மன இறுக்கம் எனும் கொடிய பிரச்சனையிலிருந்து விடுபடும் வழி

மன இறுக்கம் என்றால் என்ன? (What is depression?)

பெரும்பாலான மக்கள் அவ்வப்போது மன இறுக்கமாக அல்லது சோகமாக இருப்பதாக உணர்வதுண்டு. வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகள், போராட்டங்கள், பெருமைக்கு இழுக்கு ஏற்படுதல் அல்லது ஈகோ, காயப்படுதல் போன்ற பல நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக மன இறுக்க உணர்வுகள் தோன்றுகின்றன.

வழக்கத்திற்கு மாறாக, நான் மதிப்பற்ற ஒரு நபர், கைவிடப்பட்டவர் அல்லது நேசிக்கப்படாத ஒரு நபர் என்பது போன்ற உணர்வுகள் நீண்ட காலத்திற்கு இருப்பதுண்டு. இது அவர்களின் தினசரி வாழ்க்கை மற்றும் காரியங்களையும் பாதிக்கும், இதையே மன இறுக்கம் என்கிறோம்.   மன இறுக்கம் என்பது பொதுவான ஒன்றுதான், ஆனால் அது தீவிரமாகப் போகும்போது, அதற்கு சிகிச்சை அவசியம்.

பொதுவாக பள்ளி, கல்லூரி, பணிபரியும் இடத்திலான தினசரி செயல்பாடுகளிலும், சமூக செயல்பாடுகள் மற்றும் உறவுகளிலும் மன இறுக்கத்தின் அறிகுறிகளைக் கவனிக்க முடியும்.

பெண்களுக்குள்ள மன இறுக்கமானது ஆண்களை விட 50% அதிகமாக உள்ளது என WHO கணக்கிட்டுள்ளது. உலகளவில் 2020-இல் இயலாமைக்கான இரண்டாவது முக்கியக் காரணமாக, மன இறுக்கம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தமுள்ள நபர்களில் மன இறுக்கமுள்ளவர்கள் 15. 9% ஆக உள்ளனர். திருமணமாகாதவர்கள், விவாகரத்தானவர்கள், துணைவரை இழந்தவர்கள் நெருங்கிய உறவுகள் இல்லாதவர்கள் போன்ற பிரிவினரில் மன இறுக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது

இந்தியாவில் மன இறுக்கம் அதிகம் பேரைப் பாதிப்பதற்கு வறுமை, சமூக பொருளாதார இன்னல்கள், விளிம்புநிலைக்குத் தள்ளப்படுதல் மற்றும் பிற காரணிகளும் காரணங்களாக இருப்பதாகக் கருதப்படுகின்றன.

மன இறுக்கத்தின் வகைகள் (Types of depression)

மன இறுக்கத்தில் பல வகைகள் உள்ளன:

 • பெரும் மன இறுக்கக் கோளாறு (MDD): ஒரு நபர் தனது தினசரி செயல்பாடுகளைச் சரிவரச் செய்ய முடியாதபடி செய்யக்கூடிய அறிகுறிகள் மொத்தத்தையும் சேர்த்து பொதுவாக MDD என்று குறிப்பிடுகிறோம். MDD என்பதை பெரிய மன இறுக்கம் அல்லது மருத்துவ நிலை மன இறுக்கம் என்றும் குறிப்பிடுகிறோம்.
 • சிறு அளவிலான நாள்பட்ட கோளாறு: இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலம் நீடிக்கும் மன இறுக்கத்தை சிறு அளவிலான நாள்பட்ட கோளாறு அல்லது நாள்பட்ட மன இறுக்கம் என்கிறோம். அறிகுறிகள் மிகக் கடுமையாக இருப்பதில்லை, ஆனால் ஒருவரை சாதாரண வாழ்க்கையை வாழவிடாமல் தடுக்கும் அல்லது நன்றாக இருப்பதாக உணரவிடாமல் செய்யும்.
 • உளவியல் மன இறுக்கம்: இல்லாத கற்பனைகள், மனப் பிரமை போன்ற உளவியல் அறிகுறிகளுடன் கூடிய ஒரு வகை மன இறுக்கம்.
 • குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஏற்படும் மன இறுக்கம்: இது தாய்மார்களுக்கு வழக்கமாக குழந்தை பிறப்புக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு ஏற்படுகிறது.
 • பருவகாலத்தில் தாக்கும் கோளாறு (SAD): குறிப்பாக பெண்களுக்கு, குளிர்காலத்தின்போது ஏற்படும் மன இறுக்கப் பிரச்சனையை SAD என்று குறிப்பிடுகின்றனர்.

மன இறுக்கத்தின் அறிகுறிகள் (Symptoms and Signs)

மன இறுக்கத்தின் பொதுவான அறிகுறிகள்

 • தொடர்ந்து பலநாட்கள் சோகமாக இருப்பது
 • கைவிடப்பட்டது போன்ற அல்லது எதிர்மறையான மனநிலைகள்
 • பதற்றம் மற்றும் தன்மீது மதிப்பற்ற நிலை
 • தவிப்பு, குற்ற உணர்ச்சி மற்றும் / அல்லது தன்மீது மதிப்பற்றது போன்ற உணர்வுகள்
 • அதிகமாகச் சாப்பிடுதல் அல்லது பசியின்மை
 • தற்கொலை பற்றிய எண்ணங்கள் அல்லது முயற்சிகள்
 • மகிழ்ச்சிகரமான காரியங்களில் ஆர்வம் இல்லாமை
 • தெம்பு குறைவு மற்றும் சோர்வு
 • அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை
 • தீராத தலைவலி, செரிமானக் கோளாறுகள் அல்லது வலி

ஆண்களில் மன இறுக்கத்திற்கான அறிகுறிகள் (Symptoms of depression in men)

மன இறுக்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் பாதிக்கிறது. ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே உள்ளன.

மன இறுக்கம் இருக்கும்போது, ஆண்கள் எளிதில் எரிச்சலடையலாம், பதற்றமாக இருக்கலாம் அல்லது முரட்டுத்தனமாக இருக்கலாம் சமூகத்திலிருந்து ஒதுங்கிச் செல்லும் மனோபாவம் அவர்களுக்கு இருக்கலாம்.

நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கும், சிறிய தனிக்குடும்பமாக இருப்பவர்களுக்கும், உணர்வுரீதியான ஆதரவு இல்லாத காரணத்தால் மன இறுக்கத்திற்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. மருத்துவரீதியான பிரச்சனைகளும் வயது முதிர்வும் மன இறுக்கம் ஏற்படுவதற்கான அபயாத்தை மேலும் அதிகரிக்கின்றன. பொதுவாக ஆண்கள் தங்கள் உணர்வுகளை மறைத்துக்கொண்டு வாழ்வார்கள், அவர்களுக்கு மன இறுக்கம் இருப்பதற்கான அறிகுறிகளை மருத்துவரால் எளிதில் கண்டுகொள்ள முடியாமல் போகலாம். வயது அதிகமான ஆண்களுக்கு, நீரிழிவுநோய், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், சுகவீனத்திலிருந்து முற்றிலுமாக குணமாகாமை, பணி ஒய்வு, நண்பர்கள் மற்றும்/அல்லது உறவினர்களை இழப்பது போன்ற காரணங்களால் மன இறுக்கம் ஏற்படலாம்.

பெண்களில் மன இறுக்கத்திற்கான அறிகுறிகள் (Symptoms of depression in women)

ஆண்களை விட பெண்களுக்கு மன இறுக்கத்தின் அறிகுறிகள் அடிக்கடித் தோன்றுகின்றன. இந்தியாவில், எல்லா வயது பெண்களுக்கும் மன இறுக்கம் பொதுவாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு மன இறுக்கம் ஏற்பட உயிரியல், மரபியல், ஹார்மோன், உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த காரணிகள் காரணமாக இருக்கலாம்.

பெண்கள் தமது இனப்பெருக்கத்தின் பல்வேறு கட்டங்களில் பின்வருபவற்றால் பாதிக்கப்படலாம்:

 • மாதவிடாய்க்கு முந்தைய துன்பக் கோளாறு (ப்ரீமென்ஸ்ட்ருவல் டிஸ்ஃபோரிக் டிசார்டர் (PMDD))
 • கர்ப்ப காலத்தில் மன இறுக்கம்
 • குழந்தைப் பேறுக்குப் பிறகான மன இறுக்க நிலைமைகள்
 • மாதவிடாய் நிற்பது சார்ந்த மன இறுக்கம்

வீட்டில் எதிர்கொள்ளும் வன்முறை, சமூகத்தில் நல்ல நிலை இல்லாமை, பாதிப்புகளுக்கு உள்ளாதல், உளவியல் கோளாறு உள்ளது என்று சமூகத்தால் முத்திரை குத்தப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு மன இறுக்கம் ஏற்படலாம்.

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் மன இறுக்கத்தின் அறிகுறிகள் (Symptoms of depression in children and adolescents)

குழந்தையின் நடத்தை பிரச்சனைக்குரியதாகவும் சமூகத்தில், குடும்பத்தில் அல்லது பள்ளியில் சகஜமான வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியதாகவும் இருந்தால், மன இறுக்கம் என்பது சிக்கலாகலாம். இளம் வயதினரில், 2 வாரங்களுக்கும் மேல் மன இறுக்கம் நீடித்தால், அவர்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் மன இறுக்கத்தால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவர்கள் சதவீதம் 21. 5 முதல் 71,25% வரையுள்ளது. இளம் வயதினரில், 2 வாரங்களுக்கும் மேல் மன இறுக்கம் நீடித்தால், அவர்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதப்படுகிறது. இளம் வயதினரில் ஏற்படும் மன இறுக்கம் என்பது அச்சுறுத்தலான மனக் கோளாறாகும், எப்போதும் சோகமாக இருப்பது, தினசரி செயல்பாடுகளில் ஆர்வமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மன இறுக்கமானது இளம் வயதினரின் உணர்வுகள், நடத்தை, செயல்பாடு, உணர்வு சார்ந்த மற்றும் உடல் சார்ந்த அம்சங்களைப் பாதிக்கிறது. மன இறுக்கத்தின் அறிகுறிகள் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் வேறுபடுகின்றன.

மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரியில் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்: கல்வியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அழுத்தம், மற்றவர்களைப் போல தாமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம், சமூக ஊடகத்தில் கேலிக்கு உள்ளாக்கப்படுவது, போட்டி போன்ற இவை அனைத்துமே மாணவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படக் காரணமாகலாம்.

இளைஞர்கள், குறிப்பாக இள வயதிலிருந்து பெரியவர்கள் எனும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் வயதில் உள்ளவர்கள், தமது வாழ்வின் பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் இருப்பதால், இவர்களும் மன இறுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. என்ன படிப்பு படிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வது, எந்தத் துறையில் வேலை செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்வது, முழுதும் பெற்றோரைச் சார்ந்து இருந்த நிலையில் இருந்து சற்று சுயமாக பொறுப்பெடுத்துக்கொள்ளும் நிலைக்கு மாறுவது போன்றவை இந்த காலகட்டத்தில் இளம் வயதினர் எதிர்கொள்ளும் சவால்களாகும்.

மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலான மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கும். கல்லூரி அல்லது பள்ளியில் எதிர்கொள்ளும் சவால்கள், யாரையும் சாராமல் தனியாக வாழக் கற்றுக்கொள்ளுதல், குடும்பத்தைப் பிரிந்து தனியாக இருப்பது, புதிய உறவுகளைப் பெறுவது, சீரற்ற தூக்கம் போன்ற காரணங்களால் மாணவர்களுக்கு மன இறுக்கம் ஏற்படலாம். கல்வியில் தரம் குறைதல், போதைப் பழக்கம் மற்றும் அவ்வப்போது (பள்ளி கல்லூரிக்கு) வராமல் போவது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பங்களை (மொபைல், கணினி போன்றவை) அதிகமாகப் பயன்படுத்துவதும் மன இறுக்கத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

மாணவர்களுக்கு மன இறுக்கம் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுகொண்டால், தற்கொலை போன்ற ஆபத்தான விளைவுகளைச் சிறப்பாகச் சமாளிக்கலாம், தடுக்கலாம். இந்தியாவில் தற்கொலை முயற்சி செய்பவர்களில் அதிகமானவர்கள் 30 வயதுக்குக் கீழே உள்ள மாணவர்கள், திருமணமாகாத ஆண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என்று தெரியவந்துள்ளது.

கண்டறிதல் (Diagnosis)

மன இறுக்கம் எப்படிக் கண்டறியப்படுகிறது? (How is depression diagnosed?)

மருத்துவர்கள் மன இறுக்கம் இருப்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? பொதுவாக மருத்துவர்கள் நோயாளியிடம் பேசுவதன் மூலமே அவருக்கு மன இறுக்கம் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும். இரத்தப் பரிசோதனை போன்ற சோதனைகள் எதுவும் தேவையில்லை.

பெரும்பாலும் நோயாளிக்கு மன இறுக்கத்தின் அறிகுறிகள் உள்ளதா எனக் கண்டுபிடிக்க, மருத்துவர் அவரிடம் பேசுவார். குடும்பத்தில் யாருக்காவது மன இறுக்கப் பிரச்சனை இருந்ததா என்பது பற்றி மருத்துவர் கேட்கலாம், மேலும் நோய் கண்டறிவதற்காக ஒரு ஆய்வு செய்து உங்களிடம் பின்வரும் உணர்வுகள் பற்றி சில கேள்விகளைக் கேட்கலாம்:

 • நாள் முழுவதும் மன இறுக்கம் அல்லது சோகமான உணர்வு
 • எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு
 • தினசரி களைப்பாக இருப்பதாக உணர்வது
 • கிட்டத்தட்ட தினந்தோறும், குற்ற உணர்ச்சி அல்லது நம்பிக்கையில்லாத உணர்வு கொண்டிருத்தல்
 • தற்கொலை எண்ணங்கள், முயற்சிகள் அல்லது திட்டங்கள்
 • முன்பு மகிழ்ச்சியாக செய்த விஷயங்களில் இப்போது ஆர்வம் இல்லாமல் போவது
 • அளவுக்கு அதிகமான தூக்கம் அல்லது தூக்கமின்மை
 • உளவியல் கோளாறுகள் (சைக்கோசொமாட்டிக்): தினமும் உடல் வலி அல்லது என்னவென்று புரியாத வலிகள் ஏற்படுவது மன இறுக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

5-க்கும் அதிகமான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, முன்பு அவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்த விஷயங்களில் இப்போது ஆர்வம் இல்லாமல் போகும் பிரச்சனை இருந்தால், இரண்டு வாரங்களுக்கும் மேல் சோகம் அல்லது மன இறுக்கப் பிரச்சனை நீடித்தால், அவர்களுக்கு பெரிய அளவில் மன இறுக்கம் உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.

சில மருந்துகள், போதை மருந்துகள், ஆல்கஹால் அல்லது ஹைப்போதைராய்டிசம் போன்ற காரணங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவர் சில ஆய்வகப் பரிசோதனைகளைச் செய்யப் பரிந்துரைக்கலாம்.

சிகிச்சை மற்றும் தடுத்தல் (Treatment and Prevention)

சிகிச்சை (Treatment)

மன இறுக்கம் உள்ளவர்கள் பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்பார்கள் – “மன இறுக்கத்தை எப்படி வெல்வது” அல்லது “மன இறுக்கத்தில் இருந்து எப்படி வெளிவருவது?”

பெரும்பாலான நோயாளிகளுக்கு, பெரிய அளவிலான மன இறுக்கத்திற்கு சிகிச்சை அளிக்க முடியும்.   மன இறுக்கத்திற்கான சிகிச்சையில் மருந்துகளும் உளவியல் சிகிச்சைகளும் நல்ல பலன் தரக்கூடியவை. மன இறுக்கம் கடுமையாக பாதித்திருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டி இருக்கலாம் அல்லது புற நோயாளிகளுக்கான திட்டங்களில் கலந்துகொள்ள வேண்டி இருக்கலாம். மன இறுக்கத்திற்கான சிகிச்சைகள்:

மருந்து (Medication)

மன இறுக்கத்திற்கு சிகிச்சையளிப்பதற்கு என்று, மன இறுக்கத்திற்கு எதிரான சில வகை மருந்துகள் கிடைக்கின்றன. சோதனைகள், ஒருவரது குடும்பத்தினரின் மருத்துவ வரலாறு, தனிப்பட்ட எதிர்வினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட சில மருந்துகள் சேர்த்து வழங்கப்படலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைக்கு ஏதேனும் அபாயம் ஏற்படும் சாத்தியம் உள்ளதா என்பது பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

மன இறுக்கத்திற்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களை சற்று கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும், மருந்தை எடுக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ஏதேனும் அவர்களிடம் ஏதேனும் வினோதமான நடவடிக்கைள் உள்ளதா அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.

உளவியல் சிகிச்சை (Psychotherapy)

இது உளவியல் அல்லது பேச்சு சிகிச்சை என்றும் கூறப்படுகிறது. உளவியல் சிகிச்சையானது மனக் கலக்கத்தைச் சமாளிக்கவும், யதார்த்தமான விழிப்புணர்வுடன் இருக்கவும், மன அழுத்தத்தைப் பொறுத்துக்கொள்வதற்காக ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக்கொள்ளவும் சவால்களை ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ள உதவுகிறது.

தடுத்தல் (Prevention)

மன இறுக்கத்தைத் தடுப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட முறை எதுவும் இல்லை. இருப்பினும், மன இறுக்கத்தைத் தடுக்க இந்த அணுகுமுறைகள் உதவலாம்:

 • மன இறுக்கத்தைச் சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து, உங்களைப் பற்றிய சுய அபிப்ராயத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொஞ்சம் ஓய்வாக இருக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், அதிக வேலைப்பளுவை ஏற்றிக்கொள்ள வேண்டாம். பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களில் ஈடுபடுங்கள்.
 • நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பேசுங்கள், குறிப்பாக தேவைப்படும்போது பேசுங்கள், அது சிரமமான சூழ்நிலைகளை நீங்கள் சமாளித்து வெல்ல உதவியாக இருக்கும்.
 • மன இறுக்கத்தின் முதல் அறிகுறியை அறிந்ததுமே மருத்துவரிடம் ஆலோசிப்பதன் மூலம் அது மோசமடையாமல் தடுக்கலாம்.
 • அறிகுறிகள் மீண்டும் வந்துவிடாமல் தவிர்க்க, நீண்ட காலத்திற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளத் தயாராக இருங்கள்.
 • தற்கொலை எண்ணங்கள் உருவானால், உதவிக்கு கீழுள்ள எண்களை அழைக்கவும்:

மேலும் படிக்க (Read More)

சிக்கல்கள் (Complications)

மன இறுக்கம் என்பது மக்களுக்கும் குடும்பங்களிலும் துன்பகரமான சேதங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சனையாகும். சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், மன இறுக்கம் மோசமாகி ஒருவரின் நடத்தை மற்றும் உணர்வு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் பாதிக்கலாம்.

மன இறுக்கத்துடன் சம்பந்தப்பட்ட சிக்கல்களில் சில:

நீரிழிவுநோய் மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கக்கூடிய அதிக உடல் எடை அல்லது உடல் பருமன்,

 • உடல் சுகவீனம் மற்றும் வலி: மன இறுக்கம் உள்ள ஒருவருக்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம், உடல் வலிகள் இருக்கலாம், தலைவலி, எளிதில் சோர்வடைதல் போன்ற பல பிரச்சனைகள் காணப்படலாம்.
 • போதைப்பொருள் அல்லது மதுப்பழக்கம்
 • பீதி நோய் அல்லது மனக்கலக்கம்
 • குடும்பம், உறவுகள், பள்ளியில் சமூகப் பிரச்சனைகள் அல்லது வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள்
 • தற்கொலை எண்ணம் அல்லது முயற்சிகள்: மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 50% பேருக்கு தற்கொலை எண்ணங்கள் இருப்பதுண்டு.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

ஒருவர் மன இறுக்கத்தால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டு, அவருக்கு மருந்துகள் எதுவும் பலனளிக்காவிட்டால், புதிய மருந்துகள் அல்லது சிகிச்சைகள் பெறுவது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

மருந்துகளை எதிர்க்கும் இறுக்கங்களுக்கு சிறப்பு மருந்துகள், மூளையைத் தூண்டுதல் மற்றும் உளவியல் சிகிச்சை போன்ற முறைகளைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம்.

எச்சரிக்கை (Red Flags)

எனக்கு மன இறுக்கம் உள்ளதா? (Am I suffering from depression?)

ஒருவருக்கு பின்வரும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள், குறிப்பாக முதலாவது மற்றும் இரண்டாவது அறிகுறிகள் இருந்தால், அவை நீண்ட காலமாக நீடித்தால், அவருக்கு மன இறுக்கம் இருக்கலாம், இருப்பினும் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

 • உதவியற்ற மற்றும் நம்பிக்கையிழந்த உணர்வு
 • முன்பு மகிழ்ச்சியாக செய்த விஷயங்கள் மற்றும் நண்பர்களில் இப்போது ஆர்வம் இல்லாமல் போவது
 • எப்போதும் சோர்வாக உணர்வது
 • பசி மற்றும் தூக்கத்தில் மாற்றங்கள்
 • எதிர்மறை சிந்தனைகளைக் கட்டுப்படுத்த முடியாமை
 • எரிச்சலடைதல், முரட்டுத்தனம் முன் கோபம் போன்றவை முன்பை விட அதிகமாக இருப்பது
 • பொறுப்பற்ற நடவடிக்கை, அதிகமாக மது அருந்துதல்

மன இறுக்கம் உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். மன இறுக்கம் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு அதிகமுள்ளது. உங்களுக்குத் தெரிந்த ஒருவர் திடீரென்று சோகமானால் அல்லது அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் அவருக்கு மன இறுக்கம் இருக்கலாம், அவரிடமோ அல்லது அவருடைய குடும்பத்தினரிடமோ இது குறித்துப் பேசி அதைக் கவனிக்குமாறு அறிவுறுத்தவும்.

மன இறுக்கத்தின் உளவியல் சார்ந்த அம்சங்களால் உளவியல் கோளாறுகளும் ஏற்படலாம். அத்தகைய நபர்கள் உடனடியாக தகுந்த ஆலோசனையும் மருத்துவ உதவியும் பெற வேண்டும்.

%d bloggers like this: