எடப்பாடியின் அமைதிப்படை! – அதிரடி அரசியல் சேஸிங்…-விகடன்

ர்மயுத்தம் நடத்துகிறேன்” எனக் குடைச்சல் கொடுத்த ஓ.பி.எஸ்ஸை உள்ளே இழுத்து, ஓரம் கட்டி உட்கார வைத்துவிட்டார் எடப்பாடி. தினகரனைத் தினம் ஒரு திசைக்குத் தெறிக்கவிடுகிறார். தஞ்சையில் இருந்து தனிப்பாட்டுப் பாடிக்கொண்டிருந்த திவாகரனின் வாயையும் பூட்டிவிட்டார். இத்தனைக்கும் நடுவில் பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சியையும் கைப்பற்றி உள்ளார். அணி மாறிய எம்.எல்.ஏ-க்களின்

கணக்கைக் கழித்து நேர்செய்வது, எதிர்கட்சித் தாக்குதல்களைச் சமாளிப்பது, கவர்னரையும் கைக்குள் வைப்பது, நம்பிக்கை வாக்கெடுப்பைத் தள்ளிப்போட்டுத் தன் நாற்காலியையும் தக்கவைத்துக்கொள்வது என எடப்பாடி பேட்டிங்கில் டாட் பாலே இல்லை. ரன்னிங்கிலேயே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் சாகசங்களைப் பார்த்து ஓ.பி.எஸ்ஸே மிரண்டுவிட்டார். “மிகச் சாமர்த்தியமாகச் செயல்படுகிறீர்கள்; நீங்கள் இவ்வளவு கெட்டிக்காரத்தனமாக அந்தக் குடும்பத்தைச் சமாளிப்பீர்கள் என நானே நினைக்கவில்லை; சாதித்துவிட்டீர்கள்” என இணைப்பு விழாவுக்கு முன்னால் கைகுலுக்கிக் கட்டித் தழுவிப் பாராட்டினார். பன்னீரின் பாராட்டு அர்த்தமுள்ளது. அவருக்கு மன்னார்குடி குடும்பத்தின் செல்வாக்கு எப்படிப்பட்டதெனத் தெரியும்; கட்சி நிர்வாகிகளின் நச்சரிப்புகள் எப்படி இருக்குமெனத் தெரியும்; டெல்லி கொடுக்கும் நெருக்கடிகளின் அபாயங்கள் தெரியும்; எதிர்க்கட்சிகளின் குடைச்சல் கொடுக்கும் மன உளைச்சல் புரியும்; இவை அத்தனையையும் சமாளித்துத் தாக்குப்பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதும் தெரியும். அதனால்தான், அவர் எடப்பாடி பழனிசாமியை அவ்வளவு வெளிப்படையாகப் பாராட்டினார்.

‘இந்தப் பயபுள்ளைக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்’ என அரசியல் வட்டாரமே மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு `கேப்டன் கூலா’க ஆடிக்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கட்சியிலும் ஆட்சியிலும் சைலன்ட் எலியாக இருந்தவர் பவர்ஃபுல் பாகுபலியாக மாறிப் புலியாகப் பாயக் காரணம், பின்னால் இருந்து இயக்கும் சில `ஸ்லீப்பர் செல்கள்தான்!’

நிரஞ்சன் மார்டி  (உள்துறைச் செயலாளர்)

2011-16 ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அந்தத் துறைக்குச் செயலாளராக இருந்தவர் நிரஞ்சன் மார்டி. அப்போதே இருவருக்கும் நல்ல நெருக்கம். இருவரும் சேர்ந்து அப்போது அறிமுகப்படுத்திய திட்டம்தான் ‘பேக்கேஜ் கான்ட்ராக்ட்.’ அதற்கு முன்புவரை டிவிஷன் டிவிஷனாக மட்டும்தான் ரோடு போடும் கான்ட்ராக்டுகள் விடுவார்கள். அதில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் கொஞ்சம் சம்பாதிப்பார்கள். ஆனால், ‘பேக்கேஜ் சிஸ்டம்’ வந்ததும் மொத்தமாக கமிஷன் பணம் ஒரே இடத்துக்கு வந்தது. இப்படிப்பட்ட பொன்முட்டையிடும் ஐடியாவை எடப்பாடிக்குக் கொடுத்த நிரஞ்சன் மார்டிதான் எடப்பாடியின் இப்போதைய அமைச்சரவையில் உள்துறைச் செயலாளர். பழைய நட்பின் அடிப்படையில் நிரஞ்சன் மார்டியை உள்துறைச் செயலாளராகக் கொண்டுவந்தார் எடப்பாடி பழனிசாமி. இதன்மூலம் மொத்த போலீஸ் பட்டாளமும் இப்போது எடப்பாடி பழனிசாமியின் உள்ளங்கைக்குள் இருக்கிறது. அதனால்தான், எடப்பாடிக்கு ஆதரவாக மாநிலம்விட்டு மாநிலம் தாண்டிப்போய் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை மிரட்டுகிறது தமிழ்நாடு போலீஸ்!

டி.கே.ராஜேந்திரன் (தலைவர், தமிழ்நாடு காவல்துறை)

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடிக்கு முட்டுக்கொடுக்கும் முக்கியமான முதுகெலும்பு. அதனால்தான், கடைசிவரை டி.டி.வி.தினகரனால் தன் சொந்தக் கட்சி அலுவலக வாசலைக்கூட மிதிக்க முடியவில்லை. தினகரன் ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கான அனுமதிகளை மறுப்பது,தினகரன் ஆதரவாளர்கள்மீது அவதூறு வழக்குப் போடுவது, நாஞ்சில் சம்பத்தைத் தலைமறைவாகும்வரை துரத்துவது, பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ பழனியப்பனைக் கொலைவழக்கில் சேர்ப்போம் என மிரட்டுவது என்று போலீஸ் மூலம் மிரட்டல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கொடுக்க முடிகிறது. இப்படி ஒரு தேவை தனக்கு எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமி டி.கே.ராஜேந்திரனை அந்தப் பதவிக்குக் கொண்டு வந்தார். பான்பராக்-குட்கா விவகாரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு டி.கே.ராஜேந்திரன் மீது வைக்கப்பட்டது. ஆனால், ஜூன் 29-ம் தேதி டெல்லியில் கூடிய டி.ஜி.பி தேர்வுக்குழுவில் டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என்ற சூழல் நிலவியது. ஆனால், அந்தத் தேர்வுக்குழுவுக்கு, தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதனை அனுப்பிவைத்து குட்கா விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளினார் எடப்பாடி பழனிசாமி!

மணி & மணி

அமைச்சர் தங்கமணி எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி முறை. நெருங்கிய உறவுக்காரர். அமைச்சர் வேலுமணி எடப்பாடி பழனிசாமியின் சமூகத்தைச் சேர்ந்தவர். உறவுப் பாசமும், சாதிப் பாசமும் இந்த இருவரையும் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்களாக மாற்றி வைத்துள்ளது. ஆர்.கே. நகர் தேர்தலைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்த இக்கட்டான நேரத்தில் டி.டி.வி.தினகரனை அவருடைய வீட்டில் போய் அவசரமாக சில அமைச்சர்கள் பார்த்தனர். அந்த ரகசியச் சந்திப்பில்தான், தினகரனை ஓரம்கட்டும் வேலைக்கான முதல் செங்கல் வைக்கப்பட்டது. அதை எடுத்துத் தினகரன் முன்னாலேயே வைத்தவர் அமைச்சர் வேலுமணிதான். அந்தக் கூட்டத்தில் பேசத் தொடங்கிய வேலுமணி, “உங்களால்தான் கட்சிக்கும் பிரச்னை. எங்களுக்கும் பிரச்னை. அதனால் நீங்கள் ஒதுங்கிக்கொள்ளுங்கள்” என்றார். அமைச்சர் தங்கமணி அதற்கு ஆதரவு தந்தார். விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதன்பிறகுதான், கட்சிக்குள் தினகரனுக்கு எதிராகவும், எடப்பாடிக்கு ஆதரவாகவும் வேலைகள் வேகம் பிடித்தன.

அப்போதுமுதல் இப்போதுவரை எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும்தான் தாங்கிப் பிடிக்கின்றனர். தற்போது கட்சி எம்.எல்.ஏ-க்களை அணி தாவாமல் பார்த்துக்கொள்வது, அணி மாறி தினகரன் பக்கம் போனவர்களை மீண்டும் எடப்பாடி அணிக்கு அழைத்து வருவது, மற்ற அமைச்சர்களின் கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்றித் தருவது என எல்லா வேலைகளையும் முதல்வருக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்பவர்கள் இவர்கள்தான். அந்தப் பக்கமா, இந்தப் பக்கமா என ஊசலாட்டத்தில் இருந்த அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடியின் முழுமையான ஆதரவாளராக மாற்றி வெற்றிக்கொடி நாட்டியதும் இந்த மணி அண்டு மணியின் சாதனைதான்.

திரிவேணி பிரதர்ஸ்

20 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிக மிக்கியமான கனிமவள நிறுவனம். இந்தியாவில் மட்டுமல்லாது,  இந்தோனேசியாவிலும் நிலக்கரிச் சுரங்கம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் பிரபாகரன். சகோதரர்களான இவர்கள் நடத்தும் இந்த நிறுவனத்தின் டர்ன் ஓவர் 2 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்வது இந்த நிறுவனம்தான் என்கிறார்கள்.  இவர்களுக்கு டெல்லி டிஃபன்ஸ் காலனியில் வீடு உள்ளது. எடப்பாடி அணியில் இருந்து டெல்லிக்குப் போகும் அமைச்சர்களை கவனித்துக் கொள்வது, அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதும் இந்த திரிவேணி பிரதர்ஸ்தான் என்கிறது டெல்லி சோர்ஸ்.

சேலம் இளங்கோவன்

மத்திய மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவராக உள்ள சேலம் இளங்கோவனும் எடப்பாடியின் ஸ்லீப்பர் செல் தளபதிதான். எடப்பாடித் தரப்புக்கு அவசரத் தேவைகள் அனைத்தையும் சத்தம் இல்லாமல் முடித்துத் தருவது சேலம் இளங்கோவனின் பொறுப்பு என்கிறார்கள். பண மதிப்பிழப்பு விவகாரத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்திய நேரத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம் பல கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்டது. போலியான பெயர்களில் மாற்றப்பட்ட பல கோடி ரூபாய் பணத்தை சி.பி.ஐ கண்டுபிடித்தது. அந்த வழக்கில் மிக முக்கியஸ்தர் சேலம் இளங்கோவன். 

தமிழகத் தாமரை!

ஆடிட்டர் குருமூர்த்தி, பி.ஜே.பியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் எடப்பாடி அரசாங்கத்தைத் தமிழக பி.ஜே.பி அரசாங்கமாகவே பார்க்கின்றனர். இதில் பாலசுப்பிரமணியம் சேலத்துக்காரர். அவரும் எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். இப்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடப்பாடியால் டெல்லி பி.ஜே.பி-யில் யாரை வேண்டுமானாலும் சந்திக்க முடியும். அதற்கு சில மணி நேரங்களில் அப்பாயின்ட்மென்ட் கிடைத்துவிடும். அதற்கான அத்தனை உதவிகளையும் செய்து கொடுப்பது தமிழக பி.ஜே.பி.யில் இருக்கும் இந்தப் பெரும் தலைகள்தான். இவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லியில் தேவையானதைச் செய்து கொடுக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கிறார்.

இவர்கள் இல்லாமல் பக்கத்து மாநிலத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அத்தனை சட்ட ஆலோசனைகளையும் வழங்குவபர் என்கிறார்கள். இவர் எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்தான் எடப்பாடி பழனிசாமியை டெல்லித் தலைமையிடம் கொண்டு சென்றவர். முதலில் டெல்லியில் பறந்துகொண்டிருந்த ஓ.பி.எஸ்ஸின் கொடி கீழே இறங்கக் காரணமே இவர்தானாம்!

%d bloggers like this: