மகிழ்ச்சி – மரபணு செய்யும் மாயம்!

டாக்டர்… என்னோட மகிழ்ச்சியின் அளவு 40 புள்ளிகள் குறைந்துவிட்டது. சரியாகச் சிரிக்க முடியவில்லை. அழுத்தமும் அதிகமாகிவிட்டது.”

“சிந்தெட்டிக் மகிழ்ச்சியை (Synthetic Happiness) முயற்சி செய்து பார்த்தீர்களா?’’

“பார்த்துவிட்டேன். ஆனால், அதுவும் தோல்வியடைந்துவிட்டது.’’

“ஓகே… ஆக்ஸிடாசினும் (Oxytocin), செரடோனினும் (Serotonin) கொஞ்சம் குறைஞ்சிருக்கு. இரண்டையும் ஊசியின் வழியா செலுத்தினா சரியாகிடும். அதுமட்டுமில்லாம, உங்க ‘மகிழ்ச்சி மரபணு’வான, 5 – HTT-யில் சில பிரச்னைகள் இருக்கு. அதில் சில மாற்றங்களை நான் செய்யறேன். கூடவே, சார்லி சாப்ளின் படங்களை நிறையப் பாருங்க. சரியாகிடும். மீண்டும் பத்து நாள்கள் கழிச்சு வந்து என்னைப் பாருங்க…”

‘‘ஹா… ஹா… ஹா… தேங்க்யூ டாக்டர்…’’

 

இந்தக் கற்பனை எதிர்காலத்தில் ஒருவேளை நிஜமாகலாம்.       2011-ல் லண்டனைச் சேர்ந்த டாக்டர் ஜன் இமானுவேல் டே நெவ் (Jan Emmanuel De Neve ) என்பவர் தலைமையில் மனிதர்களின் மகிழ்ச்சி குறித்து ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 2500 பேரிடம் அவர்கள் தங்கள் வாழ்வில் எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. கூடவே அவர்களின் மரபணுக்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அதில் 5 – HTT எனும் மரபணு தான் ஒருவரின் மகிழ்ச்சிக்கான காரணமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.

 

‘மகிழ்ச்சியின் மருந்து’ எனச் சொல்லப்படும் செரடோனின் ஹார்மோன் நரம்புகளில் பாய்வதற்கான காரணியாக இருப்பது 5 – HTT எனும் மரபணு. செரடோனின் குறைவாக இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பதையும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பலரும் இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். அதேபோல், இங்கு எல்லோரும் ஒரே அளவிலான மகிழ்ச்சியையும் கொண்டிருப்பதில்லை. மரபணுக்களின் அடிப்படையில் ஒவ்வொருவரின் மகிழ்ச்சியின் அடிப்படை அளவு எப்படி மாறுபடுகிறது என்பதன் முடிவுகளையும் இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்த ஆராய்ச்சி இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், இதன் சில அடிப்படைச் சாராம்சங்கள் உலகம் முழுக்கவே பல ஆதரவுகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

 

மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது மரபணுவா? மனமா?

1642-ல் தாமஸ் ப்ரெளன் எனும் அறிஞர் ‘ரெலிஜியோ மெடிசி’ (Religio Medici) எனும் மனோதத்துவப் புத்தகத்தை எழுதினார். மத நம்பிக்கைகளையும் அறிவியலையும் இணைத்துப் புதுத் தத்துவங்களையும் இதில் எழுதினார். ‘இந்த உலகின் மிக மகிழ்ச்சியான மனிதன் நான் தான். என்னிடம் ஒன்று இருக்கிறது. அது வறுமையை வசதியாக்கும்; இல்லாமையைச் செழிப்பாக்கும்; நான் கிரேக்கப் புராண நாயகன் அக்கிலீஸை விடவும் வலிமையானவன்’ என்று அவர் அன்று எழுதிய எழுத்துதான் உலகின் தன்னம்பிக்கை வசனங்களின் ஆதி. இவர் நம் மகிழ்ச்சியை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். வேறெந்தச் சக்தியாலும் நம்மை அசைக்க முடியாது என்ற தத்துவத்தை முன்வைக்கிறார்.

இவரின் இந்தக் கருத்தை முன்வைத்து டே நெவ்விடம் கேள்வி கேட்கப்பட்டது: ‘ஒருவரின் மகிழ்ச்சியை இந்த மரபணு மட்டுமே தீர்மானிக் கிறது என்று நான் சொல்லவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இப்படி யோசித்துப் பாருங்கள். சிலர் இயல்பிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களே… அது எப்படி? சிலர் எப்போதும் வாழ்வில் எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி யாக இருப்பதில்லையே அது ஏன் ? இங்கு தான் இந்த மரபணுவின் வீரியம் வெளிப்படுகிறது. ஒருவரின் மகிழ்ச்சிக்கு மரபணு மட்டுமே காரண மல்ல… ஆனால், அதுவும் ஒரு முக்கியக் காரணம் என்றே நான் சொல்கிறேன்’ என்றார்.

 

நால்வர் படை!

‘நாங்க நாலு பேரு… எங்களுக்கு சோகம்னா என்னன்னே தெரியாது’ என நெஞ்சை நிமிர்த்தும் அந்த ஹார்மோன்கள் எல்லோருக்குள்ளுமே இருக்கின்றன.

எண்டார்பின்ஸ் (Endorphins)

நூறுமீட்டர் ஓட்டத்தில் அந்தக் கடைசி 10 மீட்டரைக் கடக்கும்போது உடலும் மனமும் கடும் வேதனையைச் சுமக்கும். அந்த நொடி உங்கள் உடம்பிலிருந்து  ‘வர்லாம்… வர்லாம் வா…’ என ஒரு வெறி வருமல்லவா? அதைக் கொடுப்பதுதான் இந்த எண்டார்பின்ஸ். உடல் கடுமையான அழுத்தத்தைச் சந்திக்கும் போதோ அதிகப்படியான மன அழுத்தத்தில் இருக்கும்போதோ சுரக்கும் இந்த ஹார்மோன் ஒரு ‘எனர்ஜி டானிக்’. உடலும் மனமும் கடுமையான வலியில் தவிக்கும்போது மத்திய நரம்பு மண்டலம் அல்லது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து உருவாகி வருவான் இந்த  ‘பாகுபலி’.

டோபமின் (Dopamine)

‘நிலா… நீ வானம் காற்று… மழை…’ என உங்களைக் காதல் கவிதை எழுத வைக்கும்  ‘காதல் ஹார்மோன்’ இந்த டோபமின். மகிழ்ச்சியாக ஏதாவது நடக்க வேண்டுமென்று நாம் நினைத்த நொடி மூளையிலிருந்து துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கிவிடுவான் டோபமின்.

ஆக்ஸிடோசின் (Oxytocin)

இந்த ஹார்மோன்தான் நம் உடலின் ‘ஓவியா ஆர்மி’. ‘உலகமே உன்னை எதிர்த்தாலும்… நீ தோத்துட்ட, தோத்துட்டன்னு சொன்னாலும்…’ என ‘விவேகம்’ அஜித் சூழலில் இருந்தாலும் தைரியமாக, வீரியமாக நாம் மீண்டு வர உதவும் ஹார்மோன் இந்த ஆக்ஸிடோசின். தைரியம், நம்பிக்கை, சுயமரியாதையை உருவாக்கும் ஹார் மோன். சோகத்திலிருக்கும் ஒருவருக்கு ‘கட்டிப்புடி வைத்தியம்’ செய்தாலே போதும் இந்த ஹார்மோன் சுரக்கத் தொடங்கிடும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும்போது இந்த ஹார்மோன் தான் அவர்கள் இருவருக்குமிடையேயான நம்பிக்கையை வளர்க்கச் சுரக்கும்.

செரடோனின்
(Serotonin)

நம் மூளையிலிருந்தும் வயிற்றிலிருந்தும் சுரக்கும் ஒரு ஹார்மோன். மகிழ்ச்சி, காதல், காமம், பசி, தூக்கம், ஞாபகம், படிப்பு எனப் பல விஷயங்களுக்கு முக்கியம் இந்த  ‘மகிழ்ச்சி’ ஹார்மோன். செரடோனின் குறைபாடு ஒருவரை மன அழுத்தத்திற்குத் தள்ளிவிடும்.

மகிழ்ச்சியின் மந்திரங்கள்

மகிழ்ச்சிக்கும் சோகத்திற்கும் ஒரு மெல்லிய கோடு தான் வித்தியாசம். அதில் எது வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது நாம் தான். அப்படி மகிழ்ச்சியை உங்களோடு தக்க வைத்துக் கொள்ள நீங்கள் சில விஷயங்களைப் பின்பற்றினால் போதும்:

வாய் சிரிக்க, வாழ்வு சிறக்கும்

வாய்விட்டுச் சிரிக்கும்போது உங்களின் முகத் தசைகள் முழு வேகத்தில் விரிவடைந்து செயல்படும். இது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்ற செய்தியை மூளைக்கு அனுப்பும். மூளை முழு உற்சாகத்தோடு மொத்த உடலையும் சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இப்படி ஒரு சின்னச் சிரிப்பு உங்களுக்குள் மறைந் திருக்கும் ஒரு சூப்பர்மேனை வெளிக்கொணரும்.

பிடித்ததைச் செய்யுங்கள்

வெள்ளிக்கிழமை படம் பார்ப்பது, ஞாயிற்றுக் கிழமை கிரிக்கெட் விளையாடுவது, மழையில் நடப்பது, கடலில் நீந்துவது, கடலை மிட்டாய் தின்பது என உங்களின் சின்னச் சின்ன ஆசைகளைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களுக்குப் பிடித்ததை நீங்கள் செய்தால் தான், அந்த நான்கு ஹார்மோன்களும் தங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்யும்.

புத்துணர்ச்சி தரும் நடைப்பயிற்சி

தினமும் 90 நிமிடங்களாவது அமைதியான இடத்தில் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் (Stanford University) சேர்ந்த க்ரீகரி ப்ராட்மேன் (Gregory Bratman) எனும் ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இயற்கைச் சூழலில் நடைப் பயணம் மேற்கொள்வது மன அழுத்தத்திலிருந்து விடுபட மிகச் சிறந்த மருந்தாக இருப்பதை ஆதாரங்களோடு நிரூபித்துள்ளார்.

சிந்தெட்டிக் மகிழ்ச்சி (Synthetic Happiness):

பெரும் வலிகளில் சிக்கிக் கிடக்கும் போது, இல்லாத மகிழ்ச்சியை இருப்பதாக நினைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை கொண்டு அந்தப் பிரச்னைகளிலிருந்து மன உறுதியோடு வெளிப்பட முயற்சி செய்வதை ‘சிந்தெட்டிக் மகிழ்ச்சி’ என்று சொல்கிறார்கள். ‘மகிழ்ச்சி மரபணு’ குறைபாடு இருப்பவர்கள் இந்த தெரபியைப் பயில வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

%d bloggers like this: