ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் நரியும் ஓநாயும்!

ஜெயலலிதா மரணமடைந்து ஒன்பது மாதங்கள் கழித்து, ஒருவழியாக விசாரணைக் கமிஷன் அமைத்துவிட்டார்கள்” என்றபடியே கழுகார் நம்முன் ஆஜரானார். வெளியே வானம் இருண்டு மழைக்கான அறிகுறி தென்பட்டாலும், கழுகாரின் சிறகுகள் சூடாகத்தான் இருந்தன.
‘‘வேறுவழியில்லாமல்தான் விசாரணைக் கமிஷனை அமைத்துவிட்டார்கள். ‘ஒரு விஷயத்தை ஊற்றிமூட வேண்டுமானால், ஒன்று கல்லைப் போடு அல்லது கமிஷனைப் போடு’ என்பார்கள்.

இவர்கள், கமிஷனைப் போட்டுவிட்டார்கள். இனிமேல், அதைப்பற்றி யாரும் பேச முடியாது அல்லவா? அதுபற்றி யார் கேட்டாலும், ‘நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுவிட்டது. அதன் அறிக்கை வரும்வரைக் காத்திருப்போம்’ என்று சொல்லி தப்பிக்கலாம். மொத்தத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கைங்கர்யம் இது. திண்டுக்கல்லில் பேசிய சீனிவாசன், ‘தோழர்களே என்னை மன்னித்து விடுங்கள். அம்மா நலமுடன் இருக்கிறார்… இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய்” என்று சொல்ல, அது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீயாய்ப் பரவிவிட்டது. சசிகலா சதி செய்தார் என்பது மறைந்து, ஜெயலலிதாவின் மரணத்தில் என்னதான் நடந்தது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கே வந்துவிட்டது. அதனால்தான், இந்த விசாரணைக் கமிஷன் அறிவிப்பு.”
“விசாரணைக் கமிஷன் நீதிபதி ஆறுமுகச்சாமியைப் பற்றிச் சொல்லும்!”
“சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2010 முதல் 2014 வரை இருந்தவர். ஒரு விஷயத்தை நினைவுபடுத்தினால் அனைவருக்கும் உடனே ஞாபகத்துக்கு வந்துவிடும். 2013-ல் சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் இருந்தார். அப்போது, ஒரு நிலப்பிரச்னை தொடர்பான வழக்கில் கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆறுமுகச்சாமி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், ஜார்ஜ் ஆஜராகவில்லை. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி அல்ல… அவர் ஒரு மாநகரத்தின் போலீஸ் கமிஷனர் மட்டுமே’ என்று சொல்லிப் பரபரக்க வைத்த நீதிபதிதான், ஆறுமுகச்சாமி. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, ‘கறாரான நீதிபதி’ என்று நல்ல பெயர்.’’

“ஓ… அவரா?”
‘‘விசாரணை கமிஷன் அறிவிப்பு தினகரன் தரப்புக்கு எந்தப் பீதியையும் ஏற்படுத்தவில்லை. ‘எந்த விசாரணை வேண்டுமானாலும் நடத்தட்டும்’ என தினகரன் சொல்லிவிட்டார். ‘நோய்த்தொற்று காரணமாக அக்டோபர் 1-ம் தேதி வரைக்கும் சசிகலா உள்பட யாரும் ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதும் ஜெயலலிதாவை சசிகலாவே வீடியோ எடுத்தார்’ என்று சொல்லியிருக்கிறார் தினகரன். அதைவிட முக்கியமாக, அவர்கள் தரப்பின் நாளிதழாக மாறிவிட்ட நமது எம்.ஜி.ஆரில், எதிர் தரப்பினரை மிகக் கடுமையாக விமர்சிப்பதைப் பார்த்தால், எதற்கும் துணிந்துவிட்டார்கள் என்பது தெரிகிறது.”
“அப்படி என்ன வந்துள்ளது நமது எம்.ஜி.ஆரில்?”
“ ‘நரிகளும் ஓநாய்களும் சொல்லும் சொந்தக் கதை’ என்ற தலைப்பில் நமது எம்.ஜி.ஆர் விளாசித் தள்ளியிருக்கிறது. ‘அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுவந்தபோதே, ‘அடுத்த முதல்வராக வரவேண்டும்’ என நினைத்து பன்னீர்செல்வமும், எடப்பாடியும் காய் நகர்த்தி வந்தனர். ஆனால், ஏற்கெனவே பன்னீர்செல்வம் அந்தப் பதவியில் இருந்ததால், அவரே தொடரட்டும் எனச் சின்னம்மாதான் முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார். முதலமைச்சர் அம்மா மறைந்தபோது, துக்கத்தைவிட பன்னீருக்கு மட்டற்ற மகிழ்ச்சியே ஏற்பட்டது. அதன்பிறகு சந்தர்ப்பம் வந்தபோது, பழனிசாமியைச் சின்னம்மா முதல்வராக்கினார். தந்திரங்களைத் திறமையாகக் கையாளும் தகுதியை பன்னீரும், பழனிசாமியும் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல; ஓநாயும் நரியும் தந்திரங்களுடன் செயல்பட்டு இரையைக் கவ்வுவதில் திறன் பெற்ற விலங்குகள். தந்திரத்தின் முறை ஓநாயிடம் இருக்கிறது என்றால், அதை சிறப்பாகத் திறமையுடன் கையாண்டு நிறைவேற்றுவது நரியின் வேலையாகும். இந்த இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்த விலங்குகள் அல்ல. இரண்டுமே கெட்ட எண்ணத்தோடு மற்ற விலங்குகளை ஏமாற்றி தன் வழிக்குக் கொண்டுவந்து, அவற்றைக் கபளீகரம் செய்வதில் படு கில்லாடிகளான விலங்குகள். இந்த ஓநாய்க்கும், நரிக்கும், துரோகம் செய்யும் நயவஞ்சக மரபணுக்கள் இயற்கையாக அமைந்துள்ளன’ என்று ‘மின்னல் வேந்தன்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது.”
“யாராம் இந்த மின்னல் வேந்தன்?”
“மின்னல் வேந்தன் என்ற பெயரில் எழுதியிருப்பது கண்ணன், ஆனந்தன் என்பவர்கள்தானாம். இவர்கள் சசிகலாவின் சித்தி மகன்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினரான டாக்டர் எல்.பி.தங்கவேலு என்பவரின் கட்டுரையையும் நமது எம்.ஜி.ஆர் வெளியிட்டுள்ளது. ‘இதயதெய்வம் அம்மாவின் மறைவில் மர்மம் ஏதுமில்லை’ என்று அவர் எழுதியிருக்கிறார். ‘நரைத்த தலையுடனும் நோயாளிக் கோலத்துடனும் தன் புகைப்படம் வெளிவருவதை அம்மா விரும்பவில்லை’ என்று அவர் சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்துக்கு தினகரன் தரப்பும் விளக்கங்கள் சொல்லத் தொடங்கிவிட்டது.”
“அப்படியானால், விரைவில் உண்மை வெளியாகும் என்று நம்பலாமா?”
“நம்புவோம். இவர்கள் என்னதான் பூசிமெழுகினாலும், மக்கள் அதை நம்பமாட்டார்கள். 2015-ம் ஆண்டு ஜூலை மாதமே, ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘நலந்தானா ஜெயலலிதா?’ என்ற கட்டுரை எழுதப்பட்டது. 2016  தேர்தல் பிரசாரத்தையே நான்கு பொதுக் கூட்டங்களாக ஜெயலலிதா நடத்தி முடித்தார். அந்தப் பொதுக்கூட்ட மேடைகளிலும் அரைமணி நேரத்துக்குமேல் அவர் அமரவில்லை. வெற்றிபெற்ற பிறகும், சட்டமன்றத்துக்கு அவர் தினமும் வரவில்லை. ஆனால், முதலமைச்சர் அந்தத் தலைவருக்கு மரியாதை செலுத்தினார்… இந்தத் தலைவருக்கு மாலை அணிவித்தார் என்று ‘போட்டோஷாப்’ செய்யப்பட்ட புகைப்படங்களையே செய்தித்துறை வெளியிட்டுக்கொண்டிருந்தது”
“ஆமாம்!”
“கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோவில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டது முதல், தினமும் சொல்லப்பட்ட பொய்களே மக்களிடம் சந்தேகத்தை அதிகப்படுத்தின. இந்த விசாரணை கமிஷனின் அறிக்கையில் என்ன வேண்டுமானாலும் வரட்டும். ஆனால், முக்கியமான பலரும் இதில் ஆஜராகிப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்களைத் தாண்டி, சசிகலா, தம்பிதுரை, முதலமைச்சரின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்களாக இருந்த ஷீலா பிரியா, வெங்கட்ரமணன், அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ஆகியோர் ஜெயலலிதாவைப் பார்த்தனர். இவர்கள் போக, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் ஜெயலலிதாவை ஒருமுறை பார்த்தவர்தான். இவர்கள் அனைவரும் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதும் முக்கியமானது.”
“ஜெயலலிதா மூன்று நாள்கள் மட்டும்தான் சுயநினைவோடு இருந்ததாக அவருடைய அண்ணன் மகன் தீபக் சொல்லியுள்ளாரே?”
“இப்படி ஒவ்வொருவராகச் சொல்லச் சொல்ல தினகரன் தரப்பு டென்ஷன் ஆகத்தான் செய்யும். ‘நாங்கள் யாரும் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னார் அல்லவா? ‘அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சரைப் பார்த்தோம்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் மாற்றி மாற்றிப் பேசி டென்ஷனைக் கூட்டுகிறார்கள். எடப்பாடி அணிக்கு உள்ளேயே இருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல் வேலைகள்தான் இவை. சசிகலா, தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி எடுக்கும் நடவடிக்கைகளில், அமைச்சர்கள் சிலருக்கு உடன்பாடு இல்லையாம். ‘அவர்கள் இருவரும் கட்சியில் இருக்கிறார்களோ இல்லையோ, பதவியில் இருக்கிறார்களோ இல்லையோ, அது வேறு விஷயம். அதற்காக அவர்களைப் பழிவாங்குவதோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோ கூடாது’ என்று அமைச்சர்களிலேயே ஆறு பேருக்கு மேல் நினைக்கிறார்கள். அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சமீபத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி கொடுத்ததும், செல்லூர் ராஜூ, ஜெயலலிதா நன்றாகத்தான் இருந்தார்… நாங்கள் பார்த்தோம் என்பதும் இதன் காரணமாகத்தான். இவை அனைத்தும் எடப்பாடிக்கே தலைவலியைக் கொடுத்துள்ளன. நடராசன் மருத்துவமனையில் இருக்கிறார்; சசிகலா சிறையில் இருக்கிறார்; நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது; தினகரன் தன் கூட்டாளிகளுடன் ஆலோசனையில் கழிக்கிறார். அதனால், எடப்பாடி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்.”

“அந்தளவுக்கு ரிலாக்ஸ் ஆகிவிட்டாரா?”
“தலைமைச் செயலகம் பக்கம் போய்ப் பாருங்கள். எடப்பாடியின் வேலைகளையெல்லாம் சேலம் இளங்கோவன்தான் பார்க்கிறார். தலைமைச் செயலகத்தில் ஒரு நிழல் முதலமைச்சரைப்போல் சேலம் இளங்கோவன் வலம்வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் புடைசூழ ஒரு குட்டி ராஜாவைப் போல் அவர் வருகிறார். முதல்வர் சார்பில் மற்ற அமைச்சர்களுடன் பேசுவது, ஒப்பந்தங்களை டீல் செய்வது, திட்டங்கள் தீட்டுவது என்று இளங்கோவன் உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்காரர்களின் லாபிதான் நடக்கிறது.”
“நடராசன் உடல்நிலை ரொம்பவே சீரியஸாக இருக்கிறதா?”
“ஆமாம்! கிட்னி மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு குளோபல் மருத்துவமனையில் நடராசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய கிட்னி கிடைத்துவிட்டது. ஆனால், கல்லீரல் கிடைக்கவில்லை. அதற்காக, கடந்த பிப்ரவரி மாதமே உறுப்புதானம் திட்டத்தின்கீழ் பதிவு செய்து வைத்திருந்தார். அப்படி கிடைக்கும் உறுப்புகளும் சில தனியார் மருத்துவமனைகளின் வரிசையின்படிதான் அவருக்குப் பொருத்த முடியும். தற்போது பெங்களூருவிலிருந்து நடராசனுக்குக் கல்லீரல் கிடைத்துவிட்டது. அதை அவருக்குக் கொடுக்க, மூன்று தனியார் மருத்துவமனைகள் வரிசையிலிருந்து ஒதுங்கிக்கொண்டன. ஆனால், ஒரு தனியார் மருத்துவமனை மட்டும், வரிசைப்படி அந்தக் கல்லீரல் தங்களுக்குத்தான் வரவேண்டும். அதைவிட்டுத் தரமாட்டோம் என்கிறதாம். அரசுத் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம்தான் காரணம் என்றும் சிலர் வதந்தி கிளப்புகிறார்கள்.”
“தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்களும் ஏதோ போர்க்கொடி தூக்குவதாகச் செய்திகள் வந்தனவே?”
“எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என்று இவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால், சிலர் அப்செட். அந்தப் பக்கமிருந்து ஆறு முதல் எட்டு எம்.எல்.ஏ-க்களை எடப்பாடி விலைபேசிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் சமாதானம் செய்ய தினகரன் கூர்க் போனதாக தகவல். ‘எடப்பாடி தரப்பைச் சேர்ந்த எட்டு முதல் 10 எம்.எல்.ஏ-க்களை ஏற்கெனவே பேசி வைத்திருக்கிறோம்’ என்றும் சொல்கிறாராம் தினகரன்.”
“இரட்டை இலை எப்போது துளிர்க்கும்?”
“இரட்டை இலையை முடக்குவதற்காக பன்னீர் அணி, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த புகார் மனுவை வாபஸ் வாங்குவதாக ஆணையர்களிடம் மனு அளித்துள்ளது. இரண்டு அணிகளும் இணைந்ததற்கான பொதுக்குழு ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். இரட்டை இலை தொடர்பான விசாரணையை வரும் 6-ம் தேதிக்குத் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. அக்டோபர் 30-ம் தேதிக்குள் இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதால், அதற்குள் முடிவு எடுக்க வேண்டிய நெருக்கடியும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. இதனால், அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகு இரட்டை இலையை எடப்பாடி- பன்னீர் வசம் ஒப்படைத்துவிடுவார்கள் என்று தெரிகிறது. இரட்டை இலைச் சின்னம் கிடைத்தபிறகு, ஓ.பி.எஸ் நடவடிக்கையைப் பாருங்கள் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.”
“இரட்டை இலையும், ஓ.பி.எஸ்ஸும் புரியாத புதிராக உள்ளதே?”
“எடப்பாடியும் பன்னீரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வந்தாலும், உள்ளுக்குள் புகைச்சல் இருந்து கொண்டே உள்ளது. இரண்டு அணிகள் இணைந்துவிட்டாலும், செயல்பாடுகளில் பார்த்தால் இரண்டு அணிகளும் தனித்தே செயல்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது. எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போனது, பொதுக்குழு தீர்மானத்திலும் தனது பவர் முடக்கப்பட்டது, அரசு விவகாரங்களில் துணை முதல்வராக இருக்கும் தன்னைவிட தங்கமணி, வேலுமணிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் போன்றவை பன்னீரைப் பாடாய்படுத்தி வருகிறது. டெல்லி மேலிடத்திற்குக் கட்டுப்பட்டு இரண்டு அணிகளுமே இணைந்திருப்பதால், இருவருக்கும் இடையேயான நெருடல்கள் இப்போதும் இருந்துவருகிறது. இரட்டை இலைச் சின்னம் திரும்ப கிடைத்தாலும், அதை முழுமையாக தன் வசப்படுத்தும் திட்டத்தில் பன்னீர்செல்வம் தரப்பு இருக்கிறதாம். இரண்டு அணிகளையும் டெல்லி தலைமை அனுசரித்துப் போனாலும், மோடிக்குச் செல்லப்பிள்ளையாக பன்னீரே இப்போதும் இருந்துவருகிறார். அதனால், இரட்டை இலைச் சின்னம் கட்சிக்கு வந்ததும், பவ்யம் காட்டிவரும் பன்னீர் பாயத்தயாராகி வருகிறார்.”
“பன்னீர் பாய்ந்தால் எடப்பாடி பதுங்குவாரா?”
“பன்னீர்செல்வம் என்றுமே தனக்குப் போட்டியாளராக இருப்பார் என்று தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறார் எடப்பாடி. அதனால்தான் பன்னீர்செல்வம் எங்கெல்லாம் பவர் காட்டுவாரோ அந்த இடங்களிலெல்லாம் எடப்பாடி உள்ளே நுழைந்துவருகிறார். கட்சியிலும், ஆட்சியிலும் எந்த இடத்திலும் பன்னீர் கை ஓங்கிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்து வருகிறார் எடப்பாடி” என்றபடியே ஜூட் விட்டார் கழுகார்.

%d bloggers like this: