வாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்!

வாழ்வைச் செழிக்க வைக்கும் ராசி மந்திரங்கள்!

முற்பிறவி கர்மவினைகளே இப்பிறவியின் பலாபலன்களுக்குக் காரணமாக அமைகின்றன என்கின்றன நம் ஞான நூல்கள். முற்பிறப்பில் செய்த பாவ – புண்ணியங்களுக்கு ஏற்ப, அவற்றுக்கு உகந்த பலாபலன்களை வழங்கும் வகையில் நவகிரகங்கள் அமைந்திருக்கும் நிலையில்தான், ஓர் உயிர் இப்புவியில் ஜனிக்கிறது. அந்த தருணத்தை அடிப்படையாகக்கொண்டே ஜனன ஜாதகம் கணிக்கப்படுகிறது.


ஆக, ‘இப்படியான கிரக அமைப்பில் பிறந்தவருக்கு இன்னின்ன காலகட்டத்தில் இன்னின்ன பலன்கள் விளையக்கூடும்’ என்பதை ஜாதகக் கணிப்புகள் சுட்டிக்காட்டும். அதன் அடிப்படையில் சோதனைகள் வரும் காலகட்டத்தில் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான மனவலிமையைப் பெறவும், இந்தப் பிறவியில் பாவக் கணக்குகளை மென்மேலும் அதிகரித்துக்கொள்ளாமல் இருக்கவும் இறையருள் நிச்சயம் தேவை.

மேலும், கிரக நகர்வுகளின் அடிப்படையில் ஏற்படும் பலாபலன்களில் தீயவை குறைந்து நல்லவை அதிகமாகக் கிடைப்பதற்கு, நமது ஜாதகத்தை ஆளும் ராசி – நட்சத்திரங்களின் பங்களிப்பு அவசியம். உங்களுக்கு

ஜனன ஜாதகத்தை எழுதிய ஜோதிடர் சுலோகம் ஒன்றைத் தவறாமல் குறிப்பிடுவார்.

ஆதித்யாதி க்ரஹா சர்வே
  ஸநக்ஷத்ரா ஸராசய:
குர்வந்து மங்களம் நித்யம்
  யஸ்யேஷா ஜென்ம பத்ரிகா

கருத்து: சூரியன் முதலான நவகிரகங்கள் அசைவதாலும் இடமாற்றம் பெறுவதன் அடிப்படையிலும் நமது பிறவி ஜாதகம் அமைந்து சர்வ மங்கலங்களும் ஸித்திக்கின்றன. எனவே, நீங்கள் எந்த ராசியில் பிறந்திருந்தாலும் வாழ்க்கையில் உயர்ந்து நிற்க, உங்களது ராசிக்குரிய சூட்சும மந்திரங்களைக் கூறி வணங்கி வர வேண்டும். அத்துடன் ராசிக்கு உகந்த தெய்வங்களையும் வழிபடுவதால், நற்பலன்கள் யாவும் கைகூடி வரும்.

‘சாந்தி குஸுமாகாரம்’ எனும் நூல் ராசிகளுக்கு உரிய விசேஷ ஸ்லோகங்களை ஆதாரமாகச் சொல்லியிருக்கிறது. அந்த அரிய மந்திரங்கள் உங்களுக்காக இந்த இணைப்பிதழில் தரப்பட்டுள்ளன.

அத்துடன், பன்னிரு ராசிகளைச் சேர்ந்தவர்களும் வழிபட வேண்டிய தெய்வங்களுக்கான துதிப்பாடல் களும் இந்த இணைப்பிதழில் தொகுத்து தரப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெறுங்கள்.

ஒவ்வொருவரும் தத்தமது ராசிக்கு ஏற்ப, இந்தத் தொகுப்பில் தரப்பட்டுள்ள நியதிப்படி, ஒவ்வொரு ராசிக்கு உரிய குறி, அந்த ராசி அதிபதியான கிரகத்துக்கான குறி  குறி வடிவம் மற்றும் பீஜ மந்திரம் பொறித்த மோதிரம் அணிந்து, ராசி மந்திரத்தைக் கூறி வழிபட்டு நலம்பெறலாம்.

மோதிரம் அணிய விரும்பாதவர்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றும்போது, அவரவருக்கு உரிய ராசி மந்திரம் மற்றும் தெய்வ துதிப்பாடல்களை 16 முறை பாராயணம் செய்து வழிபட்டு, `எனது ராசியிலும் ஜாதகத்திலும் தோஷங்கள் இருந்தால் அவற்றை நீக்கி விடுக’ என்று பிரார்த்தித்து வழிபட்டு பலன் பெறலாம்.


மேஷம்

அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

ந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களது  கடுமையான உழைப்பால் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். எனினும் மறைமுக எதிரிகளும் தடைகளும் இவர்களுக்கு உண்டு என்பதால், கீழ்க்காணும் ராசி சூட்சும மந்திரத்தைத் தினமும் 16 முறை கூறி வழிபட்டுவந்தால், பகைவர்களும் நண்பர்களாகி உதவுவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம்.

தீக்ஷ்ண ச்ருங்க யுதம் தீர்க்க ஸடாகூட விவர்ஜிதம்ரக்தாக்ஷம் குஞ்சிதபதம் மேஷம் ஹ்ருதி விபாவயே

இந்த ராசிக்காரர்கள், பவழக்கல் பதித்த வெள்ளி மோதிரம் அணிதல் வேண்டும். அதில் மேஷ ராசி வடிவம், செவ்வாய் பகவானின் பீஜ மந்திரம் (அம்) மற்றும் குறியைப் பொறித்து அணிந்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கான யோகக் கடவுள் முருகப்பெருமான். ஆகவே, ராசி மந்திரத்துடன் கீழ்க்காணும் முருகன் துதிப்பாடலைப் பாடி வழிபடுவது சிறப்பு.

முருகன் துதிப்பாடல்

காரணம் அது ஆக வந்து புவிமீதே
    காலன் அணுகாது இசைந்து கதிகாண
நாரணனும் வேதன்முன்பு தெரியாத
    ஞான நடமே புரிந்து வருவாயே!
ஆர் அமுதம் ஆன ஏந்தி மணவாளா
    ஆறுமுகம் ஆறு இரண்டு விழியோனே
சூரர் கிளை மாளவென்ற கதிர்வேலா
    சோலை மாலமேவிதின்ற பெருமானே!


ரிஷபம்

கிருத்திகை 2,3,4-ம் பாதம்,ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

தையும் விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சுறுசுறுப்புக்கு உதாரணமாகச் செயல்படும் அன்பர்கள் இந்த ராசிக்காரர்கள். இவர்கள் எருதுகளின் உத்வேகத்துடன் பாய்ச்சலைக் காட்டும் தருணங்களில் தடைகள், எதிர்ப்புகள் ஏற்படும்போது, கீழ்க்காணும் ராசி மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.

‘ஸஞ்சார்ய சல சங்காசம் தீக்ஷண
  ச்ருங்க த்வயான் விதம்
ககுத்விராஜ மானாம்ஸம்
  வ்ருஷபம் ஹ்ருதி விபாவயே

இவர்கள் வைரக்கல் பதித்தும், ராசிக்கு உரிய வடிவம் மற்றும் சுக்ர பகவானின் பீஜ மந்திரம் (சும்) மற்றும் குறி பொறித்தும் மோதிரம் அணிந்து கொள்ள வேண்டும். இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் மகாலட்சுமி தேவி.

மகாலட்சுமி துதிப்பாடல்

பொன்னிலும் மணிகளிலும் நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி அவள்
பதமலர் வாழ்த்தி நற்பதம் பெறுவோம்!

– மகாகவி பாரதியார்


மிதுனம்

மிருகசீரிடம்  3,4-ம் பாதம்,திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

நல்ல அறிவாற்றலும், பேச்சு வன்மையும் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள். இவர்கள் தங்களது வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு பயப்பட மாட்டார்கள். வாழ்நாளில் எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கி எதிர்நீச்சல் போடுகின்ற துணிவு இவர்களுக்கு இருக்கும். இவர்கள் வாழ்வில் வசந்தங்கள் தொடர, அனுதினமும் வீட்டில் விளக்கேற்றும் நேரத்தில் கீழ்க்காணும் மந்திரத்தை 16 முறை கூறி வழிபடலாம்.

பரஸ்பரானு ராகாட்யம்
    அன்யோன்ய சத்ருசாக்ருதி
அன்யோன்யாச்விஷ்ட ஹஸ்தாப்ஜம்
    மிதுனம் ஹ்ருதி விபாவயே

இவர்கள் மரகதப் பச்சைக் கல் பதித்து, மிதுன ராசிக்குரிய வடிவம், புத பகவானுக்குரிய பீஜ மந்திரம் (பம்) மற்றும் குறி பொறித்த மோதிரத்தை அணிய வேண்டும். இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் மகாவிஷ்ணு.

  ஸ்ரீமகாவிஷ்ணு துதிப்பாடல்

தேவரையும் அசுரரையும்
    திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந் தடிவணங்க
    அரங்கநகர்த் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும்
    கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவா
    இராகவனே தாலேலோ!

– குலசேகராழ்வார்


கடகம்

புனர்பூசம்  4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

ந்த ராசிக்காரர்கள், எந்தவொரு  காரியத்தையும் நிதானமாக யோசித்துச் செய்து, அதில் வெற்றி காண்பவர்கள். வாழ்வில் சோதனைகள் வரும்போது, அதற்கான தீர்வைக் காண்பதில் தாமதம் இருந்தாலும் முடிவு வெற்றியாகவே இருக்கும். இவர்கள் கீழ்க்காணும் மந்திரத்தைத் தினமும் 16 முறை கூறி வழிபட்டு வந்தால், வாழ்வில் வெற்றிகளே தொடரும்.

வாரி பூராந்தர சரம் ஷடங்க்ரிம் லோஹிதேக்ஷணம் குக்ஷிவின் யஸ்த வதனம் த்யாயாமி ஹ்ருதி கர்கடம்

இவர்கள் முத்து பதித்து மோதிரம் அணிதல் வேண்டும். மோதிரத்தில் கடக ராசியின் வடிவம், சந்திர பகவானின் பீஜ மந்திரம் (சாம்) மற்றும் குறி அடையாளம் பொறித்து அணிவது விசேஷம். இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் அம்பிகை.

அம்பாள் துதிப்பாடல்

இல்லாமை என்னுமொரு பொல்லாத பாவியால்
    எந்நேரமும் இடருறாமல்
ஏற்காமல் ஏற்பவர்க் கில்லையென் றுரையாமல்
    இழிதொழில்கள் செய்திடாமல்
கல்லாத புல்லர்உற வில்லாமல் கடுபிணி
    கனாவிலும் எனைத் தொடாமல்
கற்றப் பெரியோர்களோடு தர்க்கித்தெதிர்த்துக்
    கடிந்தசொற் சொல்லிடாமல்
வெல்லாமை வென்றவன் இடத்தில்வளர் அமுதமே
    விரிபொழில் திருமயிலைவாழ்
விரைமலர்க் குழல்வள்ளி மறைமலர்ப் பதவல்லி
    விமலிகற் பகவல்லியே!

– கற்பகவல்லியம்மை பதிகம்


சிம்மம்

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

வர்களிடம் கோபமும் இருக்கும் குணமும் இருக்கும். தடைகளைத் துணிச்சலோடு எதிர்கொண்டு வெல்வார்கள். பேச்சிலும் செயலிலும் நேர்மை மிளிரும். எடுத்த காரியத்தில் இருந்து பின்வாங்க மாட்டார்கள்.

இவர்கள் வாழ்வில் வளம் காண கீழ்க்காணும் ராசி மந்திரத்தைத் தினமும் 16 முறை கூறி வழிபட வேண்டும்.

சண்டாட்ட ஹாஸபயதம் தந்தி
   மஸ்தக பேதனம்
தீர்க்கலாங்கூல ஸம்யுக்தம்
  சிம்ஹம் ஹ்ருதி விபாவயே

இவர்கள் மாணிக்கக்கல் பதித்து மோதிரம் அணியலாம். சிம்ம ராசிக்குரிய வடிவம், சூரியனுக்குரிய பீஜ மந்திரம் (சம்) மற்றும் குறி அடையாளம் பொறித்து மோதிரம் அணிவது சிறப்பு. இவர்கள் வழிபட வேண்டிய தெய்வம் சிவபெருமான். நாள்தோறும் அவரை வழிபட்டு, வரம் பெறலாம்.

சிவனார் துதிப்பாடல்

தும்மல் இருமல்
  தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம்
    விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்ந்து
    எய்தும் போழ்தினும்
அம்மையி லுந்துணை
     அஞ்செழுத்துமே!

– திருஞான சம்பந்தர்


கன்னி

உத்திரம்  2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்

திறமையும் கல்வியில் அதீத நாட்டமும் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவும், தோல்விகளை விரட்டவும் கீழ்க்காணும் ராசி மந்திரம் உதவும்.

பதிமுத்திச்ய ஸத்ருஸம்
   தபஸ்யந்தீம் மீதாசநாம்
பூர்ண சந்த்ர முகீம் காந்தாம்
   கன்யாம் ஹ்ருதி விபாவயே

இவர்கள் மரகதப் பச்சைக்கல் பதித்த மோதிரத்தை அணியலாம்.  அத்துடன் கன்னி ராசியின் வடிவம், புதன் பகவானின் பீஜ மந்திரம் (பம்) மற்றும் குறி அடையாளத்தை மோதிரத்தில் பொறித்து அணிய வேண்டும். வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீமந் நாராயணன். அனுதினமும் கீழ்க்காணும் துதிப்பாடலைப் பாடி, திருமாலை மனதில் தியானித்து வழிபட்டு வந்தால், வாழ்க்கைச் செழிக்கும்.

ஸ்ரீமந் நாராயணன் துதிப்பாடல்

சீர்பூத்த பரஞ்சுடராய்ச்
  சித்தாகிக் கானலிடை
நீர்பூத்த தெனஉலகம்
  நிறைந்தொளிதன் பால்தோன்ற
ஏர்பூத்த முத்தொழிலும்
  இனிதியற்றித் தனிநின்ற
கார்பூத்த திருமேனிக்
   கடவுள்மலர் அடிபணிவாம்!


துலாம்

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

டம்பர வாழ்க்கை, நேர்மை, பிடிவாதக் குணம், கெட்டிக்காரத் தன்மை கொண்டவர்கள் இவர்கள். போட்டி என்று வந்தால் ஒரு கை பார்த்து விடுவார்கள். பிரச்னைகளில், பாரபட்சம் பார்க்காமல் தீர்வு சொல்லும் அன்பர்கள் இவர்கள்.

எப்போதும் குறுக்கு வழியை விரும்பாத இந்த ராசிக்காரர்கள், வாழ்வில் மென்மேலும் உயர கீழ்க்காணும் ராசி மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.

பதார்த்தமான சித்யர்த்தம்
   ப்ரம்ஹணா கல்பிதம்புரா!
துலாவாமேதி கதிதாம் ஸங்க்யா ரூபா
   முபாஸ்மஹே

இவர்கள் வைரக்கல் பதித்த மோதிரத்தில், கன்னி ராசியின் வடிவம், சுக்கிரனது பீஜ மந்திரம் (சும்) மற்றும் குறி அடையாளம் பொறித்து அணிவது சிறப்பு. இவர்கள் அனுதினமும் வழிபட வேண்டிய தெய்வம் மகாலட்சுமி.

குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கேற்றி வைத்து, மகாலட்சுமி தேவிக்குக் கற்கண்டு பொங்கல் படைத்து, கீழ்க்காணும் துதியைச் சொல்லி வழிபட, வீட்டில் செல்வம் பெருகும்.

திருமகள் துதிப்பாடல்

மாயனாம் மலருக்கு மணமே போற்றி
மறைமொழி வழங்கும் மாண்பே போற்றி
நேயமுற் றவனை நீங்காய் போற்றி
நிலங்கொள் நீர்மை நிறைவே போற்றி!


விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

ந்த ராசிக்காரர்கள் மன வலிமை கொண்டவர்கள். எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாத அமைதியான தோற்றம் இவர்களின் சிறப்பம்சம். நீதி, நேர்மை தவறாத இந்த ராசிக்காரர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள். கீழ்க்காணும் மந்திரம், இவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும்.

ஹாலாஹல சமாஹக்தம்
   நீலதோயத ஸன்னிபம்
ஆதோல்யமான புச்சாக்ரம்
   விருச்சிகம் ஹ்ருதி விபாவயே

இவர்கள், பவழக்கல் பதித்த மோதிரத்தில் விருச்சிக ராசி வடிவம், செவ்வாய் பகவானுக்குரிய பீஜ மந்திரம் (அம்) மற்றும் குறி வடிவைப் பொறித்து மோதிரம் அணிதல் சிறப்பு. வழிபாட்டு தெய்வம் முருகன். சஷ்டி தினங்களில் கீழ்காணும் பாடலைப் பாடி முருகனை வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

முருகன் துதிப்பாடல்
துய்யதோர்  மறைகளாலும்
   துதித் திடற் கரிய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க
   சேவலும் மயிலும் வாழ்க
வெய்ய சூழ் மார்பு கீண்ட
   வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில் சீர் அடியார் வாழ்க
வாழ்க இப்புவனம் எல்லாம்!

– கந்தபுராணம்


தனுசு

மூலம்,  பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

தானம் அளிப்பதில் ஆர்வம் மிகுந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்.  கலைகளில் தேர்ச்சி, மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தோற்றம் ஆகியன இவர்களது சிறப்பம்சங்கள். முன்னேற்றத் தடையால் துவண்டுபோகும் தருணங்களில் கீழ்க்காணும் மந்திரம் இவர்களுக்குத் துணை நிற்கும்.

ஈஷன் நமித கோட்யந்த த்ருடஜ்யா
   பந்தனான் விதம்
ஆராபி தோக்ர பாணாக்ரம்
   தனுர் ஹ்ருதி விபாவயே

இவர்கள் கனக புஷ்பராகக்கல் பதித்த மோதிரத்தில், தனுசு ராசிக்குரிய வடிவம், குரு பகவானின் பீஜ மந்திரம் (கும்)மற்றும் குறி வடிவைப் பதித்து அணிந்து கொண்டால் வினைகள் நீங்கும்; வியத்தகு முன்னேற்றம் உண்டாகும். தேவகுரு பிரகஸ்பதியையும், இந்த உலகுக்கே குருவான  தட்சிணாமூர்த்தி பகவானையும் இவர்கள் வழிபட வேண்டும்.வியாழக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று, கீழ்க்காணும் துதிப்பாடலைப் பாடி தென்முகக்கடவுளையும், நவகிரக குருவையும் வழிபட்டுவந்தால், நன்மைகள் யாவும் சேரும்.

ஞானம் அருளும் துதிப்பாடல்

குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேச்வர:
குருர் ஸாக்ஷாத் பரம் பிரும்மா
தஸ்மைஸ்ரீ குருவே நம:


மகரம்

உத்திராடம் 2,3,4-ம் பாதம்,திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

ளிமையே இவர்களின் சிறப்பு குணாதிசயம். அனைவரிடத்திலும் அன்புடன் பழகுவதும், மற்றவர் களுக்கு உதவும் குணமும் கொண்ட வர்கள் மகர ராசிக்காரர்கள்.

சில தருணங்களில், `சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ கதையாகச் சில முன்னேற்றத் தடைகளை இவர்கள் சந்திக்க நேரிடும். அதுபோன்ற தருணங்களில், கீழ்க்காணும் மந்திரத்தை அனுதினமும் கூறி வழிபட்டு வந்தால், துயரங்கள் நீங்கும்; சகல சம்பத்துகளும் ஸித்திக்கும்.

அம்போதி கோர ஜடாக்ருத
    பூயிஷ்ட கேலனம்!
ஜலஜந்து ப்ரதிபயம்
    மகரம் ஹ்ருதி விபாவயே!
இவர்கள் நீல நிறக்கல்

பதித்த மோதிரம் அணிவது சிறப்பு. அதில் மகர ராசியின் வடிவம், சனி பகவானின் பீஜ மந்திரம் (சம்) மற்றும் குறி வடிவைப் பொறித்து அணிவதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

அனுதினமும் விநாயகப் பெருமானை அனுதினமும் வழிபட்டு வளம் பெறலாம்.

மகா கணபதி துதிப்பாடல்

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் ஸோகவினாச காரணம்
நமாமி விக்னேச்வர பாதபங்கஜம்!


கும்பம்

அவிட்டம்  3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

வர்கள் ஓய்வில்லாமல் உழைத்துப் பொருள் ஈட்டும் அன்பர்கள். தொழிலில், உத்தியோகத்தில் எதிர்பாராத சறுக்கல்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்ளும் தருணங்களில் கீழ்க்காணும் மந்திரத்தைக் கூறி வழிபட்டு, வினைகள் நீங்கப் பெறலாம்.

ஸெளவர்ணம் ரத்ன கசிதம்
   ஸீதாபூராபி பூரிதம்!
வைனதேய ஜவானீதம்
   கும்பம் ஹ்ருதி விபாவய

இவர்கள் நீலக்கல் பதித்த மோதிரத்தில், கும்ப ராசிக்குரிய வடிவம், சனி பகவானின் பீஜ மந்திரம் (சம்) மற்றும் குறி வடிவைப் பொறித்து அணிந்துகொண்டால் வெற்றிகள் வசமாகும். இந்த ராசிக்காரர்கள், தினமும் ஆஞ்சநேயரை வழிபட்டு அளவில்லா நன்மைகளைப் பெறலாம். சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது விசேஷம்.

ஸ்ரீஅனுமன் துதிப்பாடல்

வானரரில் முதலோனை
  மற அரக்கர் குலத்தோர்கள்
ஆனவராம் குமுதவனம்
  அழிகிரண ஆதவனை
தீனர்களின் துயர் துடைக்கத்
  திடவிரதம் கொண்டவனை
மானவளி தவமகனை
  மனக்கண் முன் கண்டேனே!


மீனம்

பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

பாரம்பர்ய விஷயங்களில் அதீத நாட்டம் கொண்டவர்கள். வாக்கிலும் செயலிலும் நீதி, நேர்மை, கண்ணியத்துடன் வாழும் இந்த அன்பர்கள், வாழ்வில் வெற்றி நடை போடுவதற்குக் கீழ்க்காணும் மந்திரம் உறுதுணையாக இருக்கும்.

நிமேஷ ஹீன நயனம்
   ஸ்புரந்தம் வாதிதேர் ஜலே!
மமாபீஷ்டஸ்ய மீனம்
   ஹ்ருதி விபாவயே!

இவர்கள், கனக புஷ்பராகக் கல் பதித்த மோதிரம் அணியலாம். அதில் மீன ராசிக்குரிய வடிவம், குரு பகவானின் பீஜ மந்திரம் (கும்) மற்றும் குறி வடிவைப் பொறித்து அணிவது சிறப்பு. தட்சிணாமூர்த்தி பகவானை வழிபடுவது விசேஷம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி துதிப்பாடல்

மூலேவடஸ்ய முனிபுங்கவ ஸேவ்யமானம்
முத்ராவிஸேஷ முகுளீக்ருத பாணிபத்மம்
மந்தஸ்மிதம் மதுரவேஷமுதாரமாத்யம்
தேஜஸ்ததஸ்து ஹ்ருதிமே தருணேந்து சூடம்

கருத்து: ஆல மரத்தடியில் சிறந்த முனிவர்களால் வணங்கப் படுகிறவரும், ஞான முத்திரையுடன், தாமரை போன்று சிவந்த கரங்களைக் கொண்டவரும், கம்பீரமானவரும், எல்லோருக்கும் முதல்வரும், அர்த்த சந்திரனைத் தலையில் தரித்தவரும், தேஜோரூபியானவருமான தட்சிணாமூர்த்தி பகவானை வணங்குகிறேன்.

%d bloggers like this: