Advertisements

நவம்பரில் கமல் கட்சி… டிசம்பரில் ரஜினி கட்சி!

கோட்டையைச் சுற்றிவந்த அரசியல் புயல், கோடம்பாக்கத்தை நோக்கி நகரத் தொடங்கிவிட்டது” என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘கமலையும் ரஜினியையும் சொல்கிறீர்களா?’’ என்று தகவல்களைக் கேட்கத் தயாரானோம்.
‘‘ரஜினி குறித்து ‘முரசொலி’ பவளவிழாவில் கமல் பேசியது ரஜினி மனதில் காயத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. அதன்பிறகு ரஜினியைச் சந்தித்திருக்கிறார் கமல். ‘நான் உங்களைப்பத்தி பேசுனது வேறு. எல்லோரும் தப்பா புரிஞ்சுக்கிட்டு கைதட்டிட்டாங்க’ என்று கமல் சொன்னாலும், ரஜினி மனம் சமாதானமாகவில்லை என்பது சிவாஜி மணிமண்டபத்

திறப்பு விழாவில் அப்பட்டமாக வெளிப்பட்டது. கமலின் ‘முரசொலி’ விழா பேச்சுக்குப் பதில் சொல்வதுபோல இருந்தது ரஜினியின் பேச்சு. அதன்பின் இருவரும் எப்போதும்போல் இயல்பாக தங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். கமலின் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி கேட்டிருக்கிறார். ‘அநேகமா நவம்பர் 7-ம் தேதி என் பிறந்தநாளில் கட்சி ஆரம்பிக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்’ என்று சொன்ன கமலுக்குக் கைகொடுத்து கங்கிராட்ஸ் சொன்னார் ரஜினி. ‘நீங்க அரசியலுக்கு வர்றீங்களா, இல்லையா’ என்று ரஜினியிடம் எதிர்க்கேள்வி கேட்டார் கமல். ‘டெஃபனெட்டா பாலிடிக்ஸ்ல இறங்கப்போறேன். ‘2.0’ ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு. ‘காலா’ ஷூட்டிங் நவம்பர்ல முடிஞ்சுடும். டிசம்பர்ல தனிக்கட்சி அறிவிப்பு வந்துடும்’ என்று ரஜினி உற்சாகமாகச் சொல்ல, கமலும் தன்னுடைய வாழ்த்துகளை ரஜினிக்குத் தெரிவித்திருக்கிறார்.’’
‘‘கட்சியின் பெயர், கொடி என அனைத்தையும் கமல் தயார்செய்துவிட்டார் என்று அவருடைய மன்றத்தினர் உற்சாகமாக இருக்கிறார்களே?’’
‘‘வருடா வருடம் நவம்பர் 7-ம் தேதியன்று காமராஜர் அரங்கத்தில் தனது பிறந்தநாளை, கலைநிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டாடி மகிழ்வார் கமல். இந்த முறை அதை இன்னும் பிரமாண்டமாக்கும் வேலையில் பரபரப்பாக இருக்கிறார்கள் கமல் மன்ற நிர்வாகிகள். அக்டோபர் 4-ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள கமல் நற்பணி மன்ற முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் அவர்கள் குழுமினர். தனிக்கட்சி தொடங்குவது குறித்தும், அதன் செயல்பாடுகள் பற்றியும் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார் கமல். ‘இதுவரை இல்லாத அளவுக்கு இந்தமுறை பிறந்தநாளை பெரிய அரங்கத்தில் பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும். அங்கேயே தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டும்’ என்று நற்பணி மன்ற நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை கமல் ஏற்றுக்கொண்டார். ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்த தினம் வருவதால், தனிக்கட்சி அறிவிப்பை அன்றைக்கு கமல் வெளியிடுகிறார் என்று காரணம் சொல்கிறார்கள்.’’

‘‘அரசியல் பிரவேசத்தில் ரஜினியை கமல் முந்திவிடுவார்போல இருக்கிறதே?’’
‘‘ஆமாம்! ரஜினி ரசிகர்கள் டிசம்பர் திருவிழாவுக்குத் தயாராகிறார்கள். கடந்த மே மாதத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியபோது, ‘போர் வரும், தயாராக இருங்கள்’ என்றார் ரஜினி. அடுத்ததாக டிசம்பர் 12-ம் தேதி வரும் தன் பிறந்தநாளுக்கு முன்பாக மீண்டும் சந்திப்புகளை நடத்தப்போகிறார் அவர். அது, அரசியல் பிரவேசத்துக்கான இறுதி ஆலோசனையாக இருக்கலாம். டிசம்பர் 12-ம் தேதியன்று அரசியல் களத்தில் குதிக்க இருக்கிறார், ரஜினி’’ என்ற கழுகாரிடம், ‘‘அ.திமு.க மீண்டும் ரணகளமாக ஆகியிருக்கிறதே’’ என்றோம்.
‘‘சசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என்று அந்தக் கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்திருந்தார். அதை எதிர்த்து சசிகலா தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுசூதனனுக்கு முன்பாகவே,  அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமிதான் சசிகலாவை எதிர்த்து தேர்தல் ஆணையத்தின் கதவைத் தட்டினார். அவர் இப்போது மீண்டும் 13 பக்கக் கடிதம் ஒன்றைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார்.’’
‘‘அதில் என்ன இருக்கிறது?’’
‘‘அவரின் கடிதத்தில், ‘அ.தி.மு.க பொதுச்செயலாளரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். இத்தகைய கட்சியின் அடிப்படை விதிகளை மீறி, சசிகலாவைப் பொதுச்செயலாளராக நியமித்தார்கள். அது செல்லாது. அந்த சசிகலாவால் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக  நியமிக்கப்பட்ட    டி.டி.வி.தினகரன் நியமனமும் செல்லாது என அறிவிக்க வேண்டும். கடந்த மாதம் 12-ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியே இனி இல்லை என்று அறிவித்துள்ளனர். அது தவறு. ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இனி கட்சியைக் கட்டுப்படுத்தும்’ என்றும் கட்சியின் துணைவிதிகளை மாற்றியுள்ளனர். இதைத் தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது’ என்று இருக்கிறது.’’
‘‘இதுபற்றி எடப்பாடியும் பன்னீரும் என்ன நினைக்கிறார்களாம்..?’’
‘‘இரண்டு பேருமே தனித்தனியாக கே.சி.பழனிசாமியை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். எடப்பாடியும் பன்னீரும் சசிகலா பக்கம் இருந்தபோதே துணிச்சலாக வழக்குப் போட்டவர் இவர். இப்போதும் அதே துணிச்சலோடு நிற்கிறார். இதற்கிடையே அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவும் டெல்லியில் முகாமிட்டது. இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரம், தேர்தல் ஆணையத்தில் இப்போது ஒரு தீர்மானமான கட்டத்துக்கு வந்திருக்கிறது. 2016 டிசம்பர் 5-ம் தேதியன்று யாரெல்லாம் பொதுக்குழு உறுப்பினர்களாக இருந்தார்களோ, அவர்களது பிரமாண பத்திரங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதில், எடப்பாடி தரப்பின் கையே ஓங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த விசாரணையைத் தள்ளிப்போட தினகரன் எடுத்த முயற்சி கைகூடவில்லை.’’
‘‘சரி. சசிகலா பரோலில் வருவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு அறிவித்ததன் பின்னணி என்னவாம்?’’
‘‘சசிகலாவின் கணவர் நடராசனுக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள இருந்த நிலையில்தான், சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பித்தார். நடராசனின் உடல்நிலை குறித்த குளோபல் மருத்துவமனையின் அறிக்கையை அதில் சுட்டிக்காட்டியிருந்தனர். ஆரம்பத்தில் சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடக சிறைத்துறை தயக்கம் காட்டியது. அதன்பிறகு இரண்டாவது மருத்துவ அறிக்கையில் நடராசன் உடல்நிலை மோசமாக இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து சசிகலா தரப்பில் பரோல் கேட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டது. கர்நாடக சிறைத்துறை உடனடியாக சென்னை போலீஸ் கமிஷனருக்கு சசிகலாவின் பரோல் குறித்துக் கடிதம் எழுதியது. அதில், ‘சசிகலாவை பரோலில் அனுப்பினால், தேவையான பாதுகாப்பை அளிக்கமுடியுமா?’ என்று கேட்டிருந்தார்கள்.’’
‘‘ம்!’’
‘‘கமிஷனர் அலுவலகத்திலிருந்து ‘சசிகலாவுக்கு பரோல் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை. நாங்கள் உரிய பாதுகாப்பு தருகிறோம்’ என்று பதில் கடிதம் அனுப்பிவிட்டார்கள். வியாழக்கிழமையன்று பௌர்ணமி தினம் என்பதால், அன்றே பரோல் வாங்கிவிட வேண்டும் என்று தினகரன் தரப்பு காய்நகர்த்தியது. ஆனால், அது சாத்தியமாகவில்லை.’’
‘‘சசிகலா எங்கே தங்குகிறார்?’’
‘‘இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் தி.நகர் வீட்டில்தான் தங்கப்போகிறார். பரோலில் வரும் ஒருவர் தங்கும் இடம், அவருக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதோடு, குற்ற வழக்கு எதிலும் தொடர்பில்லாதவர்களின் இடத்தில்தான் தங்க முடியும். சசிகலா இதை மனதில் வைத்தே இந்த வீட்டைக் குறிப்பிட்டாராம். இடையில் சில காலம் போயஸ் கார்டனைவிட்டு வெளியேற நேர்ந்தபோது, சசிகலா இந்த வீட்டில்தான் தங்கினார். சென்டிமென்ட்டாக இந்த வீடு சசிகலாவுக்குப் பிடிக்குமாம். சர்ச்சைகள் ஏதுமின்றி சில நாள்கள் இருப்பதற்கு இதுவே சரியான இடம் எனக் குடும்பத்தினரும் நினைத்தார்கள். வியாழக்கிழமை காலையே சென்னை மாநகர போலீஸார் இந்த வீட்டை வந்து பார்த்தனர். அதன்பிறகே போலீஸின் தடையில்லாச் சான்று கர்நாடகா போய்ச் சேர்ந்தது. போலீஸ் தரப்பில் போதுமான ஒத்துழைப்புத் தந்ததாகவே சசிகலா குடும்பத்தினர் சொல்கிறார்கள்.’’
‘‘பரோலில் வருகிற சசிகலா, தன் ஆதரவாளர்களைச் சந்திக்கும் திட்டம் உள்ளதா?’’
‘‘சிறை விதிகளின்படி, பரோலில் வருபவர்கள் பேட்டி கொடுப்பதோ, அரசியல் அதிரடிகளில் பங்கேற்பதோ கூடாது. இந்த விதிகளை அவர் மீறும் பட்சத்தில், உடனே பரோல் ரத்தாகிவிடும். இது சசிகலாவுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அவர் குளோபல் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் மட்டுமே வந்துபோவார். அவரைக் கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வரவேண்டாம் என தினகரன் தரப்பு கூவிக்கூவி சொல்லிவருகிறது’’ என்றபடி எழுந்த கழுகார்,  ஒரு கொசுறுச் செய்தி தந்தார்…
‘‘பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் பணிமாறுதலில் நடக்கும் கூத்துகளைப் பார்த்து அ.தி.மு.க-வினரே வாயைப் பிளக்கிறார்கள். அமைச்சரின் மனைவி தரப்பு உறவினர் ஒருவரே அங்கு உதவியாளராக வந்துள்ளார். இவர் போக்குவரத்துத் துறை ஊழியராம். எல்லா டீலிங்கும் இவர் மூலமாகவே நடக்கிறதாம். கட்சிக்காரர்களிடம்கூட கறாராக வாங்கியபிறகே ஆர்டர் போடுகிறார்களாம். ‘சுப்பிரமணியனுக்கே இது அடுக்குமா?’ எனக் கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள் கட்சியினர்!’’

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: