானவரித் துறைக்கு மத்திய உளவுத்துறை கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்துதான், ராமலிங்கத்துக்குச் சொந்தமான பெங்களூர் மற்றும் கொங்குமண்டலத்தில் ரெய்டுகளை நடத்தி ஆதாரங்களைக் கைப்பற்றினர். இந்த ரெய்டில், முதல்வர் பழனிசாமியின் ரத்தபந்தம் ஒருவர் குறித்த தகவல்களும் சிக்கியுள்ளன. எடப்பாடியின் உறவுகளுக்கும் ராமலிங்கத்தின் மகனுக்கும் நெருக்கம் இருந்துள்ளது, பரிமாற்றமும் இருந்துள்ளது. இதுதான், எடப்பாடியை வழிக்குக் கொண்டுவர மத்திய அரசு போட்ட முதல் தூண்டிலாக அமைந்ததாம்.’’

‘‘ஓஹோ!’’
‘‘பண மதிப்பிழப்பு அறிவிப்பின் எதிரொலியாக கர்நாடகாவில், நெடுஞ்சாலைத் துறை அரசு அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. அந்த ரெய்டு நூல் பிடித்தபோது, அது தமிழகத்தின் ஈரோடு, சேலம் வரையில் நீண்டது. ஈரோட்டில் ‘ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் கம்பெனி’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்த ராமலிங்கமும் அவரின் குடும்பமும் வளைக்கப்பட்டது. இவர்களின் நிறுவனம் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளெல்லாம் சோதனையில் தப்பவில்லை. 5.7 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கில், சந்திரகாந்த் கைதானார். பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணியம், தன்னுடைய ஒரு மகளை ராமலிங்கம் வீட்டிலும் இன்னொரு மகளை எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலும் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதனால், எடப்பாடி பழனிசாமியும், ராமலிங்கமும், சுப்பிரமணியமும் உறவினர்கள் ஆனார்கள்.’’
“இளங்கோவன் யார்?”
“சேலத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். கடந்த ஆட்சியில், சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்தவர். எடப்பாடி பழனிசாமியின் ஆரம்பகால நண்பர். எடப்பாடியின் அரசியல் வளர்ச்சியில் இளங்கோவனுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவருக்கு ஏதாவது ஒன்று என்றால், எடப்பாடி துடித்துவிடுகிறார் என்பதைப் பல்வேறு சம்பவங்களின் மூலம் மத்திய உளவுத்துறை உறுதிப்படுத்திக்கொண்டது. அந்தச் சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்களை வருமானவரித் துறையிடம் அள்ளிக்கொடுத்தது மத்திய உளவுத்துறை. அதில், முக்கிய ஆதாரமாக, சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் நூறு கோடி ரூபாய் பழைய நோட்டுகளைப் புதிய நோட்டுகளாக மாற்றியுள்ளார்கள் என்றும், இந்தப் பணம் அவருடையதுதானா அல்லது வேறு யாருடையதா என்றும் விசாரணை நடத்தினார்கள். இளங்கோவனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது, வருமானவரித் துறை. இளங்கோவன் வீட்டிலிருந்து, ஆவணங்களையும் பணத்தையும் வருமானவரித் துறை கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின.”
‘‘சுப்பிரமணியம் பற்றி சொல்லும்.’’
‘‘சேகர் ரெட்டி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமிக்கும் நெருக்கம். சேகர் ரெட்டி பங்குதாரராக இருக்கும் ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சுப்பிரமணியம் பங்குதாரராக உள்ளார். இந்தச் சுப்பிரமணியத்தின் மகள் திவ்யாதான் எடப்பாடி பழனிசாமியின் மருமகள். இப்படியான சிக்கலில் எடப்பாடியின் பிடியும், மத்திய அரசின் கையில் இருப்பதால் எடப்பாடி பயப்படுகிறார். இது மட்டுமா? விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கான 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா லிஸ்டும் இருந்தது. அதில், எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இருந்தது. இந்த ஆவணங்கள் எதற்கு பயன்பட்டதோ இல்லையோ, எடப்பாடியைப் பணிய வைக்கப் பயன்பட்டது. இத்தனைக்கும் பிறகுதான், தன்னை முதல்வராக்கிய சசிகலாவைவிட தன்னைச் சிறையில் அடைக்காத மத்திய அரசே எஜமான் என நினைத்தார் எடப்பாடி.’’
“ம்.”
“எடப்பாடி பழனிசாமிக்குக் கவசகுண்டலமாக இருந்த மூவரைக் குறிவைத்ததோடு, இன்னும் சில விஷயங்களையும் தோண்டியெடுத்தது மத்திய அரசு. நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் பேருந்து உரிமையாளர் சிலருடன் இளங்கோவன் பிசினஸ் ரீதியாக தொடர்பு வைத்திருந்ததற்கான ஆதாரங்களை வருமானவரித் துறைச் சேகரித்தது. சேலத்தில் உள்ள பிரபல தனியார் பேருந்து நிறுவனத்தில் இளங்கோவன் தொடர்பில் இருந்தார் என்ற ஆதாரத்தையும் வருமானவரித் துறை அள்ளியது. இது மாதிரி, பல தொழில் அதிபர்களிடம் பிசினஸ் டீலிங்கை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளார் இளங்கோவன். ஒரு சில மாதங்களிலே இவ்வளவு பிசினஸ் தொடர்புகள் எப்படி சாத்தியம் என்று யோசித்தது வருமானவரித் துறை. சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தவும் நாள் குறித்தது. இந்தத் தகவல் எடப்பாடி தரப்புக்கு எட்டியதும், அவர் பீதியடைந்தார் என்று சொல்கிறார்கள். ‘ஜெயலலிதாவைக் கொலை செய்துவிட்டார்கள்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்ல… தினகரனோ பதிலுக்கு ‘கொள்ளை’ என்கிற அஸ்திரத்தை வீச… இப்படியான சிக்கலில்தான் எடப்பாடி பயந்தார் என்கிறார்கள்!”

“18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் குறித்த அறிவிப்பு, அவசர அவசரமாக வரக் காரணம்?”
“எடப்பாடியுடன் பன்னீர்செல்வம் இணைந்தபோதே, தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தனர். முதல்வரை மாற்ற வேண்டும் என்று தினகரன் தரப்பு, ஆளுநரிடம் மனு கொடுத்ததும், இன்று முதல்வரை மாற்றச் சொல்லி மனு கொடுத்தவர்கள், நாளை ஆட்சிக்கே  சிக்கலை   ஏற்படுத்தமாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம் என எடப்பாடியிடம் தூபம் போட்டுள்ளார்கள், அமைச்சர்கள் சிலர். அதன் தொடர்ச்சியாகத்தான், சபாநாயகர் மூலம் நோட்டீஸ் கொடுக்க வைத்தனர். நோட்டீஸுக்குப் பயந்து தங்கள் பக்கம் ஒரு சிலராவது சாய்ந்து விடுவார்கள் என்று கணக்குப் போட்டனர். ஆனால், ஜக்கையனைத் தவிர யாரும் எடப்பாடி பக்கம் வரவில்லை. அதுவே எடப்பாடி தரப்புக்கு ஏமாற்றம்தான். அதன்பிறகுதான், அமைச்சர்கள் மூலம் தூதுவிட்டுப் பார்த்தார்கள். சில எம்.எல்.ஏ-க்கள் குழப்பமான மனநிலையில் இருந்தபோது, அவர்களை தங்கதமிழ்ச்செல்வன் சரிக்கட்டியுள்ளார். மேலும், தினகரனும் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை நேரில் சந்தித்து உருக்கமாகப் பேச, எது நடந்தாலும் உங்கள் பக்கம் நாங்கள் நிற்போம் என்று உறுதி கொடுத்துள்ளனர். புதுச்சேரியிலிருந்து குடகுக்கு இடமாற்றம் நிகழ்ந்தும் எடப்பாடி அணியின் தூது, குடகு வரை சென்றது. ஆனால், எதற்கும் அவர்கள் ஒத்துவரவில்லை என்ற கடுப்பு எடப்பாடிக்கு. அதே நேரம், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் தி.மு.க வலியுறுத்தியது. இதனால், ஒரு முடிவுக்கு வரவேண்டிய நெருக்கடி ஆளுநருக்கும் ஏற்பட்டது.”
“இந்தச் சூழ்நிலையில், மும்பை போனாரே ஆளுநர்?”
“மும்பையிலிருந்து தமிழக அதிகாரி ஒருவரிடம் பேசியிருக்கிறார். ‘மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலை வரும். எதிர்க்கட்சிகளின் பிரஷர் அதிகமாக உள்ளது. நீதிமன்றம் இதில் தலையிடுவதற்கு முன்னதாக நான் செயல்பட்டாக வேண்டும்’ என்று சொல்லி, தனக்குள்ள நெருக்கடிகளை கவர்னர் பட்டியலிட்டுள்ளார். அதன் பிறகுதான், இனி பேச்சுவார்த்தை நடத்திப் பயனில்லை என்று காவல்துறை மூலம் களத்தில் இறங்கினார் எடப்பாடி. இவர்கள் அதிகமாக மிரட்ட நினைத்தது முன்னாள் அமைச்சர் பழனியப்பனை. வழக்கில் சம்மந்தப்பட்ட பழனியப்பனைத் தேடிப் போன தமிழக போலீஸ், அங்கே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசினார்கள். அதுவும் சரிபட்டு வராததால், அரசைக் காப்பாற்ற 18 பேரைப் பலிகொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு எடப்பாடி தரப்பு வந்துவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, சபைக்குள் இருந்தால்தானே எதிர்த்து வாக்களிப்பார்கள். சபைக்குள்ளே அவர்கள் இல்லை என்றால், முடிவு நமக்குச் சாதகமாகவே வரும் என்று கணக்குப் போட்டுதான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.”
“சபாநாயகர் தனபால், இந்த ஆட்சி மீது மனவருத்தத்தில் இருப்பதாகச் சொன்னார்களே?”
“சபாநாயகரை அமைச்சர்கள் இருவர் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார்கள். அவர்கள் சபாநாயகரிடம், ‘இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் உங்களிடம் மட்டும்தான் உள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவில், நீதிமன்றம் கூட தலையிட முடியாது’ என்று சொல்லி அவர் மனதைக் கரைத்துள்ளார்கள். ‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் உங்களிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கறிஞர்தான் பதில் தந்துள்ளார். இந்த அடிப்படையில், 14-ம் தேதியே நீங்கள் அவர்களைத் தகுதிநீக்கம் செய்திருக்கலாம். அவர்களுக்கு உரிய காலஅவகாசம் கொடுத்துவிட்டீர்கள். இன்று 18-ம் தேதி ஆகிவிட்டது. எனவே, தகுதிநீக்கம் செய்யலாம்’ என்று சபாநாயகருக்குச் சொல்லப்பட்டது. அதன்பிறகுதான், சபாநாயகர் சம்மதித்தாராம்!”
“இந்த அறிவிப்புக்கு தினகரன் தரப்பின் ரியாக்‌ஷன் என்னவாம்?”
“இப்படி ஓர் அறிவிப்பு வரும் என்று தினகரன் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதனால்தான், எடப்பாடிக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில், ‘அடுத்து ஆட்சியே இருக்காது’ என்று சொல்லிவந்தார். அதற்குப் பதிலடியாகத்தான் எடப்பாடி, ‘தினகரன் சீக்கிரமே மாமியார் வீட்டுக்குப் போவார்’ என்று பதில் சொன்னார். அரசியலில் யாரையும் இனி நம்பக் கூடாது என்ற முடிவில் தினகரன் இருக்கிறார். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று தினகரனிடம் அவருடைய ஆதரவாளர்கள் கேட்டதும், ‘நீதியை மட்டும்தான் நம்ப முடியும். அனைத்தையும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளலாம்’ என்று கூலாகச் சொல்லியுள்ளார். இப்போது, தினகரன் வீட்டுக்குக் கட்சிக்காரர்கள் வருகையை விட வக்கீல்கள் வருகைதான் அதிகமாக உள்ளது. அதனால்தான், சபாநாயகர் அறிவிப்பு வந்த அரைமணி நேரத்தில் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தினகரன் தரப்பு. ஆனால், நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் முன்பு, ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டு விடுவார். இதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் இல்லாமல் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிரூபித்துவிடும். அதே நேரம் நீதிமன்ற உத்தரவில் இருந்தும் ஆளுநர் தப்பித்துக் கொள்வார்’’ என்றபடி கழுகார் பறந்தார்.

%d bloggers like this: