மாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்..! யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..?

தமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, பொறுப்பு ஆளுநர் தலைமையின் கீழ்தான் தமிழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்த பின்னர், முழுநேர ஆளுநர் இல்லாமலேயே தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பல அரசியல் மாறுதல்கள் அரங்கேறிவிட்ட போதிலும், நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தின் புதிய ஆளுநராகத் தற்போது அஸ்ஸாம் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து உத்தரவிட்டுள்ளார், யார் இந்த பன்வாரிலால் புரோஹித்? அவரின் பின்னணி என்ன?

பன்வாரிலால் புரோஹித், 1940-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி விதர்பா பகுதியில் பிறந்தவர். மூன்றுமுறை நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு முறை காங்கிரஸ் சார்பிலும், ஒருமுறை பி.ஜே.பி சார்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

முதலில் அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பன்வாரிலால் புரோஹித், பின்னர் காங்கிரஸில் இணைந்தார். நாக்பூர் கிழக்குப் பகுதியில் 1978-ம் ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனார். அதன்பின் 1980 தேர்தலில் நாக்பூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்று மாநில நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 

1984-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் எட்டாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் காங்கிரஸிலிருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பி.ஜே.பி-யின் முயற்சியில் நாட்டம் கொண்டு, 1991-ம் ஆண்டில் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் பன்வாரிலால். 1996-ல் பி.ஜே.பி. சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி.ஜே.பி. முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மஹாஜனுடன் 1999-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பி.ஜே.பி-யிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

2003-ல் விதார்பா ராஜ்ய கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். 2009-ல் மீண்டும் பி.ஜே.பி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அஸ்ஸாம் மாநில ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் ஆளுநராக இவர் இருந்தபோதுதான், சீனாவுடன் போர் புரியும் எண்ணத்தை இந்தியா கைவிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

தற்போது தமிழக அரசியலில் நிலவும் சூழலை பன்வாரிலால் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது, அவர் முன் உள்ள மிகப்பெரிய சவால். ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்குப் போதிய எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லை. தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது என்றும், எனவே இந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர உத்தரவிட வேண்டும்’ என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள சூழ்நிலையில், பன்வாரிலால் நியமனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

மேலும், அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க ஒருங்கிணைந்த எடப்பாடி – ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி. தினகரன் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த அணியினரை ஆளுநர் எப்படிக் கையாளப் போகிறார் என்பது அவர்முன் உள்ள மற்றொரு சவாலாகும்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலாதும், வித்யாசகர் ராவ் போன்று ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தைக் கொண்டவர் என்பதால், அவரைப்போன்றே செயல்படக்கூடும் என்ற பிம்பமும் அவர்மீது வைக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவோம் என்று பி.ஜே.பி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து கூறிவரும் நிலையில், அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பன்வாரிலால் புரோஹித் எவ்வாறு கணித்து, முன்னெடுத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையேயும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பரவலாக எழுந்துள்ளது. பன்வாரிலாலில் செயல்பாட்டைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

%d bloggers like this: