பார்வைக் குறைபாடுகளைத் தடுக்கும் கேரட்!

கேரட் என்றதும் ஆரஞ்சுக் கலர்ல இருக்குமே அதுதானே என்கிறீர்களா? அது அந்தக் காலம். இப்போது சிவப்பு, வெள்ளை, ஊதா, கருப்பு,  மஞ்சள் நிறங்களிலும் கேரட் வந்துவிட்டது.  ஆப்கானிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட கேரட், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு துவர்ப்புச் சுவை கொண்டதாக இருந்தது. காலப்போக்கில் பல மாறுதல்களுக்குட்பட்டு இப்போது இனிப்புச் சுவையில் நமக்குக் கிடைக்கிறது. 

டாப்ரூட் காய்கறியான கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ மற்றும் கே, நார்ச்சத்துகள், பொட்டாசியம், தயாமின் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் உள்ளன.
‘தாவரத் தங்கம்’ என்று அழைக்கப்படும் கேரட், பார்வைக் கோளாறுகள், கொழுப்பு, ஆண்மைக் குறைபாடு போன்றவற்றுக்கு அற்புத மருந்து. குறிப்பாக கேரட்டில் உள்ள வைட்டமின்-ஏ சத்து பார்வைக்கு நல்லது. இதில் நிறைந்திருக்கும் பீட்டாகரோட்டின் கண்களில் புரை ஏற்படாமல் பாதுகாக்கிறது. முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைத் தடுக்கும். மேலும், வயிறு தொடர்பான நோய்களுக்கும் அது மருந்து. வாரத்தில் மூன்று தடவை கேரட் ஜூஸ் குடித்துவந்தால் அல்சர் மற்றும் வயிறு, குடல் தொடர்புடைய நோய்கள் குணமாகும்.

கேரட்டுக்குப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு என்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உணவில் கணிசமாகச் சேர்த்துக்கொண்டால் மார்பகப் புற்றுநோயில் இருந்து விடுபட முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது.
தினம் ஒரு கேரட் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படும். அத்துடன் ரத்தமும் சுத்தமாகும். குடல் புண்கள் வராமல் தடுக்கவும் செய்கிறது. பக்கவாதத்தையும் தடுக்கும். பற்களில் கறை இருப்பவர்கள் அடிக்கடி கேரட்டை மென்று சாப்பிடலாம். பாதி வேகவைத்த முட்டையுடன் கேரட், தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். குழந்தையின்மைக் குறையும் நீங்கும்.
பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கேரட் அருமருந்து. வைட்டமின் சி அதிகமிருப்பதால் எலும்புகளை வலுவாக்குவதுடன், மூட்டு வீக்கம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. இன்சுலினைச் சீராக வைக்க உதவக்கூடியது என்பதால், நீரிழிவாளர்களும் மருத்துவர் ஆலோசனை பெற்று கேரட் சாப்பிடலாம்.

ஒரு மறுமொழி

%d bloggers like this: