கடுப்பில் எடப்பாடி! – கவிழ்ப்பா… கலைப்பா?

குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட வந்த கழுகாரை அதிசயமாகப் பார்த்தோம்!
“என்ன பார்க்கிறீர்கள்? முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரியில் நீராடிய இடத்தில் செய்தி சேகரிக்கப் போயிருந்தேன்…” என்றவரிடம், “ஆட்சியே ஆட்டத்தில் உள்ளது. இந்த நேரத்தில், இந்த மாதிரியான குளியல் காட்சிகள் தேவையா?” என்றோம்.
சிரித்தபடி பேச ஆரம்பித்தார் கழுகார்.

“ஆட்சியை இன்னும் ஆறு மாதங்களுக்கு நகர்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில், காவிரி புஷ்கரத்தில் நீராடினார் எடப்பாடி. ‘காவிரியில் மட்டுமல்ல… கங்கை, ராமேஸ்வரம், காசி என எங்கு குளித்தாலும் எடப்பாடியின் பாவம் தீராது’ என்று தினகரன் கிண்டலடித்துள்ளார். ஆட்சியையும், முதல்வர் பதவியையும் பற்றிய பயம்தான் எடப்பாடியின் இந்தக் குளியலுக்குக் காரணம் என்கிறார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் வென்றுவிடலாம் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால்,அதற்குத் தடைபோட்டு விட்டது நீதிமன்றம். இது எடப்பாடியை நிம்மதியில்லாமல் ஆக்கியுள்ளது.”
“ஆட்சி நீடிக்காது என்று கவலைப்படுகிறாரா?”
“ஆமாம். தினகரன் தரப்பு, ‘நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படியும் நடத்திவிட வேண்டும்’ என்பதில் உறுதியாக உள்ளது. 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கத்தை நீதிமன்றம் ஒருவேளை உறுதிப்படுத்தினால்கூட, அதைத்தாண்டியும் ஆட்சியை அசைத்துப் பார்க்க தினகரன் முடிவெடுத்துள்ளார். அவரது ஸ்லீப்பர் செல்லில் இன்னும் 12 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்களாம். அவர்கள் யார் யார் என்று எடப்பாடிக்குத் தெரியவில்லை. அதனால், அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறாராம்.”

“18 பேர் நீக்கம், தினகரனைக் கவலையில் ஆழ்த்தியதாகச் சொல்கிறார்களே?”
“அன்றுதான் திருச்சி பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தினகரன். மதுரை மேலூரில் கூடியதைவிட இங்கு கூட்டம் அதிகம். உணர்ச்சிபூர்வமாக அந்தக் கூட்டம் கத்துவதும், கைதட்டுவதுமாக இருந்ததில், தினகரனுக்கு ஏக மகிழ்ச்சி. கூட்டத்துக்குச் செல்லும்வரை தினகரன் உற்சாகமின்றிதான் இருந்தாராம். ஆனால், காரில் நின்றுகொண்டே கூட்ட அரங்கத்துக்கு வந்தபோது, தொண்டர்கள் காட்டிய உற்சாகத்தைப் பார்த்துத் திக்குமுக்காடிவிட்டாராம்.”
‘‘ஓஹோ!’’
“தினகரனால் பதவியில் நியமிக்கப்பட்ட  நிர்வாகிகள், தமிழகம் முழுவதுமிருந்து ஆட்களைக் கொண்டுவந்து மைதானத்தில் நிரப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால், தினகரனுக்குத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்தக் கூட்ட ஏற்பாடுகளை முழுவதுமாக முன்னின்று செய்தவர் திருச்சி மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சீனிவாசன். இப்போது, அவரை ஏதாவது ஒரு வழக்கில் சிக்கவைக்க, ஆளும் தரப்பு தீவிரம் காட்டிவருகிறதாம்.”
“தினகரன் என்ன செய்வார்?’’
‘‘இந்த மகிழ்ச்சியுடன் அவர் வேறு வேலைகளில் பிஸியாக உள்ளார். கட்சியில் இருந்த தன்னுடைய பழைய விசுவாசிகளைத் தொடர்புகொண்டு உறவைப் புதுப்பித்துவருகிறார். அவர்கள் மூலம் சில எம்.எல்.ஏ-க்களைத் தன்வசப்படுத்த முடியுமா என்று ஆழம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
‘12 ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ-க்கள் இப்போதும் உள்ளனர் என தினகரன் சொன்னதன் பின்னணி இதுதான்’ என்கிறார்கள்!”
“ராஜன் செல்லப்பா திடீரென எடப்பாடிக்கு எதிராகப் பாய்ந்துள்ளாரே?”
“இப்படி எத்தனை பேர் வரப்போகிறார்களோ என்பதுதான் எடப்பாடியின் பயம். ‘ராஜன் செல்லப்பாவுடன் ஆறு எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர்’ எனச் சிலர் சொல்வது எடப்பாடியைப் பீதியடைய வைத்துள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் ராஜன் செல்லப்பாவால் அனுசரித்துப்போக முடியவில்லையாம். எனவே, தினகரன் அஸ்திரத்தை ராஜன் செல்லப்பா எடுத்தார் என்கிறார்கள்..”
“இதுபோல் வேறு யாரும் உள்ளார்களா?”
“வைத்திலிங்கம் தனக்குப் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி கொடுக்கவில்லை என்ற வருத்தத்தில் இருப்பதாக ஒரு தகவல் சொல்லியிருந்தேன். அவருடன் 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தொடர்பில்  இருக்கிறார்களாம். இந்த அதிருப்தி ஆள்கள் அனைவரும் சேர்ந்து, எப்போது வேண்டுமானாலும் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவார்கள் என்று நினைக்கிறாராம் எடப்பாடி!”
“இதையெல்லாம் எடப்பாடி எதிர்பார்க்காமலா இருப்பார்?”
“டெல்லியின் முழுமையான ஆதரவு இருப்பதால், எதையும் எதிர்கொள்ளும் மனநிலையில் அவர் இருக்கிறார். எந்த விலையைக் கொடுத்தாவது இந்த ஆட்சியை ஓட்டிவிட வேண்டுமென அவர் நினைக்கிறார்.”
“ஓ.பி.எஸ்ஸுடன் கலந்தாலோசனை எதுவும் செய்வதில்லை என்கிறார்களே?”
“பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருக்கிறார்.முதல்வர் எடப்பாடி எந்த விஷயத்திலும் தன்னைக் கலந்தாலோசிக்காமல், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணிக்கே முக்கியத்துவம் தருகிறார் என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார். இப்போதே இந்த நிலையென்றால், இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுவிட்டால், அதன்பிறகு தன்னை முழுமையாக எடப்பாடி ஓரம்கட்டிவிடுவாரோ என்ற சந்தேகமும் அச்சமும் பன்னீருக்கு உள்ளது. அதே நேரம், பழனிசாமியோ, ஒருங்கிணைப்பாளர் பதவியை வைத்துள்ள பன்னீர் தன்னைக் காலிசெய்துவிடுவாரோ என அஞ்சுகிறார். திவாகரன் ஒரு பேட்டியில், ‘பன்னீர் எங்கள் பங்காளிதானே’ என்று சொன்னதையும் எடப்பாடி கவனிக்கத் தவறவில்லை. இந்தக் குழப்பங்களை வைத்துதான், தினகரன் கோல் போட முயல்கிறார். ‘இந்த ஆட்சி இன்னும் இரண்டு வாரங்களுக்குக்கூட நீடிக்காது’ என்று சுப்பிரமணியன் சுவாமி சொன்னதன் பின்னணியும் அதுதான் என்கிறார்கள்.’’
“சுவாமி ஏன் அப்படிச் சொன்னார்?”
“அவர், ‘நீதிமன்றம் தினகரனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கும்’ என உறுதியாகச் சொல்லிவருகிறார். தீர்ப்பு, தினகரனுக்கு ஆதரவாக வந்தால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதும் உறுதியாகிவிடும். அதன்பிறகும், கவர்னர் அதைத் தார்மீகரீதியில் ஒத்திப்போடமாட்டார். அதில், எடப்பாடியின் ஆட்சி கலைக்கப்படும் என்று நம்புகிறார் சுவாமி. ‘மத்திய அரசு ஏதோ திட்டத்துடன் இருக்கிறது. இல்லாவிட்டால், சுவாமி இப்படிச் சொல்லமாட்டார்’ என்று நினைக்கிறாராம் எடப்பாடி. ‘தேவையான வரை பயன்படுத்திக்கொண்டு, கைவிட்டு விடுவார்களோ’ என்பது அவர் கவலை!’’
“தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் என்ன பேசப்பட்டதாம்…அவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக ஒரு செய்தி அடிபட்டதே?”
“அந்த முடிவை ஒத்திவைத்துள்ளனர். எம்.எல்.ஏ-க்களிலேயே பலருக்கு இதில் ஆர்வமில்லை.  ஒருவேளை 2ஜி வழக்குத் தீர்ப்புத் தங்களுக்கு எதிராக வந்தால், அந்த நேரத்தில் மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டித்துக் கூண்டோடு ராஜினாமா செய்து, செய்தியைத் திருப்பிவிடலாம் என்றும் எண்ணுகிறார்கள். அதே நேரம், 18 தொகுதிகளுக்கும் தேர்தல் என்று அறிவித்தால், அதில் களமிறங்கி வெற்றிபெற்றாலே தங்களுக்குப் பெரும்பான்மையைக் கொண்டுவந்துவிடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்கள் தி.மு.க-வினர். கூடவே ஆர்.கே. நகர் தொகுதிக்கும் தேர்தல் நடந்தாக வேண்டுமே?”
“ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று பொதுநல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாமே?’’
“இதேபோல இதுவரை ஆறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் விசாரணையில் உள்ளன. இந்த விஷயத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசிவந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி அரசு அமைதி காத்தது. ஆனால், இரு அணிகளும் இணைவதற்கு அறிகுறியாக, ‘ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார். ஒரு மாதம் ஆகியும், இன்னும் விசாரணை ஆணையம்  அமைக்கவில்லை. அதை உடனே அமைக்க வேண்டுமென்று திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடவாசல் முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போட்டிருக்கிறார்.இவர், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளர் என்கிறார்கள். இந்த வழக்கு விசாரணையில், திடுக்கிடும் ரகசியங்களை முன்வைக்க முருகானந்தம் பல ஆவணங்களைத் தயார்செய்து வைத்துள்ளாராம்” என்று சொன்னபடி பறந்தார் கழுகார்.

%d bloggers like this: