சசிகலாவுக்காகப் போராடும் காங். புள்ளி.. பரோலுக்குப் பதில் சொன்ன கர்நாடக அரசு தரப்பு!

பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா சிறைவிதிகளை மீறியதால் பரோல் கிடைக்காமல் தவித்து வருகிறார் சசிகலா. ‘ கணவரைப் பார்ப்பதற்காக பரோலில் வரும் எண்ணத்தில் இருக்கிறார் சசிகலா. அவரது விண்ணப்பம் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவரது பரோலுக்காக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த ரூபாவின் அதிரடி நடவடிக்கையால், சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட சலுகைகள் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. பொதுவாக, சிறைச்சாலைகளில் இதுபோல் நடப்பது வழக்கம்தான் என்றாலும், சிறை வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால், பலமுறை பரோலில் வர விரும்பியும் கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், கணவர் நடராஜனை சந்திக்க பரோலில் சசிகலா வர இருக்கிறார் என்ற தகவல் மன்னார்குடி வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. ‘ பரோல் கேட்டு அவர் விண்ணப்பிக்கவில்லை’ என சிறைத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடிக்கு வாய்ப்பு
காங்கிரஸ் மேலிடம் தயவு

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா குடும்பத்து உறவினர் ஒருவர், ‘ சிறை நிர்வாகத்திடம் முறைப்படி மனு கொடுத்தால், அது தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என சசிகலா நினைக்கிறார். ‘காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து உறுதியான தகவல் கிடைத்தால் மட்டுமே மனு அளிப்பது’ என்ற முடிவில் இருக்கிறார். ‘ஒரு மாதம் வெளியில் இருந்தாலே கட்சி நிர்வாகிகளை ஒன்று சேர்த்துவிடலாம்’ எனக் கணக்கு போடுகிறார் சசிகலா.

நடராஜனை சந்தித்த காங்கிரஸ் புள்ளி
காங்கிரஸ் முக்கிய புள்ளி நடராஜனுடன் சந்திப்பு

இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜனை சந்திக்க தமிழக காங்கிரஸ் புள்ளி ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் பேசிய சசிகலா உறவினர்கள், ‘ அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே போகிறது. பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டால், சசிகலா மனதளவில் உடைந்து போய்விடுவார். கர்நாடக அரசிடம் நீங்கள்தான் பேச வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்க, அங்கிருந்தபடியே கர்நாடக அரசின் முக்கிய நபருக்குப் போன் சென்றுள்ளது. எதிர்முனையில் பேசியவரோ, ‘ நிலைமை விபரீதமாக இருந்தால் பரோல் கொடுப்பதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், சிறைவிதிகளை மீறி அவர் வெளியில் சென்று வந்ததாக எல்லாம் செய்திகள் வெளியாகிவிட்டது. பரோலில் அனுப்புவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் ஒரு வார்த்தை அகமது படேலிடமும் சொல்லிவிடுங்கள். நாளை எங்களை நோக்கி எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது’ என விவரித்திருக்கிறார். இதன்பின்னர், அகமது படேலிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் காங்கிரஸ் புள்ளி. இதன் நீட்சியாக சசிகலாவுக்குப் பரோல் வழங்கப்படலாம்’ என்றார் விரிவாக.

ராகுல் காந்தி வருகைக்கு காரணம்
காங்கிரஸ் மீது அதீத பாசம்

‘ எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் கரங்கள் வலுப்படுவதற்கு அந்த முக்கியப் புள்ளியும் ஒரு காரணம். இத்தனை ஆண்டுகளாக நடராஜனிடம் நல்ல நட்பிலும் இருக்கிறார். அதனால்தான், அப்போலோவில் அரசியல் சர்ச்சைகள் எழும்பியபோது, ராகுல்காந்தியை வரச் செய்தார். இந்த ஒரு காரணமே சசிகலா குடும்பத்தின் மீது பா.ஜ.க கொந்தளிக்க காரணமாக அமைந்துவிட்டது. சசிகலா குடும்பத்தை கட்டம் கட்டியதற்கு காங்கிரஸ் மீது காட்டப்பட்ட அதீத பாசம்தான் காரணம். இதன்பிறகு, ‘ நடராஜனை அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்’ என பா.ஜ.கவிடம் தூது சென்ற கோஷ்டிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

நடராஜன் ஒதுங்கினார்
ஒதுங்கியிருந்த நடராஜன்

தொடர்ச்சியான வழக்குகள், அவப்பெயர் என நீடித்துக் கொண்டே போனதால் குடும்பத்திடமும் இருந்து ஒதுங்கியே இருந்தார் நடராஜன். தினகரன்-திவாகரன் சந்திப்பின்போதும் சந்தான லட்சுமியின் மறைவின்போதும் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுக்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது உடல்நலக் கோளாறால் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தும் ஒதுங்கிவிட்டார். சசிகலாவைக் காண வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோளாக இருக்கிறது. நடராஜனுடன் உள்ள நீண்ட கால நட்பின் அடிப்படையில் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தூது சென்றிருக்கிறார் தமிழகக் காங்கிரஸ் புள்ளி. ‘இதனால் நமக்கு என்ன லாபம் இருக்கிறது?’ என்றுதான் காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. தமிழக காங்கிரஸ் புள்ளியின் எண்ணம் நிறைவேறுமா என்பது சசிகலாவுக்குப் பரோல் கிடைப்பதில்தான் இருக்கிறது’ என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

%d bloggers like this: