பொய் பேசும் இளம்பிள்ளைகளை எப்படிச் சமாளிப்பது?

குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, அவர்களின் சிந்திக்கும் திறன்கள் மிகவும் சிக்கலானதாக வளரக்கூடும், திடீரென்று நேர்மையின்றி நடக்கும் கலையை அவர்கள் வளர்த்துக்கொள்வதைக் காண முடியும்! தன் குழந்தை தன்னிடம் பொய் கூறுவது என்பது ஒரு தாய்/தந்தைக்கு மிகுந்த வேதனையான விஷயமாக இருக்கும்.
இளம்பிள்ளைகள் ஏன் பொய் பேசுகிறார்கள்?

 

பெரும்பாலும் குழந்தைகள் பொய் சொல்லக் காரணம், செய்யக்கூடாது என்று கூறுபவற்றை செய்துவிட்டு, அதற்கு தண்டனை கிடைக்குமே என்ற பயமே. இதே குணம், அவர்கள் இளம்பிள்ளைகளாக வளரும்போதும் தொடர்கிறது. இந்தப் பருவத்தில் அவர்களுக்கான தனித்துவத்துடன் இதைச் செய்ய முயற்சி செய்கிறார்கள்! பெரும்பாலும், இளம்பிள்ளைகளின் சிந்தனைகளும் கருத்துகளும் பெற்றோருக்கு எதிராக இருப்பதுண்டு, இதனால் அவர்கள் பல சமயங்களில் பொய் பேச நேர்கிறது.

பொய் பேசும் இளம்பிள்ளைகளை எப்படி சமாளிப்பது? (How to Handle Teen Lying)

உங்கள் இளம்பிள்ளைகளின் பொய் பேசும் பழக்கத்தைப் போக்கவும், அவர்களுக்கு ஏற்படும் பயத்தை எதிர்கொண்டு வெல்லவும், சரியான முடிவுகளை எடுக்கவும் உதவுவதற்கு சில உத்திகளை இந்தக் கட்டுரை வழங்கும்.

  • அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும், அதை அவர்கள் உங்களிடம் தாராளமாக, பயமின்றி, நம்பிக்கையுடன் கூறலாம், நீங்கள் அவர்களின் தவறைத் திருத்திக்கொள்ள உதவுவீர்கள் என்ற நம்பிக்கையயும், பாதுகாப்பு உணர்வையும் அவர்கள் மனதில் விதைக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் ஏதேனும் கூற முயற்சி செய்யும்போது பொறுமையாகக் கேட்க வேண்டும்.
  • உங்கள் இளம்பிள்ளைகள் உங்களிடம் பொய் கூறினார்கள் என்ற உண்மையை எப்போதும் புறக்கணிக்காதீர்கள். அதைப்பற்றி அவர்களிடம் பேசி தெளிவுபடுத்திக்கொள்ளத் தயங்காதீர்கள், அதற்காக அவர்களைக் குற்றவாளிபோல் நடத்தவோ பேசவோ வேண்டாம். பிரச்சனையின் அடிவேரை அறிந்துகொண்டு, அதற்கான தீர்வுகளைப் பற்றி அவர்களிடம் அன்பாகப் பேசுங்கள்.
  • அவர்களிடம் பேசுவது மிக முக்கியம். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே நேர்மையான உரையாடல் நடக்க வேண்டியது மிக முக்கியம், ஆனால் அது எல்லா சமயங்களிலும் எளிதாகவும் சௌகரியமாகவும் இருப்பதில்லை என்பது உண்மையே! இருந்தாலும், கூடுமானவரை அவர்களிடம் வெளிப்படையாகப் பேச வேண்டியது அவசியம். அதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

யதார்த்தமல்லாத எதிர்பார்ப்புகளால் அவர்களை நெருக்கக்கூடாது. இளம்பிள்ளைகளை மிக நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும், பெரிய படிப்பு படிக்க வேண்டும், அதிகமாக சம்பாதிக்கும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது போன்றெல்லாம் அவர்களின் திறனை மீறிய எதிர்பார்ப்புகளை வைத்து அழுத்தம் கொடுக்கும்போது அவர்கள் உங்களை ஏமாற்றும் நிலைக்கும் தள்ளப்படுவார்கள். உதாரணமாக குழந்தைகள் தங்கள் மதிப்பெண்ணை மறைக்கலாம், அதிக மதிப்பெண் எடுத்ததாகப் பொய் கூறலாம். குழந்தைகள் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் எல்லோருக்குமே இருக்கும். ஆனாலும் நம் எதிர்பார்ப்புகள் யதார்த்தமானவையாக இருக்க வேண்டும். உங்கள் இளம்பிள்ளைகள் உங்களை ஏமாற்றி, அதிக மதிப்பெண் எடுத்ததாகக் கூறுவதை விட, குறைவான அல்லது ஓரளவு மதிப்பெண் எடுத்திருந்தாலும் அதை உங்களிடம் உண்மையாக, நேர்மையாக வந்து கூறுவதே நல்லது! அவர்கள் நேர்மையாக இருப்பதுதான் பெரியதே தவிர, அவர்களின் மதிப்பெண் அல்ல என்பதை அவர்கள் உணரும்படி நீங்கள் நடந்துகொள்ள வேண்டும்.

  • அவர்கள் இணையத்தையும் மொபைல் போன்ற சாதனங்களையும் பயன்படுத்தும் நேரத்தைக் கண்காணியுங்கள். வரையறையின்றி இணையத்தையும் இது போன்ற சாதனங்களையும் தொடர்ந்து அதிகம் பயன்படுத்திவந்தால், குழந்தைகள் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அவர்கள் இணையத்திலிருந்து பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்கிறார்கள், இதனால் அவர்கள் தவறான பாதையில் செல்லவும் தேவையான தகவல்கள் எளிதில் அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பாகிறது. உங்கள் இளம்பிள்ளைகள் எந்த அளவுக்கு நம்பக்கூடியவர்களாக இருந்தாலும், பிரச்சனை நடக்கும் முன்பே காத்துக்கொள்வதே நல்லது.
  • உங்கள் இளம்பிள்ளைகள் உங்களிடம் நேர்மையாக இருக்கும்போது, அதற்காக அவர்களைப் பாராட்டத் தவறாதீர்கள். உங்கள் பாராட்டுக்கு அவர்கள் சந்தோஷப்படுவது மட்டுமின்றி, அந்த உற்சாகத்தால் எப்போதுமே உங்களிடம் நேர்மையாக இருக்க ஊக்கம் பெறுவார்கள். நீங்கள் கூறும் அறிவுரையை நீங்கள் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம்.
  • விதிகளை உண்டாக்குங்கள், அவற்றை மீறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விளக்குங்கள். அந்த தண்டனைகளை நிறைவேற்றுவதிலும் உறுதியாக இருங்கள், அப்போதுதான், உங்கள் இளம்பிள்ளைகள் நேர்மையின்மைக்கு நிச்சயம் தண்டனை உண்டு, தப்பிக்க முடியாது என்பதை உணர்வார்கள். அதே நேரத்தில், அவர்கள் நேர்மையின்றி இருந்ததற்கு நியாயமான காரணங்கள் ஏதேனும் இருந்தால், அப்போது உங்கள் விதிமுறைகளை, தண்டனைகளைத் தளர்த்திக்கொள்ளும் வகையில் நெகிழ்த்தன்மையுடன் இருங்கள். குறுகிய கண்ணோட்டம் கொண்டிருக்காதீர்கள்.
  • உங்கள் இளம்பிள்ளைகளை விமர்சிக்கும்போது எப்போதும், அமைதியாகவும் நாகரீகமாகவும் இருக்க மறக்க வேண்டாம். அவர்களை கேலி செய்வதோ, கடிந்துகொள்வதோ பிரச்சனைக்குத் தீர்வாகாது.

சிறுவர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடையும் காலகட்டத்தில் பொதுவாக பல இளம்பிள்ளைகள் செய்யக்கூடிய பெரிய தவறுகளுடன் ஒப்பிடும்போது, இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது மிகப்பெரிய குற்றமில்லை என்று தோன்றலாம். ஆனாலும் அது கண்டுகொள்ளாமல் விடக்கூடிய ஒரு விஷயமல்ல. இன்று நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், நாளை அதுவே பெரிய பிரச்சனைக்கு வழிவகுத்துவிடலாம்.

இளம்பிள்ளைகள் நேர்மையின்றி நடக்கும்போது, அந்தப் பிரச்சனையை கூடுமானவரை ஆரம்பத்திலேயே கவனித்து சரிசெய்வதே நல்லது. ஏனெனில் பிறகு அதுவே பழக்கமாகி, அவர்களின் குணமாகிவிட்டால் பல பெரிய பிரச்சனைகள் வரக்கூடும்

%d bloggers like this: