Advertisements

எடைக் குறைப்பு மாத்திரைகள் செய்யுமா மேஜிக்?

டல் எடை குறைக்க இனி மூச்சு வாங்க ஓடவோ, உடற்பயிற்சி, ஜிம், டயட் என்று சிரமப்படவோ தேவையில்லை. எங்கள் மாத்திரையை மட்டும் சாப்பிடுங்கள்… ஒரே மாதத்தில் எடை குறைந்துவிடும்’ என்பதுபோன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரங்களைக் கண்டு மயங்கும் பலர் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, உடல் எடை

குறைக்க விரும்பும் இளம்பெண்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் `டயட் பில்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த மாத்திரைகள்தான்.
இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா? மாத்திரைகள் மூலம் உடல் எடையைக் குறைக்க முயல்வது சரியா? இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா?
விரிவாகப் பார்க்கலாம்.
டயட் பில்ஸ்
டயட் பில்ஸை, ‘பசியைக் கொல்லும் மாத்திரைகள்’ என்று சொல்லலாம். இவை முழுக்க முழுக்க வேதிப்பொருள்களைக் கொண்ட கலவையாகும். கபைஃன் (Caffeine), எபிட்ரா (Ephedra) போன்ற தாவரங்களிலிருந்து கிடைக்கும் ஆல்கலாய்டு வகை வேதிப்பொருள்களையும் வேறு சில வேதிப்பொருள்களையும் சேர்த்துத் தயாரிக்கப்படுபவை.
உடல் எடை குறைப்பதற்காகவே இந்த வகை மாத்திரைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளிலிருந்து 50 வருடங்களுக்கு முன்பே நம் ஊருக்கு வந்துவிட்டன இந்த மாத்திரைகள். ஆரம்ப காலத்தில், ‘எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அத்துடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்’ என்றனர். இப்போது, ‘உணவே வேண்டாம். டயட் பில்ஸ் மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்; பசியும் கட்டுப்படும்; உடல் எடையும் குறையும்’ என்கின்றனர்.

 

மருத்துவர்கள் ஏன் பரிந்துரைக்கிறார்கள்?
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ( US Food and Drug Administration), ஓர்லிஸ்டாட் (Orlistat ) பெல்வியா (Belvia) சாக்செண்டா (Saxenda), பென்டெர்மைன்   (Phentermine) மற்றும் க்யூசிமியா (Qsymia) ஆகிய சேர்மங்கள் கலந்த சிலவகை மருந்துகளை மட்டுமே அங்கீகரித்துள்ளது.

அதுவும், உடல் பருமன் குறியீடு (பி.எம்.ஐ. அளவு) 30-க்கும் மேல் இருப்பவர்களுக்கோ, அதிக உடல் எடையால் சர்க்கரைநோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கோ இந்த மாத்திரைகள் பரிந்துரைக்கப்படலாம் என்கிறது எஃப்.டி.ஏ. ஆனால், தற்போது வெவ்வேறு வகையான பெயர்களில் உடல் எடை குறைக்கும்  சப்ளிமென்ட்ஸ் வடிவில் இந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. இவையெல்லாம் எஃப்.டி.ஏ-வால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதைவிட மோசமான பக்க விளைவுகளைத் தரக்கூடியவை என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

இந்த மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையில்லாமல் சாப்பிடக் கூடாது என்பதால், ‘சப்ளிமென்டரி’ என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டுவந்து விட்டார்கள். இது சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில், மாத்திரைகளாக மட்டுமல்லாமல் பிரெட், மில்க் ஷேக் வடிவிலும்  கிடைப்பதால்,  உணவுப்பொருளாக நினைத்து வாங்கிச் சாப்பிடுகின்றனர். 100 கிலோவுக்கு மேல் எடை உள்ளவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதயப் பாதிப்புகளும் நுரையீரல் பாதிப்புகளும் இருக்கும்பட்சத்தில் இந்த மாத்திரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. மற்றபடி, இதைப் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.
எப்படி வேலை செய்கிறது?
`டயட் பில்ஸ்’, பசியைக் கொல்லுதல், கொழுப்பு உட்கிரகித்தலைக் குறைத்தல், கொழுப்பைக் கரைத்தல் என மூன்று விதமான செயல்பாடுகளால் உடல் எடையைக் குறைக்கின்றன.
பசியைக் கொல்லுதல்
வயிறு காலியாக இருக்கும்போது, உடலில் ‘க்ரெலின்’ (Ghrelin) என்கிற ஹார்மோன் சுரந்து மூளையின் பசிக்கான பகுதியைத் தூண்டுகிறது. இதனால் பசி உண்டாகிறது; பசி எடுத்ததும் நாம் சாப்பிடுவோம். தேவையான அளவுக்குச் சாப்பிட்டதும் ஒரு கட்டத்தில் ‘லெப்டின்’ (Leptin) என்ற ஹார்மோன் சுரக்கும். இது மூளையின் திருப்திக்கான பகுதியைத் தூண்டுவதால் பசி அடங்கும். இதுதான் சரியான நடைமுறையாகும். ஆனால், `டயட் பில்ஸ்’ உட்கொண்டால், அது பசியைத் தூண்டும் ‘க்ரெலின்’ ஹார்மோனைக் கட்டுப்படுத்திவிடும். இதனால் பசி மட்டுப்படும்; சாப்பிடத் தோன்றாது. மேலும் ‘லெப்டின்’ ஹார்மோனைத் தூண்டுவதால், சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.

கொழுப்பு உட்கிரகித்தலைக் குறைத்தல்
நாம் உண்ணும் உணவில் புரதம், கொழுப்பு, வைட்டமின், தாதுப்பொருள்கள் போன்ற சத்துகள் இருக்கும். இந்த வகை டயட் பில்ஸைச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள சத்துகளை உடல் உட்கிரகிக்காது. இதனால் உணவின் மூலம் கிடைக்க வேண்டிய கொழுப்பு உள்ளிட்ட சத்துகள் உடம்பில் சேராது.
கொழுப்பைக் கரைத்தல்
உடலுக்குத் தேவையான கலோரி, நாம் சாப்பிடும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மூலமே கிடைக்கும். நாம் சாப்பிடாதபோது, கார்போஹைட்ரேட் கிடைக்காது. அதனால் உடல், ஏற்கெனவே உள்ள கொழுப்பைக் கரைத்து கலோரியின் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும்.
பாதியில் நிறுத்தினால் என்ன ஆகும்?
உணவின்மீது நாட்டமின்மை, கல்லீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
தீர்வு?
உடல் பருமனுக்கான காரணம் அறிந்து, வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் நல்லது. மேலும் துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது, நீச்சல், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைப்பது நல்லது. அதே நேரத்தில் ஓர் உணவியல் நிபுணரின் உதவியுடன் உங்கள் பி.எம்.ஐ-க்குத் தகுந்த கலோரிகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ப சாப்பிடுவதும் அவசியம்.


பாதிப்புகள்
தொடர்ச்சியாக `டயட் பில்ஸ்’ சாப்பிட்டு வந்தால், அவை ஹார்மோன்களைப் பாதித்துப் பசியின்மையை ஏற்படுத்தும். நாளடைவில், எதிர்மறை ஆற்றல் சமநிலை (Negative Energy Balance) பாதிப்பை ஏற்படுத்தும். இது, வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கும்; ஹார்மோன் குறைபாடுகளை உண்டாக்கி, தைராய்டு மற்றும் சர்க்கரைநோய் வரக் காரணமாக அமையும். இதனால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காது. உணவில் உள்ள சத்துகள் உட்கிரகிக்கப்படுவதைக் குறைப்பதால், உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின், கால்சியம் போன்ற அத்தியாவசியச் சத்துகளில் குறைபாடு (Malnutrition) ஏற்படும். இதனால் எலும்புகள் வலுவிழந்து, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிப்பதுடன் வளர்ச்சியும் தடைபடும்.
குறிப்பாக டீன் ஏஜிலேயே இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால், இது பாலியல் ஹார்மோன்களைப் பாதித்துக் குழந்தையின்மைப் பிரச்னையையும் ஏற்படுத்தும். 30- 35 வயதுகளில் உட்கொண்டால், டைப் 2 வகை சர்க்கரைநோய் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டவுடன் சில வாரங்களிலேயே உடல் எடை குறைய ஆரம்பிப்பதால், அதன் பக்கவிளைவுகளையும் பாதிப்புகளையும் அறியாமல் மற்றவர்களுக்கும் அவற்றைப் பரிந்துரைக்கிறார்கள். உண்மையில் இதன் பாதிப்புகள் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் கழித்துக்கூடத் தெரியலாம்.

Advertisements
%d bloggers like this: