சீரான ஆரோக்கியம் தரும் சியா விதைகள்

சிறப்பான உணவுகளில் ஒன்றாக மாறிவருகிறது சியா விதை. அதில் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துகளும், ஆற்றல் ஊக்குவிக்கும் திறன்களும் மிகுந்திருக்கின்றன. சியா விதைகள் சால்வியா  என்னும்  தாவரத்திலிருந்து கிடைக்கும் சிறிய கருப்பு விதைகள் ஆகும். சால்வியா  தாவரம் புதினா குடும்பத்தைச்  சேர்ந்தது. இது, பழங்கால மாயர்களின்  பிரதான உணவாக இருந்தது என்றும்   அவற்றை ஆற்றலின்  ஆதாரமாகப் பயன்படுத்தினர் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. போருக்குச் செல்லும்போது  அரசர்களும் வீரர்களும் சியா விதைகளைச் சாப்பிட்டுவிட்டுச் சென்றதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

சியா விதைகளுக்கு மாயன் மொழியில்  ‘வலிமை’ என்று பொருள்.  நீண்டநேரம் விளையாடும்போதும், ஓடும்போதும், போரிடும்போதும்  எனர்ஜியைத் தருவதால் சியா விதைகளுக்கு  ‘ரன்னர்ஸ் உணவு’ என்றும் ஒரு பெயருண்டு.  சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்  மிகுதியாக உள்ளன. அதனால், இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சியா விதைகளில்,  அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்களான லினோலிக் மற்றும் ஆல்ஃபா-லினோலினிக் அமிலங்கள் உள்ளன. வைட்டமின்கள் ஏ, பி, இ  மற்றும் டி,  சல்பர், இரும்பு, அயோடின், மெக்னீசியம், மாங்கனீசு போன்ற கனிமச் சத்துக்களும் நிறைந்துள்ளன.
மிக அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட் கொண்ட   உணவுகளில் ஒன்று சியா விதை. அதன் காரணமாக நமது சருமத்தில் உள்ள சிதைந்த செல்கள் அதிவேகமாகச் சரிசெய்யப்படுவதோடு மேலும் சேதம் ஆகாமலும் தடுக்கப்படுகின்றன.
அதிகமான  நார்ச்சத்து  இருப்பதால், சியா விதைகளை  உண்ணும்போது, மிக விரைவில் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால் பசி கட்டுப்படுத்தப்படுகிறது.  உடல் எடை குறைக்கவும் இது உதவுகிறது.

சியா விதைகளிலிருக்கும் நார்ச்சத்து, கணிசமான அளவு தண்ணீரை உறிஞ்சி  வயிற்றை  விரிவடையச்  செய்கிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்தி,  மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. சியா விதைகளை உண்ணும்போது  வயிற்றில்  ஜெல் போன்ற பொருள் உருவாகிறது. இந்த ஜெல், குடலில் உள்ள  தோழமை நுண்ணுயிர்களுக்கு உணவாகி அவற்றின்  வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்துக்கும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும் சியா விதைகள் பயன்படுகின்றன.
கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம்  ஆகியவற்றை அதிகம் கொண்ட சியா விதைகள்,  பற்களுக்கு  ஆரோக்கியத்தை   அளிக்கின்றன.  துத்தநாகம்,  பற்களில்  படிந்துள்ள கறைகளைப்போக்கி, மீண்டும்  வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்  கிருமிகளிடமிருந்து  காப்பாற்றுகிறது.
சியா விதைகளைத்  தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைத்த பிறகு முழுதாகவோ விழுதாக அரைத்தோ பயன்படுத்தலாம். சியா விதைகளை, வறுத்தபிறகு  அரைத்து இட்லி மாவு, தோசை மாவு, சப்பாத்தி மாவு ஆகியவற்றில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
கோழிப்பண்ணைகளில்  கோழிகளுக்கு சியா விதைகளை உணவாகக் கொடுத்தபோது,  ஒமேகா-3   கொழுப்பு அமிலம் நிறைந்த முட்டைகளையும் ஒமேகா-3  நிறைந்த   இறைச்சியையும்  பெற முடிந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இத்தனை சிறப்புகள் வாய்ந்த சியா விதைகளை இன்றிலிருந்தே உணவில் சேர்த்துக்கொள்ளத் தொடங்குவோம்.

%d bloggers like this: