நல்லன அருளும் நவராத்திரி!

நவராத்திரி நாயகியர்!

மகா விஷ்ணுவுக்கு `வைகுண்ட ஏகாதசி’ ஒருநாள் இரவு வழிபாடு, சிவனாருக்கு `மகா சிவராத்திரி’ ஒருநாள் இரவு வழிபாடு என்றால்… ஜகன் மாதாவாம் அம்பிகைக்கு ஒன்பது நாள் இரவுகள் வழிபாட்டுச் சிறப்புக்கு உரியனவாகத் திகழ்கின்றன. மகாலட்சுமி, துர்காதேவி, சரஸ்வதி தேவி ஆகிய முப்பெருந்தேவியருக்கும் உகந்த – சக்தியைப் போற்றும் புண்ணிய நவராத்திரிக்கு, விரத வழிபாடு, விழாக் கொண்டாட்டம் என்பதையும் தாண்டி வேறு சில விசேஷ சிறப்பம்சங்களும் உண்டு. அவை என்ன, புண்ணிய நவராத்திரி நமக்குச் சுட்டிக்காட்டும் தத்துவ தாத்பர்ய விளக்கங்கள் என்னென்ன… இதுபற்றி, நம்மிடையே நடமாடும் தெய்வமாய்த் திகழ்ந்த காஞ்சி மகா பெரியவரின் திருவாக்கின் மூலம் விரிவாகத் தெரிந்துகொள்வோமா?

அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்!

‘நவராத்திரியில் பராசக்தியான துர்க்கா பரமேசுவரியையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்மரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்தரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது.

லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும் இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் `பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, காப்பு, அழிப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்க்கையாக இருக்கிறபோது வீரம், சக்தி எல்லாம் தருகிறது; மஹாலக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது; ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறது. ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள், மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள், ஸரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.

 

ரிஷி புத்திரிகள்!

பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீர சாகரத்திலிருந்து பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.

மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மி தேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்குப் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.

‘பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா’ என்று ஸம்ஸ்கிருத அகராதியான ‘அமரகோசம்’ சொல்லும். இப்படியே காத்யாயன மகரிஷி சாக்ஷாத் பரமேசுவரியைப் பெண்ணாக அடைய வேண்டும் என்று விரும்பி தபஸ் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்கும் பெண் என்பதாலேயே அவளுக்குக் கார்த்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. துர்க்கைக்கு உரிய காயத்ரியிலே அவளைக் ‘கார்த்யாயனியாகத் தியானிக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது.

லோக மாதாக்களாக இருக்கப்பட்ட தெய்வங் களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது.

‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்றோம். தெய்வமே குழந்தையாக வந்தால் ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப்போல் காமமும், குரோதமும், துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. கோபமும் இப்படியே சுவடு தெரியாமல் நிமிஷத்தில் மறைந்து போகிறது. அழுகையும் இவ்வாறேதான்.

நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக்கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள்போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும் இதனால்தான் உபநிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது.

சாக்ஷாத் பராசக்தியைக் கார்த்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியைப் பார்கவியாகவும் குழந்தை களாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால், நமக்கும் குழந்தைத்தன்மை சாக்ஷாத்கரித்து விடும். இந்த நாளில் வாட்டர் ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம்.

குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப்பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அனுக்கிரகத்தைச் செய்வாள்.

குழந்தையாக வந்த கார்த்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள் கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். ‘காத்தாயி’ என்று சொல்கிற கிராம தேவதை ‘கார்த்யாயனி’தான் என்று நினைக்கிறேன். கிராம ஜனங்களும்கூட ‘பேச்சாயி, பேச்சாயி’ என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.

அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக!’

(1993 – விகடன் `அருள் உரை’ நூலில் இருந்து…)


துதிப்பாடல்கள்

‘மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம்’ எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியது. அதேபோல் துர்கா காயத்ரீ, துர்கா சரணம் சொல்லியும் அம்பாளை வழிபடலாம். மேலும், சகலமும் அருளும் அபிராமி அந்தாதியின்  பாடல்களைப் பாடியும் வழிபடலாம். இங்கே சில  பாடல்கள் உங்களுக்காக…

நல்வித்தையும் ஞானமும் பெற…

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக்குங்குமத் தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் எழுத்துணையே.

மனக் கவலை தீர…

பொருந்தியமுப்புரை செப்பு உரைசெய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே.

வைராக்கிய நிலை எய்த…

பூத்தவளே புவனம் புதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மாற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.

செல்வங்கள் சிறக்க…

உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ என்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

மனசஞ்சலம் தீர…

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; கூட்டந்தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்குங் களியே அருளிய என் கண்மணியே.

கடன் தொல்லை தீர…

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

புத்திர பாக்கியம் ஏற்பட…

ககனமும் வானும் புவனமும் காண விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டா யது அன்றோ? வல்லி; நீ செய்த வல்லபமே.

செல்வங்கள் பெருக…

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவை ஒளி ஊறும் ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாமசுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.

மனக்குறை தீர…

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் பனி மா மதியின்
குழவித் திருமுடிக் கோமளா யாமளைக் கொம்பு இருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே! இரங்கேல் உனக்கு என்குறையே?


நல்லன எல்லாம் தருவாள்!

ல்லாம்வல்ல பராசக்தி அருளினால் நாம் யார், நாம் எதற்காக இங்கு வந்துள்ளோம் என்கிற ஆத்ம சாட்சாத்காரத்தை மிக எளிய வழியில் உணர்த்துவதாகவும் அதேநேரம் மிக உயர்ந்த பலனையும் அளிக்கக்கூடியதாகவும் திகழ்கிறது இந்த நவராத்திரி.

‘நவ’ என்பது ஒன்பது; ராத்திரி என்பது இரவு. ஒன்பது இரவுகள் கொண்ட நாள்களை ‘நவராத்திரி’ என வழிபடுகின்றனர். அதுசரி, ஒன்பது நாள்கள் வழிபாட்டினை ஒவ்வொரு மாதமும்தான் கொண்டாடலாம்… அது ஏன் குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட காலத்தில் வரும் ஒன்பது நாள்களை நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்?

புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ‘ஆச்வின’ மாதம். இந்த மாதத்தில் உள்ள வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை உள்ள நாள்களே நவராத்திரி. குறிப்பாக ‘சாரதா நவராத்திரி’ எனப் போற்றப்படுகிறது.

தேவி பாகவதத்தில் வசந்த காலமும் சரத் காலமும் எமனுடைய கோரப் பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் காலங்களில் மக்களுக்குத் தீமைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் எல்லாம் வல்ல பராசக்தியை வழிபட்டு, தீமைகளைப் போக்கிக்கொள்ள வேண்டும்.

ஆதிபராசக்தியாகிய அம்பாளுக்கு இந்த நாட்களில் நாம் செய்யும் அனைத்து வழிபாடுகளும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் சென்று அடைகின்றன என்று நம் முன்னோர் அறிந்து இவற்றை தவறாது செய்துவந்தனர். நாமும் இந்த உயர்ந்த காலத்தில் தேவியை வழிபட்டு நற்பலன்களைப் பெறுவோமாக!

ஸ்ரீராமபிரான் இந்த சரத் நவராத்திரி காலத்தில் எல்லாம் வல்ல பராசக்தியைக் குறித்து விரதம் இருந்து ராவணனை அழித்ததாக தேவி பாகவதம் விளக்குகிறது.  காரணாகமத்தில் இந்த நவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மனிதன் வேண்டிய பலன்களை எளிதில் அடைகிறான் என்று உறுதி யுடன் விளக்கப்படுகிறது.

எப்படி வழிபட வேண்டும்?

நவராத்திரி நாள்களில் பிரதமை முதல் நவமி வரை இன்னின்ன தெய்வங்களை இன்னின்ன நாள்களில் முறைப்படி வழிபட வேண்டும் என்று விளக்குகின்றன ஞான நூல்கள். நவராத்திரி வழிபாட்டை இரண்டு வகையாகச் செய்யலாம்.

பொதுவான முறை: முதல் மூன்று நாள்கள் ஸ்ரீதுர்கா தேவியையும், அடுத்த மூன்று நாள்கள் ஸ்ரீலட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாள்கள் ஸ்ரீசரஸ்வதி தேவியையும் வழிபட்டு வேண்டிய அருள் பெறலாம். இது பொதுவான முறை.

விரிவான முறை:
இந்த முறைப்படி வழிபட விரும்புவோர், புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி ஒன்பது நாள்கள் நவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

நவராத்திரிக்கு முதல் நாள் அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றைச் சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டுச் செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.

தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீள அகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும். பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும்.

பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன்மீது அம்பாளின் திருவடிவம் அல்லது திருவுருவப் படத்தை வைத்து, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து, பூஜையைத் தொடங்க வேண்டும்.

முன்னதாக, நவராத்திரி பூஜை நல்லபடியாக நிறைவேறவும் பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும்படியும் மனதார வேண்டிக் கொண்டு பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியமாகப் பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், சித்ரான்னங்கள் ஆகியவற்றைப் படைக்கலாம். இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். ஒன்பது நாள்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒருவேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், இந்த நாள்களில் நம்மால் இயன்ற அளவு தானதர்மங்களைச் செய்து அம்பாளின் திருவருளைப் பெற வேண்டும்.

அளவில்லா வரம் அருளும் அஷ்டமி தினம்!

ஒன்பது நாள்கள் விரதம் இருக்க இயலாத வர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாள்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள்பெறலாம். இந்தத் தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

‘ஸம்ஸர்கஜா தோஷ குணாபவந்தி’  அதாவது, நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளே நம்மை நல்லவனாகவோ, தீயவனாகவோ மாற்றுகின்றன என்பார் மகாகவி காளிதாசன்.

அந்த வகையில் நம் சூழலையும் நம்மையும் நன்மைமிக்கதாக மாற்றும் வல்லமையும் நவராத்திரி வழிபாட்டுக்கு உண்டு. ஆகவே,  இந்த ஒன்பது நாள்களும் மனதில் நல்லனவற்றையே நினைத்து, செயலால் நல்லனவற்றையே செய்து, மனதார அம்பாளைப் பிரார்த்தித்து வழிபட்டு வந்தோம் எனில், அன்னையும் நமக்கு நல்லன யாவற்றையும் அருள்பாலிப்பாள்.

தொகுப்பு: நமசிவாயம்

ஒன்பது தேவியரை வழிபடுவோம்!

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானிக்கவேண்டும்; அவளை பூஜித்து வழிபட வேண்டும். முதல் நாள்- குமாரி; இரண்டாம் நாள்- திரிமூர்த்தி; மூன்றாம் நாள் – கல்யாணீ; நான்காம் நாள் – ரோகிணி; ஐந்தாம் நாள்- காளிகா; ஆறாம் நாள் – சண்டிகா; ஏழாம் நாள் – ஸாம்பவி; எட்டாம் நாள்- துர்கா; ஒன்பதாம் நாள் – ஸுபத்ராவாக அம்பி கையை வழிபட வேண்டும்.

மாதர்மே மதுகைடபக்னி மஹிஷா ப்ராணப  ஹாரோத்யயே
ஹேவா நிர்மித தூம்ரலோசன வநேஹே சண்ட முண்டார்த்திணீ
நீ: சேஷி  க்ருத  ரக்தபீஜ  தனுஜே நித்யே நிகம்பாபஹே சும்பத்வம்ஸினி
ஸம்ஹராஸுதுரிதம் துர்க்கே நமஸ்தேம்பிகே

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி அம்பாளை ஆராதிப்பதுடன், ஒவ்வொரு நாளும் மலர் மாலைகள் சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், புளியோதரை முதலான சித்ரான்னங்கள் நைவேத்தியம் செய்து, வணங்க வேண்டும். இதனால், நம் பாவங்கள் அகன்று துர்கையின் பேரருள் கிடைக்கும்.

கொலு தத்துவம்!

உலகத்தில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்திலும் அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். ஒவ்வொரு ஜீவராசியையும் படிப்படியாக உயர்த்திப் பரிமளிக்கச் செய்கிறாள். இதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. கொலு வைக்கும்போது, கன்னாபின்னாவென்று நமது இஷ்டத்துக்கு பொம்மைகளை அடுக்கக் கூடாது.

ஒற்றைப்படை எண்ணிக்கையில்… 5, 7 அல்லது 9 படிகளுடன் கொலு அமைப்பார்கள். ஒரு மாதத்துக்கு முன்பே பொம்மைகள் செய்யச் சொல்லி வாங்கிவந்து, கொலுவில் வைத்து வழிபடுவார்கள். வருடாவருடம் புது பொம்மைகள் இடம்பெறும். அந்தக் காலத்தில், மரப்பாச்சி பொம்மைகளுடன் கொலு அமைப்பார்கள். செங்கல் வைத்து பலகைகள் போட்டு அதன்மேல் சலவை வேஷ்டியைப் போர்த்தி, படிக்கட்டாக செட் செய்து கொலு வைக்கப்படும்.

சில இடங்களில் விழா நாளுக்கு முன்னதாகவே கொலு அமைக்கும் இடத்தைச் சுத்தப்படுத்தி, சுற்றிலும் மண்ணைக் கொட்டி, பாத்தி அமைத்து முளைப்பாரி விதைப்பார்கள். அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றிவர… விழா ஆரம்பிக்கும் தருணத்தில் கொலுப் படிக்கட்டைச் சுற்றி நன்றாக வளர்ந்து நிற்கும் முளைப்பாரி பயிர்கள்.

கீழிருந்து மேலாக ஒவ்வொரு படியிலும் முறையே… புல் பூண்டு, செடி கொடிகளில் ஆரம் பித்து, ஊர்வன, பறப்பன, நடப்பன, மனிதர்கள், தேவர்கள், எல்லோருக்கும் மேலாக தேவி சக்தியின் விக்கிரகம் திகழ… அனைத்தும் தேவி பராசக்தியின் சாந்நித்தியமே என்பதைச் சொல்லாமல் சொல்லும் கொலு காட்சி.

கொலு அமைக்கும் முறை…

1-வது படி ஓரறிவுள்ள ஜீவராசிகளின் பொம்மைகளை வைக்க வேண்டும். செடி கொடி, மரங்கள், பூங்கா அமைப்பிலான பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.

2-வது படி இரண்டறிவு உயிரினங்களான சங்கு, நத்தை, அட்டை முதலான பொம்மைகள்.

3-வது படி மூன்றறிவு உயிரினங்கள். எறும்பு, கரையான் முதலான பொம்மைகள்.

4-வது படி நான்கறிவு உயிரினங்களான வண்டு, பறவைகள் ஆகியவற்றை வைக்கலாம்.

5-வது படி ஐந்தறிவுள்ள உயிரினங்களான பசு முதலானவற்றின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

6-வது படி செட்டியார், குறவன் குறத்தி, பாம்புப் பிடாரன், வாத்திய கோஷ்டி ஆகிய பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

7-வது படி ஷீர்டி சாய்பாபா, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்களின் வடிவங்கள் இடம்பெற வேண்டும்.

8-வது படி தசாவதாரம் போன்ற தெய்வ அவதாரங்கள் இடம்பெற வேண்டும்.

9-வது படி உச்சியில் நடுநாயகமாக, பூர்ண கும்பத்துடன் அம்பிகையின் திருவுருவம் மட்டுமே இருக்க வேண்டும். அம்பிகையின்கீழ், எல்லா ஜீவராசிகளும் வாழ்கின்றன என்பதுடன், அவை படிப்படியாக முன்னேறி உயர்கின்றன என்பதையும் இந்தக் கொலு அமைப்பு விளக்குகிறது.


சரஸ்வதி பூஜை ‘சரத்’ காலத்தில் கொண்டாடப்படுவது ஏன்?

சரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம்தான்… சீதோஷ்ணம் பரம சுகமாக, இதமாக, வெயிலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் இருக்கிற காலம். சாந்தமான சூரியன், தாவள்யமான சந்திரிகை, வெள்ளை வெளேர் என்ற மேகக் கூட்டங்கள் எல்லாம் இருக்கிற காலம். இதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்ற பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்துக்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும்.

இப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுசாக இருக்கிற சீதோஷ்ணம் சரத் ருதுவின் ஆரம்பமான சரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய் குளிரில் நடுங்க வைக்காமலும், ரொம்பவும் இதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது. இந்தச் சமயத்தில் காஷ்மீரத்திலிருந்து டெல்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சிபுரம், குடகு, கன்னியாகுமரி என்று எல்லா ஊர் weather report – ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்தபட்ச டிகிரிகள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது; மற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரி வரை வித்தியாசம் இருந்ததுபோல் இப்போது இல்லை.

சீதோஷ்ண ரீதியில் இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், அதாவது துவந்தம் போய் எல்லாரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம். ஞானத்தினால் எல்லாம் ஒன்று என்று துவந்தங்களைப் போக்கி வைக்கிற வித்யா அதிதேவதையின் தெளிவான ஸ்வரூபம் போலவே இந்தச் சீதோஷ்ணம் இருக்கிறது. நம் தேசம் முழுவதும் இப்படி சம சீதோஷ்ண நிலையும், வெண்ணிறமும் சாந்தமும் அமையும்போது, வெளியுலகின் இதத்தால் உள்ளுக்கும் சுலபத்தில் அந்தச் சமநிலையை உண்டாக்கிக்கொள்ள வசதியாக இருக்கிறது. இக்காலத்தில் இப்படிப்பட்ட குண விசேஷமே உருவெடுத்து வந்த சரஸ்வதி தேவியின் ஆராதனமும் வருவதால், சகல ஜனங்களும் இதை எல்லாம் உணர்ந்து பூஜித்தால் ஞானமும் தெளிவும் பெற முடியும்.


பக்தியே மகாலட்சுமி!

‘ஆசைக்கோர் அளவில்லை’ என்றார்கள். முக்கியமாகச் செல்வம் வேண்டும் என்கிற ஆசைக்கு எல்லையே இல்லாமல் போய் விடுகிறது. இதனால்தான் அனர்த்தம் எல்லாம் வந்து விடுகிறது. ஞானம் வேண்டும், குணம் வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திக்கிறவர்கள் எங்கேயாவது துர்பலமாக இருப்பார்களோ என்னவோ? லக்ஷ்மீகடாக்ஷத்துக்கு மட்டும் பிரார்த்திக்காதவர் இல்லை. இதிலே எந்தக் கோடீசுவரனுக்காவது திருப்தி வந்திருக்குமா என்றால் அதையும் காணோம்.சௌக்கிய அனுபோகம் அதிகமாக ஆக, ஞானம் வேண்டும் என்ற எண்ணம் குறைந்துகொண்டே போகிறது. இதனால் தான் லக்ஷ்மி இருக்கிற இடத்தில் ஸரஸ்வதி இருப்பதில்லை என்று பொதுவில் வசனம் வந்து விட்டது. இதற்கு வேடிக்கையாக ஒரு காரணம் தோன்றுகிறது. சாதாரணமாக மாமியாரும் மாட்டுப் பொண்ணும் ஒரே இடத்தில் ஒத்து இருக்க மாட்டார்கள். மஹாவிஷ்ணுவும் பிரம்மாவும் தகப்பனாரும் பிள்ளையும் ஆகிறார்கள் என்றால், அப்போது மஹா லக்ஷ்மியும் ஸரஸ்வதியும் மாமியார் – மாட்டுப் பெண் ஆகிறார்கள். இவர்கள் சேர்ந்து சௌஜன்யமாக இருக்க மாட்டார்களே!

அதனால்தான் பொதுவில் லக்ஷ்மீ கடாக்ஷம் இருக்கிற இடத்தில், ஸரஸ்வதி கடாக்ஷம் இருப்பதில்லை. அல்லது இதையே நல்லபடியாகச் சொல்லலாம். மாமியாரிடம் உள்ள மகா மரியாதை காரணமாகவே, அவள் இருக்கிற இடத்தில் தான் முந்திரிக்கொட்டை மாதிரி செய்யக் கூடாது என்று ஸரஸ்வதி ஒதுங்கிப்போவதாகவும் சொல்லலாம்.இதெல்லாம் வேடிக்கையாகச் சொல்கிற பேச்சு, வாஸ்தவத்தில் இருக்கிறது ஒரு பராசக்திதான். அவள் தான் எந்தெந்தச் சமயத்தில் எந்தெந்த விதமாக அனுக்கிரகம் செய்து பக்குவத்தைத் தர வேண்டுமோ, அப்படிச் செய்வதற்காக மஹாலக்ஷ்மியாக, ஸரஸ்வதியாக, ஞானாம்பிகையாக வருகிறாள். ஏதோ ஒரு ரூபத்தில் பக்தி என்று வைத்துவிட்டால் போதும். அப்புறம் நடக்க வேண்டியதை அவளே பார்த்துக் கொள்வாள். இந்தப் பக்திதான் நமக்குப் பெரிய செல்வம்; அதுவே பெரிய லக்ஷ்மி!


சரஸ்வதி பூஜை – பூஜிக்க உகந்த நேரம்!

இந்த வருடம், வரும் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி, வியாழக்கிழமை அன்று நவராத்திரி ஆரம்பமாகிறது. செப்டம்பர் மாதம் 29, வெள்ளிக்கிழமையன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை. நவமி திருநாளான அன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருள்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன் படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருள்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்துதல் சிறப்பு.

சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை 7 முதல் 8 மணிக்குள் ஏடு அடுக்கி, ஸ்ரீசரஸ்வதி தேவியை பூஜித்து வழிபடுவது உத்தமம். ஏடு பிரிக்கும் நேரம்: மறுநாள் செப்டம்பர் 30-ம் தேதி சனிக்கிழமை – விஜயதசமி தினத்தில் காலை 7 முதல் 8 மணிக்குள் பூஜித்து, ஏடு பிரிக்கலாம்

%d bloggers like this: