இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்… ஓர் அலசல்!

தீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பன்னீர் தலைமையில் ஓர் அணியும் சசிகலா தலைமையில் மற்றோர்  அணியுமாகப் பிரிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் தேர்தல் நடைபெற்றபோது, இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா அணிக்கு வழங்கக் கூடாது எனப் பன்னீர் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னமும் கட்சியின் பெயரையும் முடக்கி வைத்தது தேர்தல் ஆணையம். 

இரண்டு அணிகளும் அ.தி.மு.க அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் செயல்பட்டன, சசிகிலா தரப்பில் சின்னமும் கட்சியும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பன்னீர் தரப்பிலும் சின்னமும் கட்சியும் எங்களுக்கே சொந்தம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அம்மா அணிக்குள்ளே பிளவு ஏற்பட்டது. தினகரன் தலைமையில் ஓர் அணியும் எடப்பாடி தலைமையில் ஓர் அணியாகவும் பிரிந்தது. உண்மையான அம்மா அணி நாங்கள்தான் என்று எடப்பாடி அணியினர் அறிவித்தனர். அதன்தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்தின் அணியுடன் எடப்பாடி பழனிசாமி அணி இணைப்பும் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி அணி ஏற்கெனவே கொடுத்த பிரமாண பத்திரத்தில் சசிகலாவே பொதுச்செயலாளர் எனவும், டி.டி.வி தரப்பு குறிப்பிட்டிருந்தது.

இரண்டு அணிகளும் ஒன்றிணைந்த பிறகு, ஏற்கெனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தைத் திரும்ப பெறும் மனுவையும் எடப்பாடி அணி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்துவிட்டதால், சின்னத்தை மீண்டும் திரும்பி வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இரண்டு அணிகளின் ஒருங்கி்ணைப்புக் குழு வேண்டுகோள் வைத்தது. அதே நேரம் இரட்டை இலை தொடர்பாக வழக்கு ஒன்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

அ.தி.மு.க-வின் பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்களை எடுத்துக் கொண்டு கடந்த வாரம் பன்னீர்- எடப்பாடி அணியினர் தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர். அதேபோல் தினகரன் அணியினரும் தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர். தினகரன் அணியினர் “அம்மா அணியினர் என்பது நாங்கள் மட்டுமே, அவர்கள் நடத்திய பொதுக்குழுவே செல்லாது” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் கூடுதல் ஆவணங்களைத்  தாக்கல் செய்ய அவகாசம் கேட்டனர். தினகரன் அணிக்கு அவகாசம் அளிக்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இரண்டு தரப்பும், 29-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 29-ம் தேதி டெல்லி தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி அணி சார்பில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், உதயகுமார், ஜெயக்குமார், மற்றும் இன்பதுரை ஆகியோரும், பன்னீர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் முனுசாமி, எம்.பி.மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகினர். 

இரட்டை இலை

பன்னீர் தரப்பு இரட்டை இலையை முடக்க வேண்டும் எனக் கொடுத்த மனுவை முதலில் வாபஸ் வாங்கினர். அதன்பிறகு அ.தி.மு.க-வின் 113 சட்டமன்ற உறுப்பினர்கள், 43 எம்.பி-க்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும், கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பக்கம் இருப்பதற்கான கையெழுத்து ஆவணங்களை அப்போது தாக்கல் செய்துள்ளனர். இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து நடத்திய பொதுக்குழு ஆவணங்கள், தீர்மானங்கள், உள்ளிட்டவையும் அப்போது தாக்கல் செய்யபட்டுள்ளது. இதேபோல் தினகரன் தரப்பில் “கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா தொடர்வதால், சின்னத்தை எங்களிடம் வழங்க வேண்டும் எனவும், கட்சியின் நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருப்பதற்கான ஆவணங்களையும்”தினகரன் தரப்பு தாக்கல் செய்துள்ளது. இரண்டு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைக் குவித்துள்ளனர்.

ஆனால், அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் செய்திருப்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்றே தெரிகிறது.

அதேபோல், கட்சியின் நிர்வாகிகள் பலரையும் தினகரன் மாற்றியிருந்தார். ஆனால், பொதுக்குழுவின் தீர்மானத்தில் கட்சியின் நிர்வாகிகள் மாற்றம் செல்லாது எனவும் ஜெயலலிதாவினால் போடப்பட்ட பதவிகளே தொடரும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். வரும் 6-ம்தேதி அன்று இரண்டு தரப்பிடமும் விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில்தான். சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒருங்கிணைந்த அணிக்கு வழங்கவே தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையம் அப்படி ஒரு முடிவை அறிவித்தால், தினகரன் தரப்பு, நீதிமன்றத்துக்குச் சென்று இரட்டை இலையை முடக்கும் என்று தெரிகிறது. சட்டபடி அம்மா அணி யாரிடம் உள்ளது என்பதைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்த பிறகே இந்த வழக்கில் தீர்வு காணமுடியும். ஆனால், மதுரை உயர்நீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள் முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் தேர்தல் ஆணையம் உள்ளதால், ஆறாம் தேதிக்கு மறுதினமே  இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது. இந்த முடிவுதான் இரண்டு அணிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.

%d bloggers like this: