சூரியன் – இவர் மக்களின் டாக்டர்

யற்கையைப்போல நல்ல மருத்துவர் உலகிலேயே இல்லை. இயற்கையைச் சிதைக்காமல், சுற்றுப்புறத்தைச் சீரழிக்காமல் இயற்கையோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்தார்கள் நம் முன்னோர். அதனால் தான் அவர்களால் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ முடிந்தது.

இயற்கை வழங்கும் அற்புத சக்திகளில் சூரிய சக்தியும் ஒன்று. சூரிய ஒளிக்குப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. அதனால்தான், நமது கலாசாரத்தில் சூரிய நமஸ்காரம் முக்கியமாக்கப்பட்டது. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளிலும் சூரிய சிகிச்சை ஓர் அங்கமாக இருக்கிறது. சூரிய சிகிச்சை பற்றி விரிவாகப் பேசுகிறார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் என். மணவாளன்.

   “சூரிய ஒளியில் வைட்டமின் டி  நிறைந்துள்ளது. அது தவிர, உடலுக்கு நன்மை தரும் பல சத்துகளும் அதில் நிறைந்துள்ளன. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து நோய் தீர்க்கப் பயன்படுத்துவதே சூரிய சிகிச்சை. பொதுவாக, நம் ஆரோக்கியத்துக்கும் பஞ்ச பூதங்களுக்கும் நிறைய தொடர்புண்டு.  இன்றைய நவீன வாழ்வியல் முறை பஞ்ச பூதங்களில் இருந்து விலகிச் சென்றுவிட்டது. சூரிய ஒளி பட்டாலே ஆபத்து, கறுத்து விடுவோம் என்ற அளவில் நம் வாழ்க்கையை வகுத்துக்கொண்டோம்.
சன்ஸ்க்ரீன் லோஷன்களைத் தேய்த்துக் கொள்வது, உடல் முழுக்க ஆடையால் மூடிக் கொள்வது,  முழு நேரமும் ஏ.சி . அறையிலேயே இருப்பது என நேர்முரணாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். பல நோய்களுக்கு இந்த வாழ்க்கைமுறைதான் காரணம். சூரிய ஒளி படாமல் வாழ்வதால் வைட்டமின் ‘டி’ குறைபாடும் கால்சியம் குறைபாடு பிரச்னையும் வருகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோ மலேசியா எனும் இரு முக்கிய நோய்கள் சூரிய ஒளி உடம்பில் படாததால் வருவன. இவை அடிக்கடி எலும்புகள் முறிந்து போவது, மூட்டு வலி, சிறிய பாரங்களைக்கூடச் சுமக்க முடியாமல் போவது எனப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகின்றன.

இவற்றுக்கெல்லாம் சூரிய சிகிச்சை  நல்ல தீர்வு. சூரிய சிகிச்சை என்றால்  கடற்கரைக்கோ அல்லது தனிப்பட்ட ஓர் இடத்துக்கோ சென்று எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை யில்லை.  உங்கள் வீட்டில் எங்கு சூரிய ஒளி படுகிறதோ, அங்கே எடுத்துக்கொள்ளலாம். காலை ஒன்பது மணிக்குள் அல்லது மாலை ஐந்து மணிக்குப் பிறகு சூரிய ஒளி நன்றாகப் படும்படி நின்று சூரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். உச்சி வேளையிலோ, உஷ்ணம் அதிகம் வெளியாகும் நேரத்திலோ நிற்க வேண்டாம். அப்படி நின்றால் சன்ஸ்ட்ரோக்  உள்ளிட்ட ஆபத்துகள் உருவாகலாம்.  சரும நோய்கள் அல்லது ஒவ்வாமை கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவிக்கொண்டு சூரியக்குளியல் எடுக்கலாம். இப்படி எடுக்கும் முன்பு இரண்டு டம்ளர் நீர் அருந்த வேண்டும். சூரிய ஒளி 30 முதல் 45 டிகிரி படும் நேரத்தில் மட்டுமே சூரியக்குளியல் எடுக்க வேண்டும்.
வாழை இலையில் போர்த்திக்கொண்டு சூரியக் குளியல் எடுக்கும் சிகிச்சையும் இருக்கிறது.   தலையில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு எடுப்பதும் நல்லது. இது உஷ்ணத்தை நீக்கிவிடும்.
ஹீலியோதெரபி எனும் இந்தச் சூரிய சிகிச்சை மற்றும் க்ரோமோதெரபி எனும் நிறமிச் சிகிச்சை யாவுமே சூரிய ஒளியை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்படுபவையே. சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களும் உடலுக்குத் தேவையான வலிமையையும் ஆற்றலையும் அளிக்கின்றன. நோய்கள் வராமல் தடுக்கவும் வந்த நோய்களை விரட்டவும் உதவுகிறது இந்த சிகிச்சை. சருமப் பிரச்னைகளுக்குச் சூரிய சிகிச்சை சிறப்பானது. சரும நிறமி வேறுபாடுகள் கொண்டவர்களுக்குச் சூரியக் கதிர்கள் அலர்ஜியை உண்டாக்கலாம் என்பதால், மருத்துவரிடம் ஆலோசித்துச் செய்வது நல்லது.


சிகிச்சையின்போது கவனத்தில்கொள்ள வேண்டியவை
* சூரிய சிகிச்சையை 15 முதல் 20 நிமிடங்கள் எடுக்கலாம்.
* குழந்தை முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.
* உடனே குளிக்க வேண்டாம். வியர்வை நிற்கும்வரை இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.
* சூரிய சிகிச்சைக்குப் பிறகு நீர் அருந்தலாம். ஆனால், ஐஸ் சேர்த்த பானங்கள் வேண்டாம்.

%d bloggers like this: