ஆராரோ… ஆரிரரோ!

குழந்தைகள் சீராக இருக்கவும், மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக இருக்கவும், தேவையான நேரத்தில், தடையற்ற உறக்கம் அவசியம். பிறந்த குழந்தைக்கு, ஒரு நாளில், குறைந்தபட்சம், 12 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை உறக்கம் அவசியம். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம், சிறப்பாக இருக்கும்.

பிறந்த குழந்தையை, தாய் அருகில் இருக்கும் போது அவரின் அரவணைப்பிலும், மற்ற நேரங்களில் பருத்தித் துணியில் கட்டிய தொட்டிலிலும் உறங்க வைக்கலாம். அணைத்தப்படி இருக்கும் போது, போதியளவு காற்று கிடைக்கும் படியாக இருக்க வேண்டும்.
குழந்தையின் உறக்கத்துக்கு உகந்த சூழல், வீட்டில் இருக்க வேண்டும். குழந்தை உறங்கும் அறையில் சத்தம், அதிக வெளிச்சம் இருக்கக் கூடாது; கொசுத்தொல்லை, எறும்புக்கடி உட்பட தொந்தரவுகள் அற்ற சூழலும், நீண்ட நேர உறக்கத்தை கொடுக்கும்.
குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். பாட்டில் பால் குடிக்கும் போது, காற்றையும் சேர்த்து உள்ளிழுத்துக் கொள்வதால், வயிற்றில் அசவுகரியத்தை உண்டு பண்ணுவதால், சரியான தூக்கம் கிடைக்காமல் அவதிப்படும் சூழல் உருவாகும்.
குழந்தையின் ஆடைகள், தொட்டில், மெத்தை விரிப்புகள் என, அதை சுற்றியுள்ள சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தை, சிறுநீர் கழித்தவுடன், ஆடையை உடனடியாக மாற்ற வேண்டும். மாலையில் ஒரு முறை, குழந்தையை குளிக்க வைப்பது, தளர்வான ஆடை அணிவிப்பது, அணைத்தபடி இருப்பது, கதை சொல்வது, தொட்டிலில் கிடத்திப் பாடுவது இவையெல்லாம், குழந்தையை, உறங்க தயார்படுத்தும். இரண்டு வயது வரை குழந்தைகளின் உறக்கத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
* ஒரு வயதிலிருந்து, இரண்டு வயது வரை, தினமும், 1013 மணி நேரம் வரை குழந்தைகள் உறங்குவர். பகலில் அதிகபட்சம், 3 மணி நேரம் மற்றும் இரவில், 10 மணி நேரம் என, உறக்கத்தை முறைப்படுத்தலாம்.
* குழந்தைகள் வாயால் சுவாசித்தவாறு தூங்கினால், உறக்க நிலையில், அதன் மூக்கு அழுத்தப்பட்டிருக்கிறதா அல்லது ஜலதோஷப் பிரச்னையால் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு மேல், குழந்தையின் தொட்டிலை அதிக உயரமின்றித் தாழ்வாகக் கட்டுவது பாதுகாப்பானது. அதேபோல், தொட்டிலை ஆட்டும் போது பக்கவாட்டில், சுவரில், நாற்காலியில், மேஜையில் என இடிக்காத விசாலம் முக்கியம்.
* ஒடுக்கமான தொட்டிலை விட விரிதொட்டிலாக கட்டினால், குழந்தைக்கு காற்றோட்டம் அதிகமாக கிடைக்கும்.
* வீட்டில் மூத்த குழந்தைகள் இருந்தால், தொட்டிலில், தலையை உள்ளே நுழைத்து விளையாடுவது, உறக்கம் கலைந்த பின், மூத்த குழந்தைகள், சிறு
குழந்தையை தொட்டிலிருந்து தூக்க முயல்வது போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது.
* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை, மெத்தையில் உறங்க வைக்கும் போது, உறக்கம் கலைந்து எழுந்ததும், உருண்டோ, கீழே இறங்கும் முயற்சியிலோ, அது கட்டிலிலிருந்து தவறி விழும் ஆபத்துள்ளது. எனவே குழந்தை உறங்கும் போது, பெற்றோர் வேறு வேலைகளில் இருந்தாலும், குழந்தையின் மீதும் ஒரு பார்வை வைக்க வேண்டும்.
* ஒரு வயதுக்கு மேல், குழந்தையை மெத்தையில் உறங்க வைக்க பழக்குபவர்கள், பக்கவாட்டு தலையணைகள், முகம் புதையும் அளவுக்கு அதிக மிருதுவாகவோ உறுத்தும் அளவுக்கு கடினமாகவோ இல்லாமல், நடுத்தரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

%d bloggers like this: