கொஞ்சம் கவனம்… ஆரோக்கியம் நிச்சயம்! ‘டெங்கு’வின் பிடியில் 6 கோடி பேர்!

ஒவ்வொரு ஆண்டும், மழைக் காலத்தில் மட்டும் கொசு மூலம் பரவும், மலேரியா, டெங்கு, யானைக்கால், சிக்குன் குனியா மற்றும் மூளைக்காய்ச்சல், மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. தற்போது, டெங்கு காய்ச்சல், மிகப் பெரிய பிரச்னையாகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, பலர், உயிரையும் இழந்துள்ளனர்; குறிப்பாக, 15 வயதிற்குட்பட்ட

குழந்தைகளின் இறப்பு, 80 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
உயிர் இழப்போடு, மிகப்பெரிய பொருளாதார இழப்பையும் இந்நோய் ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு டெங்கு நோயாளியும், தன் வருவாயில், 5,000 முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, செலவு செய்து உள்ளனர். டெங்கு, தமிழகத்தின் மிகப் பெரிய, பொது சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
கடந்த, 1960 – 70ம் ஆண்டுகளில், மலேரியா காய்ச்சல், தமிழகத்தின், பல மாவட்டங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், மதுரை, திண்டுக்கல், திருவண்ணாமலை, கடலூர், சென்னை உட்பட தென், வட மாவட்டங்களில், இதன் தாக்கம் பெருமளவு இருந்தது. மலேரியாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மொத்த நோயாளிகளில், 75 சதவீதம் பேர், சென்னையில் மட்டும் இருந்தனர். மலேரியாவைப் பரப்புவது, ‘அனபிலக்’ என்ற கொசு வகை.
இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத் துறை, அந்த சமயத்தில் எடுத்த, தீவிர நடவடிக்கையால், மலேரியா காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மலேரியாவைக் கட்டுப்படுத்த, கீழ், மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல், எளிதாக திறந்து, மூடக்கூடிய வகையிலான மூடியும், மாற்றி அமைத்ததைப் போல, ‘ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட முடியாத வகையில் மாற்றி அமைக்க வேண்டும். மலேரியாவிற்கு தடுப்பூசியும் கிடையாது.
மலேரியா காய்ச்சல் என்று உறுதி செய்யப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை சரியான அளவில் கொடுத்தால், ரத்தத்தில் கலந்துள்ள மலேரியா கிருமிகளை அழித்து விட முடியும். ஆனால், இதற்கு நேர்மாறாக, ‘ஏடிஸ்’ கொசுக்கள் பரப்பும், ‘டெங்கு’ காய்ச்சல், மலேரியாவை விடவும், 10 மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மூன்று ஆண்டுகளில், நீலகிரி மாவட்டத்தைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து காலங்களிலும் டெங்கு பரவி வருகிறது.
இருபது ஆண்டிற்கு முன், மழைக்காலங்களில் மட்டும் பரவிய, ‘டெங்கு’ இன்று அனைத்து காலங்களிலும் பரவுகிறது. ‘ஏடிஸ்’ கொசுவின் வாழ்க்கை சுழற்சியிலும், மாற்றங்கள் நடந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன், ஏடிஸ் கொசுக்களின் வாழ்நாள், 15 முதல் 20 நாட்கள் தான். தற்போது, 30 முதல், 40 நாட்கள் வரை வாழ்கிறது. டயர், சிரட்டை, பிளாஸ்டிக் இவற்றில் தேங்கியுள்ள சுத்தமான நீரில் மட்டுமே முட்டையிட்டு வந்த ஏடிஸ், தற்போது, கீழ், மேல் நிலை நீர்த் தேக்க தொட்டிகள், பெரிய கிணறுகள், மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் என்று பல இடங்களில் முட்டையிட்டு, வாழ்க்கை சுழற்சியை மாற்றி, தன்னை பலசாலி என்று நிரூபித்து, ‘அனபிலக்’ இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளது. ஏடிஸின் உற்பத்தியும், பல ஆயிரம் மடங்கு அதிகரித்து உள்ளது. தமிழகத்தில், ஆறு கோடி பேர் டெங்கு பாதிக்கும் அபாயத்தில் இருப்பதாக, பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்; இது, தமிழக மக்கள் தொகையில், 85 சதவீதம்.
இதற்கு தீர்வு என்ன?: அரசு முதலில் எதையும் மூடி மறைக்காமல், பாதிப்பின் தீவிரத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். தனி மனித சுகாதாரம் என்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை, நாமும் உணர வேண்டும். பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டதால் தான், ஆறே மாதத்தில் சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த முடிந்தது. என்னுடைய அனுபவத்தில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், கொசுப் பிரச்னை இல்லாத கிராமங்களே, தமிழகத்தில் இல்லை. காலத்திற்கு ஏற்ப, பொது சுகாதாரத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், கொசுக்களால் பரவும் நோய்களால், தமிழகம் பேரிடர் நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.

%d bloggers like this: