முதல்வர் மீது கவர்னர் கோபம்?

வாட்ஸ்அப்பில் வந்து விழுந்த செய்திகளை ‘கிராஸ் செக்’ செய்வதற்காக கழுகாரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். செல்போனைக் காதிலிருந்து எடுக்காமல், தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த அழைப்புகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார் கழுகார். பிறகு நம்மிடம் பேசியவர், “முதலில் சரியான செய்தி எது என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், இந்த வாட்ஸ்அப் வதந்திகளால், ‘தவறான

செய்தியைத் தவறான செய்திதான்’ என்று உறுதிப்படுத்திக்கொண்டிக்கிறோம்” என்றார்.
“டி.ஜி.பி-யின் அறிக்கையும் அதற்குப் பிறகு ஏற்பட்ட வதந்திகளையும் சொல்கிறீரா?”
“ஆம்.டி.ஜி.பி-யின் அறிக்கை சாதாரணமானதுதான். அனுபவம் வாய்ந்த போலீஸ் நிருபர்கள் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. போராட்டங்கள், மாநாடுகள், திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்குச் சிறப்புக் காவலர்கள் பணிக்காக அனுப்பப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வேலை முடிந்ததும் அவர்களுடைய கேம்ப்-களுக்குத் திரும்பிவிட வேண்டும். இந்தமுறை அதில் சுணக்கம் ஏற்பட்டது.”
“என்ன சுணக்கம்?”
“ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஓ.பி.எஸ் தியானம், கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்கள் சிறைவைப்பு, சசிகலா கைது, ஆர்.கே.நகர் தேர்தல், அ.தி.மு.க அணிகள் பிளவு-இணைப்பு, நீட் போராட்டம் என்று கடந்த ஒரு வருடமாகவே சிறப்பு போலீஸ் படை ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு, தங்கள் கேம்ப்-களுக்குத் திரும்பாமல் இருந்தனர். ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி-க்களும் தங்கள் மாவட்டத்திலுள்ள வேலைகளுக்காகத் தொடர்ந்து அவர்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அதுபற்றிப் புகார் கிளம்பியதும், டி.ஜி.பி ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு போட்டார். அதுதான் ஊடகங்களில் ‘பிரேக்கிங் நியூஸ்’ என ஒளிபரப்பப்பட்டது. அதைப் பார்த்தவர்கள், தங்கள் கற்பனைகளுக்கு ஏற்பச் செய்திகளைப் பரப்பிவிட்டனர்.”

“ஆட்சிக் கலைப்பு என்றுகூடச் சொல்லப்பட்டதே?”
“அதுதொடர்பான இரண்டு விவகாரங்கள் நீதிமன்றத்தில் உள்ளன. அதில், இறுதித் தீர்ப்பு வரும்வரை, பெரிய அளவில் எதையும் செய்யமாட்டார்கள். ஆட்சிக் கலைப்புக்கும் வாய்ப்பே இல்லை; அதனால், அது நடக்கவே நடக்காது என நீரே எழுதி இருந்தீரே!”
“ம்ம்ம்… அதைப் புரிந்துகொண்டுதான் எல்லோரும் கோபாலபுரம் பக்கம் கவனத்தைத் திருப்பிவிட்டார்களா?”

“ஆம். தி.மு.க தலைவர் கருணாநிதி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தபோதே, அவரைப் பற்றி வதந்தி கிளம்பியது. அதற்காகத்தான் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள் என்று கிளப்பினார்கள். கருணாநிதி குறித்து வதந்தி வருவது ஒன்றும் புதிதல்ல. அது, வருடத்துக்கு இரண்டு முறை கிளப்பப்படும். இப்போது அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு முழுமையான ஓய்வில் வேறு இருக்கிறார். கேட்கவா வேண்டும். டி.ஜி.பி-யின் அறிவிப்பை கருணாநிதியின் உடல்நலத்துடன் முடிச்சுப் போட்டு வதந்தி பரவவிட்டார்கள். உடனடியாக அந்தச் செய்தியை கனிமொழி, தன் ட்விட்டர் பக்கத்தில் மறுத்தார். உண்மை, தெருவைச் சுற்றி வருவதற்குள்… வதந்தி, ஊரையே சுற்றி வந்துவிட்டது. அதனால், கனிமொழியின் ட்வீட் எடுபடவில்லை.”
“செய்தியைவிட வதந்தி வேகமாகப் பரவுமே.”
“தொடர்ச்சியாக அறிவாலயத்துக்கும், மு.க. ஸ்டாலின் வீட்டுக்கும், தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களுக்கும் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. இதையடுத்து, டென்ஷனான ஸ்டாலின், கோபாலபுரம் வந்து பேட்டி கொடுத்தார். அப்போதும் வதந்திகள் ஓயவில்லை. அதன்பிறகுதான் பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீரசாமி ஆகியோரையும் வரவழைத்து கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டனர்.அந்தப் புகைப்படம் வெளியானதும் ஒருவழியாக வதந்தி நின்றுவிட்டது.”

“தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டதே? அதுவும் இந்த வதந்திக்கு அடிப்படையாக அமைந்ததே?”
“இதுவும் வதந்தியின் உச்சம்தான். தலைமைச் செயலகத்துக்கு எதற்காக தலைமை நீதிபதி வரப்போகிறார்?  புரோட்டோகால்படி அப்படி ஒரு நடைமுறையே கிடையாது. முதல்வரே நேரில் போய்தான் தலைமை நீதிபதியைச் சந்திப்பார். அதுவுமே மிகமிக அசாதாரணமான சூழலில்தான் நடக்கும். தலைமை நீதிபதியும் முதலமைச்சரும் சந்திப்பது நடைமுறையும் அல்ல. அதனால், அந்தச் செய்தியும் பொய்”
“நடராசன் சீரியஸாக உள்ளார். அதனால் சசிகலா பரோலில் வரப்போகிறார் எனச் செய்தி வந்ததே?”
“நடராசன் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்குக் கல்லீரல் கிடைப்பதில் இருக்கும் சிக்கல் பற்றி கடந்த இதழிலேயே சொல்லியிருந்தேன். தற்போது, அவருடைய உறவினர் ஒருவர் மூலமாக கல்லீரல் கிடைத்துவிட்டதாக தகவல். ஆனாலும், அவருக்கு கிட்னி மற்றும் கல்லீரல் இரண்டையும் பொருத்தும் அறுவைச் சிகிச்சைகள் அநேகமாக இரண்டு நாள்களில் நடந்துவிடும். மருத்துவமனையில் 24 மணி நேர டயாலிசிஸில் இருக்கிறார். அது தெரியாமல் யாரோ நடராசன் பற்றி வதந்தி கிளப்பிவிட்டார்கள். சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்தாகவும் செய்திகள் வந்தன”
“ம்”
“தினகரனைக் கைது செய்யப்போகிறார்கள் என இன்னொரு வதந்தி பரவியது. அவர்மீதான பழைய வழக்குகள் அனைத்திலும் அவர் கைதாகி ஜாமீன் பெற்றுவிட்டார். புதிதாக வழக்குப் போட்டால்தான் கைது செய்ய முடியும். அதனால், அதுவுமில்லை என்றானது. இப்படியாக, வதந்திகள் சுற்றிச்சுற்றி அனைவரையும் திணறடித்தது.”
“ ‘தினகரன் எங்களுடன் வருவார்’ என மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் பேட்டி கொடுத்தாரே?”
“மத்திய அரசிடம் க்ரீன் சிக்னல் காட்டாமல், தம்பிதுரை இப்படி பேசியிருக்கமாட்டார் என்கிறார்கள். தினகரனுக்கு மேலூரிலும், திருச்சியிலும் திரண்டுவந்த கூட்டத்தைப் பார்த்த மத்திய உளவுத்துறையினர், ‘தினகரனைக் கட்சியில் சேர்க்காமல் பி.ஜே.பி கூட்டணி வைப்பது நல்லதல்ல. பன்னீர்செல்வத்தைச் சேர்த்ததுபோல் தினகரனையும் சேர்க்க வேண்டும்’ எனச் சொன்னதாம். ஏனென்றால், தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையால், தி.மு.க-வின் இமேஜ் மக்களிடம் கூடி வருகிறதாம். தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி உருவெடுக்கும். தேர்தலில் அதற்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டுமானால், ஃபெவிக்காலை இரண்டாவது முறையாக பி.ஜே.பி கையிலெடுத்தால்தான் நடக்கும் என்று நினைக்கிறார்கள். தனியாக இருக்கும் தினகரனை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் உடன் சேர்த்து ஃபெவிக்கால் மூலம் ஒட்டவைப்பது குறித்து பி.ஜே.பி மேலிட பிரமுகர்கள் ஆலோசனை நடத்தினார்களாம். முதலில், எடப்பாடி தரப்பினரை விட்டு அழைப்பு விடுப்பது. இதற்கு தினகரனின் ரியாக்‌ஷனைப் பார்ப்பது. ஒருவேளை தினகரன் முரண்டு பிடித்தால், வேறு அஸ்திரத்தை எடுப்பார்களாம்!”

“தம்பிதுரை அழைப்புக்கு தினகரன் உடனடியாக ஏதும் பதில் பேசவில்லையே?”
“அங்குதான் சூட்சுமமே இருக்கிறது. எடப்பாடி தரப்பிலிருந்தும் உடனடியாக தம்பிதுரை பேச்சுக்கு மறுப்பு சொல்லவில்லை, கவனித்தீரா? தினகரன் தரப்பிலிருந்து பி.ஜே.பி. மேலிடத்துக்கு ஏற்கெனவே சில கண்டிஷன்களைப் போட்டுள்ளனர். அதன்படி நடந்தால், நிச்சயம் இணைவோம் என்று சொல்லியுள்ளனர்.  ஒரு மாதத்துக்கு முன்பே பி.ஜே.பி ஆதரவு பத்திரிகையாளர் ஒருவரை தினகரன் சந்தித்துப் பேசியதை உமக்குச் சொல்லியிருந்தேன். சசிகலா, தினகரன் ஆகியோரை ஆதரித்து சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து ட்வீட் செய்து வருவதையும் இதனோடு இணைத்துப் பாரும்!”
“கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாகத்தான் வருகிறது!”
“சமரசப் பேச்சுக்கள் கிளம்பினால், தினகரன் சில கண்டிஷன்களைப் போடுவாராம். ‘எடப்பாடி  முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும்.  ஊழல் அமைச்சர்கள் ஏழு பேரை நீக்கவேண்டும்’ என நிபந்தனைகள் விதிக்கலாம் என்கிறார்கள்”
“ஓஹோ!”
“எடப்பாடி, பன்னீர், தினகரன்… மூவருக்கும், ‘ரெய்டு’ என்கிற மூக்கணாங்கயிற்றை ஏற்கெனவே பி.ஜே.பி போட்டுவிட்டது. கயிறைக் கையில் வைத்திருக்கும் அக்கட்சி, மூவரை எந்தப் பக்கம் திருப்பினாலும், அந்த ரூட்டில் இவர்கள் பயணித்துதான் ஆகவேண்டும். முதலமைச்சர் பதவியில் இருக்கிறார் என்பதற்காக எடப்பாடியும் நிம்மதியாக இல்லை. தினகரனும் தலைவலியுடன்தான் இருக்கிறார். தன்னை எப்போது வேண்டுமானாலும் எடப்பாடி காலி செய்யலாம் என்று பன்னீரும் பதறுகிறார். இந்த மூவரது நடவடிக்கைகளையும் மத்திய உளவுத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதை வைத்தே மத்திய அரசு மிரட்டி வருகிறது. இந்த நிலையில், கிடைத்துள்ள ஒரு செய்தி எடப்பாடியின் பதவிக்கு வேட்டு வைக்கலாமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி யுள்ளது”
“அது என்ன?”
“முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது கவர்னர் வித்யாசாகர் ராவ் வருத்தத்தில் இருக்கிறார் என்றும் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை என்றும் சொல்லப்படுகிறது!”
“இந்த ஆட்சியை முட்டுக்கொடுத்துக் காப்பாற்றுவதே கவர்னர்தானே?”
“டெல்லி பி.ஜே.பி மேலிடத்தின் செல்லப்பிள்ளையாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, மாநில கவர்னரான தன்னை எடப்பாடி சரிவர மதிப்பதில்லை என வருத்தப்படுகிறாராம் வித்யாசாகர் ராவ். தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை நீக்கியதுபற்றி முன்கூட்டியே கவர்னருக்குத் தகவல் சொல்லவில்லையாம். இதேபோல், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்மீதான சட்டமன்ற உரிமைக்குழு விசாரணை விவரங்களையும் முறைப்படி சொல்லவில்லை. கவர்னர் தரப்பில் இதுபற்றி சுட்டிக்காட்டியபோது, ‘டெல்லி வி.வி.ஐ.பி-க்குத் தெரியுமே. அவர் உங்களிடம் சொல்லவில்லையா?’ என எடப்பாடி தரப்பினர் கேட்டார்களாம். இதை கவர்னர் ரசிக்கவில்லை.”

ஓஹோ’’

“சசிகலாவின் தம்பி திவாகரனை கவர்னர் சந்தித்தார். அப்போது சசிகலா குடும்பத்தினரோடு எடப்பாடி தரப்பு நட்பில் இருந்தது. ஆனால், திவாகரனுக்கு நினைத்த நேரத்தில் ராஜ்பவன் அப்பாயின்ட்மென்ட் தருவதையெல்லாம் எடப்பாடி தரப்பினர் உன்னிப்பாக கவனித்து வந்தனர். இதெல்லாம் சேர்ந்துதான் கவர்னர்மீது எடப்பாடி தரப்பினருக்குக் கோபம் அதிகமானது. அரசின் எந்த முக்கிய நிகழ்வையும் முன்கூட்டியே கவர்னருக்குத் தெரிவிப்பதில்லையாம். இதையடுத்து, ‘தமிழக அரசுமீது வரும் புகார்களைத் தூசிதட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறார் கவர்னர்’ எனச் சொல்கிறார்கள் ராஜ்பவன் வட்டாரத்தினர்.”
“கவர்னர் உருவிலும் எடப்பாடிக்கு நெருக்கடியா?”
“எடப்பாடிக்கு இன்னொரு நெருக்கடியும் ஆரம்பித்துள்ளது. எடப்பாடிமீது கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்திலுள்ள சீனியர்கள் ஏக வருத்தத்தில் இருக்கிறார்களாம். எல்லாம் இரண்டு ‘மணிகள்’தான் காரணம்.  ஒருவர் வேலுமணி. இன்னொருவர் தங்கமணி. ஏ டூ இஸட் விஷயங்களை  இந்த  இருவருடன்தான் டிஸ்கஸ் செய்கிறாராம் எடப்பாடி. உள்ளாட்சித் துறையில் நடக்கும் பல விவகாரங்களை எடப்பாடி கண்டுகொள்வதில்லையாம். அதேபோல், மின்துறையில் எந்த ஒரு புதிய ஒப்பந்தம் என்றாலும் முதல்வர் தலையாட்டிவிடுகிறாராம். அப்படியானால், நாங்கள் எதற்கு இருக்கிறோம் என்பது இவர்களின் கேள்வி! அதேபோல், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இன்னொரு அமைச்சரான செங்கோட்டையனின் பள்ளி கல்வித்துறையின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் சூப்பராக இருந்தன. சமீபத்தில் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பணியிட மாறுதல் கேட்டு சிபாரிசு செய்தார்கள். அதையெல்லாம் உடனே செய்து கொடுத்தார்களாம்.பலன் அடைந்தவர்களைத் தொடர்புகொண்ட அமைச்சர் தரப்பினர், அந்த மாறுதல் ஒவ்வொன்றுக்கும் ரேட் பேசி வசூலித்தார்களாம். இதைக் கேள்விப்பட்ட சிபாரிசு செய்தவர்கள்,  நேராக அமைச்சரிடம் போய் காரசாரமாக வாக்குவாதம் செய்தார்களாம். அமைச்சரின் பெயரைச் சொல்லி, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சேனல்கள் ஜெகஜோதியாக கல்லா கட்டுகிறார்களாம். இதெல்லாம் முதல்வருக்குத் தெரியாமல் இருக்குமா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் கட்சியின் சீனியர்கள்” என்றபடி கழுகார் பறந்தார்.

%d bloggers like this: